"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > Suvarkal
சுவர்கள்
Suvarkal
A poem by Raj Swarnan
15 September 1999
ஸ்ரீ லங்கா அமைச்சு ஒன்றில் உயர் பதவி வகிக்கும் தமிழர் ஒருவருடன் உரையாடியதன் பின் ஏற்பட்ட தாக்கத்தில் எழுதியது
சுவர்களே....
உங்கள் கண்களையும் காதுகளையும்
முக்கையும் ஏன்
கட்டி வைத்திருக்கிறீர்கள்?
வீடும் வளவும் இழந்து
வெட்ட வெளியில்
நட்ட நடுத்தெருவில்
மீளக்குடியமர்வு நிவாரணம் எனும்
பிச்சைக்காசுக்காய்
ஏங்கிய படி
தவித்துத் தள்ளாடும்
எங்களைப்
பார்க்கக் கூடாதென்றா?
எங்கள் குரல்களைக்
கேட்கக் கூடாதென்றா?
பால் நிலாக் காய்கிறது..
வழியில்
பல்லாயிரம் நட்சத்திரங்கள்
எமைப் பார்த்துக்
கண்சிமிட்டிச் சிரிக்கின்றன..
ஆனால்
எமைப் பார்க்க வேண்டியவர்களோ
பார்க்க மறந்தனர்..
நடமாடும் சேவையென்றும்
அதேயிடத்தில் சேவையென்றும்
எட்டிப் பார்த்து விட்டுப்
போனவர்கள் போனது தான்..
நாமோ
நடக்கவும் முடியாமல்
நிற்கவும் முடியாமல்
அதேயிடத்திலேயே
அழுது கொண்டிருக்கிறோம்...
சுவர்களே....
நீங்கள் குறுக்கே நின்று
மறைப்பதனாலே தான்
எங்கள் நிலை
எவருக்கும் தெரியவில்லை..
சுவர்களே...
எங்கள் நிலையை
மறைத்து வைப்பதிலே
உங்களுக்குத்தான்
எத்துணை அக்கறை?
எங்கள் நிலையை
மறைக்க முயல்வதற்குக்
காரணம் தானென்ன
சொல்லுங்கள் சுவர்களே?
உங்களுக்கு மாத்திரம் தானே
அந்த இரகசியங்கள் தெரியும்?
உங்கள் மவுனங் கலைத்துச்
சொல்லுங்கள் சுவர்களே...
பார்க்கத் துடித்தும்
மறைத்து வைக்கப் பட்டிருக்கும்
உங்கள் கண்களையும்
கேட்கத் துடித்தும்
அடைத்து வைக்கப் பட்டிருக்கும்
உங்கள் காதுகளையும்
பேசத் துடித்தும்
கட்டி வைக்கப் பட்டிருக்கும்
உங்கள் வாய்களையும்
நினைத்துப் பார்க்க..
எனக்குக் கவலை தான் மிஞ்சுகிறது..
கவிதை பிறக்கவில்லை..
காலம் பிறக்கும்..... உங்கள்
கட்டுக்கள் அகலும்..
எங்கள் கவலையை
வெளிப்படுத்த நீங்கள்
எழுச்சியுடன் வருவீர்கள்..
அப்போது உங்களை நான்
முத்தமிட வருவேன்...