"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > Remembering Chenmanni
A Poem by Raj Swarnan
400 க்கு மேற்பட்ட தமிழர்களின் உடல்கள் செம்மணியிற் புதையுண்டு போயிருப்பதாக நீதிமன்றில் கிருஷாந்தி கொலைவழக்கின் எதிரி தெரிவித்து நீண்ட நாளாகியும் நடவடிக்கை எடுக்கப் படாததன் பாதிப்பில் எழுதியது.
ஓ....எங்கள் குரல் கேட்கிறதா ?
ஓ....எங்கள் குரல் கேட்கிறதா ?
மதி கெட்ட மானுட சமுதாயமே....
இது உனது பிரச்சினை இல்லை என்று இருந்து விடாதே......
இருந்தால் நாளை நீயும் எங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டி வரும்...
விடுவிக்க வந்தோரால் விடுவிக்கப் பட்டவர்களின் குரல் இது.....
வாழ வேண்டிய வயதில் வாழ்விழந்து போனவர்களின் குரல் இது....
மண்ணகற்றி எங்களை வெளியெடுக்க இன்னுமேன் தாமதம்?
மண்வெட்டி இல்லையா?
இல்லையென்று சொல்லாதீர்....
அன்றொரு நாள்......
சூரியகந்தையிலே கிளறிய மண்வெட்டி சவள் எல்லாம் மாயமாய்ப் போனதுவோ ?
செத்த பிணங் கிளறக் கூட இன அடிப்படை பார்க்கும் நீங்களா
வாழும் மனிதரைச் சமத்துவத்துடன் வாழ விடப் போகிறீர்கள்?
இழுத்தடியுங்கள்.......
இன்னுமொரு மாதத்தில் மழை வரும்.....
மழை வந்தால் வெளியெங்கும் வெள்ளம் நிரம்பும்......
நிலங் கிளற இதுவல்ல நேரமென்று வெளிநாடு எங்கணும் உங்களின் பிரச்சார யந்திரம் கூவும்.....
அதற்கிடையில்........
எங்கள் உடலங்கள் அழுகிச் சிதைந்து மண்ணோடு மண்ணாக மறைந்து விடாதாவென்று மனக் கோட்டை கட்டுங்கள்....
உங்களுக்கு மட்டுமல்ல....
நீங்கள் எள் என்பதன் முன் எண்ணெயாய் நின்று,
தூக்கிய கை சாய்க்காமல் ஒத்தூதி உறவாடும் எங்களுர்ப் பாவிகட்கும் சேர்த்துத் தான் சொல்கின்றோம்....
மழை வரும்.... வெள்ளம் நிரம்பும் , மண் இளகும்.....
அப்போது.....
அமுக்கப் பட்டிருக்கும் எங்கள் கரங்கள் தாமாக மண்ணைப் பிரித்து வெளிக் கிளம்பி உங்கள் குரல் வளைகளை நெரிக்கும்...
ஆவியுருக் கொண்டு நாம் அலரி மாளிகை வரை அணிவகுத்து வருவோம்..........
இப்போது எங்கள் குரல் கேட்காவிட்டாலும்...
அப்போது நிச்சயமாய்க் கேட்கும்.......