இராணுவச் சமநிலையைப் பேணுவதாயின் அரசியல் மயமாக்கல் தேவை "நீண்டுசெல்லும் அமைதிச் சூழலில் புலிகள் தமது மரபுவழிப்படைபலத்தை சிதைவின்றி பேணுவதற்கு தமிழ் சமூகத்தை எந்தளவிற்கு அரசியல் மயப்படுத்த தயாராயிருக் கின்றார்கள் என்ற கேள்வியே இலங்கையின் இராணுவச் சமநிலையை எமக்குச் சாதகமாக வைத்திருப்பதற்கு முக்கியமானதாகிறது." 7 November 2004
எமது விடுதலைப் போரட்டத்தில் முழுநேரமாக இன்று இணைந்துகொள்பவர்களின் தொகை தற்போது மிகவும் குறைந்துவருகிறது எனவும் இதற்கு முக்கியமான காரணம் புலிகள் ஒரு கெரில்லா இயக்கமென்ற நிலையிலிருந்து மாறி மரபுவழிப் படையாக இன்று மாறியுள்ளமையே எனவும் சில ஆய்வாளர்கள் கூறுவர். மக்க ளோடு தொடர்பற்றமரபுவழி படையாக புலிகள் மாறிவருவதாலேயே ஒரு கெரில்லா இயக்கத்தின் மீது இயல்பாக ஏற்படக் கூடிய ஈர்ப்பு இன்றைய தமிழ்த் தலைமுறையினரிடையே அருகி வருகிறது என்பது அவர்களுடைய கருத்து.
1984/86 காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் முழுநேர விடுதலைப் போராளியாக செயல்பட்ட அன்பர் ஒருவர் அண் மையில் மேற்படி கருத்தை இன்னொரு கோணத்தில் முன் வைத்தார்.
அதாவது ஒரு கெரில்லா போராளியிடமிருக்கக்கூடிய அர்ப்பணிப்பு, சூழலுக்கேற்ப செயற்படும்திறன், பொது மக்களை அரவணைத்துச் செல்லும்பாங்கு, அரசியல் தெளிவு, மனிதநேயம் என்பன ஒரு இராணுவப்பயிற்சிமுகாமின் நான்குவேலிகளுக்குள் உருவாக்கப்படும் மரபுவழி படையா ளிடமோ அல்லது அதிகாரியிடமோ காணப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
இதனால் தற்போது நிலவும் அமைதி நீண்டு செல்லச்செல்ல விடுதலைப் புலிகளின் படைகளிலிருந்து விலகிச் செல்பவர் களின் தொகை அதிகரிக்கப் போகிறது என அந்த முன்னாள் போராளி கூறினார். இதுமட்டுமன்றி மரபு வழிப்படை என்பது மக்களோடு தொடர்பின்றி சமூகத்திற்கு வெளியில் முகா மிடப்பட்டு தனித்து வைக்கப்படுவதாகும். இதனால் விடுதலைப் போர் விழுமியங்களும் உணர்வு களும் மக்களிடையே பரப்பப்படுவதற்கான வாய்ப்பு இல்லாது போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது விடயத்தில் எமது போராட்டம் ஒரு முக்கியமான இரு தலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
கெரில்லாப் போர் என்ற மட்டத்திலேயே நாம் தேக்க மடைந்திருந்தால் எமது போராட்டம் காலவரையறை யின்றி இழுபட்டுக்கொண்டே சென்றிருக்கும் என்பதில் ஐய மில்லை. தென் அமெரிக்காவில் பல மக்கள் போராட் டங்கள் முப்பது நாற்பது வருடங்களாக கெரில்லா போர் நிலை யிலேயே முன்னேற்றமின்றி கிடப்பதை நாம் காண்கிறோம்.
அதேவேளை ஒரு மரபுவழிப்படையை உருவாக்கி அதை போரற்ற ஒரு சூழலில் நீண்டகாலம் பேண முற்படு கையில் அது கெரில்லாக்களால் முன்னெடுக்கப் படும் விடுதலைப் போருக்குரிய குணாம்சங்களையும் பற்று றுதியையும் இழந்து இயந்திரத்தனம் மிக்கதொன்றாக மாறுவது மாறக்கூடிய வாய்பு ஏற்படுகிறது.
மரபு வழிப்படையொன்றை சம்பளங்கள், கேளிக்கை, படைத்துறை முகாமைத்துவம் என்பவற்றின் ஊடாகவே அரசுகள் நீண்டகாலம் பேணுகின்றன. ஆனால் தமிழருக் கென்று இதுவரை ஒரு அரசில்லை. ஆகவே நாம் எமது உரிமையை முழுமையாக வென்றெடுக்கும்வரை கெரில்லா போராளிகளுக்குரிய அரசியல் பற்றுறுதியையும் அர்ப்பணிப் பையும் கைவிட முடியாது. எனவே ஒரு கெரில்லா இயக்கத் திற்குரிய குணாம்சத்தைக் கொண்ட மரபுவழிப் படை யொன்றை போர் தயார் நிலையில் எவ்வாறு நீண்டகாலம் பேணுவது என்பதே எம்முன் இன்றுள்ள கேள்வியாகும்.
புலிகளின் மரபு வழி படைவலு சிறிலங்கா இராணுவத்திற்கு சமனாக இருப்பதாலேயே இலங்கையில் அமைதி நிலவு கின்றது என்பது இன்று சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட விடயமாகும்.
இதனடிப்படையிலேயே இந்தியாவுடன் சிறிலங்கா ஒரு படைத்துறை கூட்டுறவு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் அது மேற்படி சமநிலையை பாதிக்குமெனவும் அதனால் இலங்கையில் இன்று நிலவும் அமைதி குழம்பக்கூடிய சூழல் ஏற் படலாம் எனவும் கூறப்படுகின்றது.
இந்திய சிறிலங்கா இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் மீண்டும் போர் தொடங்கும் பட்சத்தில் இந்தியப் படைகள் இங்கு அனுப்பப்படுவதற்கான எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பது தெளிவுபடுத் தப்பட்டுள்ளது. ஆயினும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியா வின் படைப் பலம் தமக்கு பக்கப் பலமாக நிற்கும் என்ற நம்பிக்கை சிங்கள மேலாண் மையாளருக்கு ஏற்படும். அப்படி யான நம்பிக்கை அவர் களுக்கு ஏற்பட்டால் சிறிலங்கா அரசு மீண்டும் போர் மூலம் தமிழர் பிரச்சினையை அணுகுவ திலேயே பேரவா கொள்ளும் என்ற நியாயத்தின் அடிப்படை யிலேயே தமிழர் தரப்பு இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்தியத் தலைநகரில் பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு சிங்கள தேசத்திடம் பாராட்டுப் பெறலாம் என்ற நம்பிக்கையில் டெல்லி சென்ற ஜனாதிபதி சந்திரி காவின் எண்ணம் நிறைவேறவில்லை. இலங்கையின் இராணு வச் சமநிலையில் குறிப்பிடத்தக்க எந்தவொரு தளம்பல் ஏற்பட்டாலும் அது இத் தீவில் மீண்டும் போர் வெடிப்பதற்கே வழிவகுக்கும் என்ற எண்ணம் இந்திய கொள்கை வகுப்பாளரிடமும் இன்று காணப்படுகின்றது.
புலிகளிடம் மரபுவழி படைவலு உருவாகியிருக்காவிட்டால் இலங்கையில் ஒரு இராணுவச் சமநிலை என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது. கெரில்லா போராக மாத்திரமே நடைபெறும் ஒரு விடுதலைப் போராட்டம் ஒரு அரசுடன் இராணுவச் சமநிலையை எட்டுவது சாத்தியமில்லை. ஒரு கெரில்லா இயக்கம் அது எதிர்த்து போராடும் ஒடுக்குமுறை அரசினுடைய மரபுவழிப் படைகளின் எண்ணிக்கையை விட கூடிய போராளிகளைக் கொண்டதாக இருப்பினும் அது தனது எதிரியோடு இராணுவச் சமநிலையை ஏற்படுத்தி விட்டதாக யாரும் கொள்ளப் போவதில்லை.
உதாரணமாக 1983-1986 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திய அனைத்து இயக்கங்களிலு மிருந்த போராளிகளின் எண்ணிக்கை அப்போதிருந்த சிறிலங்கா இராணுவத்தின் மொத்தத் தொகையை விட குறைந்த பட்சம் மூன்று மடங்காவது கூடுதலாக காணப்பட்டது.
1983 ஆம் ஆண்டிலே சிறிலங்கா இராணுவத்தில் பன்னி ரண்டாயிரம் நிரந்தரப் படைகளே இருந்தன. ஆனால் அவ் வாண்டில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்குப் பின்னர் தமிழர் தாயகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் நாற்பதாயிரத் திற்கு மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய ஈழவிடுதலை இயக்கங்களில் தேடிச் சென்று இணைந்தார்கள். அனைவரும் கெரில்லா போர்முறையில் ஏதோ ஒரு வகையில் பல்வேறு பயிற்சிகளையும் அனுபவங்களையும் பெற்றார்கள். ஆனால், அப்போதிருந்த சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கிற்கு மேல் அதிக போராளி களை எமது விடுதலை இயக்கங்கள் கொண்டிருந்தபோதும் இலங்கையில் ஒரு இராணுவச் சமநிலை அன்று நிலவியதாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிலங்கா அரசு கூட எமது விடுதலை இயக்கங்களின் ஆட்தொகையை ஒரு பொருட் டாகவே எடுக்க வில்லை. அக்கால கட்டத்தில் அனைத்து விடுதலை இயக்கங்களுடைய ஆட்பலமும் ஒரு குடையின் கீழ் தமிழருக் கான மரபு வழிப் படைவலுவாக மாற்றப் பட்டிருந்தால் இன்று வரலாறு வேறு பாதையில் சென்றி ருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த விடயத்தில் இந்தியா அப்போது மிகக் கவனமாக நடந்துகொண்டதாகத்தான் சொல்லவேண்டும். தமிழீழ விடுதலை இயக்கங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ மரபுவழி படைவலுவை உருவாக்குவதற்கு எந்தவொரு வழியையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் இந்தியா மிகக்கவனமாக நடந்துகொண்டது. அதாவது அந்நேரத்தில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்த இளைய சமூகத்தின் ஒரு பிரிவினரையாவது ஐக்கியப்படுத்தி ஒரு மரபுவழிப் படையை நாம் உருவாக்கியிருந்தால் இந்திய இராணுவத் தலையீடுகூட கேள்விக்குறியாகியிருக்கும்.
எமது ஆட்பலம் ஓகோவென்றிருந்த ஒருகாலத்தில் அது மரபுவழிப் படைபலமாக மாறிவிடக்கூடாது என்பதில் இந்தியாவும் சிறிலங்காவும் மிகக்கவனமாக இருந்தன. அதில் அவை 1990 ஆம் ஆண்டுவரை வெற்றியும் கண்டன. சிறிலங்கா இராணுவத்தின் படை எண்ணிக்கையைவிட எமது இயக்கங்களில் அதிக போராளிகள் இருந்த அப்பொன்னான சந்தர்ப்பம் வீணாகிப்போனதற்கு எம்மிடையே இருந்த அரசியல் கற்றுக்குட்டித்தனங்களும் போரியல் பேதமையுமே காரணமாயின.
கெரில்லா இயக்கமென்ற நிலையிலிருந்து மரபு வழிப் போரை நோக்கி வளர்ச்சியடையாத விடுதலைப் போராட்டங்கள் வெற்றியடைந்த வரலாறு மிக மிக அரிதென்றே கூறலாம். விடுதலைப் போர்களை கெரில்லா நிலையில் அமுக்கிவைத் திருப்பதற்கே அரசுகளும் ஏகாதிபத்தியங்களும் விரும் புகின்றன. ஏனெனில் கெரில்லா இயக்கங்களை காலப்போக்கில் பிரித்தாள்வதும் மக்களோடு முரண்பட வைப்பதும் இலகுவாகும். அது மட்டுமன்றி பல நாடுகளில் போலி கெரில்லா இயக்கங்கள் அரசியல் குழப்பங்களை ஏற் படுத்து வதற்கெனவே அரசுகளால் உருவாக்கப்பட்டு போராடும் மக்களிடையே உலவ விடப்படுகின்றன. அவை அப் போராட்டத்தின் அரசியல் ஒருமைப்பாட்டையும் போரியல் நோக்கத்தையும் சிதைக்கின்றன. அத்துடன் ஒரு கெரில்லாப் போர் நீடித்துச் செல்லும்போது அது உருவாகிய சமூகம் சின்னாபின்னப்பட்டு போவதும் தவிர்க்க முடியாதது. ஒரு சமூகத்தை சீர்படுத்தி வளம்பெறச் செய்வதென்றால் அதனு டைய விடுதலைக்காக போராடுபவர்கள் அதிலிருந்து விலகி வேறாக முகாமிட்டிருக்க வேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் நீதியின்கையில் விட்டுவிடவேண்டும். கெரில்லா இயக்கங்கள் பல்கிப் பெருகியுள்ள ஒரு சமூகத்தில் இது சாத்தியமில்லை. முதலாம், இரண்டாம் ஈழப்போர்களின் போது கிழக்கில் இதுவே நடந்தது. இதனாலேயே விடுத லைப்போராட்டம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டு மாயின் அது விரைவாக மரபுவழி இராணுவக் கட்டமைப் புகளை நோக்கி நகர வேண்டும்.
எனவே எவ்வளவு துரிதமாக ஒரு விடுதலை இயக்கம் மரபுவழி இராணுவமாக மாறுகின்றதோ அந்தளவிற்கு அது தனது சமூகத்தையும் அதன் அரசியல் குறிக்கோளையும் காப்பாற்றுவதற்கும் விடுதலையை நோக்கி முன்னேறுவதற்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவேதான் ஒடுக்குமுறை அரசுகளும் ஏகாதிபத்தியங்களும் ஒரு விடுதலைப்போர் கெரில்லா நிலையிலிருந்து மரபு வழிப்படையாக வளர்ச்சி யடைவதை தடுப்பதற்கு ஆவன செய்வதில் குறியாக இருக்கின்றன.
இந்தியாவும் சிறிலங்காவும் 1993 ஆம் ஆண்டிலிருந்து எமது போராட்டத்தை அணுகிய முறையை நோக்கினால் அதன் அடிப்படையும் இதுவாகவே இருந்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட்டால் புலிகள் மரபுவழிப் படையாக இயங்குவதற்கான வளங்கள் அனைத்தும் இல்லாது போய்விடும் என அவை நம்பின. பின்னர் ஏ9 பாதையைக் கைப்பற்றி வன்னியை இரண்டாக பிரித்துவிட்டால் புலிகள் மீண்டும் கெரில்லா போரில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர் என இந்தியாவும் சிறிலங்காவும் எண்ணின. இன்று எமது உரிமைப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு முதலாம், இரண்டாம் ஈழப்போர்களின் காலத்திலிருந்த நம்பிக்கை அற்றுப்போய்விட்டது எனவும் நீண்டகாலம் போரின் அனர்த்தங்களால் சோர்ந்துபோய்கிடக்கும் அவர்கள் தமது பிள்ளைகள் நன்றாக வாழ்ந்தால் போதும் என்றே எண்ணுகின்றார்கள் எனவும் இதன் காரணமாக இன்று காணப்படும் அமைதிச்சூழல் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடருமானால் புலிகள் தமது மரபுவழிப் படைபலத்தை பேணமுடியாது போய்விடும் எனவும் பல வெளிநாடுகளும் சிறிலங்கா படைத்துறைத் திட்டமிடலாளர்களும் நம்புகின்ற னர். நான் குறிப்பிட்ட முன்னாள் போராளி இதை மனதிற் கொண்டே புலிகளின் மரபுவழிப் படையாட்கள் கெரில்லாக்களாக அரசியற் பற்றுறுதிகொண்டவர்களாக மாற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டார். ஆனால் எந்தக் கணத்தில் புலிகள் தமது மரபுவழிப் படை நிலைப்பாட்டிலிருந்து சற்றேனும் சறுக்குகின்றார்களோ அப்போதே சிங்கள தேசத்தோடு எமக்கிருக்கின்ற பேரம் பேசும் வலு இல்லாதொழியும்.
சீரான இராணுவ முகாமைத்துவமும் மரபுவழி இராணுவ மொன்றை பேணுவதற்கான வளங்களை திரட்டக்கூடிய கட்டமைப்பும் இருந்தால் எத்தனை ஆண்டுகள் போனாலும் புலிகள் தமது மரபுவழி படைபலத்தை சிதைவின்றி பேணலாமென சிலர் கூறுவர். கடந்த 25 வருடங்களாக சீனா எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. ஆனால் இன்றும் அதனுடைய படைகள் உலகம் கண்டு அஞ்சுமளவிற்கு போரிடும் ஆற்றலோடு இருக்கின்றன என்பது போன்ற உதாரணங் களையும் அவர்கள் காட்டுவர். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஏனெனில் நாம் இன்னும் முழுமையான சுதந்திர மடைந்த தனிநாடாகவில்லை. அதை நோக்கிய பாதையில் சென்றுகொண்டிருப்பவர்கள். ஒட்டுமொத்தமான எமது மக்களின் அரசியல் ஈடுபாடும் தெளிவும் ஆழமாக்கப்படுகை யிலேயே எமது மரபுவழி படைபலத்தின் தேவை நடை முறையில் உணரப்படும்.
எனவே நீண்டுசெல்லும் அமைதிச் சூழலில் புலிகள் தமது மரபுவழிப்படைபலத்தை சிதைவின்றி பேணுவதற்கு தமிழ் சமூகத்தை எந்தளவிற்கு அரசியல் மயப்படுத்த தயாராயிருக் கின்றார்கள் என்ற கேள்வியே இலங்கையின் இராணுவச் சமநிலையை எமக்குச் சாதகமாக வைத்திருப்பதற்கு முக்கியமானதாகிறது.
|