Selected Writings by Sanmugam Sabesan சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா வர்த்தமானியூடாகவும் வன்முறைகள் 27 June 2007 " கடந்த 10-06-07 அன்று வெளியாகிய, சிறிலங்காவின் அரச வர்த்தமானியின் ஊடாக, மகிந்த ராஜபக்சவின் சிங்கள-பௌத்தப் பேரினவாதச் சிந்தனை, மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. ...தமிழ் மக்களின் பாரம்பரிய மண்ணைப் பறிப்பதற்காகச் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற பேரினவாதச் செயற்பாடுகளின் நீட்சிதான், இந்த வர்த்தமானி அறிவித்தலாகும்... சிங்களப் பேரினவாதத்திற்கு மிகுந்த ஆதரவாகவும், நீதிக்கும், நேர்மைக்கும் எதிராகவும் செயற்பட்ட மேற்குலக நாடுகளின் செய்கைகள் தமிழீழம் விரைவில் உதயமாக வேண்டும் என்பதைத்தான் ஒரு வகையில் வலியுறுத்தி வருகின்றன. கடற்கரையில் கிளிஞ்சல் கோபுரத்தைக் கட்டி மகிந்த ராஜபக்ச விளையாடிக் கொண்டிருக்கின்றார். எமக்கோ அலைகளின் ஓசை கேட்கத் தொடங்குகின்றது. [See also.. Sinhala Colonisation of Tamil Homeland in Indictment against Sri Lanka ""All wars are fought for land...The plan for settlement of people in Yan Oya and Malwathu Oya basins was worked out before the communal riots of 1983. Indeed the keenest minds in the Mahaveli, some of whom are holding top international positions were the architects of this plan. My role was that of an executor... " Sinhala Mahaveli Ministry Official, Herman Gunaratne in the Sri Lanka Sunday Times, 26 August 1990 Sinhala Colonisation in the Hereditary Tamil Regions of the Island of Sri Lanka - K.Satchithanandan; Government Policies Threaten Economic Future and Ancestral Homeland of Tamils- Professor Chelvadurai Manogaran at the South Asia Conference on Development, Social Justice & Peace, July 1996; Professor Chelvadurai Manogaran June 1997 Buddha’s Statues - Symbol of Sinhalese Hegemony, - A.Thangavelu, 31 May 2005 Sinhala Colonisation of East Tamil Eelam - Arujna, Oruppaper Editorial, 22 May 2007]
கடந்த 10-06-07 அன்று வெளியாகிய, சிறிலங்காவின் அரச வர்த்தமானியின் ஊடாக, மகிந்த ராஜபக்சவின் சிங்கள-பௌத்தப் பேரினவாதச் சிந்தனை, மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. சம்பூரை உள்ளடக்கிய மூதூர் கிழக்குப் பிரதேசங்களை, அதியுயர் பாதுகாப்பு வலையமாகப் பிரகடனப்படுத்தி உள்ள இந்த அரச வர்த்தமானி, அங்கே மக்கள் மீளக் குடியேற முடியாது என்றும் மீறி அப்பகுதிகளுக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரிய மண்ணைப் பறிப்பதற்காகச் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற பேரினவாதச் செயற்பாடுகளின் நீட்சிதான், இந்த வர்த்தமானி அறிவித்தலாகும். தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களை அபகரிப்பதற்காகப் பல்வேறு வழிகளைச் சிறிலங்கா அரசுகள் பயன்படுத்தி வந்திருக்கின்றன. நீர்ப்பாசனத்திட்டம் என்றும், காணி அபிவிருத்தித் திட்டம் என்றும், புனித நகரத் திட்டம் என்றும், சிறப்புப் பகுதி என்றும், உயர் பாதுகாப்பு வலையம் என்றும், இராணுவ நடவடிக்கை என்றும் பலவிதமான அராஜகச் செயற்பாடுகளைச் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன. இவற்றின் மூலம் தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த நிலத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டு, அப்பகுதிகளில், சிங்களக் குடியேற்றங்களைச் சிங்கள அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.
சிறிலங்கா அரசுகளின் மிக நீண்ட காலத் திட்டங்களாகிய இவை குறித்துச் சில தகவல்களைத் தருவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கைத் தீவு, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னரும்கூட, திருகோணமலையில் பிரித்தானிய அரசு, தனது படைத்தளங்களை வைத்திருந்தது. பிரித்தானியாவின் படைத்தளங்கள் இனிமேல் இலங்கையில் இருக்கக் கூடாது என்று 1956களில் சிங்கள அரசு நச்சரிக்கத் தொடங்கியதை அடுத்து திருகோணமலையில் இருந்த, பிரித்தானியாவின் படைத்தளங்கள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் திருகோணமலையில் வசித்த, மற்றும் வேலை செய்து வந்த தமிழர்களைச் சிங்கள அரசு, தனது அழுத்தங்கள் மூலம் விரட்டியடித்தது. பின்னர் திருகோணமலையில் சிங்களவர்களைச் சிங்கள அரசு குடியேற்ற ஆரம்பித்தது.
திருகோணமலையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களைப் பதவியாவில் குடியமர்த்தி, அங்கே அவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று சிங்கள அரசு அன்று அறிவித்தது. பதவியாய் என்றழைக்கப் படுகின்ற பிரதேசம், உண்மையில் பதவில் குளம் என்ற பாரம்பரியப் பெயரைக் கொண்ட தமிழ்ப்பகுதியாகும். அப்போதேயே பதவில் குளத்தில் சிங்களக் குடியேற்றத்தைச் சிங்கள அரசு ஆரம்பித்து விட்டது. தமிழ்ப்பகுதியான பதவில் குளத்தில் சிங்களக் குடியேற்றத்தை நடத்திக் கொண்டு, திருகோணமலைத் தமிழர்களை அங்கே கொண்டு போய்க் குடியமர்த்தும் செயற்பாட்டைச் சிங்கள அரசு முன்னெடுத்தது.
இங்கே ஒரு விடயத்தை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். பிரித்தானிய அரசு, தனது படைத்தளத்தைத் திருகோணமலையில் இருந்து அகற்றியபோது, அங்கிருந்த தமிழர்களுக்கு, அங்கேயே - அதாவது திருகோணமலையிலேயே - மறுவாழ்வு கொடுக்காமல் அவர்களை வேறு எங்கேயோ கொண்டுபோய், சிங்கள அரசு குடியமர்த்துகின்றது. சிங்கள அரசு தமிழர்களைக் குடியேற்றிய பதவில் குளம் என்கின்ற தமிழ்ப்பகுதியோ, அப்போது படிப்படியாகச் சிங்களப்பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றது.
இந்த விசித்திரமான செயற்பாட்டினூடாகப் பின்னர் நடந்தேறிய விடயங்கள், சிங்கள அரசின் தமிழினத் துவே~த்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.
1979ம் ஆண்டு அன்றைய காணி அமைச்சரான காமினி திசநாயக்கா, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமைந்த ட (எல்) வலையத்தைச் சிறப்புப் பகுதியாக அறிவிக்கின்றார். அந்தப் பகுதிதான் தமிழ் மக்களின் மணலாற்றுப் பகுதியாகும். கருநாட்டுக் கேணி, கொக்கிளாய், தென்னமரவடி போன்ற பல கிராமங்களை உள்ளடக்கிய மணலாற்றுப் பகுதியில் உள்ள சுமார் 43 தமிழ்க் கிராமங்களிலிருந்து 1984 ஆண்டு டிசம்பர் மாதம், 22ம் திகதியன்று, 13,500ற்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பங்கள் இரவோடு இரவாக இராணுவத்தால் விரட்டியடிக்கப்படுகின்றார்கள்.
தமிழ்ப்பகுதியான பதவில் குளத்தைச் சிங்களப் பகுதியாக உருமாற்றிக் கொண்டு, அதேவேளை திருகோணமலையிலிருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களை பதவில் குளத்தில் குடியேற்றிவிட்டு, பின்னர் ஒட்டுமொத்தமாக, அங்கேயுள்ள தமிழ்ப்பிரதேசங்களில் இருந்த தமிழ் மக்களை, இரவோடு இரவாகச் சிங்கள அரசு துரத்தியடிக்கின்றது.
சிங்களவர்களைப் பொறுத்தவரையில், தமிழ்க் குப்பைகளை ஒன்றாகச் சேர்த்துக் குவித்து வைத்துவிட்டுப் பின்னர் கொளுத்தி எரிக்கின்ற செயற்பாடுதான் அது. மணலாற்றுப் பகுதிகளில், தண்ணீரே வராமல், தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட சரித்திரம்தான் இது. இதுவும் சிpறிலங்கா அரசின் ஒரு வர்த்தமானி அறிவிப்பின் பின்னர்தான் நடைபெற்றது.
சிறப்புப் பகுதி என்ற திட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட கதை இது என்றால் புனித நகரப் பகுதி என்ற பெயரில் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்ட கதை வித்தியாசமானதாகும்..
இலங்கை சுதந்திரம் பெற்றிட்ட காலப்பகுதியில், அனுராதபுரத்தில் தமிழர்கள் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்து வந்தார்கள். இவர்களை அனுராதபுரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக, அன்றைய சிங்கள அரசு, வித்தியாசமான திட்டம் ஒன்றை 1956ம் ஆண்டு தீட்டியது. அனுராதபுரத்தில் புதிய நகரம் ஒன்றைச் சிங்கள அரசு கட்டியெழுப்பியது. தமிழர்கள் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்து வந்த அனுராதபுரம் நகரம் பழைய நகரம் என்றும் புதிதாகக் கட்டியெழுப்பப்பட்ட நகரம் புதிய நகரம் என்றும் அழைக்கப்படலாயிற்று.
தமிழர்கள் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்து வந்த பழைய அனுராதபுர நகரத்தைப் புனித நகரம் என்று சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியது. பழைய அனுராதபுரம் புனித நகரமாக மாறிய காரணத்தினால், அங்கே வாழ்ந்து வந்த நீசர்களான தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
இது இப்படியென்றால், தமிழர்களின் புனிதப்பிரதேசமான கதிர்காமத்தில் நடைபெற்ற கதை வேறுவிதமானது. தமிழ்க்கடவுள் என்றும் சைவக்கடவுள் என்றும் அறியப்பட்ட முருகப்பெருமானின் தொன்மையான கோவிலைச் சுற்றிப் பிரமாண்டமான புத்தவிகாரைகள் கதிர்காமத்தில் கட்டியெழுப்பப்பட்டன. குன்றின்மீதே குடியிருக்கும் குமரக் கடவுளைக் குறுகிச் சிறுக்கப் பண்ணிப் பௌத்தப் பேரினவாதம் புது அவதாரம் எடுத்தது.
தமிழர்களை விரட்டியடிப்பதற்கான உத்திகளில் புத்தவிகாரை நிர்மாணங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன. தமிழர்கள் வாழ்கின்ற இடங்களில் புத்த கோயில்களைக் கட்டி, அதனூடாக நிலங்களைக் கையகப்படுத்தி, சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு, தமிழர்களை விரட்டியடிப்பதைச் சிங்கள அரசுகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன. இந்தச் செயற்பாடுகளைச் சிங்கள அரசுகள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செய்து வருகின்றன. இன்று சிங்களப் பிரதேசங்களாக மாற்றப்பட்டுவிட்ட சேருவாவில, திரியாய, தீகவாப்பிய, கொம்பனாக்கி ஆகிய ஊர்களை உதாரணத்திற்குச் சுட்டிக் காட்டலாம்.
1949களில் மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்பட்டதும், தொடர்ந்து இனக்கலவரம் என்ற பெயரில் தமிழின அழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முழக்கத்தின் கீழ் தமிழினச் சுத்திகரிப்பு நடைபெற்று வருவதும் சிங்கள பௌத்தப் பேரினவாதச் சிந்தனைகளின் செயற்பாடுகள்தான்..
ஹிட்லரின் நாசிப் பேரினவாதச் சிந்தனைக்கு இணையான சிந்தனையைக் கொண்டுள்ள, சிறிலங்காவின் தற்போதைய அதிபரான மகிந்த ராஜபக்ச, தான் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே, தன்னுடைய சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்து வருகின்றார். தமிழர்களை எல்லா இடங்களில் இருந்தும் எவ்வாறு கலைப்பது, நாடுகடத்துவது, அழிப்பது என்று அவர் திட்டமிட்ட வண்ணமே இருக்கின்றார். தன்னுடைய இந்தத் திட்டத்தின் கீழ்த்தான் அவர் இப்போது செயல்பட்டுக் கொண்டே வருகின்றார்.
மகிந்த ராஜபக்ச, அதிபர் பதவிக்கு வந்தவுடனேயே, தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் பொருளாதாரத் தடைகள் பொதுவாக கொண்டு வரப்பட்டு விட்டன. மாவிலாறுப் பிரதேசமும், சிறிலங்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியது.
இதன் அடிப்படையில், நாம் மாவிலாறு அணைப் பிரச்சனை குறித்துச் சில விடயங்களைக் குறிப்பிட விழைகின்றோம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி, திருகோணமலை மாவட்டத்தில் ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தை முன்வைத்தது. இதன்மூலம் ஈச்சலம்பற்று, மூதூர், தோப்பூர், சீலன்வெளி போன்ற பிரதேசங்களுக்கு, நீர் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருந்தன. ஆனால் ஈச்சலம்பற்றுப் பிரதேசமானது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இருந்த காரணத்தினால், சிறிலங்கா அரசு இந்த நீர்ப்பாசனத் திட்டத்தை எதிர்த்தது. ஈச்சலம்பற்றுப் பிரதேசத்தைத் தவிர்த்துத் மற்றைய பகுதிகளுக்கு - அதாவது சிங்களக் குடியேற்றப் பகுதிகளுக்கு மட்டும் - இந்த நீர்ப்பாசனத் திட்டத்தை அமலாக்குவதற்குச் சிறிலங்கா அரசு முயன்றது. இதனைத் தமிழர்கள் கடுமையாக எதிர்த்தபோது, தமிழர்கள் பகுதிகளிலும் நீர் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி அன்று உறுதியளித்திருந்தது.
இந்த வேளையில்தான், கடந்த ஆண்டு, திருகோணமலையில் வேறு ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தைச் சிpறிலங்கா அரசு ஆரம்பித்தது. இந்தப் புதிய திட்டத்தின் பிரகாரம், ஈச்சலம்பற்றிலிருந்து சுமார் ஆறு கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்ற மாவிலாறுப்பகுதி நீரைச் சிங்கள கிராமங்களுக்கு மட்டும் விநியோகிப்பதற்காக சிங்கள அரசு திட்டம் தீட்டியது. இந்த மாவிலாறு நீரைக் கொணடு செல்லக்கூடிய கால்வாயைக் கந்தளாயில் வைத்து இரண்டாகப் பிரித்து, ஒருபுறம் சேருவிலப் பகுதிக்கும் மறுபுறம் சோமபுர, தெகிவத்தப் பகுதிகளுக்கும் நீரை விநியோகம் செய்வதற்குச் சிறிலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் கந்தளாய், கல்லாறில் இருக்கும் இராணுவ முகாம்தான் இந்த நீர் விநியோகத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என்பதாகும்..
ஏற்கனவே உணவுத்தடை, பொருளாதாரத்தடை என்று பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்த தமிழ் மக்கள் அவற்றோடு நீர்ப்பிரச்சனையும் சேர்ந்து கொண்டபோது தங்களுடைய எதிர்ப்புக்களை அன்று காட்டத் தொடங்கினார்கள். அதுவரை அங்கேயிருந்த பெரிய பிரச்சனைகளை அரசோ, வெளிநாடுகளோ பெரிதுபடுத்தவில்லை. ஆனால் தமிழ் மக்களின் எதிர்ப்பைத்தான் சிங்கள அரசு பெரிய பிரச்சனை என்று சொல்லி வன்முறையில் இறங்கியது. குறைந்த தொகையினரான சிங்கள மக்களுக்குத் தண்ண்Pர்ப் பிரச்சனை வந்துவிட்டது என்று கதை சொல்லிக் கொண்டு இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கிழக்கு மாகாணத்திலிருந்து சிங்கள அரசு கலைக்க ஆரம்பித்தது.
அன்று தம்மால் அடித்துக் கலைக்கக்பட்ட தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்துவோம் என்று சிpறிலங்கா அரசு தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் இன்று, அரச வர்த்தமானிய+டாக சம்பூரை உள்ளடக்கிய, மூதூர் கிழக்குப் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலையமாகப் பிரகடனப்படுத்தியுள்ள சிங்கள அரசு, அங்கே மக்கள் மீளக் குடியேற முடியாது என்றும் அறிவித்துள்ளது.
தங்களுடைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் அப்பால், சிpறிலங்கா அரசுகள் எப்படி எப்படியெல்லாம் திட்டங்களைத் தீட்டி தமிழர்களுடைய தாயகப் பிரதேசங்களை அபகரித்து வருகின்றன என்ற விடயத்தை இயன்ற வரை சுருக்கமாகச் சுட்டிக்காட்டி தர்க்கித்தோம். மகிந்த ராஜபக்ச அரசின் சிங்கள-பௌத்தப் பேரினவாதச் செயல்கள் விசுவரூபம் எடுத்துப் பூதாகரமாக வளர்ந்து வருகின்றதையும் நாம் அவதானிக்கின்றோம். உதயன் - சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியர் வித்தியாதரன் அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் என்பதானது, உண்மை நிலையை வெளிக்கொண்டு வருகின்ற ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் என்றுதான் நாம் கருதுகின்றோம். மிக ஆபத்தான களத்தில் இருந்து கொண்டு திரு வித்தியாதரன் மிகத் துணிச்சலான, தெளிவான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். ஒரு போராளியின் துப்பாக்கி சரிகின்றபோது, அதனை மீண்டும் தூக்குவதற்கு ஒரு புதிய போராளி வருவதைப்போல், உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற எங்களுடைய தமிழ் ஊடகவியலாளர்களின் பேனாக்கள் சரிகின்றபோது அடுத்தவர்கள் வந்து கொண்டிருப்பார்கள் என்று திரு வித்தியாதரன் தெரிவித்திருப்பதானது நேர்மையான, கடமையுணர்ச்சி மிக்க ஊடகவியலாளர்களின் உளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
இன்று தமிழர் தாயகப் பகுதிகளை அபகரிக்கின்ற சிங்கள நாசிப் பேரினவாதம், தம்மை அம்பலப்படுத்துகின்ற தமிழ் ஊடகவியலாளர்களை நெருக்குவாரப் படுத்தி வருகின்றது. வர்த்தமானி அறிக்கைள் ஊடாகத் தமிழ் மக்களின் மீது வன்முறையைப் பிரயோகிக்கின்ற மகிந்தவின் அரசு, அவற்றை வெளிப்படுத்துகின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறையை மேற்கொள்கின்றது. தமிழருக்கான தாயகம் வலிமையோடு விடுதலை பெறுகின்ற போதுதான், தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியும்.
சிங்களப் பேரினவாதத்திற்கு மிகுந்த ஆதரவாகவும், நீதிக்கும், நேர்மைக்கும் எதிராகவும் செயற்பட்ட மேற்குலக நாடுகளின் செய்கைகள் தமிழீழம் விரைவில் உதயமாக வேண்டும் என்பதைத்தான் ஒரு வகையில் வலியுறுத்தி வருகின்றன.
கடற்கரையில் கிளிஞ்சல் கோபுரத்தைக் கட்டி மகிந்த ராஜபக்ச விளையாடிக் கொண்டிருக்கின்றார். எமக்கோ அலைகளின் ஓசை கேட்கத் தொடங்குகின்றது.
|