உங்கள் செல்லிடத் தொலைபேசியின் குருதிக்கறை வீரகேசரி - 26 September 2004
இலங்கையின் அமைதிப் பேச்சுவார்த்தைகளையொட்டி மேற்கில் இருந்து பல்வேறு அரச சார்பற்ற மற்றும் ஆய்வு நிறுவனங்கள் இங்கு வருகைதந்து செயல்பட்டு வருகின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி, சிவில் சமூகத்தைப் பலப்படுத்தல் போன்றவற்றைப் பற்றி எம்மிடையே காணப்படும் படித்தவர்கள், சமூக ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆகியோரிடையே கருத்தரங்குகளை இவை நடத்தி வருகின்றன. இவற்றினுடைய கருத்துக்களையும், அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளின் கூற்றுக்களையும் ஒருசேரப் பார்க்கும் போது உன்னத மனித விழுமியங்களை எம்மிடையே வளர்த்தெடுப்பதையே மேற்படி நாடுகளும் மேலைத்தேய அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆய்வு மையங்களும் தமது தலையாய நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன என்ற எண்ணம் எம்மிடையே பலருக்கு தோன்றலாம்.
வெளிநாடுகளில் வாழ்கின்ற ஆங்கிலம் பேசும் சில 'படித்த" மனிதர்களும் இக்கருத்தை வேத மந்திரம் போல் ஓதுகின்றனர். எமது இளைஞர்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போலவும் வெள்ளைக்காரரிடம் நாம் படிக்க வேண்டிய உன்னத மனித விழுமியங்கள் பல உள்ளன எனவும் அவர்கள் ஓதுவார்கள். இது வெள்ளைக்காரருக்கு கைகட்டிச் சேவகம் செய்த காலனித்துவ அடிமைப் போக்கின் தொடர்ச்சியே.
தமிழர் தாயகத்தில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் ஏற்படுத்துதல் என்ற போர்வையில் வெளித்தலையீடுகள் ஏற்படக்கூடிய ஆபத்து எம்மைச் சூழ்ந்து வருகிறது. இதற்கு முன்னேற்பாடாக சில உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக நுட்பமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவை, எம்மிடையே சாத்தியமில்லை என்பது போலவும் இவை எமக்கு மேற்கில் இருந்து ஊட்டப்பட வேண்டியவை என்பதான ஒரு உளப்பாங்கையும் எம் மத்தியில் நுட்பமாக உருவாக்கும் நோக்கில் இந்த வேலைகள் படிப்படியாக தமிழர் தாயகத்தில் விரிவாக்கமடைந்து வருகின்றன.
ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகத்தையும் நோக்கங்களையும் மறைப்பதற்கென பல புத்திஜீவிகள் தம்மை அறியாமலேயே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். உலக மயமாதல் நவதாராளவாதம் போன்ற கருத்தியல்கள் ஏகாதிபத்தியத்தின் கோரப்பற்களுக்கு முலாம் பூசுகின்றன. இந்தியாவின் உண்மை நோக்கங்களை சரியாக உணர்ந்து கொள்ளாமல் 'பாரதமாதா வாழ்க" அன்னை இந்திராவே வருக" என அரசியல் பேதைகளாக அன்று தமிழர் கோஷமிட்டதன் விளைவு என்னாயிற்று என்பதை நீங்கள் அறிவீர்கள். நீண்டகாலமாக இந்தியாபற்றி எமது புத்திஜீவிகளிடையே நிலவிவந்த 'புனிதமான" கருத்துக்களின் காரணமாகவே அந்நாட்டின் நோக்கங்கள் எம்மைப் பொறுத்தவரையில் எவ்வாறிருந்தன என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போயிற்று. அதாவது எமது போராட்டத்தைச் சுற்றி இந்தியாவின் கரங்கள் இறுகி வந்த வேளையில் அதைச் சரியாகவும் அறிவுபூர்வமாகவும் தகுந்த ஆதாரங்களோடும் புரிந்து கொண்டு மாற்று அரசியல் நடவடிக்கையை எடுப்பதற்குத் தேவையான ஒரு அறிவியல் எம்மிடையே அன்று இருக்கவில்லை. இந்தியாவின் இன்னொருமுகம் பற்றிய அறிவூட்டல் எமது மக்களிடையே காலாகாலத்துக்கு செய்யப்பட்டிருந்தால் நாம் சந்தித்த பேரழிவுகளை சற்றேனும் குறைத்திருக்கலாம் என நான் எண்ணுகின்றேன்.
இன்று எமது உரிமைப் போராட்டத்தைச் சுற்றி ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்கள் சூழ்ந்து வருகின்றன. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் காணப்படாத எத்தனையோ மேலைத்தேய நிறுவனங்கள் எம்மிடையே தோன்றி கிளை பரப்பி வருகின்றன. இவற்றினுடைய ஒட்டுமொத்த செயற்பாடுகளை கவனமாக ஆராய்வோமேயானால் ஒரு உண்மை புலப்படும். இவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் உண்மை நோக்கங்களை பூசிமெழுகி எம்மிடையே, எமது மக்களிடையே அமெரிக்கா பற்றியும் அதன் கூட்டு நாடுகள் பற்றியும் ஒரு நல்லெண்ண மாயையை ஏற்படுத்தி வருகின்றன என்பதே அது.
அமெரிக்க படைத்துறை ஊடுருவலுக்கு ஏதுவான முறையில் சமூகங்களை நெகிழ்வுபடுத்தி அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டும். (இது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்)
எமது மக்களிடையே மேற்குலகைப் பற்றி நிலவிவரும் பல மாயைகள் தகர்த்தெறியப்பட வேண்டும். உலக ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்தை மறைத்திருக்கும் முகமூடி கிழித்தெறியப்பட்டு உண்மைகளை எமது மக்கள் கண்டிட ஆவன செய்யப்பட வேண்டும். இல்லையெனில் நாம் இந்தியா விடயத்தில் விட்ட தவறை மீண்டும் அமெரிக்கா விடயத்தில் விட நிரம்ப வாய்ப்புண்டு.
அமெரிக்காவிலும் அதன் நேச நாடுகளிலும் காணப்படும் ஜனநாயகம், நல்லாட்சி, பொருளாதார முன்னேற்றம் போன்ற எமது புத்திஜீவிகளால் போற்றப்படுகின்ற பல விடயங்கள் கொள்ளையும், கொலையும் இன்றிச் சாத்தியமில்லை என்பதை நாம் உணர வேண்டும். அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் உண்மைச் சொந்தக்காரர்கள் ஆகிய செவ்விந்தியர்களிடம் இருந்து கொள்ளையின் மூலமாகவும், ஏமாற்றினூடாகவும் வெள்ளையர்களால் பறிக்கப்பட்ட வளங்களிலும் நிலங்களிலும் தான் இன்று நீங்கள் வியந்து நோக்கிடும் நாகரிகங்கள் உயர்ந்து நிற்கின்றன என்பது யாவரும் அறிந்த பழைய கதை.
மூலவளங்கள் நிறைந்த பல்வேறு நாடுகளைச் சீரழித்து அவற்றை பகற்கொள்ளையடித்தே மேற்கின் ஜனநாயகமும் நல்லாட்சியும் இன்னும் நடைபெறுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்றபடி அந்தந்த பொருட்களை விற்று கொள்ளை இலாபம் ஈட்டுவதில் மேலைத்தேய நாடுகள் மிகக் கவனமாகச் செயற்படுகின்றன. இந்த விடயத்தில் ஜனநாயகத்தையும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களையும் காலில் போட்டு மிதித்தே அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டு நாடுகளும் கொள்ளை இலாபம் அடிக்கின்றன.
இன்று நம்மிடையே சுடச்சுட விற்கும் பொருள் எது? அது சந்தேகத்திற்கிடமின்றி செல்லிடத் தொலைபேசியே ஆகும். மேற்கு நாடுகளில் இன்று பெரும் இலாபமீட்டும் துறையாக செல்லிடத் தொலைபேசி உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், இதற்காக மூன்றாம் உலக நாடு ஒன்றில் 1999இற்கும் 2002இற்கும் இடையில் ஏறத்தாழ 40 லட்சம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?
செல்லிடத் தொலைபேசி உற்பத்தி செய்வதற்கு இன்றியமையாத மூலப்பொருள் கோல்ற்ரான் (ஊழடவயn) என்ற கனிமப் பொருளாகும். இது பெருவாரியாக ஆபிரிக்காவிலுள்ள கொங்கோ ஜனநாயகக் குடியரசில் காணப்படுகிறது.
ஊழடவயn என்பது ஊழடழஅடிரைஅ-வுயவெயடரஅ என்பதன் சுருக்கமாகும். இந்த கனிமப் பொருள் 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாயினும் செல்லிடத் தொலைபேசி உற்பத்தியின் திடீர் வளர்ச்சிக்குப் பின்பே இதற்கு கடும் கேள்வி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த இந்த கனிமப் பொருள் செல்லிடத் தொலைபேசி உற்பத்தியின் வளர்ச்சியின் காரணமாக ஒரு கட்டத்தில் கிலோ 600 அமெரிக்க டொலர்களுக்கு உலகச் சந்தையில் விலை போயிற்று.
உலகின் அறியப்பட்ட ஊழடவயn வளங்களில் எண்பது சதவீதமானவை கொங்கோவிலேயே காணப்படுகின்றன. 1990இற்கும் 1999இற்கும் இடையில் ஊழடவயnஇற்கான உலக கேள்வி 300 சதவீதத்தால் அதிகரித்தது.
1996ஆம் ஆண்டு கொங்கோவில் லோறன்ட் கபீலாவின் தலைமையின் கீழ் கிளர்ச்சிப் படைகள் அப்போது அங்கிருந்த அரசுக்கு எதிராக வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது ஏகாதிபத்திய ஆதரவுடன் இயங்குகின்ற பல பல்தேசிய நிறுவனங்கள் அவரோடு ஊழடவயn அகழ்வு சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை செய்து கொண்டன. உள்நாட்டுப் போர் காரணமாக காணப்பட்ட குழப்பத்தின் மத்தியில் ஊழடவயnஐ மிக மிக மலிவாகவும் பல சந்தர்ப்பங்களில் இலவசமாகவும் அபகரித்துச் செல்ல பல்தேசிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
அமெரிக்க பல்தேசிய நிறுவனங்கள் கிளர்ச்சியாளர்களோடு பல்வேறு வகையில் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு ஊழடவயnஐ கொள்ளையடித்துச் செல்வதில் குறியாக இருந்தன.
உதாரணமாக, அமெரிக்காவின் இரு முக்கிய கனிம உற்பத்தி நிறுவனங்களான யுஆநுசுஐஊயுN ஆஐNநுசுயுடு குநுடுனுளுஇ டீநுஊர்வுநுடு ஊழுசுPழுசுயுவுஐழுN அமெரிக்க செய்மதிப் படங்களை வழங்கி அவர்களுடைய போர் மூலோபாயத்திற்கு உதவின. அதற்கு கைமாறாக ஊழடவயnஐ அபகரிப்பதற்கான உடன்பாடுகளைச்செய்துகொண்டன. ஆனால், காலப்போக்கில் தான் விடுவித்த பகுதிகளுடைய இறைமையை நிலை நாட்ட கபிலா முயன்றபோது அவருக்கு எதிராக மேற்படி பல்தேசிய நிறுவனங்கள் பல கூலிப்படைகளை உருவாக்கி தூண்டிவிடலாயின. இதன்காரணமாக ஊழடவயn விளைகின்ற பகுதிகளில் பயங்கரமான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. விடுவிக்கப்பட்ட கொங்கோவின் இறைமையை கபிலா நிறுவ முனைநந்த போது அவர் படுகொலை செய்யப்பட்டார். கொங்கோ தனி இறைமையுள்ள ஒரு நாடாக விடுதலையடைந்தால் ஊழடவயnஐ கொள்ளையடிக்க முடியாது என்பதை உணர்ந்தே அமெரிக்க பல்தேசிய நிறுவனங்கள் அங்கு மிகப் பயங்கரமானதொரு நிலைமையைத் தோற்றுவித்தன. அந்த கனிமப் பொருளின் உண்மையான பெறுமதியைத் தீர்மானிப்பதற்கோ அதன் மூலம் பெறக்கூடிய வருமானத்தை கொங்கோ நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக செலவிடுவதற்கோ அங்கு இன்று எந்த தலைமையும் கிடையாது. இதை தட்டிக் கேட்கக் கூடிய புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் நாளாந்தம் அங்கு கொன்றொழிக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஊழடவயnஐ கொள்ளையிடுவதற்காக அமெரிக்க பல்தேசிய நிறுவனங்களால் தூண்டி விடப்பட்டிருக்கும் கைக்கூலிப் படைகளின் கொலை வெறியாட்டத்தின் காரணமாக மாதாந்தம் 73ஆயிரம் மக்களாவது படுகொலை செய்யப்படுகிறார்கள் என ஒரு ஆய்வாளர் கூறுகிறார். (STOLEN GOODS: COLTAN AND COFILICT IN THE DEMOCRATIC REPUBLIC OF CONGO, DENA MONTAGUE, SAIS REVIEW VOI.XXII NO:1, 2002 என்பதை இணையத்தில் தேடினால் இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.)
இன்று சூடானில் டார்புர் மாநிலத்தில் மக்கள் அகதிகளாக்கப்படுவதாகவும், அவர்களை சூடானிய அரசு கொடுமைப்படுத்துவதாகவும், ஆகவே அங்கு தமது படைகளை அனுப்பி அந்த மக்களைக் காப்பாற்ற வேண்டுமெனவும் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையை விலியுறுத்தி வருகின்றன. ஏன் இதே மனிதாபிமானம் கொங்கோ மீது காட்டப்படவில்லை? ஏனெனில் அங்கு தங்கு தடையின்றி கொள்ளை நடக்கின்றது. ஆனால், சூடானில் கொள்ளையடிப்பதற்கு வழி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் டார்புர் மக்களுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கின்றது அமெரிக்கா. ஜனநாயகத்தைப் பற்றியும் நீதி நியாயத்தைப் பற்றியும் கதைப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது? எமக்கு பலம் இருந்தால் மட்டுமே எமது இறைமை பாதுகாக்கப்பட முடியும். இல்லையெனில், ஏகாதிபத்தியத்தின் துணையோடு எமது சமூகமும் சந்தர்ப்பம் ஏற்படும்போது சின்னாபின்னப் படுத்தப்பட்டு விடும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
|