புதிய ஆண்டான 2007, தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான நகர்வுகளைக் கொண்டுள்ள ஆண்டாக அமையக்கூடும் என்றே எதிர்பார்க்கப் படுகின்றது. சிpறிலங்காவின் புதிய அரச அதிபராக, மகிந்த ராஜபக்ச பதவியேற்றுக் கொண்ட, கடந்த பதினான்கு மாதக் காலத்திற்குள், அவர் சமாதானத்திற்கு எதிரான சகல முயற்சிகளை மேற்கொண்டதோடு மட்டுமல்லாது, வெளிப்படையாகவே, தமிழர் தாயகம்மீது போரை ஆரம்பித்தும் உள்ளார். தமிழீழ மக்கள் மீது ராணுவ ரீதியான யுத்தத்தை மட்டுமல்லாது, உளவியல் ரீதியான யுத்தத்தையும், அதிபர் மகிந்த மேற்கொண்டு வருகின்றார். உலகின் மற்றைய அடக்குமுறையாளர்கள் போன்று, மகிந்தவும் உணவை ஓர் ஆயுதமாக உபயோகித்து வருவதையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
தமிழ் மக்களின் பாரம்பரிய பூமியை நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினூடாகவும், அதிகாரப்பிரிவுகள் ஊடாகவும், இராணுவ நடவடிக்கைகள் ஊடாகவும் கூறு போடுகின்ற முயற்சிகளை அதிபர் ராஜபக்ச ஆரம்பித்துள்ளதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘சமாதானக் காலத்திற்கான,’ பலன் எதனையும் அனுபவிக்காத தமிழ் மக்கள் இன்று கொடூரமான யுத்தம் ஒன்றிற்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள்.
“கடந்த ஐந்து ஆண்டு காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்து விட்டதா? அல்லது தமிழீழ விடுதலைப்போராட்டம் திசைதிருப்பப்பட்டு விட்டதா? கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வலுவிழந்து போய்விட்டதா?’ என்பது போன்ற கேள்விகள் எம்மவர் மத்தியில் எழுந்து வருவதை நாம் இன்று உணரக்கூடியதாக உள்ளது.
இந்தக் கேள்விகளின் முக்கியத்துவத்தை நேர்கொண்டு, அவற்றிற்குரிய, பதில்களைத் தர்க்க ரீதியாக முன்வைப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!
இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னரான 58 ஆண்டு காலம், ஓர் உண்மையை கசப்பான உண்மையை-தெளிவாக உணர வைத்துள்ளது. ‘சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகள், தமிழ் மக்களுக்குரிய நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான தீர்வை, சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாக ஒருபோதும் தரப்போவதில்லை’ என்பதுதான் அந்தக் கசப்பான உண்மையாகும்.!
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் 1950களில் ஆரம்பக் காலங்களில் பலமற்று இருந்தபோதும் சரி, பின்னாளில் பாரிய வளர்ச்சி பெற்று பலமாக விளங்குகின்ற போதும் சரி, இந்தக் கசப்பான உண்மை மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டே வந்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், இந்தக் கருத்தைத் தன்னுடைய மாவீரர் தின உரைகளின் போது, தொடர்ந்தும் வலியுறுத்திச் சொல்லியே வந்துள்ளார். உலக விடுதலைப் போராட்டங்கள் பல, பல்வேறு நகர்வுகளில், பல்வேறு பாதைகளில் நகர்ந்து சென்று, தமது இறுதி இலக்கை அடைந்துள்ளன என்பதை உலக வரலாறு எடுத்துக்காட்டும். விடுதலைப் போராட்ட வரலாறுகளில் போர் என்பது ஒரு பாதையாகவும், பின்னர் பேச்சுக்கள் என்பது ஒரு பாதையாகவும், மறுபடி போர் என்பது ஒரு பாதையாகவும் மாறிமாறிப் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. இங்கே முக்கிய விடயம் என்னவென்றால், பல பாதைகளை உபயோகிக்க நேரிட்டாலும், அவை இலக்கை, இலட்சியத்தைத் தவறவிடாத பாதையாக இருக்க வேண்டும் என்பதேயாகும்!
இதனைத்தான் தமிழீழத் தேசியத் தலைவர் ‘போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை - என்று தெட்டத்தெளிவாக தெரிவித்து வந்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை என்றும், அதில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என்றும் வலியுறுத்தி வந்த சிpறிலங்கா அரசுகளின் விருப்பத்திற்கு மாறாக, தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்ட காலம் வந்தது. இந்தப் புதிய பாதையில் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களைச் சீர்தூக்கி, போராட்டத்தின் இலக்கை நோக்கிய, சரியான திசையில் பயணிக்கப்பட வேண்டிய திட்டத்தைத் தமிழீழத் தேசியத் தலைமை வகுத்தது.
தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனமும், அவருடைய வழிநடத்தலும் இவற்றை எவ்வாறு கையாண்டன என்பதை நாம் இவ்வேளையில் சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமானதாகும்!
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் பலமுற்றுப் பல வெற்றிகளைக் கண்ட பின்னர்தான், மேற்குலகம் இங்கு தலையிட்டது என்பதையும் நாம் அறிவோம். அதற்கு முன்னர், தமிழர் பிரச்சனைகள் குறித்து மேற்குலகம் பாராமுகமாகவே இருந்து வந்துள்ளதோடு, இது குறித்து அதிக பட்சமாக, அலட்டிக் கொள்ளாத வகையில், அறிக்கைகளை மட்டுமே (மிகச்சில வேளைகளில்) வெளியிட்டு வந்தது. இப்படிப்பட்ட பின்புலத்தோடு, நோர்வே உட்பட பல மேற்குலக நாடுகள் இலங்கைப் பிரச்சனையில் ஈடுபட்டபோது, சமாதானப் பேச்சுவார்த்தைகள் உடாக, சில அபாயங்களைத் தமிழீPழ விடுதலைப் போராட்டம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் முக்கியமான சிலவற்றை பின்வருமாறு குறிப்பிடலாம்.
• ஏற்கனவே சிறிலங்கா அரசுகளின் பேரினவாதச் செயற்பாடுகளுக்கு இணக்கமாக இருந்த இந்த மேற்குலகம், பேச்சு வார்த்தைகளை ஒரு கருவியாகச் பயன்படுத்தி போராட்டத்தின் பாதையையும், இலக்கையும் திசை திருப்ப முனையலாம்.
• தமிழர் பிரச்சனைகளை, அவர்களது வேட்கைகளைத் தீர்க்காத தீர்வுத் திட்டம் ஒன்றை, இப்பேச்சு வார்த்தைகள் ஊடாக மேற்குலகம் திணிக்க முற்படலாம். (முன்னுதாரணமாக முன்னைய இந்திய இலங்கை ஒப்பந்தம்)
• தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுத்திய பின்னர், பாரிய அழுத்தங்களையும், தடைகளையும் விதிப்பதன் மூலம், இயக்கத்திற்கு அரசியல் கடிவாளம் இட்டு விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வது, அல்லது ஒரு கட்டத்திற்கு அப்பால் இயக்கம் நகர்ந்து செல்லமுடியாத நிலையை உருவாக்க முனைவது.
• புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கக்கூடிய உண்மையான ஜனநாயக மரபுகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களை, சிறிலங்காவின் உண்மையான ஜனநாயக மரபுகளை(?) பேச்சுவார்த்தைகள் மூலம் ஏமாற்றி நம்ப வைக்க முனைவது.
• அதி குறைந்த பட்சமாக, விடுதலைப்புலிகளின். விடுதலைப் போராட்டத்திற்கான இலட்சியத்தைக் கிளைப்பாதைகளில் ஊடே திசை திருப்ப வைப்பது (முன்னுதாரணம் - டக்ளஸ் தேவானந்தாவின் மாறுதல் - அது தெரிந்தே மாறிய விடயமும் கூட!)
இப்போதைக்கு தர்க்கிக்க கூடிய சில விடயங்களாக இவற்றைக் கூறலாம்.
மேற்குலகத்தின் தலையீடு எந்தவிதமாக இருந்தாலும், சிங்கள அரசு, தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு எதையுமே தரமாட்டாது என்ற பட்டறிவோடு தமிழீழத் தேசியத் தலைமை மேற்கூறிய பிரச்சனைகளை எவ்வாறு சாதுரியமாக கையாண்டது என்பதானது ஒரு முக்கியமான விடயமாகும்!.
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தபோதும், பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தீர்வு என்பது கிட்டாது என்பது தெரிந்த போதும், சர்வதேசமயப் படுத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை, அந்தக்கட்டத்தின் ஊடே, எவ்வாறு நகர்த்திச் செல்வது என்பது குறித்தும், அதேவேளை இலக்கை மாற்றாமல், உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், இலக்கை நோக்கிய பயணத்தைச் சரியாக கொண்டு செல்ல வேண்டியது குறித்தும், தமிழீழத் தேசியத் தலைவர் மிக்தெளிவாக திட்டமிட்டு மிகச் சரியாக நெறிபடுத்திச் சென்றார்.
இந்த நிழல் யுத்தத்தை தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனச் செயற்பாடு எதிர் கொண்டது. ஒன்றுமே கிடைக்க முடியாது என்று இருந்ததையும், போராட்டத்தைத் திசை திருப்ப இருந்த திட்டங்களையும் தலைவர் முறியடித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கீழ்வரும் விடயங்கள் நிறைவேறின.
• சிறிலங்கா அரசு முன்வைத்த ஒற்றையாட்சிக் கோட்பாடு, உலகஅரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.
• இந்தக் காலகட்டத்தில், புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் பெருவாரியாகத் தமிழீழம் சென்று தொடர்புகள் ஏற்படுத்தி நிலைமைகளை நேரிற் கண்டுணர்ந்து, மிகப்பாரிய செயற் திட்டங்களை நிறைவேற்ற உதவினார்கள். உலகளாவிய வகையில் மிகச் சரியான பரப்புரைகள் மேற்கொள்ளபட்டது மட்டுமன்றி. வெளிநாடுகளின் உதவிகளை நம்பியிராமல் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்புகள் காரணமாக பல அவிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன.
• முன்னர் எதிர்பார்த்தது போலவே இயக்கம், அழுத்தங்களையும், தடைகளையும், எதிர்கொண்ட போதும், ஈற்றில் சிறிலங்காவின் சமாதான விரோதச் செயல்களும், மனித உரிமை மீறல்களும் தோலுரித்துக் காட்டப்பட்டன. இன்று முன்னுதாரணமாக ஜேர்மன் அரசு சிpறிலங்காவிற்கான தனது நிதியுதவிகளை நிறுத்திக் கொண்டது மட்டுமல்லாது, மற்றைய உலகநாடுகளையும் இவ்வாறு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
• கடந்த இருபது ஆண்டுகளில் நிகழாத மிகப்பெரிய மாற்றம் தமிழ் நாட்டில் நிகழ்ந்துள்ளது. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டதிற்கான முழு ஆதரவினை தமிழக அரசம், தமிழக அரசியல் தலைவர்களும், தமிழக மக்களும் வழங்கி வருகின்ற நிலைமை இப்போது ஏற்பட்டுளளது. இந்த வரவேற்கத்தக்க மாற்றம் மேற்குலக அரசியலிலும், விரைவில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அது குறித்து விரிவாக வேறொரு நேரத்தில் தர்க்கிக்க விழைகின்றோம்.
• தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்க முடியாத, அவர்களது வேட்கைகளைப் பூர்த்தி செய்ய முடியாத, எந்த விதமான அரைகுறைத் திட்டங்களும் தமிழ் மக்கள்மீது வலிந்து திணிக்கப்பட முடியாமல் போயிற்று. இவற்றை எதிர் கொள்ளும் வகையிலேயே, தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் நகர்வுகள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
• இப்படிப்பட்ட சமாதானக் காலங்களில் ஏற்படக்கூடிய முக்கிய அபாயங்களாக, விடுதலைப்போராட்டங்கள் நீர்த்துப் போவதையும், கிளைப்பாதைகள் ஊடாக திசை திரும்புவதையும், இறுதி இலக்கைவிட்டு வழி தவறுவதையும் கொள்ளலாம். ஆனால் தமிழீழத் தேசியத்தலைவரின் தீர்க்கமான நெறியாள்கை காரணமாக, இவ்வித ஆபத்துக்கள் யாவும் முழுமையாகத் தவிர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது இறுதி இலக்கை நோக்கி, சரியான பாதையில் பயணிக்கக் கூடியதாகவும் உள்ளது. சரியாக சொல்லப்போனால் மிகச் சரியான உத்திகளோடு, கடந்த ஐந்து ஆண்டுகாலப் பகுதியில், தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்த்தப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
• இவை எல்லாவற்றையும்விட இன்னுமொரு மிக முக்கியமான விடயத்தை இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னெரையும்விட மிகப் பலமாக இருக்கின்றார்கள் என்பதுதான் அந்த முக்கிய விடயமாகும். இதற்கு நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கருத்துக்களை மேற்கோள் காட்டத் தேவையில்லை. மாறாக சிpறிலங்காவின் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா, கடந்த ஐந்து ஆண்டுகாலப் பகுதிக்குள் விடுதலைப்புலிகள் தங்களுடைய இராணுவப் பலத்தை வெகுவாக அதிகரித்து விட்டார்கள் என்று கூறிக் கவலைப்பட்டிருந்தார். முன்பு புலிகள் 81 மி.மீ, 120 மி.மீ போன்ற ஆட்டிலெறிக்கனரக ஆயுதங்களின் எண்ணிக்கை இருபதாக இருந்ததாகவும், இப்போது புலிகளின் ஆட்டிலெறி ஆயுதங்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்து விட்டடிருப்பதாகவும், சரத் பொன்சேகா அமெரிக்காவிற்கு தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இம்முறைதான் முதல்முறையாக திருகோணமலைத் தளங்களை நோக்கி விடுதலைப்புலிகளின் ஆட்டிலெறிகள் உபயோகிக்கப்பட்டன என்பதுவும் எமது வாசகர்கள் அறிந்த விடயம் தானே1
இந்த வேளையில் ஒரு முக்க்pயமான கருத்தை முன்வைத்து தர்க்கிக்க விழைவதன் மூலம் போரியல் உத்தியையும், அரசியல் உத்தியையும் ஒப்பிட விழைகிறோம்.
ஆனையிறவுப் பெருந்தளத்தைக் கைப்பற்றுவதற்கான இராணுவ நடவடிக்கைகளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் 2000ம் ஆண்டில் ஆரம்பித்தபோது, அது குறித்து உலகளாவிய வகையில் போரியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டன. ‘ஆனையிறவுத்தளம் எவ்வாறு கைப்பற்றப்படப் போகிறது’ என்று ஒரு சாராரும், அதனை ஏன் கைப்பற்ற முடியாது என்று ஒரு சாராரும் பல விரிவான போரியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்கள். இவர்களில் இராணுவத்துறை சார்ந்த வல்லுனர்களும் இருந்தார்கள்.
ஆனால் இவர்களுடைய ஆய்வுக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்ட விதத்தில்தான் ஆனையிறவுப் பெருந்தளத்தைக் கைப்பற்றும் போரியல் உத்திகளை தமிழீழ தேசியத் தலைவர் நெறிப்படுத்தினார். யாரும் எதிர்பாராத விதத்தில் தேசியத் தலைவர் குடாரப்பில் தரையிறக்கத்தை மேற்கொண்டார். ஆனையிறவுப் பெருந்தளத்தை தமிழர் படை கைப்பற்றியது.
குடாரப்புத் தரையிறக்கத்தின் போரியல் நுணக்கங்களையும், சிறப்புக்களையும் ஆராய்வது அல்ல இந்தக்கட்டுரையின் நோக்கம். இங்கே நாம் குறிப்பிட விரும்புவது வேறு ஒரு கருத்தாகும். போரியல் தறையில் மிக வல்லுனராக விளங்கக் கூடிய ஒருவருக்கு, குடாரப்புத் தரையிறக்கம் நடந்தவுடனேயே, ஆனையிறவுத் தளம் புலிகளால் வெற்றி கொள்ளப்படப் போகின்றது என்பது புரிந்திருக்கும். இது தமிழீழத் தேசியத் தலைவரின் போரியல் வல்லமையின் ஒரு பகுதியாகும்.
அதனைப் போலத்தான் கடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளயும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். குடாரப்புத் தரையிறக்கம் என்பதானது ஒரு மிகச்சிறந்த போரியல் உத்தி என்பதைப்போல் சமாதானப்பேச்சு வார்த்கைகளுடான நகர்வு என்பதானது ஒரு மிகச் சிறந்த அரசியல் உத்தியேயாகும். சிங்கள அரசு எதையுமே தரப்போவதில்லை என்று தெரிந்தபோது, அதனூடே போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்வது என்பது எளிதான விடயமல்ல.! தவிரவும் போரின்போது வெளிப்படையாகத் தெரிகின்ற ஆபத்துக்கள் சமாதான பேச்சுவார்த்தைகளின் போது இரகசியமாக மறைந்து நிற்கின்ற வாய்ப்புக்கள் உண்டு. நாம் முன்னர் சுட்டிக்காட்டிய பிரச்சனைகளும், ஆபத்துக்களும் கடந்த பேச்சு வார்த்தைகளின் போது, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை குறிவைத்திருந்தன. ஆனால் அவை அனைத்திடமிருந்தும் தமிழீழத் தேசியப் போராட்டத்தை சரியான முறையில், இலக்கை நோக்கிய அடுத்த கட்டத்திற்கு தேசியத்தலைவரின் நெறியாளள்கை நகரத்திச் சென்றுள்ளது. இரகசியமாக வரவிரந்த மிகப்பெரிய அபாயங்கள் அதே முறையில் தடுக்கப்பட்டதனால் இவற்றினுடைய உண்மையான வெற்றியை பரவலாக உணர முடியாது இருக்கின்றது. தமிழீழத் தேசியத் தலைவரின் இந்த அற்புதமான காய் நகர்த்தலை வரலாறு தன்னகத்தே பதிந்து கொள்கின்றது.
போரியலிலும், அரசியலிலும் நேர்கோடு எதுவும் இல்லை என்ற தத்துவத்தை நாம் இவ்வேளையில் உள்வாங்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நகர்த்தச் செல்வதற்கான ஒரு நிகழ்ச்சி நிரல் எவ்வாறு விடுதலைப்புலிகளிடம் இருக்கின்றதோ அதேபோல், புலிகளின் நகழ்ச்சி நிரலைக் குழப்ப வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சிநிரல் ஒன்றை சிங்கள அரசு வைத்திருக்கின்றது. சிங்கள அரசின் அந்த நிகழ்ச்சி நிரலின் செயற்பாடுகளின் விளைவுதான் இன்றைய போர்நிலைமையாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் தங்களுக்கான நிகழ்ச்சி நிரலின்படிதான் செயற் திட்டங்களை மேற்கொண்டு செல்வார்கள் என்பதனை இந்தப்புதிய ஆண்டு புலப்படுத்தும்.
விருப்பத்தேர்வு என்பது, இனி விடுதலைப் புலிகள் வசம்தான் இருக்கும். போருக்கும் அல்லது சமாதானத்திற்குமான விருப்பத் தேர்வுகளை மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லும் வலிமை இன்று விடுதலைப்புலிகளிடம் மட்டுமே உள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலின் ஊடாக பலவிதமான குடாரப்புத் தரையிறக்கங்களை சிங்களப் பேரினவாதம் சந்திக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!
|