தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > தேசத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்!

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

தேசத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்
[see also One Hundred Tamils of 20th/21st Centuries - Anton Balasingham]

12 December 2006


தமிழீழத் தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், தமிழீழ மக்களையும், உலகத் தமிழ் மக்களையும, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்ட அனைவரையும் மாறாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு தமிழீழத்தின் மதியரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காலமாகி விட்டார்.

 ‘எமது தேசத்தின் ஒளி விளக்கு’ என்றும், ‘விடுதலை இயக்கத்தின் மூத்த தலைமகன்’ என்றும், ‘மூத்த அரசியல் போராளி’ என்றும், ‘மதியரைஞர்’ என்றும், ‘தத்துவாசிரியர்’ என்றும், ‘தனது உற்ற நண்பன்’ என்றும் பாலா அண்ணையைக் குறிப்பிட்டுப் பெருமை கொண்ட தமிழீழத் தேசியத்தவைர் பாலா அண்ணைக்குத் “தேசத்தின் குரல்” என்ற மாபெரும் கௌரவப் பட்டத்தை வழங்கியிருக்கின்றார்.

தமிழீழத் தேசத்திற்கு பாலா அண்ணையின் மறைவு இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாக இருந்தபோதிலும், தமிழினம் தன்மானத்தோடு, பெருமையோடு, கௌரவத்தோடு தனது தேசத்தின் குரலுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றது. அந்த அளவிற்கு ஈழத்தமிழினம் தலைநிமிர்ந்து பெருமை கொள்ளும் வகையில், அரசியல் உலகிலும், இராஜதந்திர உலகிலும், அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரியோன்தான் அமரர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்!

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களுக்கும், தேசத்தின் குரலான பாலா அண்ணைக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு அற்புதமான ஒன்றாகும். அதனால் பரிணமித்த நட்புறவானது, எல்லைகளைக் கடந்த புதிய பரிமாணமாக, விரிந்து வளர்ந்தது. தமிழீழத் தேசியத்தலைவர், பாலா அண்ணைமீது கொண்ட நட்புறவை விளக்கும் முகமாக ஒரு சம்பவத்தை-பெரும்பாலானோருக்குத் தெரிந்திராத ஒரு சம்பவத்தை-இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்ககூடும்!

சந்திரிக்கா அம்மையார் சிறிலங்காவின் அரச அதிபராகப் பதவியில் இருந்த வேளையில், பாலா அண்ணை சிறுநீரகக் கோளாறு காரணமாகக் கடுமையாகச் சுகவீனமுற்றிருந்தார். தகுந்த மருத்துவ சிகிட்சையை அவருக்கு அளிக்கும் பொருட்டு, பாலா அண்ணையை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்குத் தேசியத் தலைவர் தீர்மானித்தார்.

பாலா அண்ணையின் வெளிநாட்டுப் பயணத்திற்கான வசதிகளை செய்து தருமாறு மனிதாபிமான அடிப்படையில், சிறிலங்காவின் அரச அதிபரான சந்திரிக்கா அம்மையாரிடம் இயக்கம் வேண்டுகோளை விடுத்தது. ஆனால் சந்திரிக்கா அம்மையாரும், லக்ஷ்மண் கதிர்காமர் அவர்களும் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையான நிபந்தனைகளை விதித்த வண்ணம் இருந்தார்கள்.

பாலா அண்ணையின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு தேசியத்தலைவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார். அதன்படி தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிவேக விசைப்படகுகளை உபயோகித்து பாலா அண்ணையையும், அவரது துணைவியார் அடேல் அவர்களையும, சர்வதேச கடற்பரப்பிற்கு அனுப்பி அங்கிருந்து இயக்கத்தின் கப்பல் ஒன்றில் ஏற்றி இருவரையும் வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்கு தேசியத்தலைவர் தீர்மானித்தார். இந்தப் பாரியபணியை நிறைவேற்றுகின்ற பொறுப்பை, விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதியான சூசையிடம் தேசியத் தலைவர் ஒப்படைத்தார்.

தமிழீழக் கடற்கரையிலிருந்து பாலா அண்ணையையும், அவரது துணைவியார் அடேல் அவர்களையும், தளபதி சூசையும், கடற்புலிகளும் தங்களுடைய அதிவேக விசைப்படகுகளில் கொண்டு சென்றார்கள். அவர்களை வழியனுப்பி வைப்பதற்காகச் சென்ற தேசியத்தலைவர் அவர்கள், தளபதி சூசை நல்ல செய்தியுடன் திரும்பிவரும் வரை கடற்கரையிலேயே காத்து நின்றார். இரவு கழிந்து, அதிகாலை நேரத்திலே, தளபதி சூசை நல்ல செய்தியுடன் திரும்பும் வரை சூரியத் தலைவன் விழித்தபடியே, கரையில் காத்து நின்றான். இது தேசியத் தலைவர் பாலா அண்ணைமீது கொண்ட புரிந்துணர்வையும், உயர் நட்புறவையும் காட்டி நிற்கின்றது.

இதேபோல் பாலா அண்ணை, தேசியத் தலைவர் மீது கொண்ட புரிந்துணர்வும், நட்புறவும் உயர்வானதாக விளங்கியது. ‘தமிழீழத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு, தலைவர் பிரபாகரன் ஊடாகத்தான் நகர்ந்து செல்லும். இதற்காகத்தான் தேசியத் தலைவர் படைக்கப்பட்டிருக்கின்றார்’ என்று பாலா அண்ணை திடமாகவே நம்பினார். ‘தலைவர் பிரபாகரன் ஒரு நெருப்பு, அந்த நெருப்பை என்னால்தான் கையாள முடியும்’- என்று உரிமையோடு பாலா அண்ணை சொல்லிக் கொண்டதுமுண்டு.

முன்னர் வீரகேசரிப் பத்திரிகையிலும், கொழும்பு-பிரித்தானியாத் தூதுவராலயத்திலும் கடமையாற்றிய திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இலண்டன் சென்று, அரசியல் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்றார். அவுஸ்திரேலியப் பெண்ணான அடேல் அவர்களை காதலித்து திருமணம் செய்தார். பாலசிங்கம்-அடேல் தம்பதியினர், பிரித்தானியாவில் அன்று இயங்கிக் கொண்டிருந்த வெளிநாட்டு விடுதலை அமைப்புக்களோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள். 1970ம் ஆண்டுப் பகுதிகளில் கெரில்லாப்போர் முறை குறித்த நூல் ஒன்றை பாலா அண்ணை எழுதினார். அந்த நூலை வாசித்த தமிழீழத் தேசியத் தலைவர் பாலா அண்ணையுடன் தொடர்பு கொண்டார். அந்தத் தொடர்பும், உறவும், பின்னாளில் ஆல விருட்சமாக வளர்ந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்தது.

பாலா அண்ணை, இந்தியா சென்று அங்கே தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடாத்தினார். அன்றைய தினம் பல தமிழ்ப் போராளித் தலைவர்களோடு, பாலா அண்ணை பழகியபோதும், தலைவர் பிரபாகரனை அவர் தனித்துவமாக அடையாளம் காணுகின்றார். 1983 தமிழினப் படுகொலைகளை அடுத்து, பிரித்தானியாவில் இருந்து முற்றாக வெளியேறிய பாலா அண்ணையும், அவரது துணைவியார் அடேல் அவர்களும் இந்தியா வருகின்றார்கள்.

‘தேசத்தின் குரல்’ பாலா அண்ணை பன்முக ஆளுமை உள்ளவராகத் திகழ்ந்தார். தத்துவம், உளவியல், அரசியல், போன்ற துறைகளில் ஆளுமை பெற்றவராகத் திகழ்ந்த பாலா அண்ணை, நல்ல எழுத்தாளராக, சிறந்த மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். அவரால் போடப்படுகின்ற அரசியல் தர்க்கக் கட்டுக்கள் எவராலும் தகர்க்கப்பட முடியாமல் இருந்தன. கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியலை பாலா அண்ணை நெறிப்படுத்தினார். தமிழீழத் தேசியத் தலைவரின் அரசியல் சிந்தனைகள் யாவும் பாலா அண்ணையூடாக நிறைவேற்றப்பட்டன.

பாலா அண்ணையின் திறமையின் பரிமாணம் சகல துறைகளையும் சென்றடைந்தது. முன்னைய இந்திய அரசு, தமிழ்ப போராளிகள் அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சி கொடுக்கத் தொடங்கிய போது, விடுதலைப் புலிகளைப் பற்றித் தெரியாத காரணத்தினால், மற்றைய போராளிகளுக்கு மட்டுமே இந்தியா, இராணுவப் பயிற்சியை வழங்கி வந்தது. பாலா அண்ணைதான் பழ நெடுமாறன் ஐயா போன்றோர்களின் உதவியுடன், சம்பந்தப் பட்டவர்களை அணுகி, இந்தியா, விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குமாறு செய்தார்.

திம்பு பேச்சுவார்த்தையில் இருந்து இன்றைய பேச்சுவார்த்தை வரை பாலா அண்ணை கலந்து கொண்டு, பேச்சு வார்த்தைகளை நெறிப்படுத்தினார். உள்ளரங்கிலும், வெளியரங்கிலும் அரசியல் காய்களை நகர்த்துவதில் பாலா அண்ணை சிறந்து விளங்கினார். சிறிலங்காவின் முன்னாள் அரச அதிபரான பிரேமதாசாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, மூன்று கட்டமாகப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். அவற்றை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.:-

• சிங்களக் கடும்போக்காளர்களான லலித் அத்துலக் முதலியையும், காமினி திசநாயக்கவையும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாதவாறு, பாலா அண்ணை அரசியல் காய்களை நகர்த்தியிருந்தார்.

• தமிழ் மக்களின் பிரச்சனைகளை அறிந்தவரும், ஓரளவு மென்போக்காளருமான அமைச்சர் ஹமீது ஊடாக பாலா அண்ணை பேச்சுவார்த்தைகளை நடாத்திச் சென்றார்.

• அரச அதிபர் பிரேமதாசாவிற்கு மிக நெருங்கியவராக ஒரு நீதியரசர் இருந்தார். அந்த நீதியரசர், பாலா அண்ணையோடும் நெருங்கியவராக இருந்தார். இந்த நீதியரசர் மூலம், பாலா அண்ணை பல விடயங்களைச் சாதித்து, பேச்சு வார்த்தையை ஒரு கட்டத்திற்கு நகர்த்திச் சென்றார்.

பாலா அண்ணை தேவையேற்படுமிடத்து, இறுக்கத் தன்மையையும் கடைப்பிடிப்பார். இந்தியப்படைகள் தமிழீழப் பகுதிகளை விட்டு வெளியேறத் தொடங்கியபோது, தமிழ்க் கூலிப்படைகள் சிறிலங்கா இராணுவம் மீது தாக்குதல்களை ஆரம்பித்தன. இதன்மூலம் இந்தியப் படைகள் வெளியேறுவதைத் தடுப்பதுதான் இதன் நோக்கமுமாகும்.

எதிர்பார்த்ததுபோல், சிறிலங்கா இராணுவம், தமிழ்க் கூலிப்படைகள்மீது தாக்குதல்களை தொடங்கியது. இதன்மூலம் தமிழ் பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். பாலா அண்ணை உடனே பிரேமதாசாவைத் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டார். சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களை உடனே நிறுத்துமாறும் கூலிப்படைகளை, புலிகளே கவனித்துக் கொள்வார்கள் என்றும், தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்படுவதை நாம் விரும்பவில்லை என்றும் பாலா அண்ணை அன்றைய அதிபர் பிரேமதாசாவிற்குத் தெரிவித்தார். இதற்குப் பிரேமதாசா இணங்கவில்லை. உடனே பாலா அண்ணை ‘புலிகள் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளிக்கிட்டு விடுவோம்’ என்று எச்சரிக்கை செய்தார். இதனால் பிரேமதாசா பணிந்து வந்தார். சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வந்த தாக்குதல்கள் உடனேயே நிறுத்தப்பட்டன. இது பாலா அண்ணையின் பரிமாணத்தின் ஒரு பகுதியை புலப்படுத்தியது.

தேசத்தின் குரல் பாலா அண்ணையிடம் மூன்று இயல்புகளை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஒன்று அவருடைய விரிந்து, பரந்த மனிதநேயம். இரண்டாவது, அவருக்கு மிகப்பெரிய ஆளுமை இருந்தாலும், தன்னலம் கருதாது ஒத்தாசையாகச் செயல்படுகின்ற தன்மையாகும். அதாவது, தேசியத் தலைவரின் சூத்திரங்களுக்கு அமைய, அவற்றிற்கு ஏற்ற மாதிரி அரசியலை நெறிப்படுத்தினார். மூன்றாவது விடயமாக, சர்வதேசப் பேச்சு வார்த்தைகளின்போது, தன்னுடைய ஆளுமையை முழுமையாக உபயோகித்ததைச் சொல்லலாம். பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்ற அதேவேளையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்வதற்குத் தன்னுடைய முழுத் திறமையையும் பாலா அண்ணை உபயோகித்தார்.

உலகில் உள்ள பல விடுதலைப் போராட்ட இயக்கங்களின் அரசியல் அறிக்கைகள், சிலவேளை முன்னுக்குப் பின் முரணாக அமைந்து விடுவதை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அறிக்கைகள் எப்போதும் தெளிவாக, முரண்பாடில்லாத கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கான காரணம், திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தல்தான்!

பாலா அண்ணையின் ஆளுமையின் உச்சமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை குறிப்பிடலாம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்களும், அதன் கைச்சாத்தும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் நகர்வை, வெற்றிகரமாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன. சிங்களப் பேரினவாதம் இதனை நடைமுறைப் படுத்தாது, என்ற விடயம் ஏற்கனவே எதிர்பார்க்கப் பட்டிருந்தாலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டம் சரியான முறையில் சர்வதேச அரங்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளது என்பதுதான் சரியானதாகும்.

இந்தச் சோகமான வேளையில் திருமதி அடேல் பாலசிங்கம் என்ற ஒப்புயர்வற்ற, மகத்தான பெண்மணியை நாம் எமது நெஞ்சில் நிறுத்துகின்றோம். எப்படி பாலா அண்ணையையும், விடுதலைப் போராட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதேபோல் பாலா அண்ணையையும், அடேல் அன்ரியையும் நாம் பிரித்து பார்க்க முடியாது. தன்னுடைய அன்புக் கணவனுக்குப் பெரிய பக்கபலமாக நின்ற, ஆழமான அன்பும், அறிவும் கொண்ட பெண்மனி அவர். பெண்கள் விடுதலை, பெண்கள் வளர்ச்சி என்று தமிழீழத்தோடு தன்னை முற்றாக பிணைத்துக் கொண்டவர் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள்.

எம்முடைய தேசத்தின் சதந்திரத்திற்கான போராட்டத்திற்கு, மாபெரும் பணி புரிந்த இந்த இருவரும், அதனைச் சகல துன்பங்களுக்கும் முகம் கொடுத்துத்தான் செய்தார்கள். அத்தோடு, பாலா அண்ணை நல்ல திடகாத்திர உடல் நிலையோடு தேசப்பணி புரியவில்லை. மோசமாகச் சுகவீனமுற்ற நிலையிலும், தன்னுடைய தேசத்திற்கான பணியைத் தொடர்ந்து செய்திட்ட இலட்சியவாதி அவர்.!

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், ‘தேசத்தின் குரல்’ திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் இடையே இருந்த பிணைப்பு, ஒரு வரலாற்றுப் பிணைப்பாகும். பாலா அண்ணை, தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு ஏற்ற முறையில் வடிவம் கொடுத்தார். தலைவரின் சிந்தனையூடாக, காலச்சூழலுக்கு அமைய, இயக்கத்தின் நோக்குக்கும், தேவைக்கும் அமைய, அரசியல் காய்களை நகர்த்தினார்.

தேசத்தின் குரல் என்று அழைக்கப்படுகின்ற பாலா அண்ணையின் குரல், உண்மையில் தலைவரின் சிந்தனையின் குரல்தான்! பாலா அண்ணை, தலைவரின் சிந்தனையின் குரலாக இருந்தார். அவர் தனக்கென்று ஒரு குரலை வைத்திருக்கவில்லை. தன்னுடைய தேசத்திற்கான குரலைத்தான் பாலா அண்ணை வைத்திருந்தார். ‘புத்தன் மறைந்தாலும், அவனுடைய போதனைகள் மறையாது’ - என்பது போல், தேசத்தின் குரலாக ஒலித்தவரின் உயிர் பிரிந்தாலும், அந்தக் குரலும், அதன் சிந்தனைகளும், எமது போராட்டம் முழுமையான வெற்றி பெறும்வரை தொடர்ந்து ஒலிக்கும். தேசத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்! தேசத்தின் குரல் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு எமது வீர வணக்கம்.!

 

Mail Usup- truth is a pathless land -Home