தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > நினைவு தினம் -  Remembrance Day

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

 நினைவு தினம் -  Remembrance Day

11 November 2007


நவம்பர் மாதம் 11ம் திகதியானது அவுஸ்திரேலிய மக்களுக்கு ஒரு மிக முக்கியமான தினமாகும். பதினொராம் மாதம், பதினொராம் திகதியின் பகல் பதினொரு மணிக்கு அவுஸ்திரேலிய மக்கள் கடந்த நூறு ஆண்டு காலத்தில் போரினால் மடிந்த தமது மாவீரர்களையும், கடமையாற்றிய அனைத்துப் போர்வீரர்களையும், மடிந்த மக்களையும், போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைத்து அக வணக்கம் செலுத்துவார்கள்.

இந்த நவம்பர் மாதத்து நினைவு தினத்தின் பின்னால் உள்ள வரலாற்று நிகழ்வுகளை இவ்வேளையில் மீட்டிப் பார்ப்பது பொருத்தமான ஒன்றாகும். இந்த அவுஸ்திரேலிய நினைவு தினம் சம்பந்தமான நிகழ்வுகளை, உலக வரலாற்றின் பல தளங்களிலும் வைத்து மீட்டிப் பார்க்கும்போது, தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றோடும் பல நிகழ்வுகள் ஒத்துப் போவதை நாம் காண முடிகின்றது.

இந்தக் கட்டுரையின் நோக்கம், நினைவு தினங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அல்ல என்பதையும் நாம் முதலிலேயே சொல்லி வைக்க விரும்புகின்றோம். ஆயினும், நகர்ந்து வருகின்ற வரலாறு, சில அடிப்படையான, யதார்த்தமான விடயங்களை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியே வந்திருக்கின்றது என்பதையே நாம் இன்றைய தினம் குறிப்பிட விரும்புகின்றோம். இந்த வகையில் இந்தக் கட்டுரையில் உள்ள வரலாற்று உண்மைகளையும், வரலாறு தந்திருக்கின்ற படிப்பினைகளையும் எமது வாசகர்கள் உள்வாங்கிக் கொள்ளலாம்.

இன்று நவம்பர் மாதம் பதினொராம் திகதியன்று நினைவு தினமாக -
Remembrance Day என்று - உணர்வு பூர்வமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தினம், முன்னர் ‘நினைவு தினம்’ என்று அழைக்கப்படவில்லை. மாறாக ‘யுத்த நிறுத்த தினம்’ (Armistice-Day) என்றுதான் பிரகடனப்படுத்தப்பட்டும், அழைக்கப்பட்டும் வந்துள்ளது.

இத் தினம் ஏன் முதலில் ‘யுத்த நிறுத்த தினம்’ என அழைக்கப்பட்டது? ஏன் யுத்த நிறுத்த தினம் கொண்டாடப்பட்டது? பின்னர் ‘யுத்த நிறுத்த தினம்’ என்ன காரணத்தால் ‘நினைவு தினமாக’ மாறியது? இடையில் ஏற்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள் என்ன?

இதற்காக நாம் எண்பத்தி ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். முதலாவது உலக மகா யுத்தக் காலம்!

1918ம் ஆண்டு நவம்பர் மாதம் பதினொராம் திகதியன்று அதிகாலை ஐந்து மணிக்கு, ஜேர்மன் அரசாங்கத்தின் மூன்று பிரதிநிதிகள், நேசநாடுகளின் தளபதியும், பிரான்ஸ் இராணுவ ஜெனரலுமான
Foch என்பவர் அளித்த யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களை ஏற்றுக் கொண்டனர். நேச நாடுகளின் போர்வீரர்கள் ஜேர்மன் இராணுவத்தினரை ஓட, ஓட விரட்டிய மாதங்கள் அவை. ஜேர்மன் இராணுவம் கைப்பற்றியிருந்த பிரதேசங்களையெல்லாம் நேசநாடுகளின் இராணுவம் மீளக் கைப்பற்றிக் கொண்டு வந்த காலம் அது.

அந்த வேளையில் ஒரு ‘யுத்த நிறுத்த உடன்படிக்கை’!!

1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதியன்று, அதிகாலை ஐந்து மணிக்கு, ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை, பகல் 11 மணிக்கு அமலுக்கு வந்தது. சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற முதலாவது உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்தபோது, 61,919 அவுஸ்திரேலியர்கள் கடலிலும் வானிலும், அந்நிய மண்ணிலும் உயிர் துறந்திருந்தனர். அன்றைய தினம் கிட்டத்தட்ட சகல அவுஸ்திரேலிய குடும்பங்களும் போரினால் பாதிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான குடும்பங்கள் ஒரு தந்தையையோ மகனையோ, சகோதரனையோ, சகோதரியையோ, நண்பனையோ அல்லது நண்பியையோ இழந்து விட்டிருந்தன.

416,000க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்கள் தமது நாட்டிற்காக முதலாவது உலக மகா யுத்தத்தில் இணைந்து கொண்டார்கள். இவர்களில் சுமார் 324,000 அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் பணி புரிந்தார்கள். பிரான்ஸின்
Western Front லும், பெல்ஜியத்திலும் சுமார் 45,000 போர் வீரர்களும், துருக்கியில் சுமார் எண்ணாயிரம் போர் வீரர்களும், மற்றைய பிரதேசங்களில் இன்னுமொரு எண்ணாயிரம் போர் வீரர்களுமாக 61,919 அவுஸ்திரேலியர்கள் முதலாவது உலக மகாயுத்தத்தின் போது மாவீரர்களானார்கள்.

1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதியன்று யுத்த நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வந்தவுடன் நிரந்தரமான சமாதானம் வந்து விட்டது என்றுதான் சகலரும் நம்பினார்கள்.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட முப்பது நாட்களுக்குள, ஜேர்மன் இராணுவம் குறிப்பிட்ட பிரதேசங்களை விட்டு வெளியேற வேண்டும் என்றும், உடனடியாக யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை அடுத்த ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டபோது உலகளாவிய வகையில் மக்கள் மகிழ்ச்சியடைந்து, இந்தப் போர்நிறுத்த தினத்தைக் கொண்டாடினார்கள். அவுஸ்திரேலியா நியுசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற தேசங்களுக்கு நவம்பர் 11ம் திகதியானது யுத்த நிறுத்த தினமாகவும், முதலாவது உலக மகா யுத்தத்த்pல் இறந்தவர்களை நினைவு கூரும் தினமாகவும் இருந்து வந்தது.

ஆனால் யுத்தம் மீண்டும் வெடித்தது.

இரண்டாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகியது. ‘தன்னுடைய இனம்தான் தூய இனம், அது மற்றைய இனங்களை விட மேலானது’ என்று ஹிட்லர் முழங்கினார். யூத இன அழிப்பில் இறங்கினார். முறைகேடாக ஆட்சிக்கு வந்து, முறைகேடான ஆட்சியையும் ஹிட்லர் நடாத்தினார். ஒப்பந்தங்களைப் போடுவதும், அதே ஒப்பந்தங்களை மீறுவதும் ஹிட்லரின் பண்பாக இருந்து வந்தது. ஹிட்லரின் ஆட்சியில் இராணுவத்திற்கே சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டன. சட்டம் எதுவாக இருந்தாலும் ஜேர்மன் இராணுவம் அதனை அசட்டை செய்து, தன்னுடைய ஆரியப் பேரினவாத அரச பயங்கரவாதத்தை மேற்கொண்டு வந்தது. தொடர்ந்து யூத இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ‘ஒரு பேரினவாதப் பயங்கரவாத அரசு!|

அன்புக்குரிய வாசகர்களே!

நாம் இப்போது ‘ஒரு பேரினவாதப் பயங்கரவாத அரசு’ என்று குறிப்பிட்டது ஹிட்லரின் அன்றைய ஜேர்மன் அரசைத்தான்!

இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ஹிட்லரும், அவரது ஜேர்மன் இராணுவமும் தோற்கடிக்கப்பட்டனர். இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்தது. கிடைக்கப் பெற்றுள்ள ஆவணங்களின்படி இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர்தான் ‘யுத்த நிறுத்த தினம்’ என்பது ‘நினைவு தினம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று அறியப்படுகின்றது. பிரித்தானிய அரசு இது குறித்து முன்வைத்த பிரேரணையை, அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொண்டது. ‘யுத்த நிறுத்த தினம்’ , ‘நினைவு தினமாயிற்று’.

ஆண்டுகள் பல கழிந்து கொண்டு போகின்ற போதிலும் அவுஸ்திரேலிய மக்கள் தங்களுடைய மாவீரர்களை மறந்ததேயில்லை. சரியாகச் சொல்லப் போனால் இன்னும் உத்வேகத்துடன், உணர்வு பூர்வமாகத் தங்களுடைய மாவீரர்களை அவுஸ்திரேலிய மக்கள் நிiவு கூர்ந்து வருகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். உதாரணத்திற்குச் சில விடயங்களைச் சுட்டிக் காட்ட விழைகின்றோம்.

முதலாவது உலக மகா யுத்தத்தின் போதும், இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போதும் வீரச்சாவடைந்த அவுஸ்திரேலிய வீரர்களில் 35,527 மாவீரர்களின உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்று இதுவரையும் அறிய முடியாமல் உள்ளது. எங்கேயோ அந்ந்pய தேச மண்ண்pல் இந்த 35,527 மாவீரர்களின் உடல்கள் உறங்கிக் கிடக்கின்றன.

1993ம் ஆண்டு பிரான்ஸ் தேசத்தின்
Western Front ல் புதைக்கப்பட்டிருந்த ஒரு பெயர் தெரியாத அவுஸ்திரேலிய மாவீரனின் பூத உடலின் பாகங்களை, அவுஸ்திரேலிய அரசு அகழ்ந்தெடுத்து அவுஸ்திரேலியாவிற்குக் கொண்டு வந்தது. அந்தப் பெயர் தெரியாத மாவீரனின் உடல் 1993ம் ஆண்டு, நவம்பர் மாதம் 11ம் திகதியன்று பூரண அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அந்த மாவீரனின் சவப்பெட்டியின் முன்னே நின்று, அன்றைய அவுஸ்திரேலியப் பிரதமர் திரு
Paul Keating  இரங்கலுரை நிகழ்த்தினார். அப்போது அவர் தெரிவித்த சில கருத்துக்கள் வருமாறு:

“இந்த அவுஸ்திரேலியப் போர் வீரன் யார் என்று எமக்கு எப்போதுமே தெரிய வரப்போவதில்லை. ஆயினும் எம்மால் எப்போதும் கௌரவிக்கப்படுபவர்களில் இவரும் ஒருவர்! ஆனால் எங்களுக்கு ஒன்று தெரியும். அவர் அவுஸ்திரேலியாவிற்காக போர்ப் பணி புரிந்த 416,000 பேர்களில் ஒருவர். போரின் போது இறந்த 45,000 அவுஸ்திரேலிய வீரர்களில் ஒருவர். இவர்தான் அவர்கள் எல்லோரும்! அத்தோடு இவர் எங்களில் ஒருவர்!”

அன்றைய அவுஸ்திரேலியப் பிரதமர் திரு
Paul Keating ன் உணர்வு மிக்க இந்தப் பேச்சு அவுஸ்திரேலிய மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது. முதலாவது உலக மகா யுத்தத்தில் சேவை Robert Coomb இந்தப் பெயர் தெரியாத போர்வீரனின் சவப்பெட்டியின் மீது, அவர் வீழ்ந்த பிரான்ஸ் தேசத்து மண் துகள்களைத் தூவி விட்டு இவவாறு கூறினார்.

“ Now, You are Home, mate; !

அவுஸ்திரேலியா தனது மாவீரர்களைக் கௌரவிப்பதோடு மட்டும் நின்று விடவில்லை. இரண்டு உலக மகா யுத்தங்களில் பணி புரிந்து பின்னர் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்ட போர்வீரர்கள், முதுமை காரணமாக இயற்கை எய்தும்போதும் அவர்களை அவுஸ்திரேலியா கௌரவிக்கின்றது. தனது 16 வது வயதில் அவுஸ்திரேலியா இராணுவத்தில் சேர்ந்து குழந்தைப் போர்வீரன்
(KID SOLDIER) என்று அழைக்கப்பட்ட ALEC CAMPBELL அவர்கள் தன்னுடைய 103வது வயதில், 2002ம் ஆண்டு காலமானபோது அவுஸ்திரேலியப் பிரதம மந்திரி தனது சீன நாட்டு விஜயத்தை பாதியில் முடித்துவிட்டு நாடு திரும்பினார். ALLEC CAMPBELL அவர்களுடைய படத்தை அவுஸ்திரேலிய அரசு ஏற்கனவே தபால் முத்திரையில் வெளியிட்டுக் கௌரவித்து இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பால்வடியும் முகத்தோடு சீருடையில் அலெக் காம்ப்வெல் தன்னையும் விடப் பெரிய துப்பாக்கியோடு நிற்கின்ற தோற்றத்தை MINT நாணயத்தில் பதித்து அவுஸ்திரேலியா பின்னர் மீண்டும் கௌரவித்தது.

போராளிகளின் மறைவு, விதைப்பு என்பவற்றை உலகம் மரியாதையோடு கௌரவத்தோடு பார்க்கின்றது. 1917ம் ஆண்டு முதலாவது உலக மகா யுத்தத்தில் பெல்ஜியத்தில் (
PASSCHENDAELE என்ற இடத்தில்) மிகக் கடுமையான சண்டை நடந்தது. அவுஸ்திரேலியாவிலிருந்து சென்றிருந்த போர்வீரர்களில் ஜக் ஹன்டர் (JACK HUNTER), ஜிம் ஹன்டர் (JIM HUNTER) என்ற இரு சகோதரர்களும் இச் சண்டையில் இணைந்து பங்கு பற்றினார்கள்.

இந்தக் கடுமையான சண்டையில், சகோதரர்களில் மூத்தவரான ஜக் ஹன்டர் வீரச் சாவடைகின்றார். தனது தமையனை அந்தப் போர்க்களத்திலேயே அடக்கம் செய்து விட்டுச் சண்டையைத் தொடர்கின்றார், அவரது தம்பி ஜிம் ஹன்டர். சண்டை முடிந்தபின்பு, தனது தமையனாரின் புதைகுழியை அந்த யுத்த மயானத்தில் தம்பி தேடியலைந்தார். ஆனால் மிகக் கடுமையான பீரங்கிக் குண்டுத் தாக்குதலினால் இறந்துபோய் புதைக்கப்பட்ட வீரர்களின் உடல்கள் சின்னாபின்னமாகிய காரணத்தால், தனது தமையனின் உடலை தம்பி ஜிம்மினால் கண்டு பிடிக்க முடியவில்லை. உடைந்த உள்ளத்தோடு நாடு திரும்பிய தம்பி ஜிம் ஹன்டர், 1977ம் ஆண்டு தன்னுடைய 86வது வயதில் தன்னுடைய அண்ணனின் பெயரைச் சொல்லியவாறே தன் உயிரை நீத்தார்.

ஆனால் இந்த 2007ம் ஆண்டு - அதாவது 90 ஆண்டுகளுக்குப் பின்னால் - தமையனார் ஜக் ஹன்டரின் உடல், மரபணுச் சோதனை உதவி மூலம்
(DNA TEST) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஜக் ஹன்டரின் மருமகளான மோலி மில்லிஸ் (MOLLIE MILLIS) என்பவரின் - இவருக்கு இப்போது 81வயது - மரபணு உதவியுடன் ஜக் ஹன்டரின் சிதிலமடைந்த உடல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம், பெல்ஜியம் போர் மயானத்தில், முழு இராணுவ மரியாதையோடு, ஜக் ஹன்டரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எங்கோ ஒரு வேற்று நாட்டில், 90 ஆண்டுகளுக்கு முன் உயிர் துறந்த, தமது நாட்டுப் போர் வீரனின் உடலைக் கௌரவமாக நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக அவுஸ்திரேலிய அரசும், போர்வீரனின் உறவுகளும் மேற்கொண்ட சலிக்காத முயற்சியை ஓர் உதாரணத்திற்காக நாம் இங்கே சுட்டிக் காட்டினோம்.

அவுஸ்திரேலியாவின் மாவீரர்கள் குறித்தும், அவர்களை அவுஸ்திரேலிய மக்களும் அரசும் எவ்வாறு உணர்வு பூர்வமாக மதித்துக் கௌரவித்து வருகின்றார்கள் என்பது குறித்தும் சில வரலாற்றுத் தகவல்களைத் தந்திருந்தோம். முத்தாய்ப்பாக ஒரு போர்வீரன் எழுதிய ஆங்கிலக் கவிதையை இயன்றவரை தமிழாக்கித் தருகின்றோம். லெப்டினட்-கேர்ணல்
John McCrae என்பவர் 1915ம் ஆண்டு மே மாதம் பெல்ஜியத்தின் Flanders Fields ல் வைத்து எழுதிய இந்த உருக்கமான கவிதையில் மிகச் சரியான செய்தி ஒன்றும் உள்ளது.

இதோ
Flanders Field போர்க்களத்தில்
பொப்பி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
சிலுவை அடையாளங்களுக்கு இடையே
வரிசை வரிசையாகப் பொப்பி மலர்கள்
எங்களுடைய இருப்பிடங்களை
அடையாளம் காட்டுகின்றன.
கீழே முழங்குகின்ற துப்பாக்கிச் சத்தங்களைத்
தங்கள் காதுகளில் வாங்காது வானம்பாடிகள் பாடிப் பறக்கின்றன.

நாங்கள் இப்போது இறந்தவர்கள்.
சில நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள்.
வாழ்ந்தோம். வீழ்ந்தோம். சூரிய உதயத்தை உணர்ந்தோம்.
சூரிய அஸ்தமனத்தின் ஒளியையும் கண்டோம்.
காதலித்தோம். காதலிக்கவும் பட்டோம்.
இப்போது
Flanders Field ல் கிடக்கின்றோம்.

எங்களுடைய சண்டையைப் பகைவனிடம் கொண்டு செல்லுங்கள்.
செயல் இழக்கப் போகின்ற எங்கள் கைகளில் உள்ள
விளக்கை உங்களிடம் தருகின்றோம்.
அதனை உங்களுடையதாக உயர்த்தி பிடியுங்கள்.

இறந்து கொண்டிருக்கும் எங்களுடைய நம்பிக்கையை
நீங்கள் உடைப்பீர்களேயானால்
நாங்கள் தூங்கப் போவதில்லை.

ஆனால் இந்த பொப்பி மலர்கள்
Flanders Field ல் தொடர்ந்து பூத்துக் குலுங்கும்.

இந்த உயரிய உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கு புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய எம்மால் முடியும் அல்லவா? தமிழீழம் முழுமையாகச் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரேயே, தமது மாவீரர்களை நெஞ்சில் நிறுத்திக் கௌரவிக்கும் தேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா நாங்கள்! அந்த வகையில் அவுஸ்திரேலியா தேசத்து மாவீரர்களுக்கும், போராளிகளுக்கும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் நவம்பர் மாதம் 11ம் திகதி பகல் 11 மணிக்கு எம் அக வணக்கத்தை உணர்வு பூர்வமாகத் தெரிவிப்போம்.

Mail Usup- truth is a pathless land -Home