தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > சாவிலும் வாழ்வோம் கறுப்பு யுலை நினைவு கூர்வு > Genocide'83

 

Selected Writings
M.Thanapalasingham, Australia

ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

சாவிலும் வாழ்வோம்
கறுப்பு யுலை நினைவு கூர்வு
[சிட்னியல் கறுப்பு யுலை நினைவு நிகழ்வில் ஆற்றிய உரை]

"...சனநாயகம், சனநாயகம் என்று கூக்குரல் இடுகின்றார்களே, ஒருவனை மற்றவன் ஆளும்போது சனநாயகம் நிலவுமா? ஒரு இனம் தன்னை தானே ஆளும்போதே சனநாயகம் நிலைக்கும். சுயநிர்ணய உரிமையே சனநாயகத்தின் அத்திவாரம்..."


வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது வென்றவர்களும்இ மனித விழுமியங்களை தழுவியவர்களும் வரலாற்றை நகர்த்தியவர்களாகவும் ஏனையோர் வரலாற்றில் கரைந்தவர்களாகவும் இருப்பதை காணமுடிகின்றது. சாவிலும் வாழ்பவர்களே வரலாற்றிலும் வாழ்கின்றார்கள்.

" உயிர்வாழ விரும்பினால் நீ
உனக்கென ஒருதேசம் சமைத்திடு என்று
உறைப்பாக உணர்தியது எண்பத்துமூன்று "

தனிமனித வாழ்விலும்சரி,  ஒரு இனத்தின் இருப்பிலும்சர,ி அவ்வப்போது இருள் சூழ்ந்த காலங்கள் இடம்பெறுவதுண்டு. அதேசமயம் தனிமனிதனும்சரி, நாடும்சரி தமது விதியை அறிந்தோ அறியாமலோ தமது செயல்களால் தாமே தீர்மானிக்கின்றனர்.

அவர்களது கடந்தகால செயல்கள் நிகழ்காலத்தையும்,  நிகழ்காலச்செயல்கள் வரும்காலத்தையும் தீர்மானிக்கின்றன. கடல்போல வரும் இன்னல்களை நாம் எதிர்கொள்ளும்போது போராளியாக மாறுபவர்களே, போர்குணம் கொண்டவர்களே சாவிலும் வாழ்கின்றார்கள். ஏனையோர் தடம் இன்றி மறைகின்றனர்.

எம்மில் பலர் மதில்மேல் பூனையாக இருந்தபோது, கறுப்பு யுலை சேக்ஸ்பியரின் ஹம்லெற் தனக்குத்தானே பேசியதுபோல் (self –overhearing)

To be or not to be – that is the question:
Whether 'tis nobler in the mind to suffer
The slings and arrows of outrageous fortune
Or to take arms against a sea of troubles
And by opposing end them. 

எம்மை கட்டிய தளைகளை அறுப்பதா இல்லையா என்ற கேள்வி. முடிவினை எடுத்தோர் செயலராகினர் (Activist). எம்மில் பலர் அதுவரை வாழ்ந்த வாழ்க்கை கோலங்களில் யுலை 83 பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. கறுப்பு யுலை எமக்கு உணர்த்திய பாடம்,  ஏற்படுத்திய தாக்கங்கள், அவற்றின் விளைவுகள் இவையே எம்மை ஒரு இனமாக, மக்களாக,  என்றுமில்லாதவாறு இணைத்துவிட்டது.

கறுப்பு யுலை இல்லாவிடின் எம்மில் பலர் ஒருவரையொருவர் சந்தித்திருக்கமாட்டோம். எமக்கென்ற தனி வழிகளில் சென்றிருப்போம். கால ஓட்டத்தில் கரைந்திருப்போம். மாறாக வரலாற்றை படைப்போராக எம்மை ஆக்கியது கறுப்பு யுலை.

சிலுவையில் அறையப்பட்டால்தான் உயிர்த்தெழ முடியுமென்றால், கறுப்பு யுலை என்னும் சிலுவையில் எம் இனம் அறையப்பட்டபோது நாம் எல்லோரும் புண் சுமந்தோம். அதில் இருந்து பீறிட்டுப் பாய்ந்த குருதியில் ஒரு புத்தம் புதிய மனிதனின் பிறப்பு என்னும் அதிசயம் நிகழ்ந்தது. அதற்கும் நாமே சாட்சியமானோம்.

அமெரிக்க தேசிய கவிஞனான விட்மன் கூறியது போல் " காயப்பட்டவர்களைப் பார்த்து எப்படி என்று கேட்காது நாமே காயப்பட்டவர்களானோம் "

அந்தக் காயத்தின் உபாதையில், வலியில்,  வேதனையில் நாம் ஒரு சுகத்தை அனுபவிக்கும் ஞானம் பெற்றோம். பொது நலத்தில் எமக்கிருக்கும் இன்பம், அந்த ஞானமே விடுதலை வேட்கை. அதற்காக வாழவும் சாகவும் பலர் தயாராகினர்.
இந்த இனமானத் துடிப்பு,  இணைப்பு எப்படி வந்தது?

 கறுப்பு யுலையில் நாம் எரிந்த போதும், பிடிசாம்பலானபோதும் எம்முள் இருந்த மனிதம், அதனுள் மண்டிக்கிடக்கும் தன்மானம் எரியவில்லை, சாகவில்லை. அது எப்பொழுதும் எழுகின்ற பீனிக்ஸ் பறவையாக சாவிலும் வாழ்வாய்,  வாழ்வு என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே உள்ள தூரம் அல்ல என எமக்கு உணர்த்தியது.

" கொல்வோரை மோதி கொடுபட்ட இன்னுயிரை
எல்லா உயிரும்தொழும் "

என முற்போக்கு கவிஞனும்,  மூத்த கவிஞனுமான முருகையனை புதிய குறள் பாட வைத்தது.

ஏட்டில் மட்டும் கனவாக, பழங்கதையாகப் பேசப்பட்ட புறநாஞறு போற்றும் வீரம் எம்மண்ணின் வாழ்க்கை நெறியாக மாறிய விந்தையை கண்டு நாம் சிலிர்க்கின்றோம். பிறர் வியக்கின்றனர்.

" சாவை சந்திப்பதற்கு மனிதன் துணியவேண்டும்,  அந்த துணிவிலும், தெளிவிலும் விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக,  நிறைவானதாக அமையும் " என்கிறார் மாட்டின் கைடேகர் என்னும் தத்துவஞானி. ( Being and Time –Martin Heidegger 1889-1976)

எமது வாழ்வும் அந்த வாழ்வின் அர்த்தமும் ஒன்றையொன்று தழுவ எமது பிள்ளைகளும் தமது தேடலுக்கு இதனையே உள்வாங்கவும் வழி சமைத்ததும் கறுப்பு யுலை.

வெறும் மேடைப்பேச்சுக்கள் போய் "வாக்கும் அர்த்தமும் பார்வதி பரமேசர்போல் ஒன்றையொன்று தழுவுகின்றன " என்றான் காளிதாசன்.

இங்கு அர்த்தமுள்ள வார்த்தைகள் செயலாகி,  நம்பிக்கை, சிக்கனம்,  கடினஉழைப்பு, விவேகம்,  உறுதி, தைரியம், விடாமுயற்சி இவையாவும் கைவரப்பெற்ற சமுதாயம் ஒன்று எம்மண்ணில் கறுப்பு யுலையின் அழிவில் தோற்றம் பெற்றதைப் பார்க்கின்றோம்.

எண்ணிக்கையில் குறைந்தாலும் நிரந்தரமான பெரும்பான்மை என்னும் இராட்சதத்துள் கரைந்துவிட மறுத்த ஓர்மம் இவர்களுக்கு. 1977 க்கும் 1983 க்கும் பின்னர் பிறந்தோரே மனித சுனாமிபோல் வரும் வதைகளை எதிர்கொள்ளும் போராளிகளாக ஆயுதம் ஏந்தி நிற்பதையும், வென்று, அரசு உருவாக்குவதையும் பார்க்கின்றோம். இதனை இன்னமும் துட்டகைமுனு எல்லாளன் பெட்டிக்குள் இருந்தபடி பார்க்கும் சிங்களத்தால் கனவிலும் புரிந்து கொள்ள முடியாது. இதுவே எங்கள் பலம், அவர்களது பலவீனம்.

புகழ்பெற்ற றஸ்சிய கலைஞன் மாக்ஸிம் கார்க்கி " மனிதன் " எத்துணை மகா மந்திரச்சொல் என்றான். அவன் போற்றும் மனிதன் யார்?

எங்கள் கம்பனோ, கடவுளர்,  தேவர்கள் உள்ளிட்ட " வேறுள குழுவையெல்லாம் மானிடம் வென்றம்மா" என குதூகலிக்கின்றான். அவன் குறிப்பிடும் மானிடம் என்பதன் அத்தம்தான் என்ன?

" கோழையாக நீயிருந்து கோடிமுறைகள் சாவதுமேன்
வேளையிங்கு வரும்போது விடுதலைக்காக மாண்டுவிடேன் "

என ஹங்கேரிய தேசியக்கவிஞன் பெட்டோவ்ஃபி குறிப்பிடும் விடுதலைக்காக என்பதன் குறியீடு என்ன?

" வீழ்ந்தவர்கள் எல்லாம் விதையாகப் போனதால்தான் விடுதலைப்போர் இன்னமும் தொடர்கன்றது " என தேசியத்தலைவர் குறிப்பிடும் விதையின் விந்தை என்ன?

எங்கள் சிலுவையை எம்கையாலே செய்திடுவோம் என்பதும் தொனிக்கவில்லையா?
சனநாயகம், சனநாயகம் என்று கூக்குரல் இடுகின்றார்களே, ஒருவனை மற்றவன் ஆளும்போது சனநாயகம் நிலவுமா? ஒரு இனம் தன்னை தானே ஆளும்போதே சனநாயகம் நிலைக்கும். சுயநிர்ணய உரிமையே சனநாயகத்தின் அத்திவாரம். சுயநிர்ணயத்தால் வரும் சனநாயகத்தில்தான் ஆபிரகாம் லிங்கனையும் ஆட்கொண்ட விட்மன் குறிப்பிடும் சனநாயகப் பண்புகளான

" உடலுறுதி, மனவுறிதி, சித்தவிலாசம், ஆத்மசுதந்திரம், விரிவான கலைப்பயிற்சி, பயனுள்ள தொழில்முயற்சி, தாராளமான நட்பு, ஈகை, ஒருவரையொருவர் கொள்ளையடிக்காத அன்யோன்யம், சாதிமத பிடிவாதங்கள் அற்ற சுதந்திரமான நிமிர்ந்தநடை, செல்வச்செருக்கற்ற சரளமான உறவு "

என்பவை கால்கொள்ளும்.

இன்று எமது மண்ணில் எமது மக்கள் சொல்லோடு நிற்காது, பொங்கு தமிழ் எழுச்சிகளாக அந்த சொல்லுக்கு அர்த்தம் தந்ததோடு நிற்காது எல்லைப் படையாக துணைப் படையாக செயல் வடிவம் பெற்று நிற்கும் காட்சிகள் எம் கண்முன்னே கட்டவிழ்கின்றது.

" தேசாபிமான உணர்வானது மக்களை ஆழமாகப் பற்றிக்கொள்ளும் பொழுதுதான், ஒரு தேசம் தனக்கே உரித்தான தனித்துவமான ஆளுமையைப் பெறுகின்றதுஇ இந்தத் தேசிய ஆளுமையைக்கொண்ட மக்கள் இனம் தான் ஒரு அரசை அமைத்துக்கொள்ளும் தகுதியைப்பெற்றிருக்கின்றது " தமிழீழத்தேசியத்தலைவர் திரு வே .பிரபாகரன் அவர்கள்

ஆம் இன்று உலகமே சாட்சியாக நாம் அந்தத் தகுதியை பெற்றுவிட்டோம். இதற்கு வித்திட்டது கறுப்பு யஸ்ரீலை. இதனை உலகிற்கு ஓங்கி உரத்துச் சொல்லவேண்டிய பொறுப்பு, உரிமை, புலம்பெயர்ந்த் அதுவம் 83 கறுப்பு யுலையின் பின் புலம் பெயர்ந்த எங்களது பொறுப்பு.

பலத்தின் பக்கமே உலகம் தீர்ப்பு எழுதுகின்றது என்பது யதார்த்தம். அந்த உலகம் வல்லவன் நிமிரும்போது வளைக்க முயலும் முடியாதபோது அணைத்துக்கொள்ளும்.

"The world is a dangerous place,not because of those who do evil.but because of those who look on and do nothing "

 

Mail Usup- truth is a pathless land -Home