வணக்கம்! மானத்தை விற்றுப் பிழைக்கத் துணிந்து விட்ட மகா மனிதர்களே, என்னைத் தெரியவில்லையா? உற்றுப் பாருங்கள்...... என்ன? பதவி மயக்கத்தில் பார்வை தெளிவில்லையா? அல்லது.... நானெப்படி இங்கு வந்து சேர்ந்தேனென்ற அதிர்ச்சியால் - உங்கள் கண்களையே நம்ப முடியவில்லையா? வடிவாகப் பாருங்கள்... நான் தான், நானே தான்! இப்போது நான் பயணிக்க "லயன் யார்" தேவையில்லை! கட்டி வைத்த கவச வாகனத்துடனும் கரணைக்கிழங்கோடும் சேர்ந்து பயணிக்க "லங்கா முதித்தவுக்காய்" காத்திருக்கத் தேவையில்லை! விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்திற்கு வாயு வேகத்தில் நாம் வந்து போக முடியும்! ஆம்! விளங்கவில்லையா? நான் தான், காணாமற் போனோர் பட்டியலில் கடைசித் தானத்திலிருக்கும் காண்டீபனின் ஆவி......! கள்ளியங்காட்டுச் சந்தையில் காய்கறி விற்ற நான் - இன்று கால்களற்ற ஓர் ஆவி! என்னைப் போலவே அங்கு ஆண்களும் பெண்களுமாய் - ஒரு அறுநூறு பேர் இருக்கிறார்கள்! எனினும் எம்மையின்னும் "காணாமற் போனோர்" என்று "கற்றகறைஸ" பண்ணிவிட்டுக் கதையளக்கின்றீர்கள்! காணச் சகிக்காமல் தான் "கடிதம்" கொணர்ந்துள்ளேன்! ஆவியுலகு கூட்டிய அவசரக் கூட்டத்தில் ஒருமனதாய் எழுதிய ஓலையிது! வாசித்துப் பாருங்கள்! ஓ! உங்களில் சிலருக்கு வாசிக்கத் தெரியாதா? சரி, கேளுங்கள்... நானே வாசிக்கிறேன்! கனவான்களே! கனவாட்டிகளே! காற்றோடு கலந்த கனிவான வந்தனங்கள்! "காணாமற் போனோர்" எனப்படும் கவலைக்குரிய சீவன்கள் காட்டமாய் எழுதுவது! நாங்களும் உங்கள் இனத்தவர் தான்! ஆனால், "வந்தேறு குடிகளென்று" வருணிக்கப் பட்டபின்பும் வால் பிடித்துக் கொண்டிருக்கும் வக்கற்ற வாய்வீரர்தம் வம்சத்தவரெனச் சொல்ல வெட்கப் படுகின்றோம்! செம்மணிச் சேற்றில் எங்கள் செத்த உடல்கள் உக்கிச் சேர்ந்து கலந்த பின்னும், அம்மணிக்கு ஆரத்தி எடுத்து ஆலவட்டம் பிடிக்கும் அன்பர்களேஸ்ரீ நாங்கள் செத்தாலும், நடந்தவற்றை மறக்கவில்லை! எங்கள் அப்புவுக்கும் உங்கள் ஆச்சிக்கும் என்றோ நடந்த வேலிப் பிரச்சனைக்கும் பெட்டைப் பிரச்சனைக்கும் பேட்டுக் கோழியிட்ட முட்டைப் பிரச்சனைக்கும் வஞ்சம் தீர்ப்பதற்காய் சிலர் ஆட்டிய தலையாட்டில் நாங்கள் மாட்டிக் கொண்டோம், அவ்வளவு தான்! ஆனால், எமக்கு நடந்த சித்திரவதைகளெல்லாம் நீங்கள் அறியாததல்லவே? இருந்தும், சத்தமின்றி இருப்பதேனோ? குடித்த சிகரட்டை அணைக்கும் ஏஆஷறேஏ யாய் எங்கள் மார்புகளைப் பாவித்த செய்தி நீங்கள் அறியாததா? அந்தரங்க உறுப்புகளில் அரைத்த மிளகாய் ஏற்று, நாம் பட்ட அவலங்கள் உங்களுக்குத் தெரியாதா? சித்திரவதைக்கெதிரான சட்ட முலத்துக்காய்ச் சருவதேச மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் சட்ட வல்லுனர்கள், சொந்த நாட்டில் வெந்துபோன எங்களையேன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை? வெளிநாட்டுப் பெண்களின் வேதனை தீர்ப்பதற்காய் விசாரணை நடாத்துகின்ற எங்குலப் பெண்மணிகள் எங்களைப் பற்றியேன் எதுவும் கதைக்கவில்லை? செத்த பொதிக்கு அத்தர் ஊத்திச் செழுமைப் படுத்துவதிலுள்ள உங்கள் ஆர்வத்தை இத்துப் போன எங்கள் உடல்களை வெளியில் எடுத்து உண்மையை உலகறியச் செய்வதில் கொஞ்சம் காட்டலாமே? காமரட்ணவானாலும் - அந்தச் சோமரட்ணவுக்குக் குத்திய மனச்சாட்சி கூடவா உங்களுக்குக் குத்தவில்லை? நம்பி நம்பி நான்கு தலைமுறைகள் ஏமாந்து நாதியற்றுப் போனபின்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்! கதிரைச் சுகம் உங்கள் கண்களை மறைக்கிறது! கருவேப்பிலையாகும் போது காலம் பிந்திவிடும்! அப்போது..... உங்களுக்கும் புதைகுழிதான் பரிசாகக் காத்திருக்கும்ஸ்ரீ நீங்கள் இவ்விடத்தை நிரப்பிய பின்னர்தான் நாங்கள் விடிவு பெற்று வானுலகஞ் செல்வோம்! அதுவரை, அமைதி பெறாத இந்த ஆத்துமாக்கள் - உங்களை ஆட்டிப் படைக்கும் ! பாதியிரவில் ஏ¡நஏ சுற்றும்போது காற்றாக மாறிக் கண்முன்னே வருவோம்! அர்த்தராத்திரியில் அயர்ந்து தூங்குகையில் ஆவியுருவிலேயே ஆர்ப்பரித்து வருவோம்! பஜிரோவின் ஏரயருக்குஏ வளி நிரப்பும் போது வசதியாய்ச் சிலநேரம் உட்புகுந்து கொள்வோம் ! ஏசீற்றுப்ஏ பிடிப்பதற்காய்க் கூட்டங் கூடும் போதும் சீலிங்குக்குள்ளே நாம் சிரித்துக் கொண்டிருப்போம்! எங்கள் பெற்றோரின் நிம்மதியைத் தொலைத்துவிட்டு, நீங்கள் மட்டும் நிம்மதியாய் இருக்கலாமா? அப்பாவித் தனமாக அறிக்கை விடுவதெல்லாம் இந்த நூற்றாண்டோடு அற்றுப் போகட்டும்! நெஞ்சை நிமிர்த்தியேதும் நேர்மையாய்ச் செய்யுங்கள் இன்றேல்..... "பெஞ்சன்" எடுத்துவிட்டுப் பேசாமற் போய் விடுங்கள்! உங்களுக்குத் தெரியாமலே உங்கள் செயல்களை நாம் உற்று நோக்குகிறோம்! உங்களை எங்களுக்குத் தெரிகிறது! ஆனால்.... எங்களை உங்களுக்குத் தெரியாது! ஏனெனில் நாம் ஊளைச் சதையிழந்த, ஊனக் கண்களால் உருவகிக்க முடியாத ஆவியுருவங்கள்! எனவே, சிந்தித்துச் செயற்படுங்கள்! உலகின் நிந்தனைக்கு உட்படாது, உணர்ந்து செயற்படுங்கள! உண்மை நிலையை உலகுக்கு உணர்த்த உருப்படியாய்ச் செயற்படுங்கள்! தேவையேற்படின் நாம் மீண்டும் மடல் வரைவோம்! அதுவரை, அன்பு வணக்கங் கூறுவது, "ஆவியுலகத்து அப்பாவிகள்". கொழும்புப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த இதழான "இளந் தென்றல் - 98" இல் வெளியான கவிதை. வெளியீடு - தமிழ்ச் சங்கம், கொழும்புப் பல்கலைக் கழகம். காலம் - 20.12.1998 ஞாயிற்றுக் கிழமை, இடம் - புதிய கதிரேசன் மண்டபம், பம்பலப்பிட்டி. |