தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings by Dharmeratnam Sivaram (Taraki) > சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோர் தரும் பாடம்

Selected Writings by Dharmeratnam Sivaram (Taraki)

சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள்
கிழக்குத் தீமோர் தரும் பாடம்

வீரகேசரி - 15 August 2004


இலங்கையில் இன்று நிரந்தர அமைதி ஏற்படுமா, இல்லையா என்பதற்கு புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம் ஒரு வரலாற்று உரை கல்லாக அமைந்துள்ளது. இதில் காணப்படும் தமிழர் சுயநிர்ணய உரிமை பற்றிய அடிப்படை கருத்தையே சிங்கள தேசம் பெரும் அச்சுறுத்தலாகவும் நசுக்கப்படவேண்டிய சவாலாகவும் கருதி செயல்படுகின்றது.

இலங்கை தீவை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியேறிய கணத்திலிருந்து இன்றுவரை இத்தீவின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை சிங்கள தேசத்திடம் ஒப்புக்கொடுக்கவில்லை என்ற வரலாற்று உண்மையின் அடித்தளத்திலேயே வட்டுக்கோட்டைத் தீர்மானமும் (1976) சுதந்திரத் தமிழீழ அரசை அமைப்பதற்கான சர்வஜன வாக்காக தமிழர் தாயகத்தில் 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலும் 1985ஆம் ஆண்டு கூட்டணியும் அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் ஒருமித்துப் பிரகடனப்படுத்திய திம்புக் கோட்பாடுகளும் புலிகள் இன்று முன்வைத்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டமும் அமைந்துள்ளன.

எமது சுயநிர்ணய உரிமை சரியாக அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு அரசியல் தீர்வும் எம்முடைய சமூகத்தின் வேலையில்லாப் பிரச்சினை தொடக்கம் நிலப்பயன்பாட்டுச் சிக்கல்கள் வரை எதையுமே தீர்க்கக்கூடிய நிரந்தர அடிப்படையாக இருக்க முடியாது என்ற உண்மையை பல படித்த தமிழர்கள் கூட புரிந்து கொள்ளாது உளறித் திரிகின்றனர்.

எமது சுயநிர்ணய உரிமை என்பது சிங்கள தேசம் கற்பனை செய்வது போல இலகுவாகத் தூக்கியெறிந்து விடக்கூடிய விடயமல்ல. ஏனெனில், சர்வதேச சமூகம் அண்மைக் காலங்களில் சுய நிர்ணய உரிமையை புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் நடைமுறையாக ஏற்கத் தலைப்பட்டுள்ளது. போன கிழமை இது தொடர்பாக நாம் சூடானின் அரசியலைப் பற்றிப் பார்த்தோம்.

இன்று கிழக்குத் தீமோரைப் பற்றிச் சுருக்கமாக நோக்குவோம்.

கிழக்குத் தீமோரின் சுயநிர்ணய உரிமைக்கான வரலாற்றுக் காரணங்களைப்போல எமக்கும் ஆணித்தரமான காரணங்கள் உண்டு என்பதை அரசியல்வாதிகள் எமது மக்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய வகையில் களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டும்.

கிழக்கு தீமோருக்கு அவுஸ்திரேலியாவைப்போல இந்தியா எமக்கு அமைந்துள்ளது. இதில் நாம் கற்கவேண்டிய பாடங்கள் பல எமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுப்பதைத் தடுக்க பாசிச அரசுகள் எவ்வாறு அமெரிக்கா, பிரித்தானிய ஆகியவற்றின் துணையோடு கைக்கூலிகளையும் ஒட்டுப்படைகளையும் (Pயசய ஆடைவையசநைள) எவ்வாறு கட்ட விழ்த்துவிடுகின்றன என்பதையும் கிழக்குத் தீமோர் எமக்குக் கற்றுத் தருகின்றது. மேற்கத்தேய நாடுகள் பேசும் மனித உரிமை, ஜனநாயகம், நல்லாட்சி எல்லாவற்றையும் விட அவற்றிற்கு எண்ணெய் மற்றும் கனி வளங்கள், கடற்பாதைகள் என்பவையே முக்கியமானவை என்ற பாடத்தையும் நாம் கிழக்குத் தீமோரிலிருந்து தெளிவாகக் கற்றுக் கொள்ளலாம்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.

தீமோர் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமிடையில் அமைந்துள்ள கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீவாகும். அவுஸ்திரேலியா தனது பாதுகாப்புக்கு இன்றியமையாத ஒரு இடமாக தீமோரைக் கருதி வருகின்றது. அது மட்டுமின்றி இருநாடுகளுக்குமிடைப்பட்ட கடற்பகுதியில் இருக்கின்ற பெரும் எண்ணெய் வளத்தை தனதாக்கிக் கொள்வதிலும் அவுஸ்திரேலியா குறியாக இருக்கின்றது. கிழக்குத் தீமோரின் விடுதலைப்போராட்டம் அவுஸ்திரேலியாவினுடைய இவ்விரு நலன்களின் அடிப்படையில் பல இன்னல்களை சந்தித்தது. சுதந்திர கிழக்குத் தீமோருடைய இறைமையை இந்த அடிப்படையிலேயே அவுஸ்திரேலியா மட்டுப்படுத்த முனைகின்றது.

13ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தீமோரின் வரலாறு பற்றி அறியப்படவில்லை. சீன வர்த்தகர்களும் தமிழரும் பண்டைக்காலத்தில் அங்கு கிடைக்கப்பெறும் சந்தன மரங்கள், தேன், மெழுகு ஆகியவற்றை பெறுவதற்கு தீமோருக்குச் சென்று வந்தனர். தீமோர் தீவில் பல்வேறு மொழிகளைப் பேசும் பழங்குடிகள் வாழுகின்றனர். அந்நாட்டில் பெரும் பகுதி மலைப்பாங்கான பிரதேசமாகும்.

பெரும்பான்மையான மக்கள் சேனைப் பயிர்ச் செய்கை விவசாயம் ஆகியவற்றிலே ஈடுபட்டிருக்கின்றனர். கரையோரப் பகுதியிலுள்ள சிலர் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பான்மையான மக்கள் எழுத்தறிவில்லாதவர்களாகவும் புராதன மதங்களை பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துக்கேய வர்த்தகர்கள் தீமோர் தீவில் 1509ஆம் ஆண்டு காலடி வைத்தனர்.

இதன் பின்னர் 1556இல் அவர்கள் அங்கு தமது ஆதிக்கத்தினை நிலைநாட்டினர். இந்தோனேசியாவில் 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர் கால் வைத்த பின்னர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான ஆச்சே மற்றும் தீமோர் தொடர்பாக போர்த்துக்கேயர்களுக்கும் அவர்களுக்குமிடையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.

இதன் இறுதியில் 1859ஆம் ஆண்டு இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீமோர் தீவை கிழக்கு மேற்கு என பிரித்து எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் 1975ஆம் ஆண்டுவரை கிழக்குத் தீமோர் போர்த்துக்கலின் இறைமைக்கு உட்பட்ட ஒரு பிராந்தியமாக இருந்து வந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர் தீமோர் தீவைக் கைப்பற்றினர். அவுஸ்திரேலியாவின் மீது படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்றுவதற்கான ஒரு முன்தளமாக அவர்கள் தீமோரில் போர் தயாரிப்புகளைச் செய்யலாயினர். இதை முறியடிக்க அவுஸ்திரேலியா தனது விசேட படையினர் 250 பேரை அனுப்பி அங்கு ஜப்பானியருக்கு எதிரான கெரில்லாப் போரொன்றைத் தொடங்கியது. இதன் மூலம் தமது நாட்டின் மீது ஜப்பான் திட்டமிட்டபடி உரியநேரத்தில் படையெடுக்காது தாமதமடைய வைக்கலாம் என அவுஸ்திரேலியர் எதிர்பார்த்தனர்.

ஜப்பானியருக்கு எதிரான கெரில்லாப் போரில் அவுஸ்திரேலியருக்குத் துணையாக பல்லாயிரக்கணக்கான கிழக்குத்தீமோர் மக்களும் இணைந்து போராடினர். இதில் அறுபதாயிரம் கிழக்குத் தீமோர் மக்கள் உயிரிழந்தனர்.

1974ஆம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டில் ஒரு இராணுவச்சதிப்புரட்சி நடைபெற்றது. இதன் காரணமாக அந்நாடு அங்கோலா போன்ற தனது காலனிகளில் வைத்திருந்த பிடி தளரத் தெடங்கிற்று. இந்த சந்தர்ப்பத்தைப் பன்படுத்தி கிழக்குத் தீமோரிலும் அதன் சுயநிர்ணய உரிமையை நிலை நாட்டும் நோக்குடன் படித்த இடதுசாரி இளைஞர்கள் பிரேட்டிலின் என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள்.

அதே காலப்பகுதியில் தீமோர் ஜனநாயக யுனியன் என்ற கட்சியும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தாம் கிழக்குத் தீமோரை தனிநாடாக பிரகடனப்படுத்தப் போவதாகவும் ஆனால், இந்தோனேசியாவின் பாதுகாப்புக்குக் குந்தகம் இல்லாத வகையிலும் அதன் கேந்திர மற்றும் பொருளாதார நலன்களுக்கு ஏற்ற வகையிலும் தமது நாடு தனது வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொள்ளும் என இந்தோனேசிய அரசுடன் கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தன. சரியான பதில் கிடைக்காத நிலையில் பிரேட்டிலின் அமைப்பு தேசங்களின் சுயநிர்ணயக்கோட்பாட்டின் அடிப்படையில் கிழக்குத் தீமோரை ஒரு தனிநாடாக 1975ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பிரகடனப்படுத்திற்று. இதைத்தொடர்ந்து அவ்வமைப்புக்கும் இந்தோனேசிய உளவுத் துறையின் பின்னணியில் இயங்கிய ஒரு குழுவுக்குமிடையில் ஏற்பட்ட மோதலைச் சாட்டாக வைத்து 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியப்படைகள் கிழக்குத் தீமோர் மீது படையெடுத்தன. 1976ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்குத் தீமோர் இந்தோனேசியாவின் 27ஆவது மாகாணமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் கிழக்குத் தீமோரில் தனக்கு எதிரான சக்திகள் அனைத்தையும் ப10ண்டோடு அழிக்கும் நோக்கில் இந்தோனேசிய இராணுவம் ஒரு இலட்சம் மக்களுக்கு மேல்கொன்று குவித்தது. பல்லாயிரக் கணக்கான மக்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டனர். மேலும் பல்லாயிரம் மக்கள் அகதிகளாக வீடு வாசல்களை விட்டு மேற்குத் தீமோரில் தஞ்சம் புகுந்தனர்.

இந்தோனேசிய படைகளுக்கு எதிராக ஆரம்பத்தில் பிரேட்டிலின் விடுதலை அமைப்பின் படைப்பிரிவான பலின்ரின் வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு எந்தவித வெளிஉதவிகளும் இருக்கவில்லை. கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கத்தின் இராணுவப் பிரிவை போர்த்துக்கீச இராணுவத்தில் பணியாற்றி வெளியேறிய பல அதிகாரிகள் இணைந்து உருவாக்கினர். போர்த்துக்கீச இராணுவம் ஆங்காங்கே விட்டுச் சென்ற மற்றும் களவாடப்பட்ட ரைபிள்களை கொண்டே விடுதலை இயக்கத்தின் இராணுவம் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. அத்துடன் மரபு வழி இராணுவத்திற்குரிய பயிற்சிகளின் அடிப்படையிலேயே விடுதலைப்போராளிகள் உருவாக்கப்பட்டனர்.

ஆனால் இந்த போராட்டத்தை இந்தோனேசியப் படைகள் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய சிறப்புப் படைகளின் ஆலோசனைக்கு இணங்க மிகக் கொடூரமான முறைகளின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. கிழக்குத் தீமோர் கெரில்லாக்கள் பலமாக இருந்த மலைப்பிராந்தியங்களில் அவர்களை தனிமைப்படுத்தி அழிப்பதற்காக இந்தோனேசிய இராணுவம் உணவு, மருந்து ஆகியவை உட்பட்ட முற்றுமுழுதான பொருளாதாரத் தடையை போட்டது. கால்களின் வேலி என அழைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் மலைச் சாரல்களில் இருந்த பல நூற்றுக் கணக்கான கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தோனேசியப் படையினரால் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். இவர்கள் கம்பியால் அடைக்கப்பட்ட இராணுவ வலயங்களுக்கு உட்பட்ட அகதி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

தேச, வர்க்க விடுதலைக்காக பேராடும் கெரில்லாக்கள் தமது மக்களிடையே கடலில் மீன்கள் வாழ்வதைப் போன்று செயல்படவேண்டும் என சீனப் புரட்சித் தலைவர் மாசேதுங் கூறுகிறார்.

எனவே, தண்ணியை இறைத்துவிட்டால் அதில் வாழும் மீன்கள் இறந்து விடும் என்ற அமெரிக்க, பிரித்தானிய எதிர் கெரில்லா போரியல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இவ்வகையான கொடூரமான நடவடிக்கைகளை இந்தோனேசிய இராணுவம் மேற்கொண்டது.

இந்தோனேசியப் படைகளுக்கு அமெரிக்க, பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய சிறப்புப் படைகள் நவீன எதிர் கெரில்லா போரியல் முறைகளில் தொடர் பயிற்சி வழங்கின என்பது இங்கு குறிப்படப்பட வேண்டிய விடயம்.

கிழக்குத் தீமோர் மக்களிடையே காணப்பட்ட பல்வேறு வட்டார மற்றும் மொழி, மத பிரிவுகளையும் முரண்பாடுகளையும் இந்தோனேசிய இராணுவம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான பல மோசமான ஒட்டுப்படைகளையும் கைக்கூலிகளையும் உருவாக்கியது. இந்த ஒட்டுப்படைகள் தாம் விரும்பயபடி அட்டூழியங்களில் ஈடுபட்டன. கிழக்குத் தீமோர் சமூகத்தில் காணப்பட்ட மேற்படி முரண்பாடுகளை இந்தோனேசிய இராணுவம் மிக நுட்பமாகப் பயன்படுத்தியதன் மூலம் அந்நாட்டின் சுயநிர்ணய உரிமை பற்றிய ஒருமித்த கருத்தை பிரேட்டிலின் அமைப்பு அரசியல் ரீதியாக கட்டியெழுப்ப விடாமல் பார்த்துக் கொண்டது. (கிழக்குத் தீமோர் விடுதலைப் போராட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பலர் முக்கிய பங்காற்றினர் என்பதும் குறிப்படத்தக்கது)

கிழக்குத் தீமோரில் இந்தோனேசிய இராணுவம் 1975ஆம் ஆண்டின்பின் செய்த மிக மோசமான படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் என்பது போன்ற அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்கள் பற்றி மேலைத்தேய ஊடகங்கள் அந்த நேரத்தில் கண்டு கொள்ளவில்லை.

இதற்குக் காரணம் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பரவுவதை தடுப்பதற்கு அக்காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு இருந்தமிக முக்கியமான கூட்டாளி நாடாக இந்தோனேசியா அமைந்திருந்ததே ஆகும். அத்துடன் மாக்சீய இயக்கமான கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கம் வெற்றி பெற்றால் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு இன்றியமையாதென கருதப்பட்ட ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் சோவியத் யூனியனின் கைக்குள் போய்விடும். எனவே கிழக்குத் தீமோரை இந்தோனேசியாவின் மிகக் கொடூரமானபடிக்குள் வைத்திருப்பதையே அமெரிக்காவும் அதன் கூட்டு நாடான அவுஸ்திரேலியாவும் விரும்பின. இதன் காரணமாக கிழக்குத் தீமோர் விடுதலைப்போராட்டத்தையும் அந்தப் போராட்டத்தையொட்டி இந்தோனேசிய இராணுவம் அங்கு செய்த பயங்கரமான செயல்களையும் மேற்கத்திய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.

1985ஆம் ஆண்டளவில் தீமோர் விடுதலை இயக்கம் தனது மாக்சீய நிலைப்பாட்டிலிருந்து விலகி முழுமையான தேசிய விடுதலைக் கோட்பாட்டினைக் கொண்ட ஒரு அமைப்பாகத் தன்னை இனங்காட்டிக்கொண்டது. இதன் மூலம் கிழக்குத் தீமோர் விடுதலை தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கும் அதன் மேற்குலக கூட்டு நாடுகளுக்கும் இருந்த அச்சங்களை அகற்றலாமென அது எண்ணிற்று.

1990ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததோடு உலக அரசியல் நிலமைகள் முற்றாக மாறின. சோவியத் யூனியன் தென்கிழக்காசியாவில் காலூன்றுவதைத் தடுத்திடுவதற்கான ஒரு தளமாக இந்தோனேசியா பேணப்படுவதற்கான தேவை அமெரிக்காவிற்கு இல்லாமல் போனது. அத்தோடு இந்தோனேசியாவின் அமெரிக்கச் சார்பு சர்வாதிகாரியான சுகார்த்தோவும் பதவி இறங்க வேண்டியதாயிற்று. இக்காலகட்டத்திலேயே கிழக்குத் தீமோர் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி மேலைத்தேய ஊடகங்கள் கவனமெடுக்கத் தொடங்கின. 1991ஆம் ஆண்டு அங்கு ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது இந்தோனேசிய இராணுவம் செய்த படுகொலையொன்று பெரியளவில் மேலைத்தேய ஊடகங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் 1993ஆம் ஆண்டு கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கத் தலைவரை இந்தோனேசிய படைகள் கைது செய்து 20வருட சிறைத்தண்டனை வழங்கின.

1998ஆம் ஆண்டு சுகார்த்தோவை அடுத்துப் பதவிக்கு வந்த இந்தோனேசிய ஐனாதிபதி கபீப கிழக்குத் தீமோரில் அதன் சுயநிர்ணய உரிமையை தீர்மானிப்பதற்கான ஒரு சர்வஐன வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அறிவித்தார். இதன் பின்னணியில் அவுஸ்திரேலியா செயற்பட்டதாகக் கருத இடமுண்டு. அதாவது கிழக்குத்தீமோருக்கு வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தைக் கொடுத்து அந்நாட்டையும் அதன் கடலில் காணப்படும் எண்ணெய் வளங்களையும் நிரந்தரமாகவே தன் கைக்குள் வைத்துக் கொள்ளலாம் என அவுஸ்திரேலியா கருதியதாலேயே அது கிழக்குத் தீமோர் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென இந்தோனேசிய அரசின் மீது அழுத்தம் கொடுத்தது. அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பொம்மையாக இருந்த சுகாத்தோவின் வீழ்ச்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த அரசுகள் கிழக்குத் தீமோரின் வளங்களை அவுஸ்திரேலியா பயன்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போடலாம் என அவுஸ்திரேலியா பயந்ததும் இதற்குமுக்கிய காரணமாகும். 1999ஆம் ஆண்டு மே மாதம் கிழக்குத் தீமோரின் சுயநிர்ணய உரிமையை வழங்குவது தொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் போர்த்துக்கலும் இந்தோனேசியாவும் கைச்சாத்திட்டன. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை சர்வஐன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக கிழக்குத் தீமோரில் இந்தோனேசிய இராணுவத்துடன் செயற்பட்டு வந்த ஒட்டுப்படைகள் அனைத்தும் வாக்கெடுப்புக்கு முன்னர் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் இணங்கப்பட்டது.

எனினும் சர்வஐன வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபைமுற்பட்ட வேளையில் இந்தோனேசியப் படைகளின் உதவியோடு ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோரில் பயங்கர அழிவு நடவடிக்கைகளில் இறங்கின. இதனிடையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எண்பது சதவீதமான கிழக்குத் தீமோர் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து மேற்படி ஒட்டுப்படைகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவைப்பு நடவடிக்கைகளில் இறங்கியதால் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இவ்வொட்டுப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். கிழக்குத் தீமோரின் தலைநகரமான டிலி நாசமாக்கப்பட்டது. ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்த நிலமைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக 99 செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் தலைமையில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும்படையொன்று கிழக்குத் தீமோரில் சென்றிங்கியது. இதன் பின்னர் அங்கு ஒழுங்கு ஓரளவு நிலைநாட்டப்பட்டது. ஆனால் கிழக்குத் தீமோர் விடுதலைப் படை நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது ஆயுதங்களைக் களையவேண்டும் என்ற நிபந்தனையும் போடப்பட்டது. இதை அதன் சில தளபதிகள் எதிர்த்தபோதும் எதுவும் செய்ய முடியாது இருக்கின்றனர்.

1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் கிழக்குத் தீமோருக்கான இடைக்கால நிருவாகமொன்று அமைக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு முதலாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் கிழக்குத் தீமோர் விடுதலை இயக்கத்தலைவர் சனானா குஸ்மாவோ ஐனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். தற்போது கிழக்குத் தீமோரின் எண்ணெய் வளங்களைதான் பயன்படுத்துவதற்கும் அந்நாட்டின் அரசியலையும் பாதுகாப்பையும் தன்கைக்குள் வைத்திருப்பதற்கும் அவுஸ்திரேலியா முயற்சி செய்து வருகின்றது.

(காத்தான்குடியில் சூப்பும் கிழங்கும் அடித்து விட்டு மட்டக்களப்பு சாந்தி தியேட்டரில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். முதல் நாள் காட்சி பார்க்கலாம் என நான் போட்ட திட்டத்தில் மண்ணைப்போட்டு இதை கட்டாயப்படுத்தி எழுத வைத்த வீரகேசரி வார இதழ் ஆசிரியர் தேவராஜுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.)

 

Mail Usup- truth is a pathless land -Home