தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > மாவீரர் தினஉரை-2006-ஒரு பார்வை

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

மாவீரர் தினஉரை-2006-ஒரு பார்வை

10 December  2006

"இலங்கைத்தீவை அமெரிக்கா ஒரு இஸ்ரேல் நாடாக மாற்ற முனைகிறது என்ற சந்தேகம் இப்போது எமக்கு உருவாகி வருகின்றது. சிறிலங்காவின் சில செய்கைகளான வடக்கு கிழக்கு பிரிப்பு, திருகோணமலைத் தமிழர்கள் விரட்டியடிப்பு போன்றவை குறித்து அமெரிக்கா மௌனம் சாதிப்பது எமது இந்த சந்தேகத்திற்கு வலுச் சேர்க்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் திருகோணமலை தமிழர்கள் வசம் இருப்பது நல்லதல்ல. ஏனென்றால் தமிழர்கள் எப்போதும் இந்தியாவின் நலன் சார்ந்துதான் நிற்பார்கள். "



தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஒரு முக்கிய திருப்பு முனையில் தமிழினம் நிற்கின்ற இவ்வேளையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் தினப்பேருரை வழங்கவிருந்த செய்தியை ஈழத்தமிழினம் மட்டுமல்லாது, சர்வதேசமும் ஆர்வத்தோடு எதிர் நோக்கியிருந்தது.

தேசியத் தலைவரின் மாவீரர் தினப்பேருரை வெளிவந்ததையடுத்து, அது குறித்துப் பல தரப்பினர்களிடமிருந்து பலவிதமான கருத்துக்கள் இப்போது வெளி வந்தவண்ணம் இருக்கின்றன. நாமும் எமது வழமையைப் பேணி, தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை குறித்த எமது- பார்வையைத் தர விழைகின்றோம்.

“இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றோம்”

என்று மாவீரர்களைப் போற்றி தனது உரையைத் தொடர்ந்த தேசியத தலைவரின் மாவீரர் தினப்பேருரையின் சாராம்சம் குறித்தும், அதன் கருத்தியல் குறித்தும் நாம் எமது பார்வையைத் தந்து சில முக்கிய விடயங்கள் -குறித்து சில தர்க்கங்களையும் முன்வைக்க விழைகின்றோம்.

“தனியரசை நோக்கிய விடுதலைப் பாதையில் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவது என்று இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கின்றோம்” என்று தமது தீர்க்கமான முடிவைத் தெரிவித்துள்ள தேசியத் தலைவர் சமாதானம் குறித்த தமது கருத்தையும் தெரிவிக்கத் தவறவில்லை. அது குறித்துத் தலைவர் இவ்வாறு கூறியிருந்தார்.

“எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே போரை விரும்பியதில்லை. வன்முறைப் பாதையையும் விரும்பியதில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகின்றோம். சமாதான வழிமுறை தழுவி அமைதி வழியில் எமது மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதில்லை. இதனால்தான் திம்புவில் தொடங்கி ஜெனீவா வரை பல்வேறு தடவைகள் பல்வேறு காலகட்டங்களிற் பல்வேறு நாடுகளிற் பேச்சுக்களை நடாத்தியிருக்கின்றோம்.”

ஆனால் ‘சமாதானக் காலம்’ என்று சொல்லப்பட்ட ஐந்து ஆண்டுகாலத்தில் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகிய மூன்று சிங்களத் தலைவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்குப் பயனேதும் கிட்டியதா? அதனைத் தேசியத் தலைவர் கீழ்வருமாறு சுட்டிக்காட்டுகின்றார்.

“போர்நிறுத்தம் செய்து சமாதானப் பேச்சுக்கள் நடாத்தி ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தபோதும் எம்மக்களுக்கு சமாதானத்தின் பலாபலன்கள் எவையுமே கிட்டவில்லை. அவர்களது வாழ்வு இருண்டுபோய் நரகமாக மாறியிருக்கின்றது. தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளின் சுமை எம்மக்களை வாட்டி வதைக்கின்றது. தொடரும் போரினால் எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் தொடரும் மனிதாபிமானப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள்.”

சிறிலங்காவின் புதிய அதிபராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றவுடன் தமிழீழத் தேசியத்தலைவர் தான் முன்வைத்த கோரிக்கை குறித்தும், அதனை மகிந்த ராஜபக்ச புறக்கணித்த விதம் குறித்தும் கீழ்வருமாறு கூறுகின்றார்.

“கடந்த ஆண்டு எனது மாவீரர் நாளுரையில் எமது மக்களது அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் ஒரு நீதியான தீர்வை வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலத்துக்குள் முன்வைக்குமாறு இறுதியாகவும், உறுதியாகவும் ஜனாதிபதி மகிந்தவை நான் கோரியிருந்தேன். அந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து புறமொதுக்கி விட்டு கடந்தகால சிங்களத் தலைமைகள் போன்று மகிந்தவும் தமிழின அழிப்புப் போரை தீவிரப்படுத்தியிருக்கிறார். தமிழர் தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்திருக்கின்றார்.”

சமாதானத்தின்மீதும், சமாதான வழிமுறை குறித்தும் தமது விருப்பினைத் தெரிவித்த தலைவர் சிறிலங்கா அரசுகள் சமாதானத்தை விரும்பாதது குறித்தும் , சமாதானத்தின் பலனை எமது மக்களுக்குத் தராதது குறித்தும், கூறியதோடு தற்போதைய மகிந்தவின் அரசு தமிழர் தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்திருப்பதையும் தெளிவாக இவ்வாறு கூறியிருந்தார். அதாவது போர்ப்பிரகடனம் செய்திருப்பது சிங்கள அரசுதான் என்பதையும், தமிழர்கள் மீது வலிந்து ஒரு யுத்தம் திணிக்கப்பட்டு வருவதையும் தமிழீழத் தேசியத் தலைவர் தெளிவாக்கியுள்ளார்.

இவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புறம் தள்ளிவிட்டார்கள் என்று சிங்களக் கடும் போக்காளர்கள் பரப்புரை செய்து வருவதையும் நாம் காண்கின்றோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் அதனுடைய தற்போதைய நிலைகுறித்தும் அதற்கு யார் காரணம் என்றும் தேசியத்தலைவர் தன்னுடைய மாவீரர் தின உரையில் கீழ்வருமாறு தெளிவு படுத்தியிருந்தார்.

“மகிந்தவின் அரசு படைப்பலத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகிறது. தமிழனின் நிலங்களை ஆக்கிரமித்து அதன்மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பும் அரைகுறைத் தீர்வை தமிழர் தலையிற் கட்டிவிட எண்ணுகின்றது. இந்தப் போர்முனைப்புச் செயற்பாட்டாற் போர்நிறுத்த ஒப்பந்தம் செத்து செயலிழந்துபோய் கிடக்கின்றது. ஒப்பந்தம் கிழிக்கப்படாமலேயே உக்கிப்போன தாளாகி உருக்குலைந்து கிடக்கின்றது. புலிகளின் இலக்குகளுக்கு எதிராக மும் முனைகளிலும் தாக்குதல் தொடரும் என அறிவித்து மகிந்த அரச ஒப்பந்தத்திற்கு ஈமைக்கிரிகைகளையும் நடாத்தி முடித்திருக்கிறது.”

அதாவது மகிந்த ராஜபக்ச அரசின் நடவடிக்கைகிளால்தான் போர்நிறுத்த ஒப்பநதம் இறந்து போய்விட்டது என்றும் அது இறந்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதத்தில் முமுமுனைத் தாக்குதல்களைச் சிங்கள அரசு தொடர்கின்ற வகையில், சிங்கள அரசே ஒப்பந்தத்திற்கு உத்தியோக பூர்வமாக ஈமக்கிரிகைகளையும் நடாத்தியுள்ளது என்றும் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இங்கே சிங்களக் கடும்போக்காளர்கள் கேட்கின்ற கேள்வி என்னவென்றால், தங்களால் சாகடிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பிணத்தோடு, விடுதலைப்புலிகள் ஏன் பேசிக்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்பதுதான். இத்தகைய முட்டாள்தனமான கேள்விகளை வேறு யாரிடமிருந்துதான் எதிர்பார்க்க முடியும்.?

மகிந்த ராஜபக்சவின் அரசு சமாதானக் காலத்திலேயே போர்க்கால நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்ற தமிழீழத் தேசியத் தலைவர், சிங்கள அரசு தமிழர் தாயக நிலத்தை மெல்ல, மெல்ல கூறு போட்டு வருகின்ற அபாயத்தையும் சுட்டிக் காட்டுகின்றார். தேசியத் தலைவரின் மிக முக்கியமான கருத்தியல் வருமாறு:

“இராணுவ அழுத்தம், பொருளாதார நெருக்குதல் என இருமுனைகளில் எமது மக்கள் மீது சிங்கள அரசு யுத்தத்தை ஏவி விட்டிருக்கின்றது. வகைதொகையற்ற கைதுகள், சிறைவைப்புகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள் காணாமல் போதல்கள், எறிகணை வீச்சுகள், விமானக் குண்டு வீச்சுக்கள் தொடர்ச்சியான போர் நடவடிக்கைகள், என எம்மக்கள் மீது இராணுவ அழுத்தம் என்றுமில்லாதவாறு இறுக்கமாக்கப் பட்டிருக்கிறது. மக்கள் வாழிடங்கள் இராணுவ அரண்களாலும் படைநிலைகளாலும் நிரப்பப்படுகின்றன. மறுபுறத்தில் உணவுத் தடை, மருந்துத்தடை பொருளாதாரத்தடை, போக்குவரத்துத்தடை, மீன்பிடித்தடை என எம்மக்கள் உயிரோடு வாட்டி வதைக்கப்படுகின்றார்கள்.

பிரதான வழங்கற் பாதைக்கு மூடுவிழா நடாத்திய சிங்கள அரசு தமிழரை அவர்களது சொந்த மண்ணிலேயே சிறை வைத்திருக்கின்றது. எமது மக்களின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களது சமூகவாழ்வைத் துண்டித்து, நான்கு சுவர்களுக்கு மத்தியில் அவர்களைத் தடுத்து வைத்து, அவர்களது நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொடுமைப் படுத்துகின்றது. தமிழரின் தாயகத்தை பிரதேசங்களாகப் பிரித்து, வலயங்களாக வகுத்து, இராணுவ அரண்களை அமைத்து முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு சோதனைச் சாவடிகளால் நிறைத்து, ஒரு பிரமாண்டமான மனித வதைமுகாமாக மாற்றியிருக்கிறது.”

இப்படிப்பட்ட நிலையில் சிங்கள அரசிடமிருந்து நியாயத்தையும், நேர்மையையும் எதிர்பார்க்க முடியுமா? இந்தக் கேள்விக்குத் தேசியத் தலைவர் இரண்டு வேறு தளங்களில் இருந்து பதில் அளிக்கின்றார். இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட அவலங்களையும், செயற்கையாக ஏற்படுத்தப் படுகின்ற அவலங்களையும் ஒப்பிட்டு தேசியத் தலைவர் கூறுகின்ற கருத்து, எம் எல்லோராலும் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.

“பல்லாயிரம் மக்கள் தமது சொந்த வீடுகளிலிருந்து குடிபெயர்க்கப்பட்டு நோயும், பிணியும, பசியும் பட்டினியும் வாட்ட அகதிமுகாம்களில் அல்லற்படுகின்றார்கள். எம்மக்களது உயிர்வாழ்விற்கான உணவையும் மருந்தையும் மறுத்து பாதையை பூட்டி பட்டினி போட்டுப் படுபாதகம் புரியும் சிங்கள அரசு எம்மக்களுக்குக் கருணை காட்டி, காருண்யம் செய்து அரசியல் உரிமைகளை வழங்கிவிடும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமே அன்றி வேறொன்றுமன்று.

இயற்கையாக ஏற்பட்ட பேரவலத்திற்கே இரங்க மறுத்து பொதுக்கட்டமைப்பை நிராகரித்த சிங்களத் தேசம் தானே செயற்கையாக திட்டமிட்டு உருவாக்கிய மனிதப் பேரவலத்திற்கு கருணைகாட்டி ஒருபோதும் நியாயம் செய்யப் போவதில்லை.”

இந்தவேளையில் தேசியத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ள மிக மிக முக்கியமான விடயம் ஒன்றை தர்க்கிப்பதற்கு நாம் விழைகிறோம். இப்போது நாம் தர்க்கிக்கப் போகின்ற விடயத்தைத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியிருப்பதற்கு மிக ஆழமான உட்கருத்து இருக்க வேண்டும். என்றுதான் எமது உள்மனம் சொல்கின்றது. தேசியத் தலைவர் சொல்லியிருந்த அந்த விடயம்தான் என்ன?

“போதுமான அளவிற்கு மேல் பொறுமை காத்திருக்கின்றோம். அமைதிவழி தீர்விற்கு எண்ணற்ற வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறோம். அரசியல் தீர்வை நோக்கி நகரக்கூடிய இடைவெளியைக் காட்டியிருக்கிறோம். நிலவதிர்வுப் பேரலைகள் தாக்கியபோது ஒரு தடவையும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற போது இன்னமொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டு சமாதானத்திற்கு மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம். இதனை உலகம் நன்கு அறியும்.”

ஆகவே இரண்டு தடவைகள் தமிழீழத் தேசியத் தலைவர் தனது போர்த்திட்டங்களைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டு சமாதானத்திற்கு மீண்டும் மீண்டும் சந்தர்ப்பங்களை வழங்கியிருக்கிறார். அதனை தலைவர் தெளிவாகச் சொல்லியும் இருக்கிறார். இங்கே சொல்லாமல் விட்ட செய்தி எதுவாக இருக்கும் என்று நாம் சிந்தித்துப் பார்த்தோம். அதாவது மூன்றாவது தடவை தனது போர்த் திட்டத்தை தலைவர் தள்ளிப் போடமாட்டார் என்றுதான் எமக்கு எண்ணத் தோன்றுகிறது. காலம் இதற்கு பதில் சொல்லட்டும்.!

சர்வதேசத்தை பொறுத்தவரையில் தமிழீழத் தேசியத் தலைவரின் நிலைப்பாடு மாறியிருக்கிறது. என்றே எமக்கு எண்ணத் தோன்றுகிறது. இதுவரைகாலமும் சிறிலங்கா அரசிற்கு சர்வதேசம் அழுத்தங்களை விதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு சர்வதேசம் சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களை விதிக்கும் பட்சத்தில்தான் சிறிலங்கா அரசு சமாதானப் பேச்சுக்களை நேர்மையான முறையில் முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும் என்றும், தமிழீழத் தேசியத் தலைமை கோரி வந்துள்ளது.

தேசியத் தலைவரின் இந்த ஆண்டுக்கான மாவீரர் தினஉரையில் இவ்வாறான கோரிக்கைகள் எதுவும் இம்முறை முன்வைக்கப் படவில்லை. மாறாக உலகநாடுகளின் நியாயமற்ற முடிவுகளும், நியாயத்திற்கு எதிரான செயற்பாடுகளும் சிங்கள அரசிற்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்திருப்பதைத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார். சரியாக சொல்லப் போனால் சர்வதேசத்தின் இந்த நியாயமற்ற செயற்பாடுகள்தான் இன்றைய புறநிலைக்கு காரணிகளாக அமைந்துள்ளன. என்பதையும் தமிழீழத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதனை அவர் இறுக்கமாகத்தான் தெரிவித்துள்ளார். அவை வருமாறு:

“மொத்தத்தில் அந்த அமைதிக்காலம் தமிழர் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத இரத்தம் தோய்ந்த இருண்ட காலமாக மாறியிருக்கிறது. அமைதி போதித்த உலகநாடுகள் மௌனத்துக்குள் தமது மனச்சாட்சியைப் புதைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க, தமிழர் மண்ணில் பெரும் மனித அவலம் இன்று அரங்கேறி வருகின்றது.

மகிந்தவின் அரசு தமிழ் மக்களை இன அழிப்புச் செய்கின்ற அதேநேரம் அதன் இனஅழிப்புப் போரிலிருந்து தமிழ் மக்களைக் காக்கப் புலிகள் நடாத்துகின்ற ஆயுதப் போராட்டத்தை அர்த்தமற்ற பயங்கரவாதமாகச் சித்தரித்தும் வருகின்றது. தமிழரின் நீதியான போராட்டத்தை திரிபுபடுத்தி இழிவுபடுத்தி உலகெங்கும் பொய்மையான விசமப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருக்கிறது. எமது மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாது இலங்கை அரசின் இராஜரீக அழுத்தங்களுக்கு பணிந்து, அதன் பொய்யான பரப்புரைகளுக்கு மசிந்து ஐரோப்பிய ஒன்றியமும், கனடாவும் எமது விடுதலை இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன. உலக அரங்கில் எம்மை வேண்டத் தகாதோராக தீண்டத் தகாதோராகத் தனிமைப்படுத்தி ஒதுக்கி ஓரம் கட்டின.

நீதி நியாயங்களை சீர் தூக்கி பாராது, அவசரப்பட்டு எடுத்த இந்த முடிவு பாரதூரமான எதிர் மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. சிங்கள அரசோடு பேச்சுக்களில் எமக்கிருந்த சமநிலையையும் சமபங்காளி என்ற தகைமையையும் இது ஆழமாகப் பாதித்தது. விட்டுக் கொடுக்காத கடும்போக்கைக் கைக் கொள்ளச் சிங்கள அரசு தனது போர்த்திட்டத்தைத் தடையின்றி தொடர வழி வகுத்தது. அத்தோடு அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாகத் கூறிக்கொள்ளும் சில உலகநாடுகள் சிங்களத்தின் இன அழிப்புப் போரை கண்டிக்காது ஆயுத நிதி உதவிகளை வழங்கி அதன் போர்த்திட்டத்திற்கு முண்டுக் கொடுத்து நிற்கின்றன. இப்படியான புறநிலையில்தான் மகிந்த அரசினால் தனது இராணுவ படையெடுப்புக்களை துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தமிழர் மண்ணில் தொடரமுடிகிறது.”

இவ்வாறு சர்வதேசத்தின்மீது இறுக்கமான விமர்சனங்களைத் தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவித்துள்ளார். இது எதனை காட்டுகின்றது என்றால் இனி சர்வதேசத்தின் செயல் திறனற்ற வேண்டுகோள்களுக்கும், நியாயமற்ற தடைகளுக்கும் தமிழீழம் செவிமடுக்காது, இணங்கிப் போகாது என்பதைத்தான்.! சுருக்கமாக சொல்லப் போனால் தமிழீழத் தேசியத் தலைமை இனிமேல் சர்வதேசத்திற்கு நெகிழ்ந்து கொடுக்க மாட்டாது என்றுதான் நாம் கருதுகின்றோம்.

ஆயினும் தமிழீழத் தேசியத் தலைவர் சர்வதேசத்திற்கு ஒரு வேண்டுகோளை இம்முறை விடுத்திருப்பதையும் நாம் காண்கின்றோம். ஆனால் இந்த வேண்டுகோள் முன்னைய கோரிக்கைகளில் இருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு இருப்பதையும் இந்த வேண்டுகோள் வேறு ஒரு தளத்தில் இருந்து விடுக்கப்பட்டு இருப்பதையும் நாம் கவனிக்கிறோம். அது வருமாறு:

“எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகின்றோம்.”

உலகநாடுகளையும், சர்வதேச சமூகங்களையும்-அதாவது நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும்-நோக்கித் தேசியத் தவைர் ஒன்றே ஒன்றைத்தான் கேட்கிறார். அது தமிழரின் அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டத்தை விரைவாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான வேண்டுகோள் மட்டுமேதானே தவிர வேறு ஒன்றும் அல்ல! அதாவது நடக்கவிருக்கும் திருமணத்திற்கான மனப்பூர்வமான வாழ்த்துக்களை கோருகின்ற அழைப்புத்தான் அது! அவர்களுடைய வாழ்த்துக்கள் இல்லாவிட்டாலும் நடைபெறவிருக்கும் திருமணம் நடந்தே தீரும் என்பதுதான் உட்கருத்து.

இந்தவிடயத்தை நாம் தர்க்கிக்கையில் மாவீரர் தின உரையில் இல்லாத ஒரு விடயத்தை சொல்ல விழைகின்றோம். நாம் இப்போது சொல்ல விழைகின்ற கருத்து மாவீரர் தின உரையோடும் சம்பந்தப்படாத போதிலும், சம்பந்தப்பட்ட உலகநாடுகளோடு குறிப்பாக அமெரிக்காவோடு-சம்பந்தப்பட்ட விடயமாக இருக்ககூடும் என்று நாம் சந்தேகிப்பதன் காரணமாக நாம் எமது கருத்தை சொல்ல விழைகின்றோம்.

இலங்கைத்தீவை அமெரிக்கா ஒரு இஸ்ரேல் நாடாக மாற்ற முனைகிறது என்ற சந்தேகம் இப்போது எமக்கு உருவாகி வருகின்றது. சிறிலங்காவின் சில செய்கைகளான வடக்கு கிழக்கு பிரிப்பு, திருகோணமலைத் தமிழர்கள் விரட்டியடிப்பு போன்றவை குறித்து அமெரிக்கா மௌனம் சாதிப்பது எமது இந்த சந்தேகத்திற்கு வலுச் சேர்க்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் திருகோணமலை தமிழர்கள் வசம் இருப்பது நல்லதல்ல. ஏனென்றால் தமிழர்கள் எப்போதும் இந்தியாவின் நலன் சார்ந்துதான் நிற்பார்கள். ஆனால் திருகோணமலை சிங்களவர்கள் வசம் இருந்தால் அவர்கள் இந்தியாவின் நலனுக்கு எதிராகவே இருப்பார்கள். சிங்களவர்களின் இந்த இந்திய எதிர்ப்புப் போக்கு அமெரிக்காவிற்கு உகந்ததாகவும் உவந்தததாகவும் இருக்கும். அமெரிக்காவின் தென்கிழக்காசிய பிராந்திய மேலான்மை முயற்சிக்கு பலமாகவும் இருக்கும்.

இங்கே இன்னுமொரு கருத்தையும் சேர்த்துச் சொல்ல விழைகின்றோம். சிறிலங்காவின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காக கடல் தரை வான் தாக்குதல்களைத் தாம் நடாத்துவது போர் நிறுத்த மீறல் அல்ல, என்று சிறிலங்கா அரசு வாதிடுகின்றது. இது அப்படியாயின் இதே கருத்து இதேவாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பொருந்தும். தமிழீழம் மக்களை காப்பாற்றுவதற்கும், தமிழீழத்தைக் காப்பாற்றுவதற்கும் புலிகள் தாக்குதல்களை நடாத்தினால் அவையயும் போர்நிறுத்த மீறல்கள் அல்ல என்றுதான் நாம் கருதவேண்டும்.

சர்வதேசத்தைப் பொறுத்தவரையில் நாம் தொடர்ந்தும் சில விடயங்களைத் தர்க்கித்தே வந்துள்ளோம். சர்வதேசம் நீதியாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் தமிழரின் தேசியப் பிரச்சனையில் நடந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் சர்வதேசம் வெறும் பார்வையாளர்களாகக் கூட இருக்க முடியாத நிலை உருவாகும் என்றும் நாம் கூறி வந்துள்ளோம். அந்தநிலை விரைவில் வரக்கூடும் என்றுதான் எமக்கு இப்போது தோன்றுகின்றது. ஆகையினால்தான் முறையாக வழிகாட்ட வேண்டிய சர்வதேசம், இன்று வாழ்த்துச் சொன்னால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழீழத் தனியரசு அமைவது என்பதானது, ஒட்டு மொத்த தமிழீழ மக்களின் தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பைத்தான் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களும், தமிழக மக்களும் நாடி நிற்கின்றார்கள். சர்வதேசம் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாது என்ற கருத்து எழுந்தால், அந்தக் கருத்து ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் தீர்ப்பை பாதிக்காது என்பதுதான் உண்மை. இதனையும் வருங்காலம் உணர்த்தும். தமிழ் மக்களின் பிரச்சனையில் சர்வதேசத்திற்கு உண்மையான அக்கறையிருந்தால் சர்வதேசம் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

அதனால்தான் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான தார்மீக கடமையை ஆற்றுமாறும், அதற்குரிய உதவியையும், நல்லாதரவையும் தருமாறும் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களுக்கும், தமிழக உறவுகளுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் தனது மாவீரர் தின உரையில் உரிமையோடு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் உறவுகளை மட்டும் நோக்கித்தான் இந்த வேண்டுகோள் விடுவிக்கப் பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது. மாவீரர்களைச் சிரந்தாழ்த்தி வணக்கம் செய்த நாளிலே தேசியத் தலைவர் தமிழ் உறவுகளின் பெரும் பங்களிப்புக்கும், உதவிகளுக்கும் தனது அன்பையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தலைவரின் வேண்டுகோளை மனப்பூர்வமாக மகிழ்வுடன் ஏற்று அவருடைய கரங்களை நாம் பலப்படுத்துவதன் மூலம் சுதந்திர தமிழீழத் தனியரசை விரைவில் அமைத்திடுவதற்கு நாம் எமது தார்மீகக் கடமையைச் செய்வோம்!.

 

Mail Usup- truth is a pathless land -Home