"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > The Lesson of Kosovo, June 1999
The Lesson of Kosovo
A poem by Raj Swarnan
1 June 1999
எண்ணிப்பார்.....
எழுபதினாயிரம் உயிர்கள்..
இன்னுமா வேண்டும் உனக்கு
எங்களின் குருதி..?
இரத்த வெறி கொண்டு
இரக்கமின்றி ஏனம்மா
இராட்சசி போல் அலைகிறாய்..?
இருபதாம் நூற்றாண்டுக்
ஹிட்லரின் சாதனையை
இருபத்தொராம் நூற்றாண்டில்
முறியடிக்கும் இலங்கை..
கைகளில்..
பிச்சைப் பாத்திரங்களுக்குப் பதிலாக
மண்டையோடுகள் தான்
ஏந்துவர் மக்கள்..
அம்மா தாயே..
எதற்காக இந்த
ருத்திர தாண்டவம்?
உன்னை
என்ன கேட்டோம் நாங்கள்?
எங்கள் மக்கள்
எங்கள் பூமியில்
நிம்மதியாக
நித்திரை செய்யும்
உரிமையைக் கூட
உறுதிப்படுத்த மாட்டாயா..?
ஓ..
நித்திரை செய்யும்
உரிமையென்றதால்
நிரந்தரமாகவேயெமை
நிலத்துக்கடியில்
புதைக்கவா பார்க்கிறாய்..?
ஒன்றைப் புரிந்துகொள்..
அடக்கப்படும் மக்கள் - என்றும்
அழிந்து போனதில்லை..
அழிந்தால்..
அடக்குபவனும் சேர்ந்தே
அழிவான்..
உனக்குக்
கொஞ்சம் தூரம் தான்..
எனினும்,
கொசோவாவைப் பார்..
அங்கே அழிவது
அனைவரும் தானே..
சிந்தித்துப் பார்..
நீ தமிழனை மட்டும்
சீரழிக்கவில்லை..
பொருளாதார ரீதியில் - முழு
நாட்டையும் சிதைக்கிறாய்..
இறுமாப்புக் காரணமாய்
நீயெம்மை
வறுமைக்கோட்டின் கீழே வைத்து
வருத்திக்கொண்டிருக்கிறாய்..
ஒருபுறம் சந்தோஷம்..
நான் இறந்தாலும்..
என் உறவுகள்
ஒருகாலத்தில்
உலகின்
முலைமுடுக்கெங்குமிருந்து
உழைத்துவரும் பொருளெல்லாம்
என் தேசத்தை வளப்படுத்தும்..
என் இனிய நண்பன்
சில்வாவை யோசிக்கையில் தான்
கவலையாயிருக்கிறது..
பிறக்கும்போதே
அவன் தலையில்
எவ்வளவோ கடன்சுமை..
இன்னும்
எத்தனை காலம் தான்
கையேந்தித் திரிவான்?
இனியாவது யோசியம்மா..
யுத்த தேவதையே..
இனியாவது யோசியம்மா..
அன்றைய யுகத்தில்
வீரங்காட்டிய
சூரபன்மனும்
துள்ளித் திரிந்த
துரியோதனனும்
என்னவானார்கள் என்பது
உனக்குத் தெரியாதா?
யுத்த தேவதையே..
என் தேசத்தை விட்டு
விலகிச் செல்..
நீயாக வெளியேறத் தயங்கினால்
வெளியனுப்புவதாய்க் கூறி
வெளிநாடுகள் வரும்..
முதலாளித்துவ சக்திகள்
தங்கள்
முக்கியம் கருதியே
உன்னைக்
கலைப்பதாய்க் கூறியிங்கு
கால் பதிப்பார்கள்..
ஒரு காலத்தில்
இந் நாட்டிலும் ஏதும்
இலாபம் இருக்குதென்றால்
வந்து சேர்வார்கள் வரிசையாய்..
இன்று
உள்நாட்டுப் பிரச்சினை..
உலகப் பிரச்சினையாக
உடனே மாற்றம் பெறும்..
அப்போது..
யுத்த தேவதையே..
நீ தப்ப முடியாது..
இவர்கள்
போடும் குண்டில்
நீயும் சேர்ந்தே
எரிந்து போவாய்..
எனவே
உணர்ந்து கொள்..
எங்களுக்காயல்ல..
உனக்காக
உடனே
உன் ஆட்டத்தை முடித்துக்கொள்..
கெளரவமாய்
என் தேசத்தை விட்டு
விலகிச் சென்றுவிடு..
அம்மா
யுத்தத் தாயே..
என்னை
என் தேசத்தில்
உருப்படியாய் வாழவிடு..
இது
உலகமுழுதுமுள்ள
ஒடுக்கப் பட்டோரின்
உருக்கமுள்ள வேண்டுகோள்..
நீயாக விலகிச் செல்..
இன்றேல் வினைகள் பெருகும்..
கொஞ்சம் தூரம் தான்- எனினும்
கொசோவாவைப் பார்..
அப்போது புரியும்..