"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > Madhu Matha
A poem by Raj Swarnan
22 November 1999
கருணை வழியும் உன் கண்களில்
கண்ணீரையும் செந்நீரையும்
கலந்தே வரவழைத்த
கயவர்கள் யார் தாயே?
தேசத்துப் பெண்களுக்கெல்லாம்
கருக் கொடுக்கும் உன்மீது
காடைத்தனம் புரிந்த
காட்டேறிகள் யார் தாயே?
கிராமத்துக் கிரிக்கட் மட்ச்சில்
தோற்றவன் கல்லெறிவது போல்
தஞ்சமடைந்தோரில் தாங்கிகளைத் திருப்பிவிட்ட
தறுதலைகள் யார் தாயே?
பெட்டைத் தனம் புரிந்த - இப்
பேடிகள் யார் தாயே?
புனிதம் நிறைந்த உன் புண்ணிய பூமியை
இரத்தமும் சதையுமாய் நிறைத்தவர்கள் யார் தாயே?
மக்களைக் காக்கும் மரியம்மா..
தாயே மடுமாதா - நீ
மக்களுடன் இருந்ததனால்
மாசுபடுத்தப் பட்டனையோ?
உன்னைக் காண்பதற்கு வழிதிறந்து விட்டதாக
உலகம் முழுவதற்கும் உழற்றித் திரிந்திட்ட
சண்டாளப் பிறவிகளைத் தண்டிக்க எண்ணியா நீ
உன்னையே வருத்திடச் சித்தங் கொண்டனை?
அடையாளங் காணாமல் தப்பிக்கலாமென்ற
அற்ப நம்பிக்கையில் தான் - இந்த
ஈனப் பிறவிகள் உன்மீது
இருட்டில் நின்று குருட்டடி அடித்தார்கள்?
இஅரவுக்குத் தானேயம்மா இருள்?
அருள் பெருகும் உன் விழிகளுக்குமா?
நடந்த சம்பவத்தை நீ
வெளிச்சமிட்டுக் காட்டாயா?
கருணை மாதாவே - நீ
கண் திறக்க மாட்டாயா?
கதறும் எங்களை - நீ
காத்திடத் தான் வாராயா?
குஞ்சு குருமன்கள் பிஞ்சுக் குழந்தைகளில்
குண்டெறிந்து விளையாடும் குப்பைப் பிறவிகளை
இன்னுமா இவ்வுலகில் - நீ
இருக்க விடப் போகின்றாய்?
உன்னிடம் முறையிட்டுப் பயனில்லை அம்மா - நீ
கயவர்க்கும் அருள்கின்ற காருண்யம் படைத்தவள்..
மன்னித்து விடுவதற்கோ
மனிதப் பிறவிகள் - எம்மால் முடியாது..
சர்வதேச சமுகமே - நீ சதிராடுகின்றாயா?
சஞ்சலத்தில் தத்தளிக்கும் சனங்களுக்கு உதவாமல்
பஞ்சணையில் படுத்திருக்கும் பார்வையாளராகிவிட்டாய்..
இனிப் பொறுத்தலாகாது.. பொறுக்கவும் முடியாது..
ஐநா கூட இந்தப்
பொய் நாவின் புரட்டுகளைப்
புனிதமென்று நம்புமெனில்..
வேறுவழியில்லை..
வெட்கத்துடனும் வேதனையுடனும்
விரும்பியோ விரும்பாமலோ
உங்களை எச்சரித்துக் கொள்கின்றோம்..
வெள்ளரச மரங்களே..
வேறு வழியில்லை - உங்கள்
வேலிகளைப் பலப்படுத்தத் தொடங்குங்கள்..