தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan >  Entru emathu innalkal theernthu poyyaakum?

Entru emathu innalkal theernthu poyyaakum?

A poem by Raj Swarnan

read at "Prof.Vithyananthan Ninaivu Vizha" at Peradeniya University 27 May 1999
ஆக்கம். சுவர்ணராஜா நிலக்ஷன் 26.05.1999 - 27.05.1999 அன்று இலங்கை பேராதனைப் பல்கலைக் கழக பொறியியற் பீட ஈ.ஓ.ஈ.பெரெய்ரா அரங்கில், பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவு விழா கொண்டாடப் பட்டது. விழாவில் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்ற என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்கில் ஒலித்த கவிதையிலிருந்து சில பகுதிகள்.. இக்கவியரங்கிற்கு பேராசிரியர்,கவிஞர் சி.சிவசேகரம் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

innalkal

[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]

என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
இறைவா பதில் சொல்..
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
இன்னலா எமக்கா என்று
கேட்டிடும் சிலரும்
எம்மிடையுள்ளார்..
காலை எழுந்ததும்
வானலையில்
பாட்டுகள் தேடிவரும்..
பம்பலப்பிட்டி முதல்
சொய்சாபுர வரைக்கும்
சொகுசாக வாழுகின்ற தமிழன்
கேட்டு மகிழ்ந்திருப்பான் இன்னிசையை..
எப்படி வாழ்ந்த இனம்
இன்று இப்படியாயிற்று..
வான் பார்த்து வகை பார்த்து
ஏர் பூட்டி உழுது விதை நாட்டி
ஏற்றத்தால் நீர் பாய்ச்சி
எழுச்சி பெற்ற எங்களினத்துக்கின்று
என்னவாயிற்று..? என்னவாயிற்று..?
தேசத்தின் இருப்புக்காய்த்
தன் வயிற்றைக் கட்டி விட்டு
உணர்ச்சியை விதைத்தான் - பாரதி
எங்கள் இருப்புக்காய்த்
தேசத்தின் உணர்ச்சிகளைக் கட்டி விட்டு
வயிற்றை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் - நாங்கள்..
இனம் ஒன்று தன் இருப்புக்காய்
இன்னல் படுகையிலே - நாங்கள்
இலக்கியம் பேசிக் கொண்டிருக்கிறோம்..
இலக்கியம் தீதல்ல - எனில் எம்
இன்னல்கள் தம்மை இவ்வுலகுக்கு
எடுத்தியம்பும் இலக்கியமே
இன்றெமக்குத் தேவை..
தேசத்தை விழிப்பூட்டும்
திருப்பணியைச் செய்யுங்கள்..
இன்றேல்,
தேசாந்திரம் போய் விடுங்கள்..
பட்டாடை,பட்டம்,பணத்துக்காய்
பண்டமாற்று வியாபாரமாக்கி
எங்கள் தமிழை விற்று உங்கள்
வயிற்றை நிரப்பாதீர்கள்..
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந்தோ தமிழையும் ஓதினோம் - என்று
ஆழ்பவனுக்கிடித்துரைத்த தமிழர் பரம்பரை - இன்று
கூனிக் குறுகிக் கும்பிடு போட்டு
முட்டாள் முதலாளிகளுக்கெல்லாம்
முதுகு சொறிந்து கொண்டிருக்கிறது..
இது தமிழைப் பிடித்த இன்னல்..
தமிழ்ச் சாதியைப் பிடித்த இன்னல்..
இவ் இன்னல் என்றுதான்
தீர்ந்து பொய்யாகும்?
இறைவா பதில் சொல்..
தீரா இன்னல்கள் எம்மைத்
திடுதிப்பென்று வந்து
சூழ்ந்து கொண்டதல்ல..
காலகாலமாக நாங்கள்
கட்டிச் சேர்த்தது தான் - இக்
கடி துயர்க்குக் காரணமாம்..
இருபத்தொராம் ஆண்டு
அருணாசலத்தில் தொடங்கிய
அரசியல் ஏமாற்றுகை
இருபத்தொராம் நூற்றாண்டிலும்
தொடருமா என்பது
எங்கள் கரங்களிலேயே
தங்கியிருக்கிறது..
அன்றுதொட்டின்று வரை
கிழிக்கக் கிழிக்க நாங்கள் இவர்களுடன்
சளைக்காது
சரத்துக்களேயில்லாத ஒப்பந்தங்களில்
சைன் பண்ணிக்கொண்டிருக்கிறோம்..
அற்ப சலுகைகளுக்காய் எங்கள்
அடிப்படை உரிமைகளையே
விற்கத் தயாரானோம்..
கர்த்தர் நகரைக் காவாராயின்
காவலாளி கண்விழித்திருந்து பயனில்லை என்ற
வேதாகமத்தின் தத்துவ முத்தைத் தான்
எங்கள் தலைவர்களால்
முப்பது வருட அரசியல் முதிர்ச்சியில்
கண்டு சொல்லக் கூடியதாயிருந்தது..
கடவுள் தான் இனிக் காக்க வேண்டுமென்று
தந்தை சொன்னது
பிறரிடமிருந்தன்று..
எம்மவரிடமிருந்தெமைக்
காப்பது குறித்தேயென
எனக்குப் படுகிறது..
தாயகம் மீட்பதாய்க் கூறித்
தலை நிமிர்ந்தவர்கள் - இன்று
போராட்டக் கப்பலுக்கு நங்கூரம் போட்டு விட்டு
அரசியல் நீரோட்டத்தில் நீச்சலடிப்பதாய்
அறிவிப்பும் செய்து விட்டு
வெளிச்சவீட்டுக்கு வெளுத்துக் கட்டுகிறார்கள்..
தம்பியர் தமக்குள்
தலைகளை அறுத்துத்
தம்பட்டமடிக்கிறார்கள்..
எங்கே போயழியும் இன்னல்கள்?
எமக்குள் ஆயிரம் பிளவெனில்
எங்கே போயழியும் இன்னல்கள்?
நிற்க..
தார்மீக சமுதாயம் படைப்பதாய்க் கூறிய
தலைவர்கள் தம்மால் - ஓர்
தசாப்த காலமாய் ஏமாந்து,
புன்னகை புரிந்து வந்தவோர்
புதினத்தேவதையிடம்
புதிய தேசத்தைப் படைத்திடுக என்றோம்..
அதுவோ..
தார்மீகத்தை விட்டுவிட்டு - எங்கள்
பூர்வீகம் குறித்துப் புலன்விசாரணை செய்கிறது..
செம்மண் பூமியிலே வளமான நிலமிருக்கச்
செம்மணியிற் கொண்டுசென்று புதைத்ததேன் சொல்லுங்கள்..
சேற்று நிலத்திலே ஊறி உக்கி
நாற்றமெடுத்திடவா ஈன்றனரெம் அன்னையர் - அச்
செல்வக் குழந்தைகளை?
சூரியகந்தையிலே சுறுக்காகக் கிண்டியோர் - இன்று
சுதிமாற்றிப் பாடுகிறார்..
சுயலாபம் தேடுமெங்கள் இனத்தோர் சிலபேரும்
அதற்கேற்பத்
தாளம் போடுகின்றார்..
ஆலாபனைகள், அரோகராக்கள் எல்லாம்
அடுத்த நாள் பத்திரிகைகளில்
அரைப்பக்கச் செய்திகள்..
பாராளுமன்ற உறுப்பினர்களின்
பணிதன்னைப் பார்த்துப்
பரவசங்கொண்டதால் - அரசு
மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இனியரு
பக்ஸ மெஷின் வழங்குமாறு
பணிப்புரை விடுத்திருக்கிறதாம்..
முச்சுவிடக் கூட முன்னறிவித்தல் வேண்டுமென்று
முக்கிய திருத்தமொன்று கொண்டுவந்தாலும்
அவசர காலச் சட்டத்துக்கான ஆதரவை - எங்கள்
அருமைத் தலைவர்கள் நிறுத்திவிட மாட்டார்கள்..
பொதி என்றும் பொட்டலம் என்றும்
போக்குக் காட்டுகையில் - வாய்
கூசாமல் இவர்கள் வாழ்த்துரை கூறுவார்கள்..
விபரமறியாத சில பத்துப் பதினைந்து பேரின்
விருப்பு வாக்குகள் - இன்றெம்
விதியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது..
எம்மை நாமே ஏலத்தில் விலை பேசி
விற்றுக்கொண்டிருக்கிறோம்..
என்று தான் தீருமிவ் இன்னல்..
இறைவா பதில் சொல்..
களையெடுத்தாலன்றிப் பயிர் தளைக்காது..
போடும் உரமும் வீணே போகிறது..
களைகள் அகன்றாலே - எங்கள் காணிகள்
விளையத் தொடங்கும் கண்டீர்..
கொடியவர் இழைக்கும் தீங்கிலும் கொடியது
நல்லவர் தங்கள் மெளனமேயென்றான்
மாட்டின் லூதர் கிங்..
எங்கள் இன்னல்கள் தீர்ந்திட வேண்டின்
உண்மை நிலையதை உலகோர் உணர
உரைத்திடல் வேண்டும்..
கம்பஸ கன்ரீனின்
தேத்தண்ணிக்குள் இருந்து
வெளியேறத் துடிக்கும்
கட்டெறும்பு போலத்தான்
எங்கள் இனமும்
அடக்குமுறையை அறுத்தெறிந்து - தன்
சுயநிர்ணயத்தை நிலைநிறுத்தச்
சூளுரைத்து நிற்கிறது..
இதையெல்லாம்
உலகோர் அறிய நாம்
உரைத்திடல் வேண்டும்..
எங்கள் இன்னல்கள்
தீர்ந்தொழிய வேண்டிடின்
எமக்குள் ஒற்றுமை
உடனிங்கு வேண்டும்..
மதத்தால் வேறுபடினும்
மொழியால் ஒன்றுபட்டோர்
யாவரும் இணைந்து
குரல் தரல் வேண்டும்..
நடந்தவை நடந்தவையாயிருக்க
நடப்பவை நல்லவையாய் அமைவதற்காய்
நாமனைவருமே
அடம்பன் கொடியாய்த்
திரண்டிடல் வேண்டும்..
இன்றேல்..
இன்னல்கள் தொடர்ந்தெமை
இறுகவே பற்றும்..
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகுமென்று
ஏங்கித் தவித்த பாரதியே.. இதோ
உன்னையே உனக்குப்
பதிலாய்த் தருகிறேன்..
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்,
காலம் மாறும் - அப்போது மறுபடி
தருமத்தை வெல்லக் காண்போம்..
எங்கள் இன்னல்கள் போய்
ஒழிந்திடக் காண்போம்..
எம் இன்னல்கள் யாவும் தீர்ந்து
பொய்யாகிடக் காண்போம்..


Mail Usup- truth is a pathless land -Home