"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > Pongayo Thamizha
A poem by Raj Swarnan
14 January 2000 - Thai Pongal Day
பொழுது புலர்கையில் - நீ
பொங்கிடல் காணப்
புறப்பட்டு வந்தேன்..
நீயோ பொங்கவும் கண்டிலேன்
படைக்கவும் கண்டிலேன்..
என்னவாயிற்று தமிழா உனக்கு?
தங்கக் கிரணங்களால் இதுவரை உன்னைத்
தட்டிக் கொடுத்தும் தலை நிமிரக் காணோம்..
சுட்டெரிக்கும் சுடர்விழிச் சூரியனாய் மாறினாற் தான்
சுற்றஞ் சூழல் பற்றிச் சூடுனக்கு ஏற்படுமோ?
அந்தரத்தில் உன் உறவுகள்
அல்லாடிக் கொண்டிருக்க - நீ
சுந்தர காண்டத்தின் சுகத்தில்
சுருண்டு படுத்திருக்கிறாய்..
சுடாமல் என் செய்ய?
என் செங்கிரணங்களால் உனக்கு மேலும்
சுகந் தரச் சொல்கிறாயா?
உழவனுக்கொர் தினமென்று
உலகுக்கே முதன்முதலில்
உழைப்பவர்க்கோர் தினமதனை
உருவாக்கித் தந்தவன் நீ..
உணர்வின்றிப் படுத்திருந்தால் உய்யலாமோ?
எழுந்து வா.. பொங்கிப் படைக்க வா..
உள்ள வசதியெல்லாம்
உன்னருகில் இருக்கிறது..
பக்கற்றில் பால் இருக்கு..
சங்கக் கடைச் சக்கரையும்
ஏனைச் சரக்குகளும்
சொல்லி விட்டால் வீட்டு வாசலுக்கு
வண்டியிலே வந்திறங்கும்..
இருந்தும் இன்னுமேன் பொங்கவில்லை?
பார்த்துப் பார்த்துப்
பூத்துப் போன என் விழிகள்
பொறுமையிழந்து தான்
உன் மீது
கோபக் கிரணங்களைக்
கொட்டத் தொடங்கின்றன...
கிழக்குக் கடலில் என்
கீற்றுக்கள் உதயமாகி உனக்குக்
கிளுகிளுப்பு ஊட்டுகையில் - நீ
கிறங்கிப் போயிருந்தாய்..
இப்போது..
நெடுந்தூரம் நீண்டு சென்று
என் கிரணங்கள் உன்
நெற்றிப் பொட்டில்
சுட்டுப் பொசுக்கத் தொடங்கியும்
நீ சூட்டை உணரக் காணோம்..
உச்சந் தலைக்கு மேல் இனி
அச்சந் தருவதால் தான் உன்
உணர்வுகளைத் தட்டி எழுப்பலாமோ?
அயல் வீட்டான் பொங்கிப் படைப்பதற்கு
அளவற்ற ஆவலுடன்
எப்போதோ எழுந்து விட்டான்..
அவனைப் பார்..
முண்டெழுந்த புயலினாலே அவன்
வயலெல்லாம் பாழாச்சு..
வாய்க்கால்கள் வரம்போடு
வடிவழிஞ்சு போச்சு..
நேற்றுப் பெய்த பெருமழையில்
முற்றிய கதிரெல்லாம்
முறிந்து சரிஞ்சு போச்சு..
சேர்த்து வச்ச நெல்மணியைச்
சேர்த்து வெள்ளம் கொண்டு போச்சு..
அவனிடமோ நெல் இல்லை..
அடுப்பு வைக்க இடமில்லை..
மட்டை பொறுக்கக் கூடிய மனோனிலை இல்லை
கும்பம் வைக்கத் தெம்பும் இல்லை
தேங்காயும் இல்லை
கோலமிட மாவில்லை
குத்து விளக்கில்லை
விளக்கெரிக்க எண்ணெய் இல்லை..
காட்டுதற்குக் கற்பூரமில்லை..
பற்றி எரிந்த பனுவல் ஆலயமும்
பட்டு முறிந்த பனை மரங்களும் தான்
அவன் வீட்டு வளவில்
மிச்சமாயிருக்கின்றன...
இருந்தும் அவன்
பொழுது புலர்வதன் முன்
பொங்கியெழுந்து விட்டான்..
தேசம் விடிவதன் முன் தன்
தேசிய வாகனத்தில்
காற்றில்லாப் பின்சில்லு
கல்லு றோட்டு வண்டிலாகக்
கடகடக்கக் கடகடக்கக்
களைப்புடனே தான் மிதித்து
வேண்டிய பொருளெல்லாம்
விருப்புடனே சேர்த்து வந்து
பொங்கலிட்டுப் படைத்து விட்டான்..
மர நிழலின் கீழிருந்து
மாய்ந்து கொண்டிருந்தாலும்
பொங்கத் தவறவில்லை - அந்தத்
தங்கத் தமிழன்..
உண்டு களித்த பின் தான்
உன்னிடம் நான் வந்துள்ளேன்..
ஊர்விட்டு எழுந்தோடி உன்னினத்தான்
உலகனைத்தும் பரந்து விட்டான்..
ஆதலினால்
பாரனைத்தும் பொங்குதடா இன்று
பாவியின்னும் நீயேன் பொங்கவில்லை?
பூர்வீகக் குடியென்ற திமிரிலோ நீயின்னும்
புதுப்பானை வைக்கவில்லை?
சும்மாயிருத்தலே சுகமென்று நம்பிச்
சுருண்டு படுத்திருக்கும் உன்னையெழுப்ப
என்னை எரித்தல் தேவைதானா?
உணர்வற்றுக் கிடக்கும் நீ
பொங்குவதெப்போ? படைப்பதெப்போ?
உன் வீட்டுப் பொங்கலுண்ணத்
தண்டோராப் போட்டு நின்றால் - என்
அன்றாடக் கடமைகள யார் செய்வார்?
வையத்துக்கு ஒளி கொடுக்கும் பணி முடித்து
வானுலகந் திரும்பல் வேண்டாமோ?
வாரமொரு தடவையேனும் வானுலகில் என்
வருகையைப் பதிவு செய்தல் கட்டாயம்..
இன்றேல்..
வந்தேறு குடியென்று - என்
வாழிடத்தைப் பறித்திடுவார்..
எத்தனை வேலைகள் எனக்கிருக்கு?
என்னை எதிர்பார்த்து
எத்தனை பேர் காத்திருப்பார்?
பகல் காணத் துடித்து நிற்கும்
மறுபாதி மக்களுக்காய் - நான்
இக்கணமே செலல் வேண்டும்..
பாதி உலகம் இருளில் படுத்திருக்க - நீ
பகலிலும் படுத்திருத்தல் நீதியோ?
சேதி கேள்.. என் செங்கிரணங்கள் வழிவரும்
சேதி கேள்..
பாயைச் சுருட்டு..
பனம் மட்டையைப் பொறுக்கு..
நேற்றுப் பெய்த மழையீரம்
காற்றோடு காய்ந்தது காண்..
கோலமிட்டு அடுப்புக் கட்டிப்
புதுப்பானை வைத்துப் பொங்கிடற்காய்
எரிகொள்ளி எடுத்துவா..
எதிர்பார்த்து நானிருப்பேன்..