தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
 

Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > கள நிலையில் மாற்றம் வருகின்றபோது.....

Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

கள நிலையில் மாற்றம் வருகின்றபோது.....

29  August 2007

"..கள நிலையில் மாற்றம் வருகின்றவரை மேற்குலகம் இவ்வாறு சும்மா பேசிக்கொண்டுதான் இருக்கப் போகின்றது. கள நிலையில் மாற்றம் வருகின்றபோது, அத்தோடு நாம் முன்னர் தர்க்கித்திருந்த எதிர்பாராத அழுத்தங்களும் சேருகின்ற போது, உலகப் போக்கில் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்திற்கு உதவுகின்ற வகையில் புலம் பெயர்ந்த எமது மக்கள், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் உட்பட்ட அரச பயங்கரவாதச் செயல்கள் குறித்த பாரிய பரப்புரையைத் தொடர்ந்தும் செய்து வரவேண்டும்!.."


 ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள், மனித உரிமை மீறல்கள், துஷ்ப்பிரயோகங்கள் சம்பந்தமாகச் சிறிலங்காவைச் சாடியதையடுத்து அவர் மீது கடுமையான கண்டனங்களைச் சிறிலங்கா அரசு சுமத்தியிருந்தது.

சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே, ‘ஐ.நா.சபையின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி’ என்றும், ‘அவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இலஞ்சம் வாங்கியிருக்கக் கூடும்’ என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். சிங்களப் பேரினவாத அரசியல் கட்சிகளும், சிங்கள ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு ஜோன் ஹோல்ம்சைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருந்தன.

இத்தனைக்கும் ஜோன் ஹோல்ம்ஸ் சிறிலங்கா அரசைப் பெரிதாகக் குற்றம் சாட்டியிருக்கவில்லை. அவர் சிறிலங்கா அரசின் நலன் சார்ந்து பேசிவிட்டு, சிறிலங்கா அரசிற்குச் சார்பாகச் சந்திப்புக்களை நடாத்திவிட்டு, உலக அரங்கில் சிறிலங்காவிற்கு ‘நல்ல பெயர்’ கிடைப்பதற்கான அறிவுரைகளையும் வழங்கிவிட்டுத்தான் சென்றிருந்தார். ஆனால் அவற்றைக்கூட சிங்களப் பேரினவாதத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சிறிலங்கா அமைச்சரின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுக்களை அடுத்து, ஜோன் ஹோல்ம்ஸ் ‘தன்னிலை விளக்கப் பாணியில்’ தனது கருத்துக்கள் தொடர்பான விளக்கங்களைச் சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். ‘தான் சிறிலங்கா அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கூறவில்லை’ என்றும் ஜோன் ஹோல்ம்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயின் விமர்சனம் ‘பொருத்தமற்றது’ என்றும், ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன்
(BAN KI - MOON)  கண்டித்திருந்தார். ஆனால் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளேயோ, இந்தக் கண்டிப்புக் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. ‘ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் இவ்வாறு கூறுவது பற்றி எனக்கு அக்கறையெதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி. அவர் விடுதலைப் புலிகளிடம் இலஞ்சம் வாங்குபவர்’ - என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே மீண்டும் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.

வெளிப்படையாகவே தமிழினத்தை அழிக்கின்ற செயற்பாடுகளையும், மனித உரிமை மீறல்களையும், அதிகாரத் துஷ்ப்பிரயோகங்களையும் செய்து வருகின்ற சிறிலங்கா என்கின்ற சின்னஞ் சிறிய நாடு, எந்தத் துணிவில் மேற்குலகையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அவமதித்து எதிர்த்துப் பேசுகின்றது என்று பலரும் எண்ணக்கூடும்!

சிறிலங்கா அரசின் இந்த அவமதிப்பிற்கான தார்மீகப் பொறுப்பையும் மேற்குலகம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியைப் ‘பயங்கரவாதி’ என்று சிறிலங்கா அரசு சொல்கின்றது. இந்தப் ‘பயங்கரவாதம்’ என்கின்ற சொற்றொடரைப் பிழையாகக் கையாளத் தொடங்கியதே மேற்குலகம்தான்! தெளிவான, சரியான வரைவிலக்கணம் எதுவும் இன்றி, தங்கள் பாட்டில், தங்களது சொந்த நலன் கருதி மேற்குலகம் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தப் புறப்பட்டதன் பக்க விளைவுதான் இது! மேற்குலகின் இந்தப் ‘பயங்கரவாதப் பொதுமைப்படுத்தலை’, சிறிலங்கா இன்று தனக்கு சாதகமாகச் தனது அரச பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குச் சார்பாகப் பயன்படுத்துகின்றது.

சிறிலங்கா அரசு, தான் மேற்கொண்டு வருகின்ற தமிழின அழிப்பை, மனித உரிமை மீறல்களை, படுகொலைகள் போன்ற விடயங்களையெல்லாம் ‘புலிகள் பயங்கரவாதிகள்’ என்று சொல்லிக் கொண்டு இருப்பதன் மூலம் நியாயப்படுத்திக் கொண்டு தப்பிவிடலாம் என்று எண்ணுகின்றது. அந்த வகையில் இவ்வளவு காலமும் சிங்கள அரசு தப்பித்தான் வந்துள்ளது.

இதன் அடிப்படையில்தான், ஐக்கியநாடுகள் சபையின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்சுக்குக் சிறிலங்கா கொடுக்கின்ற காட்டமான அறிக்கையை நாம் பார்க்க வேண்டும். என்னதான் சிறிலங்கா பேசினாலும், பயங்கரவாதத்திற்கு (?) எதிராகப் போராடுகின்ற (சிறிலங்கா) அரசிற்கு எதிராக, மேற்குலகம் ஒன்றும் செய்யாது என்ற துணிவான ஒரு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு இன்று செயல்பட்டு வருகின்றது.

மேற்குலகம் தன் நலன் கருதி, ‘பயங்கரவாதம்’ என்ற சொற்றொடருக்குள் எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தியதால், அந்தப் பலவீனத்திற்கு ஊடாகச் சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய செயற்பாடுகளை நடத்திக் கொண்டு போகின்றது. அதில் சில வெற்றிகளையும் அது அடைந்திருக்கின்றது.

இத்தோடு இன்னுமொரு விடயத்தையும் நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

வெளிப்படையாகக் காரசாரமாக இவ்வாறு பேசினாலும், உள்ளூர (இராஜதந்திர) உறவு நிலைகள் சுமூகமாகப் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.

மேற்குலகம் தன்னுடைய தேவை கருதிச் சிறிலங்கா போன்ற நாடுகளிடம் போக வேண்டிய நிலை இருக்கின்றது. தனது போக்குவரத்திற்காக எரிபொருள் கொடுப்பதிலிருந்து திறந்த வெளிச் சந்தை அமைப்பது வரை சிறிலங்கா தனக்கு உதவியாக இருக்கும் வரைக்கும், சிறிலங்கா என்ன பேசினாலும், என்ன செய்தாலும் மேற்குலகத்திற்குக் கவலையில்லை.

இதுபோல் இஸ்ரேலும் அமெரிக்காவை அவ்வப்பொழுது தூக்கி எறிந்து பேசுவதுண்டு. சிறிலங்கா அரசிற்கும், அமெரிக்கா, சீனா என்று எல்லா இடமும் ஓடி ஓடித் தனது பிரச்சனைகளை இவ்வாறு சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. அத்தோடு ஜப்பான் தன்னை ஒருபோதும் கைவிடாது என்ற நம்பிக்கையும் சிறிலங்காவிற்கு உண்டு. இதனோடு பயங்கரவாதம் என்கின்ற பொதுமைப்படுத்தப்பட்ட சொற்றொடரையும் சிறிலங்கா அரசு இன்று நன்றாகப் பயன்படுத்தி வருகின்றது.

‘பயங்கரவாதம்’ என்ற சொற்றொடரை மட்டுமல்லாது, ‘பயங்கரவாத அமைப்பு’ என்று தீர்மானிக்கின்ற விடயங்களும் சர்ச்சைக்குரியவையாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பு என்று கணிப்பதுவும், அதனை தடைசெய்வதும் அநீதியான செயற்பாடுகளாகும். இவை மிகத் தவறான செயற்பாடுகள் மட்டுமல்லாது இன்று பிரச்சனைகள் தீராததற்கு இவை காரணமாக அமைகின்றன என்று மனித உரிமைகள் சட்டத்தரணியான கரன் பாக்கர் போன்றோரும் சுட்டிக் காட்டி வருகின்றார்கள்.

இன்றைக்கு உலக நாடுகள் சுட்டுகின்ற ‘பயங்கரவாதம்’ என்று சொல்லக்கூடிய பட்டியலுக்குள் - அரச பயங்கரவாதிகள் என்ற கருத்துக்குள் - சரியாக இன்று அடங்கக் கூடியது சிறிலங்காவேதான்! இந்தப் பட்டியலுக்குள் சரியாகப் பொருந்தக் கூடிய ஒரே ஒரு நாடும் சிறிலங்காதான்! பயங்கரவாதம் என்று பட்டியல் இடுகின்றபோது, பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதம் என்று வகைப்படுத்துகின்றபோது, அந்த வகைப்படுத்தலுக்குள்ளும் சரியாகப் பொருந்தக் கூடியதும் சிறிலங்காவேயாகும்.!

சிங்கள அரசு, ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக் காட்டியுள்ள மனித உரிமை மீறல்களுக்கும் அப்பால், தனது அரச பயங்கரவாதச் செயல்களை நடாத்தி வருகின்றது. தமிழ் மக்களை அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து துரத்தியடிக்கின்ற சிங்களச் சிறிலங்கா அரசு, இன்று தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் விரட்டியடிக்க ஆரம்பித்துள்ளது. மூதூர் அரபாத் நகரை உயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியதையடுத்து அங்கிருந்த முஸ்லிம் மக்கள் இராணுவத்தால் விரட்டியடிக்கப் பட்டுள்ளார்கள். இவர்கள் மீண்டும் அரபாத் நகருக்குள் குடியேற முடியாது என்று சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னால் நாம் ஒரு கருத்தை வலியுறுத்தியிருந்தோம். அந்தக் கருத்தை நாம் மீண்டும் இன்று தரவிழைகின்றோம்.

‘------------ சிங்கள தேசத்தின் அடிப்படைக் கருதுகோளின்படி தமிழர்களுக்குத் தாயகம் என்று எதுவும் இல்லை. தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழ் பேசும் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, மலையக வாழ் தமிழ் மக்களாக இருந்தாலும் சரி ஏதாவது ஒரு வழியில் அவர்கள் அழிக்கப்படவே வேண்டும்.

‘எம்முடைய பார்வையின்படி, சிங்களத்தின் இந்தக் கருதுகோள் எதிர்காலத்தில் சிங்கள முஸ்லிம்களையும், சிங்கள கிறிஸ்தவர்களையும் அழிக்க முனையும் என்பதில் சந்தேகமில்லை.’

இவ்வாறு நாம் இரண்டு மாதங்களுக்கு முன்னால் கருத்து வெளியிட்டிருந்தோம். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் தற்போதைய வெளியேற்றம் சிங்களத்தின் கருதுகோள் குறித்த எமது கணிப்புச் சரியானது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

அன்றைய தினம் இன்னுமொரு கருத்தையும் நாம் தர்க்கித்திருந்தோம். அது வருமாறு:

‘சிங்கள மக்களை, அரசியல் ரீதியாக வழி நடத்துகின்ற தலைவர்களும், அவர்களை மதரீதியாக வழி நடத்துகின்ற பௌத்த பிக்குகளும் உண்மையில் ஹிட்லரின் வடிவங்களே!. ஆகவே அங்கே ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று கனவு காண்பதும், முயற்சிப்பதும் முட்டாள்தனமானது. இதனால்தான் தமிழீழத் தேசியப் பிரச்சனைக்கு, ‘இடைநிலைத்தீர்வு எதுவும் இல்லை’ என்பதையும் நாம் வலியுறுத்தியே வந்திருக்கின்றோம். இதனைத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மிக நீண்ட காலமாகச் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்கள். இந்தக் கருத்தை மேற்குலகம் ஏற்காமல் ‘இல்லை - இல்லை’ பேசித் தீர்க்கலாம் என்று சொல்லிக் கொண்டு வருகின்றது. ஆனால் இன்று சிறிலங்கா மேற்குலகத்திடமே கேட்கின்றது. ‘நீங்கள் யார் எங்களைக் கேட்பதற்கு?- நாங்கள் இப்படித்தான் செய்வோம்’ என்று!

முன்பு தமிழர்களுக்குச் சிங்களம் சொல்லியதை, இன்று அது (சிங்களம் ) உலகிற்கும் சொல்கின்றது.

சிங்களத்திற்குப் புத்தி புகட்டப்படும்போது அது மேற்குலகத்தின் அறிவுக் கண்ணையும் திறக்கக்கூடும். அதைத்தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.’

இவ்வாறு நாம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தர்க்கித்த இந்தக் கருத்தையும் நிரூபிக்கின்ற செயல், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி ஜோன் ஹொல்ம்ஸ் ஊடாக இன்று வெளிப்பட்டு நிற்கிறது.

சிங்கள அரச பயங்கரவாதத்தின் உச்சத்தை, அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற தமிழ் மக்கள் இன்று எதிர் கொண்டு வருகின்றார்கள். சிறிலங்கா அரச படைகளினதும், அதனோடு சேர்ந்து இயங்குகின்ற தமிழ் ஒட்டுக் குழுக்களினதும் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக, தமிழ் மக்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தாங்கள் வெளியே வாழ்வதற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறிச் சிறைக்குள் போய் இருக்கின்றார்கள். உலகில் எந்த நாட்டிலுமே இவ்வாறு நடந்ததில்லை. ஆனால் இலங்கையில் சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புப் பகுதியான யாழ்ப்பாணத்தில் இவ்வாறு நடக்கின்றது. சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்றுதான் எல்லோருமே விரும்புவார்கள். ஆனால் சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் காரணமாக, சிறைக்குள்ளேயே போய்ச் சீவிப்பதைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

இந்த விடயம் மிகப் பெரிய பிரச்சனைகளின் ஒரு சிறிய வெளிப்பாடுதான்!

தமிழ் மக்களைப் பயங்கரவாதத்தில் (?) இருந்து விடுவிப்பதாக உலகிற்குத் தொடர்ந்து சொல்லி வருகின்ற சிங்கள அரசு, இன்று இவ்வாறு தமிழ் மக்களை உண்மையான பயங்கரவாதத்திற்குள் அழுத்தி வைத்துள்ளது.

மேற்குலகம் இவ்வளவற்றையும் கண்டும் காணாததுபோல் இருப்பதனால், சிறிலங்கா அரசு மேலும் உற்சாகம் கொண்டு தனது அரச பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்திராத அழுத்தம் இப்போது வேறு திசையிலிருந்து வர ஆரம்பித்திருக்கின்றது. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்றவை சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும், அரச பயங்கரவாதத்தையும் தோலுரித்துக் காட்ட ஆரம்பித்துள்ளன. இந்த அமைப்புக்கள் தெரிவிக்கின்ற கண்டனங்கள் மேற்குலகத்திற்குச் சங்கடத்தையும், அழுத்தங்களையும் கொடுக்க ஆரம்பித்திருப்பதை இப்போது நாம் காணக்கூடியதாக உள்ளது.

அண்மையில் வெளிவந்த இன்னுமொரு அறிக்கை சிறிலங்கா அரசை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
SOUTH ASIANS FOR HUMAN RIGHTS (SHAR) என்ற இந்த மனித உரிமை அமைப்பின் தலைவர் இந்தியாவின் பன்னிரண்டாவது பிரதம மந்திரியான (I.J.GUJRAL)குஜ்ரால் ஆவார். குஜ்ரால் வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், தமிழ்மக்களின் இடப்பெயர்வுகள், ஆட்கடத்தல்கள், கருணா குழு போன்ற தமிழ் ஒட்டுக் குழுக்களின் வன்முறைச் செயல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை குறித்து சிறிலங்காவின் அமைச்சர்கள் என்ன சொல்லப் போகின்றார்களோ தெரியவில்லை! இந்தியாவின் முன்னாள் பிரதமரான குஜ்ராலும் ஒரு பயங்கரவாதிதான் என்று சிறிலங்கா சொல்லுமா? இந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் விடுதலைப் புலிகளிடம் இலஞ்சம் பெற்றுள்ளார் என்றும் சிறிலங்கா சொல்லுமா? அவ்வாறு சிறிலங்கா சொன்னாலும் சொல்லக்கூடும். அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ள கருத்தின்படி, சிறிலங்கா அரசின் அரச பயங்கரவாதச் செயல்கள் குறித்து, மேற்குலகம் நன்கே அறியும். ஜோன் ஹோல்ம்ஸ் உட்பட எல்லா உலகப் பிரமுகர்களுக்கும் சிறிலங்கா குறித்த உண்மை நிலை தெரியும். இன்று இவ்வளவு படுமோசமான நிலைiயில்தான் இலங்கை உள்ளது என்பது உலகறிந்த எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயங்கள்தான்!

இலங்கைப் பிரச்சனையை முற்றாகத் தீர்க்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனையை, மூலப்பிரச்சனையை தீர்க்க வேண்டும். இதனை மேற்குலகம் செய்யாமல், அதாவது அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்காமல், சிங்கள அரசுகளுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, அதற்குப் பிற்பக்கமாக உதவிகளைச் செய்துகொண்டு பயங்கரவாதம் - அழுத்தம் என்று பேசிக்கொண்டு வருகின்றது. இதனால் எந்தப் பிரயோசனமும் வரப்போவது இல்லை. இவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் பேசிக்கொண்டுதான் இருக்கப் போகின்றார்கள்.

இந்தப் பயங்கரவாதம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்திச் செயற்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டே போகலாம் என்று சிங்கள தேசம் நம்புகின்றது. இதுவரையில் இந்த நம்பிக்கையில் சிங்களதேசம் வெற்றியும் பெற்று வந்திருக்கின்றது. இப்படியான நிலை தொடருமா என்பதுதான் கேள்வி!

இப்படியான நிலை தொடராது என்பதுதான் எமது பார்வையாக உள்ளது.

கள நிலையில் மாற்றம் வருகின்றவரை மேற்குலகம் இவ்வாறு சும்மா பேசிக்கொண்டுதான் இருக்கப் போகின்றது. கள நிலையில் மாற்றம் வருகின்றபோது, அத்தோடு நாம் முன்னர் தர்க்கித்திருந்த எதிர்பாராத அழுத்தங்களும் சேருகின்ற போது, உலகப் போக்கில் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்திற்கு உதவுகின்ற வகையில் புலம் பெயர்ந்த எமது மக்கள், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் உட்பட்ட அரச பயங்கரவாதச் செயல்கள் குறித்த பாரிய பரப்புரையைத் தொடர்ந்தும் செய்து வரவேண்டும்!

 

Mail Usup- truth is a pathless land -Home