Selected Writings V.Thangavelu, Canada திருக்கோயில்களில் செந்தமிழில் அருச்சனை 23 June 2005
தமிழ்க் கலை தொழில் நுட்பக் கல்லூரி கனேடிய தமிழ் மக்கள் இடையே தமிழ்மொழி பற்றிய விழிப்புணர்வை உருவாக்க யூன் 26 தொடங்கி யூலை 02 வரை தமிழ்மொழி வாரம் கொண்டாட முன்வந்துள்ளதைத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் பாராட்டி வரவேற்கிறது.
தமிழ்மொழி விழிப்புணர்வு என்பது தமிழ்மக்களின் வாழ்வியலின் அனைத்துத் தளங்களிலும் துறைகளிலும் தாய்மொழியாகிய தமிழ்மொழிக்கு முதன்மை கொடுப்பதன் மூலமே சாத்தியமாகும். இல்லையேல் அவ்வித முயற்சி ஓட்டைப் பானைக்குள் தண்ணீர் நிரப்பிய கதையாகி விடும்.
குறிப்பாகத் தமிழ்ப் பெருமக்கள் தாம் வணங்கும் கடவுளரை தமிழால் வழிபட வேண்டும்.
இந்துக் கோயில்களில் நடைபெறும் அருச்சனைகள் செந்தமிழில் இடம்பெற வேண்டும் என்பதை தமிழ்ப் படைப்பாளிகள் கழகமும் கனேடிய இந்துக் கலாச்சார மன்றமும் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளன. இதன் பொருட்டு தமிழில் அருச்சனை செய்வதற்கு வேண்டிய போற்றிப் பாடல்களை (தமிழ் மந்திரங்களை) தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து வரவழைத்து இங்குள்ள கோயில் அறங்காவல் அவைகளுக்கும், உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே க.இ.க. மன்றம் கொடுத்து உதவி இருக்கிறது.
தமிழில் வழிபாடு புதுமையானதல்ல. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் "தமிழோடிசை பாடல் மறந்தறியேன்" என்றுமு; சுந்தரர் "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்" என்றும் பாடியிருக்கிறார்கள்.
சம்பந்தர் இறைவனைத் தமிழால் வழிபட வேண்டும் என்ற விருப்பத்தைத் தான் பாடிய தேவாரப் பதிகங்கள் ஊடாக ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட முறை வலியுறுத்தியுள்ளார். தமிழில் வழிபாடு செய்யாதவர்களைப் பார்த்து "செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர் மந்திகள்" என வைதுள்ளார்!
சம்பந்தர் திருவீழிமிழலைத் திருக்கோயிலில் "செந்தமிழர்கள் மறை நாவலர்கள், கலைநலம் தெரிந்தவர்கள், குணத்திற் சிறந்த ஞானிகள் ஆகியோர் ஒருங்குகூடி அருச்சனைகள் செய்தனர்" எனப் பாடல் பாடியிருக்கிறார்.
திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட ஒழுக்கம், ஆசாரம் நிறைந்த அடியார்கள் பூவும் நீரும் சுமந்து சென்று ஒருவர் பின் ஒருவராகச் சென்று புகுந்ததையும், அதைக் கண்ணுற்றுத் தானும் அவர்கள் பின்னே வரிசையில் நின்று வழிபட்டதாகவும் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவன் தமிழோடிசை கேட்கும் இச்சையால் அப்பருக்கும் சம்பந்தருக்கும் காசு நித்தல் நல்கினார் என சுந்தரமூர்த்தி நாயனார் பாடியிருக்கிறார்.
திருவிளையாடற் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் தமிழை "கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமிழ் ........" என்கிறார். மேலும் "எலும்புபெண்ணுருக் கொண்டதும், மறைக்கதவு திறக்கப் பாடப்பெற்றதும் கன்னித் தண்டமிழ் சொல்லோ பிறமொழிச் சொல்லோ கூறுங்கள்" என்று கடாவுகிறார்.
மேற் கூறியவற்றால் சங்கமலி செந்தமிழ் இறைவனது திருச்செவிக்கு முற்றிலும் உகந்த மொழி என்பது எளிதில் பெறப்படும்.
திருக்கோயில்கள் தமிழர் மொழி, நாகரிகம், கலை, பண்பாடு இவற்றின் இருப்பிடமாக விளங்க வேண்டும். திருக்கோயில்களில் செந்தமிழில் அருச்சனை செய்வதன் மூலம் எங்கள் தாய்மொழியான தமிழ்மொழிக்குரிய சிறப்புக் கொடுப்பதோடு கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்மொழி கால வெள்ளத்தில் அழிந்தொழிந்து போகாது காப்பாற்றவும் முடியும். எனவே திருக்கோயில்களில் தமிழ் அருச்சனைக்கு அறங்காவல் சபை உறுப்பினர்கள், கோயில் உரிமையாளர்கள், சமயப் பெரியார்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தமிழ் வாரத்தில் மட்டுமல்ல அதன் பின்னரும் ஆதரவு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். |