தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > சிட்னி தமிழ் அறிவகத்தால் நடாத்தப்பட்ட வசந்த மாலை 2007 இல் ஆற்றிய உரை
 

Selected Writings
M.Thanapalasingham, Australia

ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

சிட்னி தமிழ் அறிவகத்தால் நடாத்தப்பட்ட
வசந்த மாலை 2007 இல் ஆற்றிய உரை

8 April 2007

"ஒரு மக்கள் எதையும் இழக்கலாம், அகதிகளாகலாம் , அன்னியரின் ஆக்கிரமிப்பிற்கும் உள்ளாகலாம். ஏனெனில் போர்க்குணம் இருப்பின் இவற்றில் இருந்து மீளலாம். ஆனால் தாம் யார் , தமது பாரம்பரியம் என்ன, தம் முன்னோர் விட்டுச்சென்ற ஞானக்கருவூலங்கள் என்ன என்பதை மறப்பார்களாயின் முகம் அற்றவர்களாக, முகவரியைத் தொலைத்தவர்களாக, வரலாறு இல்லாதவர்களாக, வம்பிலே பிறந்தவர்களாக ஆக்கப்படுவர். இதன் உடன் நிகழ்வாக தன்னம்பிக்கை அற்றவர்களாக மீளா அடிமைக்கு ஆளாவர். "

நாடு, அதை நாடு, ஆதை நாடாவிட்டால் ஏது வீடு...


சிட்னி தமிழ் அறிவகத்தால் நடாத்தப்படும் வசந்த மாலை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுவதையிட்டு மகிழ்கின்றேன். இதற்காக என்னை அழைத்த அறிவகத்திற்கு எனது அன்பு கலந்த நன்றிகள்.

ஒரு மக்கள் எதையும் இழக்கலாம், அகதிகளாகலாம் , அன்னியரின் ஆக்கிரமிப்பிற்கும் உள்ளாகலாம். ஏனெனில் போர்க்குணம் இருப்பின் இவற்றில் இருந்து மீளலாம். ஆனால் தாம் யார் , தமது பாரம்பரியம் என்ன , தம் முன்னோர் விட்டுச்சென்ற ஞானக்கருவூலங்கள் என்ன என்பதை மறப்பார்களாயின் முகம் அற்றவர்களாக, முகவரியைத் தொலைத்தவர்களாக, வரலாறு இல்லாதவர்களாக, வம்பிலே பிறந்தவர்களாக ஆக்கப்படுவர். இதன் உடன் நிகழ்வாக தன்னம்பிக்கை அற்றவர்களாக மீளா அடிமைக்கு ஆளாவர்.

இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடும் ஞானம் அற்றவர்களாக அதற்கான காரணங்கள் இவை என்ற அறிவும் அற்றவர்களாக ஆக்கப்படுவர். உலகில் எத்தனையோ பூர்வீகக்குடிகள் இந்தப் பரிதாபநிலைக்கு ஆளாக்கப்பட்டதை வரலாறு எமக்குக்காட்டுகின்றது. இதனால்தான் ஆக்கிரமிப்பாளன் ஒரு மக்கள் கூட்டத்தின் கருவூலங்களான நூல்களுக்கு தீ வைக்கின்றான். இப்படியான ஒரு தீ வைப்பின் பின்னணியல் தோற்றம் பெற்றதே சிட்னி தமிழ் அறிவகம்.

நீண்டதொரு பாரம்பரியத்தை , விழுமிய பண்பாட்டை, அற்புதமான செம்மொழியை, உன்னதமான இலக்கியங்களை , தத்துவங்களை, கலைகளை கொண்டவர்கள் நாம். இந்த உன்னதங்களை சாதித்த எம் முன்னோர் இவற்றை தாம் தம்மை ஆண்டபோதே, தமக்கெனப் படையும் கொடியும் கொண்டிருந்தபோதே, அலைகடலை தம் வசப்படுத்தி வாணிபம் செய்தபோதே சாதித்தனர் என்பதை நாம் மறக்கலாகாது. இந்து மகாசமுத்திரத்தின் வாணிப மொழிகளாக சீனத்துடனும் அரேபியத்துடனும் தமிழும் சரியாசனம் பெற்றிருந்தற்கு காலியில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் முதல் பல ஆவணங்கள் சான்றுபகர்கின்றன.

தம்மைத் தாமே ஆளும் மக்கள் கூட்டத்தில் இருந்தே ஆக்கங்களும் , வீரியங்களும், கண்டுபிடிப்புக்களும், மானிடவிழுமியங்களுக்கான தத்துவங்களும் பிரசவமாகும். பிறரை ஆள்பவர்களாலும் பிறரால் ஆளப்படுவர்களாலும் மானிட உன்னதங்களுக்கான விழுமியக் காட்சிகளைக் காணமுடியாது. தன்னைத்தானே ஆள்வது என்பதில் பிறரை ஆள மறுப்பதும். பிறரால் ஆளப்படுவதை ஏற்க மறுப்பதும் தொக்கு நிற்கின்றது. சான்றோரும் ஞானிகளும் கலாயோகிகளும் தம்மைத் தாமே ஆள்வது னன்பதை இவ்வாறே காண்கின்றனர்.

இன்று ஈழத்தமிழ் இனம் இதற்காகவே போராடுகின்றனர். தாயகம், தேசியம், சுயநிர்ணயம், என்பவை எம்மை நாமே ஆள்வதற்கே. நாம் எம்மை ஆள்வதன் மூலம் சிங்கள மக்களையும் பிறரை ஆள்வதால் வரும் கேடுகளில் இருந்து விடுவிடுவிக்க வழி சமைக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி பொதுவான மானிட முன்னேற்றத்திற்காக சுயமாக இரு தேசங்களும்,இரு மக்களும் ஆக்கபூர்வமான பேச்சுக்களில் எதிர்காலத்தில் பங்கு கொள்ளவும் வழி சமைப்போம்.

இவை வெறும் தத்துவ தரிசனங்கள் அல்ல. போராலும் ஆக்கிரமிப்பாலும், பரஸ்பர சந்தேகங்களாலும் பாதிக்கப்பட்ட ஜரோப்பிய நாடுகளால் இதைச் சாதிக்க முடியுமெனின், நீண்டபகைகொண்ட யேர்மனியாலும் பிரான்சுதேசத்தாலும் இதனைச் சாதிக்க முடியுமெனில் ஏன் எம்மால் முடியாது.

ஆயின் முதலில் நாம் அரசியல் சுதந்திரத்தை அடையவேண்டும். இதற்காகப் புலம்பெயர்ந்த நாமெல்லாம் அரசியல் விழிப்புணர்ச்சி கொண்டவர்களாக, போராட்டத்திற்குப் பின்னால் அணிதிரண்டு நிற்பவர்களாக எம்மை ஆளாக்கிக்கொள்ளவேண்டும்.

சுதந்திரத் தமிழீழமே அரசியல் விடுதலை என்பது 1976 ஆம் ஆண்டில் வெளியான மகத்தான வட்டுக்கோட்டைப் பிரகடனம். இதன் கதாநாயகன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அல்ல வேலுப்பிள்ளை செல்வநாயகம். தந்தை செல்வாவின் மரணம் ஏப்பிரல் 1977 இல் நிகழ்ந்தது. இந்த மரணச்சடங்கில் காலம் சென்ற வண ஆயர் அம்பலவாணர் பேசுகையில்

"  He died like Moses himself , without reaching the promised land but the vision he saw, he leaves behind as the heritage and challenge to his people "

" யூதர்களின் மோசசைப்போல் இவர் மரணம் தன்னால் உறுதியழிக்கப்பட்ட மண்ணை அடையமுன்பே நிகழ்ந்து விட்டது. ஆனாலும் இவர் கண்ட காட்சி தன் மக்களுக்காக இவரால் விட்டுச்செல்லப்பட்ட பாரம்பரியமும் சவாலுமாகும் " எனக் கூறினார்.

இந்தப் பாரம்பரியத்தையும் சவாலையும் சுமந்து அந்த மண்ணை நோக்கி எம் மக்களை இட்டுச் செல்பவரே வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் வரலாற்றின் நாயகன். தந்தை செல்வாவால் விட்டுச் செல்லப்பட்ட சவாலை சைக்கிளில் இருந்து முப்பது ஆண்டுகளுக்குள் வான்படை வரை அவர் வளர்த்துள்ளார் என பிரபல ஆய்வாளர் எம். ஆர். நாராயன் சுவாமி குறிப்பிடுகின்றார்.

இந்த 30 ஆண்டுகளில் எம் மக்களின் துன்பங்கள், துயரங்கள், அழிவுகள், அவலங்கள் ,அகதிவாழ்வுகள் என விரியும் சோகங்களைக்கூட தந்தை செல்வா காணத்தவறவில்லை. இருந்தபோதும் இதற்கு மாற்று தமிழினம் பூண்டோடு அழிந்துபோவதே என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். போராடாவிடில் முற்று முழுதான அழிவு என்பதில் அவருக்கு எந்தவிதமான அங்கலாய்பும் இருக்கவில்லை . இந்தப் போராட்டம் கொடுமையானது என்பதையும் அவர் மனம் கொள்ளத்தவறவில்லை. ஏனெனில் இதையே சீனத்து மாவோவும் 1938 இல்

" The enemy is strong and we are weak, and the danger of subjugation is there. But in other respects the enemy has shortcomings and we have advantages....China's war is progressive, hence its just character. Because it is a Just war, it is capable of arousing the nation to unity...Not that we would not like a quick victory: everybody would be in favour of driving the "devils" out overnight. But we point out that, in the absence of certain definite conditions, quick victory is something that exits only in one's mind and not in objective reality, and that it is a mere illusion , a false theory "

" எங்கள் எதிரி பலமாக உள்ளான். நாம் பலவீனமாக உள்ளோம். அடக்குமுறையின் ஆபத்தும் அங்கே தெரிகிறது. ஆயினும் மற்றைய வழிகளில் எதிரிக்கு குறைபாடுகளும் எமக்கு அனுகூலங்களும் உள. சீனாவின் யுத்தம் முற்போக்கானது. இதனால் இதன் குணாம்சம் தர்மத்தின்பாற்பட்டது. ஏனெனில் இது தர்மயுத்தம். தேசத்தின் ஒற்றுமையை எழிச்சிபெற வைக்கும் சக்தி இதற்கு உண்டு. ஆயினும் சடுதியான வெற்றியை நாம் விரும்பவில்லை என்பதல்ல் பேய்களை ஓர் இரவினில் விரட்டியடிப்பதில் எல்லோருக்குமே உடன்பாடு உண்டு. ஆயினும் நாம் குறிப்பிட்டுக் காட்டுவது என்னவென்றால் நிச்சயமான சில சூழ்நிலைமைகள் இல்லாத இடத்து ,திடீர் வெற்றி என்பது ஒருவரின் மனத்தில் மட்டுமே ஒழிய யதார்த்த பூர்வமானதல்ல. அது வெறும் மாயை. ஒரு தவறான கொள்கை " எனக் கூறியள்ளமை மனம் கொள்ளத்தக்கது.

சீனத்து மாவோவின் உலகைவிட இன்றைய புதிய உலக ஒழுங்கு மிகவும் சிக்கலானது .ஒருவகை இடியப்பச் சிக்கல் போன்றது. பல்வேறு சக்திகள் பல விதமான வியூகங்களுடனும் உத்திகளுடனும் வலம் வந்த வண்னம் உள்ளன. இவற்றை தெளிவாக உள்வாங்கிச் செயல்படும் பாரிய பொறுப்பும் எமக்குண்டு. நாம் சோரம் போய்விடக்கூடாது. எமது போராட்டம் முற்போக்கானது. தர்மத்தின் பாற்பட்டது. நியாயமானது. அறத்தின் அடிப்படையில் மட்டுமல்ல சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும்தான் என்பதை நாம் மனம் கொண்டு எந்தவித அழுத்தங்கள் தடைகள் வந்தாலும் எம் குரலைக் கொடுத்திடவேண்டும்.

வோல்ரயர் என்னும் புகழ் பூத்த பிரான்சு தேசத்துச் சிந்தனையாளன் கூறியதுபோல் "மக்கள் நியாயம் தேட ஆரம்பித்தால் மற்றைய அனைத்தும் தோற்றுவிடும் "

தேசியத்தலைவரின் வார்தையில் கூறுவதானால் " தேசாபிமான உணர்வானது மக்களை ஆழமாகப் பற்றிக்கொள்ளும் பொழுதுதான், ஒரு தேசம் தனக்கே உரித்தான தனித்துவமான ஆளுமையைப் பெறுகின்றது : இந்தத் தேசிய ஆளுமையைக்கொண்ட மக்கள் இனம் தான் ஒரு அரசை அமைத்துக்கொள்ளும் தகுதியைப்பெற்றிருக்கின்றது "

இன்று எம் தேசம் தரைப்படை,கடல்படை,வான்படை, அரசுக்கான கட்டுமானங்கள், யாவற்றையும் கொண்டு அரசுநோக்கிய இறைமையை மற்றவர்கள் தருவார்கள் என்று எதிர் பாராது நாமே வருந்தி உழைத்து உலகின்முன் காட்டிக்கொண்டிருக்கிண்றோம். இந்த நிலையில் இதற்கான அங்கீகாரத்தைப் பெற்றிட உழைப்போமாக.

 

Mail Usup- truth is a pathless land -Home