Home > Tamil National Forum > Selected Writings - Sanmugam Sabesan > சுயநிர்ணய உரிமையும், தமிழீழத் தனியரசும் Selected Writings by Sanmugam Sabesan சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா சுயநிர்ணய உரிமையும், தமிழீழத் தனியரசும் 9 August 2007
தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகள், கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் யாவுமே இன்று பயனற்றுப் போயுள்ளன. முன்னைய சிங்கள அரசுகள் போன்றே மகிந்த ராஜபக்சவின் தற்போதைய அரசும், தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் போக்குவரத்துத்தடை, பொருளாதாரத்தடை, உணவு, மருந்துத்தடை, மீன்பிடித்தடை, கொலை, ஆட்கடத்தல் என்று தமிழின அழிப்பைச் சிங்கள அரசு தொடர்ந்து நடாத்தி வருகின்றது.
இத்தகைய நிலையில், தமிழீழத் தனியரசு ஒன்றுதான் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்க கூடியது என்கின்ற யதார்த்தம் நிரூபணமாகி வருகின்றது. மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்தபோது, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், 2005ம் ஆண்டு, தன்னுடைய மாவீரர் தினப் பேருரையின்போது ‘தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளைத் திருப்தி செய்யும் வகையில் ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைக் குறுகிய கால இடைவெளிக்குள் மகிந்தவின் அரசு முன் வைக்க வேண்டும்’ என்று அவசர வேண்டுகோளை முன் வைத்திருந்தார். ‘எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து கடும்போக்கைக் கடைப்பிடித்துக் காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமேயானால், நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்’ என்றும் தலைவர் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால் மகிந்த ராஜபக்சவின் சிங்கள பௌத்த பேரினவாதக் கடும்போக்கு நடவடிக்கைகள், சகல எதிர்பார்ப்புக்களையும் சிதறடித்தன. ஆகவே, தமிழீழத் தேசியத் தலைவர் கடந்த ஆண்டு (2006) தன்னுடைய மாவீரர் தினப் பேருரையின் போது கீழ் வருமாறு தெரிவித்திருந்தார்.
‘சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்து வைத்திருக்கின்றது. எனவே, இந்த விடுதலைப் பாதையில் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கின்றோம். எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு, நீதியின் வழி நடக்கும் உலக நாடுகளையும், சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகின்றோம்’.
ஆகவே சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான போராட்டம் தீவிரப்படுத்தப்படுகின்ற இந்தக் கால கட்டத்தில், இந்தக் கோட்பாட்டின் ஊடாகக் கருத்துக்களை முன்வைத்துச் சில விடயங்களைத் தர்க்கிக்க விழைகின்றோம்.
சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்துத் தமிழீழத் தேசியத் தலைவர் நெடுங்காலமாகவே வலிறுத்தி வந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு (UNITED NATIONS STUDY), சுயநிர்ணய உரிமைக்கோட்பாடு குறித்தும் பிரிந்து செல்லும் உரிமைக்குத் தகுதியானவர்கள் குறித்தும், சில வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளது. அதன்படி ‘வரலாற்று ரீதியாக, தம்முடைய பாரம்பரிய மண்ணில், தமது தனித்துவமான பண்பாடோடு, தம்மை தாமே திறமையாக ஆண்டு வந்த மக்கள், மீண்டும் தம்மைத் தாமே ஆள்வதற்கு உரிமையைக் கொண்டவர்கள்’ என்ற கருத்துப்பட ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு, பல காரணிகளை முன் வைத்துள்ளது. சுயநிர்ணய உரிமை குறித்துக் குறிப்பிடுகின்ற உலக நீதிமன்றம் (International Court of Justice) ‘இது அரசுக்கு மட்டும் உள்ள உரிமை அல்ல, இது மக்களுக்கும் உள்ள உரிமையாகும்’ என்று தெரிவிக்கின்றது.
‘உலக நீதிமன்றமும்’, ‘Inter-American Commission on Human rights of the Organisation of the American States’’ உம், சுயநிர்ணய உரிமை குறித்துப் பொதுவாக பல கருத்து நிலைகளை அறிவித்துள்ளன. மக்களுடைய சுயநிர்ணயத்திற்கான உரிமையை சகலரும், சகல வேளைகளிலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இவை தெரிவித்துள்ளன. அத்தோடு மேலும் ஒரு முக்கியமான விடயத்தையும் இவை தெரிவித்துள்ளன. சுயநிர்ணய உரிமைக்குச் சட்ட ரீதியான அந்தஸ்து உள்ளது என்றும் இவற்றை ஏற்று மதிக்க வேண்டியது சர்வதேசத்திற்குரிய ஒரு கட்டாயக் கடமையுமாகும் என்றும் இவை தெரிவித்துள்ளன.
தமிழீழ மக்களுக்குப் பிரிந்து சென்று தனியரசை அமைக்கின்ற சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை மேற்கூறிய சட்டங்களும், கோட்பாடுகளும் தெரிவிக்கின்றன. இதனை ஒட்டி, வரலாற்று ரீதியான ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.
போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் இலங்கையைக் கைப்பற்றியபோது, அப்போது அங்கிருந்த அரச நிர்வாகத்தின்படியே அவர்கள் இலங்கையை ஆண்டார்கள். அவற்றினூடாக தமிழ்ப்பகுதி அரச நிர்வாகமும், சிங்களப்பகுதி நிர்வாகமும் தனித் தனியே செயற்பட்டன. ஆனால் பின்னாளில் இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானியா அரசு தனது வசதிக்காக இரண்டு தேசங்களையும் ஒன்றிணைத்து, ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது. ஆனால் அவ்வாறு ஒருங்கிணைப்பது குறித்துப் பெரும் குழப்ப நிலையிலேயே, அன்று பிரித்தானியா இருந்திருக்கின்றது. அவர்களின் இந்தக் குழப்ப நிலையை அவர்களது ஆவணம் ஒன்று குறிப்பிடுகின்றது.
பிரித்தானியா அரசின் இலங்கைக்கான காலனித்துவ ஆட்சியின், முதல் செயலாளர் (FIRST COLONIAL SECRETARY) சேர் ஹியூ கிளட்ஹோன் என்பவர் ஆவார். அவர் 1799ம் ஆண்டு, உத்தியோகபூர்வமான ஆவணக் குறிப்பொன்றை எழுதியுள்ளார். அந்த ஆவணக் குறிப்பில், அவர் ‘இந்தத் தீவில் இரண்டு வித்தியாசமான தேசங்கள் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. இந்த இரண்டு தேசங்களும் தங்களுடைய மொழி, மதம், பண்பாடு ஆகியவற்றால் முற்றாக வேறுபட்டுள்ளன. தமக்குள்ளே முரண்பட்டும் உள்ளன. இந்த இரண்டு தேசங்களையும் எவ்வாறு (இணைத்து, நிர்வகிப்பது) என்று எனக்குத் தெரியவில்லை - NEVER WORKED -’ என்று குறிப்பிடுகின்றார்.
ஆனாலும் பிரித்தானியா அரசு, இலங்கைத்தீவில் இருந்த இரண்டு தேசங்களையும் இணைத்தது. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை அன்றே பிரித்தானியா அரசு உணர்ந்து கொண்டிருந்தது. நாம் முன்னர் சுட்டிக்காட்டியது போல தமிழர்கள் முற்றாக வேறுபட்ட மொழி, பண்பாடு, நிலம் ஆகியவற்றைக் கொண்டவர்கள் என்பதை பிரித்தானியா அரசு ஆவணப்படுத்தியுமுள்ளது. ஆனால் பிரித்தானியா இலங்கைத் தீவை விட்டுச் சென்றபோது அதனைச் சரியான முறையில் விட்டுச் செல்லவில்லை. பிரித்தானியா அரசு இரண்டு தேசங்களையும் ஒன்றிணைத்தது முதல் தவறாகும்.! புpன்னர் அவற்றைப் பழையபடி பிரிக்காமல் சென்றது இரண்டாவது தவறாகும். இன்றைய பிரச்சனைக்கு இதுதான் மூலகாரணமாகவும் விளங்குகின்றது.
பிரித்தானியா தனது குடியேற்ற நாடுகளை விட்டு விலகிச் சென்றபோது பொதுவாகச் சரியான முறையிலேயே சுதந்திரத்தை வழங்கிச் சென்றது. ஆனால் இலங்கைத்தீவைப் பொறுத்தவரையில் பிரித்தானியா மாபெரும் தவறை இழைத்து விட்டது. இதற்கான தார்மீகப் பொறுப்பை பிரித்தானியா ஏற்றுக் கொண்டு தனது தவறை நிவர்த்திக்கும் முயற்சியில் முழுமையாக உடனே இறங்க வேண்டும். இன்று பிரித்தானியா இலங்கைத் தீவில் சமாதானம் வரவேண்டும் என்று சும்மா பேசிக் கொண்டு நிற்கின்றது. ஆனால் பிரித்தானியா தன்னுடைய நாடு என்று வரும்போது சில சரியான செயற்பாடுகளைச் செய்திருக்கிறது. ஸ்கொட்லண்ட், வேல்ஸ் போன்றவை தமக்குரிய உரிமைகளைக் கேட்கும்போது, பிரித்தானிய அரசு உரிய விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, அதிகாரப் பரவலாக்கலைத் தொடர்ந்து செய்து கொண்டே வந்துள்ளது. இவர்களுக்கென்றே தனிப் பாராளுமன்றங்களை அமைத்து, கிட்டத்தட்ட ஒரு சுயாட்சி அமைப்பைப் பிரித்தானியா உருவாக்கி கொடுத்துள்ளது. சிறிலங்கா அரசைப்போல் ‘அதனைக் கேட்க முடியாது இதைக் பேச முடியாது’ என்று பிரித்தானியா ஸ்கொட்லண்டுக்கும், வேல்ஸ்க்கும் சொல்லவில்லை இதே பிரித்தானியா இலங்கை விடயம் குறித்து பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று சொல்கின்றபோது தன்னைப்போல் சிறிலங்கா அரசு பிரச்சனையைத் தீPர்க்க முன்வரவில்லை என்பதையும் அறிந்தே வைத்துள்ளது. தமிழர்கள் பிரிந்து போவதுதான் சரியான ஒரே ஒரு வழி என்பதுவும் பிரித்தானியாவுக்கு உள்@ர நன்கு தெரியும்.
பிரித்தானியா தேசம் ஐக்கிய ராச்சியம் (UNITED KINGDOM) என்றுதான் அழைக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசைப்போல் ஒற்றையாட்சி அரசு (UNITARY KINGDOM) என்று அழைக்கப்படவில்லை. இவை எல்லாவற்றையும் அறிந்தும், புரிந்தும் வைத்திருக்கின்ற பிரித்தானிய அரசு சிpறலங்கா அரசைத் தடை செய்வதற்குப் பதிலாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளைத் தடை செய்து வைத்திருக்கின்றது. சிங்களப் பௌத்தச் சிpறிலங்கா அரசானது 1948ம் ஆண்டிலிருந்துதான் தமிழர்களுக்கு அநீதியை இழைத்து வந்திருக்கின்றது. ஆனால் பிரித்தானிய அரசோ 1799ம் ஆண்டிலிருந்தே தமிழத் தேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் தொடர்ந்தும் அநீதியை இழைத்தே வருகின்றது.
ஆகவே சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்காகத் தமிழீழ மக்கள் நடாத்துகின்ற போராட்டத்திற்கு, வெளிப்படையாகத் தனது ஆதரவை பிரித்தானிய அரசு வழங்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்துவது பிரித்தானியாவின் உயர் ஐனநாயக விழுமியங்களுக்குத்தான் இழுக்கைக் கொண்டு வந்து சேர்க்கும்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர், உலகின் பல தேசங்கள் பிரிந்து போய்விட்டன. தனித் தேசக் கோட்பாடுகள் இல்லாத நாடுகள் கூடப் புதிதாக உருவாக்கப்பட்ட தனி நாடுகளாக மாறி விட்டன. அதாவது ‘நாடுகளே இல்லாத நாடுகள்’ உருவாக்கப்பட்டன. குவைத் உருவாக்கப்பட்டதையும் ஈராக் உருவாக்கப்பட்டதையும் உதாரணத்திற்குச் சுட்டிக்காட்டலாம்.
அதே வேளை, வரலாற்று ரீதியாக ஒருங்கிணைந்திருந்த தேசிய இனங்களும் தனி நாடுகளாகப் பிரிந்து போய் விட்டன. யூகோஸ்லாவாக்கியா என்றிருந்த ஒரு நாடு, பலவேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக ஓர் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இருந்தது. அந்த நாட்டின் மக்கள் பிரிந்து போவதை சர்வதேசம் அன்று ஏற்றுக் கொண்டது. சோவியத் ஒன்றியத்தின் உடைவை மேற்குலகம் வரவேற்றது.
ஆனால் இங்கே இலங்கைத் தீவில் வரலாற்று ரீதியாக ஏற்கனவே தனியாக அரசாற்றி இருந்த நாடு, வேறொரு நாட்டோடு, இன்னொரு நாட்டால் இணைக்கப்பட்டு, உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இங்கே நாம் மேற்கூறிய உதாரணங்களின்படி புதிதாக நாடுகள் உருவாக்கப்பட்டதையும் வரலாற்று ரீதியாக ஒருங்கிணைந்திருந்த தேசிய இனங்கள் பிரிந்து புதிதாக நாடுகளை உருவாக்கியதையம், சோவியத் ஒன்றியம் போன்ற வல்லரசின் உடைவின் ஊடாகப் புதிய நாடுகள் தோன்றியதையும் கண்டோம்.
ஆனால்….
ஆனால், ஏற்கனவே தனியாக இருந்து பலவந்தமாக ஒன்று சேர்க்கப்பட்ட தமிழர் தேசம் ஏன் மீண்டும் - தகுந்த காரணங்களுக்காக - தனியாகப் பிரிந்து செல்லக்ககூடாது என்பதுதான் எமது கேள்வி!
தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் சுயநிர்ணயக் கோட்பாட்டை, உலகநீதி மன்றத்தின் சுயநிர்ணய உரிமைக்கான வரைவிலக்கணத்தை, Inter-American commission on Human rights of the Organisation of the American States இன் சுயநிர்ண உரிமை குறித்த கருத்து நிலையை இன்று சிறிலங்கா அரசு மறுத்து, எதிர்த்து நிற்கின்றது.
இங்கே முரண்நிலை என்னவென்றால், ‘சுயநிர்ணய உரிமைக்குரிய தமிழ் மக்கள் நீதியான தீர்வுக்கு உரித்தானவர்கள் ’ என்பதை மேற்குலகம் ஏற்றுக் கொண்டாலும் சிங்கள அரசுக்கு ஆதரவான ‘செயற்பாட்டு’ நிலையைத்தான் அது (மேற்குலகம்) கடைப்பிடித்து வருகின்றது.
இதற்கு மேற்குலகம் கூறுகின்ற காரணம், சிறிலங்கா அரசின் பௌத்த-சிங்களப் பேரினவாதக் கருத்தை ஆதரிப்பதாகவே அமைகின்றது. இலங்கையிலே நாட்டைப் பிளவு படுத்தக்கூடாது, எல்லோரும் சமமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சிறிலங்காச் ‘சாத்தான் வேதம்’ ஓதுவதை மேற்குலகம் அனுசரித்துப் பேசி வருகின்றது.
ஆனால், இலங்கைத்தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமமாகவும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருப்பதற்கான முயற்சிகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டதா? அல்லது மேற்கொண்டு வர முயற்சிக்கின்றதா?
இல்லை என்பதே, இதற்குரிய உண்மையான பதிலாகும்!
சரியாகச் சொல்லப்போனால், சிறிலங்கா அரசு, நாட்டில் சமாதானத்தைக் குலைத்து, தமிழர்களை மூன்றாம் தரப்பிரஜைகளாக்கி, அவர்களை அவல வாழ்க்iகையில் தள்ளி, அழித்து வருகின்றது. இன்று சிpறிலங்கா அரசு இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து, இலட்சக்கணக்கான தமிழ் மக்களை அகதிகளாக்கி, அவர்களைச் சொந்த இடங்களில் இருந்து கலைத்து வருகின்றது. தமிழ் மக்களின் பாரம்பரிய மண்ணில், புத்த கோயில்களையும், புத்தச் சின்னங்களையும் நிர்மாணிக்கின்றது. தமிழ்ப் பெயருள்ள வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களைச் சூட்டி வருகின்றது. உயர் பாதுகாப் பு வலையம் என்று கூறிக்கொண்டு தமிழர்களை இடம்பெயரச் செய்கின்றது. இவ்வாறு நன்கு திட்டமிட்ட நடவடிக்கைளைச் சிங்கள அரசு செய்து வருகின்றது.
இது மட்டுமல்லாது, சிpறிலங்கா அரசு தன்னுடைய சட்டத்துறையின் ஊடாகவும், நீதித்துறையின் ஊடாகவும் தமிழ் மக்களுக்குப் பெரிய அநீதிகளையும் இழைத்து வருகின்றது. அன்று யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்த போதும், இன்று குடும்பிமலையை ஆக்கிரமித்தபோதும் சிங்கள அரசுகள் நடாத்திய வெற்றி விழாக்கள், தமிழர்களை விரோதிகள் என்றும், வேறு தேசத்தவர்கள் என்றும் சிங்கள அரசகள் கருதுவதைத்தான் நிரூபித்துள்ளன.
சிறிலங்கா அரசுகளின் இந்தச் செய்கைகள் யாவும், தமிழர்கள் ஒற்றுமையாக இணைந்து வாழும் பொருட்டு செய்யப்பட்டவையா? ஓற்றுமையாகச் சமமாக இணைந்து வாழ வேண்டும் என்றால் இப்படியெல்லாம் சிpறிலங்கா அரசுகள் செய்ய வேண்டியதில்லை. இன்று தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுப்படுத்துவது சிங்களத்தின் இந்தச் செய்கைதான்.!
சிறிலங்காவின் சட்டத்துறையும், நீதித்துறையும் தமிழர்களை ஒடுக்குவதற்காகவே செயல்படுகின்றன என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இங்கே சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். சிpறிலங்கா அரசினால் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மூதூர் கிழக்குப் பகுதியில் மீண்டும் மீளச் சென்று குடியேறுவதற்குப் பொது மக்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சிpறிலங்காவின் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்துவிட்டது. நிராகரித்தது மட்டுமல்லாது, இனிமேல் இது சம்பந்தமான மனுக்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இவ்வாறு இந்த மனுவை நிராகரித்ததற்கு ‘அழகான காரணம்’ ஒன்றையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘மீளக் குடியேற்றம் என்பது ஓர் உணர்வு பூர்வமான பிரச்சனை! உணர்வு பூர்வமான பிரச்சனைகளை நீதி மன்றத்துக்குக் கொண்டுவரக்கூடாது. இப்படியான உணர்வுபூர்வமான பிரச்சனைகளை இன்று எடுத்தால், எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் கிளம்பும். ஆகையால் இவைகளை நீதிமன்றம் எடுக்கக் கூடாது’ என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் தமிழர்களுக்கு ‘நீதி’ வழங்கியிருக்கின்றது.
இங்கே இன்னுமொரு முரண்நிலையையும் நாம் குறிப்பிட விரும்புகின்றோம். பொதுக்கட்டமைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது, ‘இது ஓர் உணர்வு பூர்வமான பிரச்சனை’ - என்று நீதிமன்றம் கூறவில்லை. மாறாக வழக்கை எடுத்துக்கொண்டு, தமிழர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. அதேபோல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றிய விடயம் நீதிமன்றத்துக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் ‘இது ஓர் உணர்வுபூர்வமான பிரச்சனை’ என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்யவில்லை. - மாறாக ஒப்பந்தத்தையே தள்ளுபடி செய்தது. இவ்வாறு சிறிலங்காவின் சகல செயற்பாடுகளும் தமிழர்களுக்கு எதிராகவே இருக்கின்றன.
சிpறிலங்காவில் சட்டத்துறையும், நீதித்துறையும் காவல்துறையும் அரசின் மற்றைய துறைகளும் ஜனநாயக விரோதப் போக்கினைக் கடைப்பிடித்துக் கொண்டு சீர்கெட்டுக் கிடக்கின்றன. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் காவல், சட்டம் ஒழுங்கு நீதி போன்றவை மிகத் திறமையாக நிர்வகிக்கப்படுகின்றன. விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் ஓர் அரசுக்குரிய கட்டுமானங்களை அவர்கள் ஏற்படுத்தி, நேர்த்தியாக நிர்வகித்து வருகின்றார்கள். 1987ம் ஆண்டின் கடைசிப் பகுதியில் இருந்து, ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகத் தமிழர்களின் பல பகுதிகளில் அவர்களுக்கு என்று ஓர் ஆட்சி அமைப்பு இயங்கி வருகின்றது. சிறிலங்கா அரசின் குடியரசுக்கு மாறுபட்டு, அதற்கு அப்பாற்பட்டு, தமிழர்களின் நிர்வாகம் நடைபெறுகின்றது என்பதுதான் இன்றைய களநிலை யதார்த்தமாகும்.
பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை நிறுவுவதென்று தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ள இந்தவேளையில், இந்த முடிவைச் சட்டபூர்வமாகவும், நீதி பூர்வமாகவும், கோட்பாடு ரீதியாகவும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு ஏற்றுக் கொண்டிருப்பதை நாம் சுட்டிக்காட்டித் தர்க்கித்திருந்தோம். இதனைச் சர்வதேசம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சம உரிமையுடனான சமாதானத் தீpர்வில் அக்கறை செலுத்துவதையும் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் நீதியான, நியாயமான தீர்வு ஒன்றினைப் பெறுவதற்கு எதிராகச் சிறிலங்கா அரச செயற்பட்டு வருவதையும், அது தொடர்ந்தும் தமிழினத்தை அழிப்பதிலேயே குறியாக இருந்து வருகின்றது என்பதையும் விளக்கியிருந்தோம்.
ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லை. தவிரவும் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் எந்த அரைகுறைத்தீர்வு காணப்பட்டாலும், அது தமிழர்களின் தேசிய இன இடையாளத்தை எதிர்காலத்தில் அழிப்பதிலேயே போய் முடியும். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வைக்கப்படுகின்ற சமாதானத்தீர்வுகள், தமிழர்களின் அடையாளத்தையும், இருப்பையும் அழிக்கவே உதவும். ஓப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் ஊடாக, எமக்கு வரலாறு சொல்கின்ற செய்தியும் இதுதான்.!
ஆகவே மேற் சொன்ன வரலாற்று அடிப்படையிலும், தமிழர்களுக்கு உரித்தான சுயநிர்ணயக் கோட்பாட்டு அடிப்படையிலும், போரினூடாகவோ அல்லது போராட்டத்தினூடாகவோ, சுதந்திரத் தமிழீழத் தனியரசு நிச்சயமாக நிறுவப்படும்.! |