"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவாக
15 December 2006 எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாலா அண்ணை வகித்த பாகத்தை உரிய முறையில் மதிப்பிடவேண்டுமாயின் அவர் வருகைக்கு முன்பிருந்த காலத்தை விளங்கிக்கொள்ளல் அவசியமாகின்றது. இன்னொரு வகையில் கூறுவதானால் எமது தேசிய விடுதலைப் போராட்டம் அதன் புறநிலை,அகநிலைக் காரணிகளால் தவிர்க்கமுடியாத வரலாற்று நியதியாக ஆயுதப்போராட்டமாகப் பர்ணமித்த காலத்தின் முன் உள்ள காலத்தை எம் கண்முன்னே நிறுத்தல் அவசியமாகும். அந்தச் சமுதாயம் பழமையில் ஊறிக்கிடந்தது. சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினரே அரசியலில் ஆதிக்கம் செலுத்தினர். தொழில் சார்ந்த துறைகளில் கல்விகற்றோரே புத்திஜூவிகளாக வலம்வந்தனர். அவர்களுள்ளும் சட்டம் பயின்றோரே " உயர்ந்தோர் குழாமாக " (elite) அரசியலில் கணிக்கப்பட்டனர். இவர்களே தமிழத்தேசிய விடுதலையை பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியும் முன்னின்று நகர்த்திவந்னர். இவர்கள் அரசியல்மொழியோ ஆங்கிலம். இந்த பண்பியல்புகள் எமது சமூகத்திற்கு மட்டுமானதல்ல . ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப்போர்கொடி உயர்த்திய இந்தியா உட்பட்ட நாடுகளுக்கும் பொதுவானதே. ஆயின் எண்ணிக்கையில் அசுரபலம் கொண்ட சிகங்களதேசம் தமிழர் இருப்பையே கேள்விக்குறியாக்கிய காலகட்டத்தில் வடிவம்பெற்ற ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள அரசியலை , சமூகவியலை, வரலாற்றை, கலைபண்பாடுகளை, சடங்கு சம்பிரதாயங்களை, புதிய ஒளியில் இபுதிய மார்க்கத்தில், பார்க்கவேண்டிய நிர்பந்தத்தை ஆயுதப்போராட்டம் ஏற்படுத்தியது. இந்த வரலாற்றுப் பணியை ஆற்றியவர் அன்ரன் பாலசிங்கம். இதனால்தான் இவர் எமது தேசியவிடுதலைப் போராட்டத்தின் தத்துவாசிரியராகின்றார். இவ்வாறு செயல்பட்டபோது தனது ஆழமான வாசிப்பு இவாசித்திவற்றுள் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பவற்றை உள்வாங்கினார். அவற்றைப் போராளிகளுடன் பகிர்ந்துகொண்டார். அவர்களிடமிருந்து இவரும், இவரிடம் இருந்து அவர்களுமாக இடம்பெற்ற இருவழிப் பாய்ச்சலில் ஆயுதப்போராட்டத்தின் பின்னால் உள்ள அரசியலில் புதிய வெளிச்சங்கள் பாய்ந்தன. புதிய புத்திஜுவிகள் போராட்டத்திற்குள் இருந்து பிறப்பெடுத்தனர். கிட்டு என எல்லோராலும் வாஞ்சையோடு அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமாரின் மொழியில் கூறுவதானால் : ஆயுதப் போராட்டத்திற்கான புறநிலைக்காரணிகள், நெருக்கடிமிகுந்த இந்தியத் தலையீட்டுக்காலத்தில் இயக்கம் எதிர்கொண்ட சவால்கள், திம்புவில் இருந்து ஒஸ்லோவரை நகர்த்தப்பட்ட சமாதான முன்னெடுப்புக்கள் யாவும் ஒரு கற்பியல் பாடநூல் முறையில் எழுதப்பட்டுள்ளது. மாற்றங்களை வேண்டிநிற்கும் எந்த ஒரு கருத்தியலோ, சிந்தனையோ, தத்துவமோ உலகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமும் திருத்தமும் இன்றி நிற்குமேயானால் நாற்றம் எடுக்கும். திறந்த அரங்கில் நிகழும் மாற்ங்களை அவதானித்துச் செயலாற்ற வழிவகுக்கும் கருத்தியலே வெற்றிக்கு எம்மை இட்டுச் செல்லும். "விடுதலையில் ஜுட்டு கிருஸ்ணமூர்த்தியின் மனப்புரட்சியை " மனித வாழ்வுக்கு மனிதனே அர்த்தத்தைக் கற்பிக்க வேண்டும் " என்னும் பிரஞ்சு இருப்பியல்வாதியான அல்பேர்ட் கம்லுஸ்ரீவின் ( Albert Camus ,1913-1960 ) வாதங்களை, சென்ற நூற்றாண்டின் கணிசமான காலப்பகுதியை ஆட்கொண்டு ஜரோப்பிய சிந்தனை உலகை ஆட்டிப்படைத்தவரும் எழுத்து என்றால் என்ன. ஒரு எழுத்தாளன் ஏன் எழுத வேண்டும்? அவன் யாருக்காக எழுத வேண்டும் ? என்னும் கேள்விகளுக்கு விடையளித்தவருமான ஜோன் போல் சாத்தர்,( Jean Paul Sartre 1905-1980) பிராங்ஸ் பனன் எழுதிய " பூமியில் இழிநிலைப்பட்டோர் " (Wretched of the Earth ) கால் மாக்சையே கவர்ந்த யேர்மன் தத்துவஞானியாககிய ஹேஹல், (Hegel ) சீனத்து மாவோ, " நாகரிகங்களின் மோதலும் உலக ஒழுங்கை மீளமைத்தலும் " என்ற சாமுவேல் ஹண்டிங்ரன் எழுத்துக்கள், ( The Clash of Civilizations and the Remaking of World Order ) உணர்ச்சிமயமான மனிதனைக் காணும் சிக்மண்ட் பிராய்ட்டின் கருத்துக்கள், "வரலாற்றின் முடிவு " என்னும் சர்ச்சைக்குரிய பிரான்சிஸ் புக்குயாமாவின் கருத்துக்கள் எனப் பல சமூகவியல், வரலாற்றியல், இருப்பியல், மானிடவியல் சார்ந்த சிந்தனையாளரின் கருத்துக் கருவூலங்களை அழகான தமிழ் நடையில் பாலா அண்ணர் எழுதியுள்ளது போராட்டதிற்கு அவர் அளித்த மாபெரும் கொடையாகும். சிந்திக்கத் தூண்டும் இந்த எழுத்தோவியங்கள் அவர்களை ஆகர்சித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. பாலா அண்ணை என்ற வீருட்சம் அதன் புழுதியோடும், உறவுகளோடும், உணர்வுகளோடும் ஒன்று பட்டு நிற்பதால் அந்தக் காட்டின் பெரு விருட்சங்களில் ஒன்றாக என்றுமே கோலம் காட்டி நிற்கும். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் வசப்படக்கூடியதொன்றல்ல. இது வானத்தில் இருந்து விழுவதுமல்ல. நிலத்தில் ஆழமாக ஊன்றிய தேசபக்தியின் உருவமே அன்ரன் பாலசிங்கம் என்னும் எமது பாலா அண்ணை. |