"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings by Sanmugam Sabesan
சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடு -
மூன்றாண்டுகள் தருகின்ற தெளிவுகள்
ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா
"சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்த மிகமுக்கியமான நிகழ்ச்சியை மீண்டும் விபரிப்பது அல்ல, இந்தக் கட்டுரையின் நோக்கம். மாறாக அன்றைய தினம் கொடுக்கப்பட்ட கொள்கை விளக்கங்கள், கருத்துக்கள் ஆகியவை இன்று மூன்று ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையில் எவ்வளவு தீர்க்கமாகவும், தெளிவாகவும் இருக்கின்றன என்பதையும் தர்க்கிப்பதுவேயாகும்..."
13 April 2005
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றை நடாத்தி, இந்த ஏப்பிரல் மாதம் 2005 பத்தாம் திகதியுடன் மூன்றாண்டுகள் ஆகின்றன. அன்றைய தினம் முழு உலகத்தின் கவனமும் தமிழீழத்தின் வன்னிப் பெருநிலத்தின் மீதே இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
உலகத்தின் பல பகுதிகளிலும் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ‘பரவிப் பஞ்சான்’ என்ற இடத்தில் கூடியிருந்தார்கள். சுமார் இரண்டரை மணிநேரம் ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு தேசியத் தலைவர் விடையளித்தார். ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அந்தச் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடு அமைந்தது.
சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்த மிகமுக்கியமான நிகழ்ச்சியை மீண்டும் விபரிப்பது அல்ல, இந்தக் கட்டுரையின் நோக்கம். மாறாக அன்றைய தினம் கொடுக்கப்பட்ட கொள்கை விளக்கங்கள், கருத்துக்கள் ஆகியவை இன்று மூன்று ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையில் எவ்வளவு தீர்க்கமாகவும், தெளிவாகவும் இருக்கின்றன என்பதையும் தர்க்கிப்பதுவேயாகும்.அத்துடன், ஆறு சுற்றுச் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர்;, சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஒத்திப் போடப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவின் அரசாட்சியை வேறுஅரசியல் கட்சிக் கூட்டணி கைப்பற்றியுள்ள தற்போதைய நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் அன்றைய தினம் தெரிவிக்கப்பட்ட கொள்கை விளக்கங்களின் அடிப்படையில் தற்போதைய-எதிர்கால அரசியல் நிலைமைகளைத் தர்க்கித்துப் பார்ப்பதுவும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.!
சிங்கள அரசுகளின் ஐம்பது ஆண்டு கால அடக்கு முறை ஆட்சிகளாலும், அவை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இரண்டு தசாப்த காலப் போர்களினாலும் அரசு விதித்திருந்த பொருளாதார-உணவு-மருந்துத் தடைகளினாலும் இன்னல் மிக்க வாழ்வினை மேற்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியதற்கான அவசியத்தை, அவசரத்தைத் தலைவர் அன்றைய தினம் வலியுறுத்திக் கூறியிருந்தார். அது மட்டுமல்லாது தமிழீழ மக்கள் தமது அரசியல்-பொருளாதார வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள்-என்ற கருத்தும் அன்றைய தினம் தெளிவாகச் சொல்லப்பட்டது.
தமிழ் மக்களின் வாழ்வியல் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன் மட்டுமல்லாது, தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்கு உரிய தீர்வு குறித்தும் அன்றைய தினம் விளக்கமளிக்கப் பட்டது. தமிழீழ மக்கள் இதுவரை காலமும் சிறிலங்கா அரசுகளாலும், இந்திய இராணுவத்தினாலும் பட்ட இன்னல்கள் குறித்து ஒரு கேள்வியைக் கூடக் கேட்காமல் மாறாக குதர்க்கமான விசமத்தனமான கேள்விகளை மட்டுமே பேரினவாத ஊடகவியளாளர்களும், சில மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகவியளாளர்களும் கேட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் முக்கியமான கேள்வி ஒன்று கேட்கப் பட்டது.தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்கக் கூடியதாகக் கருதப்படும், ‘சுயநிர்ணய உரிமை’ குறித்து விளக்குமாறு ஒரு கேள்வி தமிழில் கேட்கப்பட்டது. பேரினவாத ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி, மேற்கத்தைய ஊடகவியலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அக் கேள்விக்குரிய பதிலை, தேசியத் தலைவரின் சிந்தனையின் வடிவத்தை, மதியுரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆங்கிலத்தில் தெளிவு படுத்தினார்.
“பாரம்பரிய பூமியையும், தனித்துவமான மொழியையும், பண்பாட்டையும் கொண்டுள்ள எமது மக்கள் ஒரு தேசிய இனத்தவர்கள் ஆவார்கள். அந்தத் தேசிய இனத்தவர்கள் தமது அரசியல்-பொருளாதார வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள். அந்த உரிமைக் கோட்பாடுதான் சுயநிர்ணய உரிமையாகும். அது உள்ளான சுயநிர்ணயம், புறமான சுயநிர்ணயம் என்ற இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். உள்ளான சுயநிர்ணயம் என்பது ஒரு மக்கள் சமூகம் தமது பிரதேசத்தை தாமே சுயமாக ஆட்சி செய்யும் உரிமைகளைக் கொண்டதாகும். புறமான சுயநிர்ணயம் என்பது பிரிந்து சென்று தனி அரசை அமைக்கும் உரிமையைக் கொண்டதாகும்.!”
இவ்வாறு சுயநிர்ணய உரிமை குறித்துத் தெளிவு படுத்திய திரு பாலசிங்கம்; அவர்கள் அதைத் தொடர்ந்து இன்னுமொரு முக்கிய விடயத்தையும் வலியுறுத்திச் சொல்லியிருந்தார். அது வருமாறு:-
“தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநி;ர்ணய உரிமையானது அங்கீகரிக்கப்பட வேண்டும். இச் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப் படாமல் போனால், நாம் பிரிந்து சென்று தனியரசை அமைக்க வேண்டி நேரிடும்.”
தமிழீழத் தேசியத் தலைவர் இதே கருத்தை மீண்டும் அதே ஆண்டு வலியுறுத்தியிருந்தார். 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதியன்று தன்னுடைய மாவீரர் தினப் பேருரையின் போது தேசியத் தலைவர் அவர்கள் சுயநிர்ணய உரிமை குறித்தும், அதன் அர்த்த பரிமாணம் குறித்தும் மேலும் வலியுறுத்தியிருந்தார்.
“தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் தலையீடு ஆதிக்கம் இன்றி சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டை பேணி தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகிறார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத்தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகிறார்கள். இதுவே எமது மக்களின் வேட்கையாகும். உள்ளான சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில் தான் அடங்கி உள்ளது.
இவ்வாறு கூறிய தேசியத் தலைவர் அவர்கள் மேலும் ஒரு முக்கியமான விடயத்தையும் வலியுறுத்தியிருந்தார். சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் எமது தாயக நிலத்தில் எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு வைக்கப் பட்டால் அத்திட்டத்தினைச் சாதகமாகப் பரிசீலனை செய்வோம். அதே வேளை எமது மக்களுக்கு உரித்தான, உண்மையான சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு பிரதேச சுயாட்சி நிராகர்pக்கப் பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
அன்புக்குரிய நேயர்களே!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்த அதே கருத்துக்களைத்தான் அந்த ஆண்டு மாவீரர் தின உரையின் போதும் தேசியத் தலைவர் வலியுறுத்தியிருந்தார். இன்னும் சரியாக சொல்லப் போனால் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்டையிலான அரசியல் தீர்வினை, தேசியத் தலைவர் அவர்கள் பல ஆண்டுகளாகத் தனது மாவீரர் தின உரைகளின் ஊடாக வலியுறுத்தியே வந்திருக்கின்றார்.
அடுக்கடுக்கான இராணுவ நகர்வுகள் மூலம் அலைஅலையாக வெற்றிகளை அடைந்து விடுதலைப்புலிகள் இமயத்தின் உச்சியில் நின்ற நேரம் அது!. அப்படி இருந்த போதும், இன்று போய் நாளை வா! சண்டைக்கு அல்ல! சமாதானத்துக்கு வா! என்று தேசியத் தலைவர் சிங்களத்தின் தலைமைகளுக்கு அழைப்பு விட்டிருந்தார். அதற்குக் காரணம் தமிழீழ மக்களின் வாழ்வியல் மற்றும் தேசியப் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலமாக ஓர் அமைதி வழித் தீர்வினை அடைய வேண்டும் என்பதற்காகத்தான்.!
ஆனால் அந்தச் சமாதானக் கரங்களை சிறிலங்கா அரசுகளும், அதன் கூட்டணிக் கட்சிகளும் உதாசீனம் செய்ததையும்-செய்து வருவதையும்தான் நாம் இன்று கண்கூடாக கண்டு வருகின்றோம். சமாதானக் காலத்திற்கான பயனை-பலனை தமிழீழ மக்கள் இன்னும் பெறமுடியாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகளேயாகும். ஆழிப்பேரலை அநர்த்தங்களுக்குரிய நிவாரண நிதிகளை எம் மக்கள் பெறமுடியாமல் இருப்பதற்கும் இதே பேரினவாத சக்திகளே காரணமாக இருக்கின்றன. இன்று அரசாளுகின்ற அம்மையாரின் அரசியல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பியானது, சமாதானத் தீர்வுக்கு சகல முட்டுக் கட்டைகளையும் வெளிப்படையாகவே போட்டு வருகின்றது.
இந்த வேளையில், இலங்கை - இந்திய ஒப்பந்தம் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள், சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுதுமலையில் கூறியதைக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். அன்றைய அமைதி ஒப்பந்தத்திலும், இன்றைய அமைதி ஒப்பந்தத்திலும் உள்ள சில அபாயகரமான ஒற்றுமைகளை இங்கே சட்டிக்காட்ட விழைகின்றோம். இந்த விடயங்களை தேசியத் தலைவர் அவர்கள் இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தெளிவாக்கத் தவறவில்லை.
இலங்கை-இந்திய ஒப்பந்தமானது, எமது தேசியப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தராது என்பதை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு பகிரங்கமாக இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் முன்பு தலைவர் தெளிவாக கூறியிருந்தார். அந்த ஒப்பந்தம் அடிப்படையிலேயே பல தவறுகளைக் கொண்டிருந்தது. தமிழ் மக்கள் என்கின்ற ஒரு தேசிய இனத்தின் தேசியப் பிரச்சனையை இலங்கை-இந்திய ஒப்பந்தம் தவறாக சித்தரித்துள்ளது. ஈழத் தமிழரின் பிரச்சனையானது ஒரு சிறுபான்மை இனக் குழுவின் அரசியல் பிரச்சனை என்ற வகையில் இந்த ஒப்பந்தம் தீர்வைத் தேட முனைந்தது.
இலங்கை மக்கள் ஒரு பல் இனச் சமுதாயமாக-அதாவது Pடரசயட ளுழஉநைவல ஆக வாழ்கின்றார்கள். இதில் தமிழர்கள் ஒரு இனக்குழு-நுவாiniஉ புசழரி-என்கின்ற ரீதியில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழினத்துக்கு வரைவிலக்கணம் ஒன்றை அளிக்கின்றது.
இந்த விளக்கமானது தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்;தியதோடு மட்டுமல்லாது, தமிழ் மக்களின் தேசிய இனக் கோட்பாட்டையும், தேசிய சுயநிர்ணய உரிமையையும் மறுதலித்து நிற்கின்றது. முன்னர் இடம் பெற்ற திம்பு பேச்சு வார்த்தைகளின் போது இயக்கம் முன்வைத்த தமிழ்த் தேசியம் - சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகளுக்கும் இதனால் ஆப்பு வைக்கப் பட்டது. சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் முன் வைக்கப்படாத இந்தத் திட்டம் எமது மக்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தராது என்பதைச் சரியாக உணர்ந்து கொண்டுள்ள தேசியத் தலைவர் அதனை அன்றே தீர்க்க தரிசனமாகத் தெளிவு படுத்தினார். அதே தெளிவான கருத்தைத்தான் மீண்டும் 2002ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் தேசியத் தலைவர் வலியுறுத்திக் கூறியுள்ளதை நாம் இங்கே கருத்தில் கொள்கின்றோம்.
அன்று தமிழீழ மக்களின் கருத்தைக் கேளாது-தமிழீழ விடுதலைப்; புலிகளைக் கலந்து கௌ;ளாது, இந்தியா முன் வைத்த ஒப்பந்த முயற்சிக்கும் இப்போது உலக நாடுகள் இணைந்துள்ள தற்போதைய ஒப்பந்த முயற்சிக்கும் இடையே ஓர் ஆபத்தான ஒற்றுமை இருப்பதை நாம் இந்த வேளையில் எமது நேயர்களுக்கு சுட்டிக்காட்ட விழைகின்றோம்.
மிகக் குறைபாடான திட்டத்தை அமுலாக்க முயன்ற இந்தியா அடிப்படையில் இன்னுமொரு விடயத்தைக் கவனிக்கத் தவறி விட்டது. சிங்களத்தின் இரண்டு பெரும் கட்சிகளுக்கிடையே அச்சமாதான ஒப்பந்தம் குறித்து ஓர் உடன்பாட்டைக் காணுவதற்கு அன்று இந்தியா தவறி விட்டது. சரியாக சொல்லப் போனால,; - ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ‘வட-கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக நானே பிரச்சாரம் செய்வேன்’ என்றும் அறிவித்தார். ஆளும் கட்சியையும், எதிர்க் கட்சியையும் இணைத்து-இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு ஒன்றைக் காணுவதற்கு அன்று இந்தியா தவறி விட்டது.
அதே தவறை இன்று இலங்கைப் பிரச்சனையில் அக்கறை கொண்டுள்ள உலகநாடுகளும் செய்வதை நாம் இங்கே வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகின்;றோம். சிங்களத்தின் இருபெரும் கட்சிகளிடையே சமாதானத் தீர்வு குறித்து எந்தவிதமான உடன்பாடும் காணப்படாமல் ஓர் உருப்படியான பெறுபேறையும் காணமுடியாது. அன்று எப்படி தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையை இந்தியா புரிந்து வைத்திருக்க வில்லையோ - அதே போன்று இன்று உலகநாடுகளும் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையை புரிந்து கொள்ள வில்லையோ என்ற ஐயமும் எமக்கு உண்டு. தற்போதைய நிலைமை எமது இந்த ஐயத்தை வலுப்படுத்துகின்றது.
இந்த ஒப்பந்தத்தால், தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று நான் நம்பவில்லை. சிங்கள இனவாதப் பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று தீர்க்க தரிசனமாக கூறிய தேசியத் தலைவர் மேலுமொரு முக்கிய விடயத்தை அன்று - பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுதுமலையில் கூறினார். ‘போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை’-இதே கருத்தைத் தான் தலைவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பின்வருமாறு கூறினார்.
“அமைதி வழியில் மென்முறை தழுவி, நேர்மையுடனும், நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முனைந்து வருகின்றோம். காலத்துக்கு ஏற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை”.
அதாவது அமைதி வழியில் தமிழினத்தின் தேசியப் பிரச்சனைக்குச் சரியான தீர்வு கிட்ட வேண்டுமானால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையான – முக்கியமான விடயத்தை தேசியத் தலைவர் அவர்கள் மீ;ண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளார்.
தற்போதைய சமாதானத்திற்கான காலத்தில், சமாதானப் பேச்சு வார்த்தைகள் இரண்டு கட்டங்களாக நடைபெற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் முன்னரேயே தெரிவித்திருந்தனர். இன்னல்களை அனுபவிக்கும் தமிழ் மக்களின் வாழ்வியல் இயல்பு நிலைக்குத் திரும்பி அவர்களது பொருளாதாரம் மேம்படுத்தப் படுவதற்காக முதற்கட்டப் பேச்சு வார்த்தைகளும், தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரமான, நீதியான, கௌரவமான தீர்வைப் பெறுவதற்காக இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தைகளும் நடைபெற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரியிருந்தனர்.ஆனால் தமிழ் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான எந்தவித உருப்படியான முடிவுகளுக்கும், ரணில் அரசாலோ அல்லது அம்மையாரின் அரசாலோ இதுவரை வரமுடியவில்லை. அதேபோல் தமிழர்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய ‘சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்கு’ ஆப்பு வைக்கும் செயற்பாடுகளில் அம்மையாரின் கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே இறங்கிச் செயற்படுகின்றன.
அத்தோடு அரச தரப்பினரால் மேற்கொள்ளப்படும் யுத்த நிறுத்த மீறல்கள், படுகொலைகள் என்பவை ஒரு புறம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆகவே, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை, சமாதான வழியில் தருவதற்கு சிறிலங்கா அரசுகள் இணங்காது என்பது வெட்ட வெளிச்சமாகி வருகின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மூன்றாண்டுகளுக்கு முன்னர் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் தெட்டத் தெளிவாகக் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் தமிழ் மக்கள்மீது மீண்டும் ஒரு யுத்தத்தை சிங்கள அரசு வலிந்து திணிக்குமோ என்ற எமது ஐயமும் வலுப்படுகின்றது.
இந்தவேளையில், தேசியத் தலைமையின் கரங்கைளைப் பலப்படுத்துவதற்கு தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான செயற்பாடுகளைப் புலம் பெயர்ந்த தமிழினம் மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.