".......(புலிகளினால்) சமர்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை பிரேரணையின் அடிப்படையில் தன்னும் பேச்சுவார்த்தையில் ஈடுபட சம்மதம் தெரிவிப்பதற்கும் அதனை உண்மையாக நடைமுறைப்படுத்துவதற்கும் இடையே பாரிய வித்தியாசம் உண்டு.அவ்வாறு பேசும்போது விடுதலைப்புலிகளின் கனரக ஆயுதங்களை களைவது பற்றியும் முன்எடுக்கலாம். இதனை புலிகள் ஏற்கமாட்டார்கள். ஆனால் சர்வதேச சமுகத்திற்கு இது உடன்பாடாக இருக்கும்." ஏசியன் றிபியுன்...சிங்கள பத்திரிகையாளர் டயான் யெயதிலகா
இயற்கையின் ருத்திரதாண்டவத்தில்கூட அரசியல் லாபம் தேடும் சிங்கள அரசின் பிரதான அங்கமாக சிங்கள பத்திரிகையாளர்களும் சிங்கள ஊடகங்களும் செயல்படுவது தமிழருக்கு தெரியாத ஒன்றல்ல. இருந்தாலும் மற்றையவர்களைப் போலன்றி டயான் யெயதிலகா பச்சையாக இனவெறி கக்கவில்லை. இவரது மெத்தபடிப்பு இதற்கு காரணமாகலாம். இயற்கையின் அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்ககப்பட்ட தமிழ் மக்களும் இத்தேசத்தவரே என்ற அடிப்படையில் சிங்கள அரசு நிவாரண பணிகளை மேற்கொள்க வேண்டும் என்ற பாணியில் இவர் எழுதி இருப்பது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுததற்கு ஒப்பாகும்.
சிங்கள இராணுவத்தால் நிராயுதபாணியாக்க முடியாத தமிழ் தேசியத்தை சமாதான பேச்சு வார்த்தை மூலம் சாதிக்க துடிக்கும் இவரின் போக்கு சமாதானப்பேச்சும் ஒருவகையான போரே என்ற அடித்தளத்தில் நின்று பார்க்கப்படுவதாகும். உலகில் பல முரண்பாடுகளை அணுகுவதில் சர்வதேச சமூகமும் இதனை கையாண்டு வருவதால் அவர்களுக்கும் இது ஒக்கும் என்கிறார்.
"தக்கது நீர் செய்தீர் தருமத்திற்கு இச்செய்கை ஒக்கும் எனக்கூறி உவந்தனராம் சாத்திரிமார். பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்...." பாரதி (பாஞ்சாலிசபதம்)
இன்றைய உலக ஒழுங்கில் தேசிய அரசு (நேசன் ஸ்ரேற்) எனப்படும் நாடுகளே படை, கொடி என்பவற்றிற்கு ஏகபோக உரிமை கொண்டவர்கள். ஒரு நாடு, ஒரு படை, ஒரு கொடி. இவற்றிற்கு அந்தந்த தேசமக்கள் விசுவாசமாக இருப்பர். இந்த விசுவாசத்தை கிரிக்கட் விளையாட்டில் இருந்து அன்னிய தேசத்து தலைவர்களை வரவேற்பது உட்பட சகல வைபவங்களிலும் அந்த தேசமக்கள் வெளிக்காட்டுவர்.
புராணகாலங்களில் கூட போர்பயிற்சி சத்திரியர்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. இதனால்தான் ஏகலைவனின் விரலை துரோணர் குருதட்சணை ஆக்கினார். இதுவும் ஒருவகை ஆயுதகளைவுதான் (டிகொமிசனிங் - decommissioning). குலங்கள், குழுக்களாக இருந்த பண்டைய சமூக அமைப்பில் ஒவ்வொரு குலமும், குழுக்களும் ஆயுதபாணிகளாக இருந்தனர். இவர்கள் தம்மிடையே முட்டி மோதியதன் விளைவாக அரசு என்ற தாபனம் ஏற்பட்கது. இதன் தலைவனே மன்னன். இந்த மன்னர்களின் நாடுகள் இன்றைய தேசிய அரசுகள் அல்ல. மன்னர் ஆட்சியில் அவர்கள் நாட்டில் கிளர்ச்சிக்காரர் அவ்வப்போது ஆயுதம் தரித்தனர். ஆயின் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், குறிப்பாக ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றங்களால் இன்றைய தேசிய அரசுகள் உருவாகின. இன்று இவை முன் நவீனத்துவ (பிறி மொடேன் - pre modern) நவீனத்துவ (மொடேன் - modern) பின் நவீனத்துவ (போஸ்ட் மொடேன் - post modern) என வகுக்கப்பட்டாலும் படையும் கொடியும் அரசின் ஏகபோக உரிமையாகவே உள்ளது. நாட்டில் ஒழுங்கையும், அமைதியையும் காக்க, தமது ஆட்சிக்கு உட்பட்ட மக்களை பாதுகாக்க, இது அவசியமே. ஆனால் வேலியே பயிரை மேய்ந்தால் என்னவாகும். nசிறிலங்கா என்ற தீவு முழுவதும் தமதே என ஆளும் சிங்களவர், தமிழ் மக்களை பிறிது பிறிதாக்கி, பாகுபாடு காட்டி, அடித்து, துரத்தி கொடுமை செய்த வரலாறும் அதற்கு துணைநின்ற சிங்களராணுவத்தின் செயல்பாடுகளின் விளைவுமே புலிகளும் அவர்கள் வரித்துக்கொண்டுள்ள ஆயுதங்களுமாகும். இந்த ஆயுதங்களை சிங்கள ராணுவத்தால் அடித்து பறிக்க முடியவில்லை. ஏன்? புலிகளின் கையில்தான் ஆயுதம், அவர்கள் கழுத்தில் அணிந்திருப்பதோ நஞ்சு, அவரகள் திடமோ "ஆவி கொடுக்கும் அசையாத்திடம்" அவர்கள் மோதுவதோ கொல்வோரை தடுக்கும் மோதல்.
அவர்களை ஆட்கொண்டிருப்பது உருண்டு திரண்ட தமிழ் தேசியம். அந்த தேசியத்தற்கு தூல சரீரம் மட்டுமல்ல சூட்சும சரீரமும் உண்டு. அதை எப்படி களைவது?
பேச்சுவார்தை போரை இன்னொரு வழியில் கையாளும் தந்திரோபாயம் எனபதில் இருந்து சிங்களதேசம் என்று விடுபடுமோ அன்றுதான் தமிழ் தேசியமும் சிங்கள தேசியமும் ஒரு தீவில் எவ்வாறு கொலுவிருக்கலாம் எனபதுபற்றி சுயமாக பேசலாம். அதற்கும் சர்வதேச சமூகம் அனுசரணையாக இருக்கலாம். ஏனெனில் சிங்கள தேசியத்திற்கு ஆயுதம் தாங்கும் உரிமை எப்படி இருக்குமோ அந்த உரிமை தமிழ் தேசியத்திற்கும் உண்டு.
ஒருவகையில் சொல்லபோனால் அந்த உரிமையை தமிழ் தேசியம் வருந்தி உழைத்து பெற்றிருக்கின்றது.ஆனால் தமிழர் தேசியம் இதற்கும் அப்பாற்பட்டதொன்று. அகம் புறம் என்ற காட்சி கோலங்களும், வீரம், அன்பு, தியாகம் என்ற பணபுகளும் அதற்கு உண்டு. இவற்றை உள்வாங்கின் சிங்கள தேசத்தின் இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும், தமிழர் தேசத்தின் இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும் அந்தந்த மண்ணின் மைந்தர்களின் சுபீட்சத்துக்காக எவ்வாறு பேணப்படலாம் என்பதை சுயமாகப் பேசலாம்.
1505 ஆம் ஆண்டு லொறன்ஸ் டீ அல்மெய்டா என்னும் போர்த்துக்கேய மாலுமியும் அவனது சகாக்களும் புயலால் சிக்குண்டு காலி துறைமுகத்தை வந்தடைந்தனர். வந்தபின் அவர்கள் கேட்டதோ ஒரு பண்டகசாலை. நடந்த கதை வேறு. சுனாமி அனர்தத்தால் இன்று காலி துறைமுகத்தை வந்தடையும் சக்திகள்....அவற்றின் விளைவுகள் என்னவாகும். சிங்களதேசியம் தமிழ் தேசியத்தை அழிக்க தனது இறைமையையும் இழக்க துணியுமா? தமிழ் தேசியமோ இன்று கண்டுள்ள பரிணாமம், அதற்குப் பின்னால் உள்ள தியாகம், வீரம். எந்த வரலாற்றில் இருக்கிறது எரிகற்கள் கரிகியதாக. |