தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயனற்ற செயல் வீரகேசரி - 3 October 2004
கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஒரு புத்தக வெளியீட்டுக்குச் சென்றேன். சிங்கள கடும் போக்காளர் எஸ். எல். குணசேகர புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைவை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ள அந்நூலின் அறிமுக விழாவிற்கு சிங்கள தேசத்தின் ஆங்கிலம் பேசும் மேலாண்மையாளர்களில் பெரும்பாலானோர் வந்திருந்தனர். கூட்டம் முடிந்ததும் இவர்களுள் எனக்குத் தெரிந்த ஒருசிலருடன் நாட்டு நடப்புகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் அங்கு மிகவும் உறுதியாக ஒரு கருத்தை என்னிடம் தெரிவித்தனர். ~கருணா சிறிலங்கா படையினரோடு இணைந்திருக்கும் வரை விடுதலைப் புலிகள் கடைசிவரை போருக்கு வரமாட்டார்கள்| என அந்த சிங்கள பௌத்த மேலாண்மையாளர் அறுதியிட்டுக் கூறினார். இதன் காரணமாகவே சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகாவும் அமைதிப் பேச்சுக்களை தொடங்காமல் இழுத்தடித்து வருகிறார் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த விடயத்தை அடுத்தடுத்த நாட்களில் கொழும்பிலுள்ள அரசுக்கு நெருக்கமான சில விடயமறிந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். மட்டக்களப்பில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அல்லது அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தினால் புலிகளுடைய கவனம் எல்லாம் கிழக்கை சரிப்படுத்துவதிலேயே திசை திருப்பப்படும் எனவும் இதன் காரணமாக அவர்கள் மீண்டும் போரில் ஈடுபடுவதற்கான அரசியல் மற்றும் படைத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கும் எனவும் அரச தரப்பில் சிலர் இன்னும் நம்புகின்றனர் என்பது தெரியவந்தது. அதுமட்டுமன்றி மேற்படி சிங்கள மேலாண்மையாளர் என்னிடம் கூறிய கருத்தும் சந்திரிகா தரப்பில் உண்மையாகவே நிலவுகின்றது என்பதையும் அறியக்கூடியதாயிற்று.
சுருக்கமாகச் சொல்லப்போனால் தமிழ் மக்களுக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வை வழங்கி இனமுரண்பாட்டை தீர்ப்பது தவிர்ந்த ஏனைய வழிமுறைகளையே சிங்கள தேசத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் இன்னும் நாடுகின்றனர் என்பதையே மேற்படி விடயங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. நீதியான அரசியல் தீர்வொன்றைக் கொடுத்தால் தமிழ் மக்களுடைய சிக்கலுக்கும் போருக்கும் முடிவு காணலாம் என்பதை விடுத்து காலத்துக்குக் காலம் எமது உரிமைப் போரட்டத்தை ஒரேயடியாக முறியடிப்பதற்கான வழிவகைகளையே சிறிலங்கா ஆட்சியாளர்களும் சிங்கள மேலாண்மையாளரும் தேடி வந்துள்ளனர்.
கடந்த 15 வருடங்களாக சிங்கள ஊடகத்துறையோடும் தென்னிலங்கையின் கருத்தியலாளர் பலரோடும் பழகியதிலிருந்து இன்னொரு விடயத்தையும் நான் புரிந்துகொண்டிருக்கிறேன். தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தான் விரும்பியதையே கேட்க தயாராய் இருக்கின்றது என்பதே அந்த உண்மை. எனவேதான் ~புலிகளைத் தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக வெறுக்கிறார்கள்| ~உட்பிரச்சினை காரணமாக புலிகளுக்கு அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது| ~புலிகளுக்கு வெளிநாட்டுத் தமிழர்களிடம் கடும் எதிர்ப்பு இருக்கிறது| ~புலிகள் தம்மைச் சுட்டுவிடுவார்கள் என்று அஞ்சியே தமிழ்ப் பத்திரிகையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்| போன்ற கருத்துக்களையே சிங்கள மேலாண்மையாளர் - ஏன்? சிங்களப் பொதுமக்கள் கூட - கேட்க விரும்புகின்றார்கள். இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கின்ற விரித்து விளக்குகின்ற தமிழ் எழுத்தாளர்களையே அவர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றார்கள்.
தமிழ் மக்களுடைய நியாயமான அரசியல் உரிமையை வழங்காமையாலேயே விடுதலைப் போர் நடைபெறுகிறது எனவே அதை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என எழும் தமிழ் குரல்களை கேட்கச் சிங்கள தேசம் இன்றுவரை தயாராக இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை இந்த உண்மையை காண மறுத்து எமது உரிமைப் போரை நசுக்க அரசியல் தீர்வு தவிர்ந்த வேறு வழிவகைகளை கண்டுபிடிப்பதிலும் அவற்றில் பெருமுதலீடு செய்வதிலுமே சிங்கள தேசம் நாட்டம் காட்டி வருகின்றது. தென்னிலங்கையில் காணப்படும் இந்த அடிப்படை உளவியல் பாங்கை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் சிங்கள தேசத்திற்கு எமது பிரச்சினையை நன்றாகப் புரிய வைப்பதற்கான முயற்சிகளை எடுத்தால் எல்லாம் சரிவந்துவிடும் என்ற மாயையை நம்பி நாம் மீண்டும் மீண்டும் மோசம் போய்க் கொண்டிருப்போம்.
சிங்கள தேசத்திற்கு எமது பிரச்சினையை விளக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தில் புலிகள் இப்போது இறங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் நல்லது. ஆனால் சரிவராது.
எமது பிரச்சினையைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தான் விரும்பியதை மட்டுமே கேட்கும். இதுவே உண்மை.
எமது போராட்டத்தை நசுக்க சிங்கள தேசம் காலத்துக்குக் காலம் நம்பிய அரசியல் தீர்வு அல்லாத மற்ற வழிவகைகள் சிலவற்றை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். அதனடிப்படையில் இப்போது சிங்கள மேலாண்மையாளர் எமது பிரச்சினையை அணுகுவதற்கு கையாளும் அரசியல் தீர்வு தவிர்ந்த ஏனைய வழிவகைகளை புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.
எண்பதுகளில் தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டை திட்டமிடப்பட்ட இராணுவக் குடியேற்றங்கள் மூலமாக படிப்படியாகச் சிதைத்து விட்டால் எமது உரிமைப் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்ற நம்பிக்கையோடு சிங்கள மேலாண்மையாளர் பல வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். மணலாறு மூதூர் தெற்கு மட்டக்களப்பில் வடமுனை என சிறிலங்கா அரசும் படைகளுமாக இணைந்து பல சிங்களக் குடியேற்றங்களையும் அவற்றை ஒட்டிய இராணுவ நிலைகளையும் ஏற்படுத்தலாயினர். இந்தத் திட்டங்கள் பற்றிய பல முக்கியமான விபரங்களை கடும் சிங்களப் போக்காளரான மாலிங்க குணரட்ன குழச ய ளுழஎநசநபைn ளுவயவந என்ற நூலில் எழுதியுள்ளார்.
இதற்கடுத்ததாக தமிழகத்தில் எமது விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்துவிட்டால் அல்லது இல்லாதொழித்துவிட்டால் எமது உரிமைப் போராட்டத்துக்கு சாவு மணி அடித்துவிடலாம் என சிங்கள மேலாண்மையாளர்கள் திடமாக நம்பினர். இதுபற்றி கொழும்பிலிருந்து வரும் சிங்கள ஆங்கில செய்தித்தாள்களில் அந்நேரத்தில் தொடர்ச்சியாக கட்டுரைகளும் ஆசிரியர் தலையங்கங்களும் கேலிச் சித்திரங்களும் வெளிவந்தவண்ணமிருந்தன. தமிழகத்தில் எமது உரிமைப் போராட்ட நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்காக சிறிலங்கா அரசு அப்போது பல திட்டங்களைத் தீட்டியது. இதற்கு அடித்தளமாக ஜேர்மனியில் சிறிலங்காவின் தூதுவராக இருந்த திஸ்ஸ ஜயக்கொடி சென்னைக்குக் அனுப்பப்பட்டார். இந்தியாவிற்குத் தூதுவராகவேண்டிய தகமையிலுள்ள ஒரு மூத்த வெளிநாட்டலுவல்கள் அதிகாரி ஏன் சென்னையிலுள்ள துணைத் தூதரகத்திற்கு பொறுப்பாக அனுப்பப்படுகின்றார் என்ற கேள்வி அன்று பலருக்கும் தோன்றிற்று. திஸ்ஸ ஜயக்கொடியின் புலனாய்வுப் பின்னணி பலருக்கும் அந்நேரத்தில் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.
தமிழீழ விடுதலை இயக்கங்களோடு இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியப் புலனாய்வுத் துறையினருக்கும் தமிழ்ப் போராளிகளுக்குமிடையில் சந்தேகத்தையும் முரண்பாட்டையும் தூண்டிவிடுவதே ஜெயக்கொடியின் நோக்கமாக இருந்தது. இதுவிடயத்தில் அவர் ஓரிரு வெற்றிகளைக் கண்டார். அது மட்டுமன்றி அப்போது சென்னையில் தமிழீழ விடுதலை இயக்கங்களினுடைய செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொறுப்பாகவும் இந்தியாவின் வெளிநாட்டுப் புலனாய்வுத்துறையான ~றோ|வின் தென்பிராந்திய செயற்பாடுகளுக்கு தலைமை அதிகாரியாகவும் இருந்த உன்னிகிருஷ்ணனை கையாளும் வேலைக்காகவும் திஸ்ஸ ஜெயக்கொடி சென்னைக்கு அனுப்பப்பட்டார் என நம்பப்படுகிறது. (உன்னிகிருஷ்ணன் அப்போது அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஊஐயு இற்கு வேலை செய்து வந்ததும் 1985இல் அவர் கையும் களவுமாகப் பிடிபட்டதும் பலரும் அறிந்த செய்தி.)
திஸ்ஸ ஜெயக்கொடி சென்னைவந்து தாஜ் கொரமன்டல் ஹோட்டலில் முகாமடித்து (இவர் தனது அதிகாரப10ர்வ வாசஸ்தலத்தில் தங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
வேலை தொடங்கிய அதே காலப்பகுதியில் சிறிலங்கா தேசியப் புலனாய்வுத் துறை தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு எதிராக தமிழக மக்கள் தமிழகக் காவல் துறையினர் ஆகியோரை திசைதிருப்பும் நோக்கில் ஒரு திட்டத்தை வகுத்தது. சென்னையில் சில முக்கியமான பகுதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்து பழியை தமிழ் இயக்கங்களில் தலையில் போடுவதே அந்தத் திட்டமாகும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களும் காவல்துறையினரும் தமிழ் இயக்கங்களை வெறுத்து அவற்றை தமிழக மண்ணிலிருந்து துரத்திவிடுவார்கள். தமிழகத்தில் பின்தளம் இல்லாவிட்டால் எமது விடுதலை இயக்கங்களை சிறிலங்கா இராணுவம் மிகச் சுலபமாக நசுக்கி ஒழித்துவிடுமென அப்போதிருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையும் சிங்கள மேலாண்மையாளரும் திடமாக நம்பினர். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா தேசியப் புலனாய்வு அமைப்பில் அப்போது வேலை செய்துகொண்டிருந்த தமிழர் ஒருவர் சென்னைக்கு அனுப்பப்பட்டார். தமிழகத்தின் தலைநகரில் அவரது முயற்சியில் ஒருசில குண்டுகள் வெடித்தன. ஆனால் தமிழகக் காவல்துறையினர் அவரை கண்டுபிடித்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்த நபர் சிறைமீண்ட பின்னர் மலையக அரசியலில் இறங்கி தன் சுயமுன்னேற்றத்திற்கு தற்போது ~ஆவன| செய்துவருகிறார்.
இப்படியாக எமது உரிமைப் போராட்டத்தின் பின்தளத்தை தமிழகத்தில் சிதைப்பதற்கு சிங்கள அரசியல் தலைமைகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனினும் அவர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழகத்திலிருந்து இயக்கங்களை முற்றாக வெளியேற்றுமாறு நேரடியாகவே டெல்லியை அழுத்தி வந்தனர். இரண்டாம் ஈழப்போர் 1990ஆம் ஆண்டு தொடங்கியபோது தமிழ் நாட்டில் புலிகள் இயங்க முடியாவிட்டால் அவர்களால் ஓரிரு மாதங்களுக்கு மேல் போரிட முடியாது என சிறிலங்கா படைத்தளபதிகளும் பல சிங்கள மேலாண்மைக் கோட்பாட்டாளர்களும் திட்டவட்டமாக நம்பினர். இந்த அடிப்படையிலேயே டெல்லிக்கு அப்போது கொழும்பிலிருந்து பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ரஜீவ் காந்தியினுடைய கொலையின் பின்னர் புலிகள் தமிழகத்திலோ இந்தியாவிலோ இனிக் கால் பதிக்கவே முடியாது என்ற நிலை தோன்றிய போது தமிழரின் உரிமைப்போரை நசுக்கி முற்றாக வென்றுவிட்டதைப் போன்ற உணர்வில் சிங்கள மேலாண்மையாளர்களும் சிறிலங்காப் படை அதிகாரிகளும் அன்று பேசியவற்றையும் எழுதியவற்றையும் பலர் மறந்துவிட்டார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து முற்றாக வெளியேறிய பின்னரே புலிகள் மரபுவழிப் படைவலுவைப் பெற்றனர் என்ற உண்மையை எதிர்கொள்ள வேண்டி வந்தபோது தமிழருடைய உரிமைப் போரை நசுக்குவதற்கு சிங்கள மேலாண்மையாளர் நம்பியிருந்த இரண்டாவது வழியும் அர்த்தமற்றுப் போனது.
இந்தவேளையில் சோர்ந்திருந்தவர்களுக்கு மாத்தையாவின் வடிவில் ஒரு புதுவழி திறந்தது. 1993ஆம் ஆண்டு இந்தப் பிரச்சினை தென்னிலங்கையில் பெரிதாக அடிபட்டுக் கொண்டிருந்தபோது எனக்குத் தெரிந்த ஒரு முக்கியமான சிறிலங்கா அரச திட்டமிடலாளர் ஒருவர் ஆணித்தரமாக ஒரு கருத்தை என்னிடம் தெரிவித்தார். 'புலிகளில் இரண்டாவது தலைமைப் பதவியை வகிப்பவர் மாத்தையா. இந்தியா செல்லாமல் நீண்டகாலம் களத்திலே நின்று வேலை செய்தவர். இவருடைய பிரச்சினை காரணமாக புலிகள் இயக்கம் விரைவில் சிதைந்து போவது எந்தவகையிலும் தவிர்க்கமுடியாதது" என்பதே அவரது கூற்று. இதுபற்றி நான் தெரிவித்த மாற்றுக் கருத்துக்களை அவர் செவிமடுக்கவில்லை. மாறாக தனது கூற்றையே வலியுறுத்திக் கொண்டிருந்தார். 'இதில் நான் உங்களோடு வாதிடவில்லை. இன்னும் ஒருசில மாதங்களில் புலிகளின் மாவீரர் நாள் வருகிறது. அதையொட்டி அவர்கள் ஏதாவது தாக்குதலில் ஈடுபடுவார்கள். அது சிறியளவில் இருந்தாலோ அல்லது நடக்காவிட்டாலோ நீங்கள் கூறுவது சரி என நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பெரியளவில் ஏதாவது நடந்துவிட்டால் நான் கூறுவது சரி என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என நான் அவரிடம் கூறிச் சென்றேன். புலிகளின் ப10நகரித் தாக்குதலின் பின்னர் அவரை ஓரிரு முறை நான் சந்தித்தபோதும் அவர் மாத்தையா என்ற பேச்சை எடுக்கவேயில்லை. சிங்கள ஊடகங்களும் சிங்கள மேலாண்மையாளர்களும் அவருடைய கருத்தையே அன்று கொண்டிருந்தார்கள் என்பதை நான் இங்கு குறிப்பிடவேண்டும்.
இதன் பின்னர் யாழ்ப்பாணத்தை சிறிலங்காப் படைகள் கைப்பற்றியபோது தமிழரின் உரிமைப் போராட்டத்தை இனி ஒரேயடியாக நசுக்கிவிடலாம் என சிங்கள தேசத்தில் சீன வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள். 'எதிரியின் படைகளையும் படைத் தளபாடங்களையும் குறிப்பிடத்தக்களவில் அழிப்பதையே வெற்றியென போரியலாளர் வரைவிலக்கணப்படுத்துகின்றனர் எனவும் அந்த அளவுகோலின்படி பார்க்கையில் யாழ்ப்பாணத்தைப் பிடித்தது புலிகளை வெற்றிகொண்டதற்குச் சமனாகாது. ஏனெனில் அவர்கள் தமது படைகளையும் போர்த் தளபாடங்களையும் அதிக சேதமில்லாமல் வன்னிக்குக் கொண்டு சென்று விட்டார்கள்" என அந்தவேளையில் Sunday Times பத்திரிகையில் விரிவாக எழுதியிருந்தேன். சிங்கள தேசம் அதைக் கண்டுகொள்ளவில்லை. புலிகளின் அழிவைப் பற்றியே தெற்கில் எல்லோரும் அப்போது பேசிக் கொண்டார்கள். ஆனால் முல்லைத்தீவு படைத்தளத்திற்கு விழுந்த அடியோடு அவர்களுடைய நம்பிக்கையில் மீண்டும் மண் விழுந்தது. 1999வரை ஜெயசிக்குரு நடவடிக்கையின் வெற்றியை மலையென நம்பியிருந்தது சிங்கள தேசம். அந்த நம்பிக்கையும் ஆனையிறவின் வீழ்ச்சியோடு வீணாகியது.
பின்னர் கருணாவைப் பிடித்தார்கள்; கொண்டாடினார்கள். இப்போது வெளிநாட்டுப் படை ஏதாவது வருமென்று கனவு காண்கிறார்கள். எமக்கு ஓர் நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதைப் பற்றி மட்டும் நினைக்கவே அவர்கள் மறுக்கிறார்கள் மறுத்துக்கொண்டே இருப்பார்கள். |