அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற பிரதிநிதிகள் சபைக்குரிய (House of Representatives) தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் குடியரசுக்கட்சி (Republic) பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி (Democrat) பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளமையால், நாட்டின் சட்டவியல் அதிகாரங்களையும் தம் கைவசப்படுத்தியுள்ளது. ஈராக்மீது அமெரிக்கா தொடுத்துள்ள போரை அமெரிக்கப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாததன் எதிரொலியாகத்தான், இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இதன் காரணமாகத்தான் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் என்ற உயர் பதவியை வகித்த டொனால்ட் ரம்ஸ்வெஸ்ட்;(Donald Rumsfeld) என்பவரை அப்பதவியில் இருந்து புஷ் விலகச் செய்துள்ளார். வேற்று நாடொன்றின் அதிகாரங்களைக் கைப்பற்ற முனைந்த அதிபர் ஜோர்ஜ் புஷ் இன்று அதன் காரணமாக தனது நாட்டின் அதிகாரங்களையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனை ‘முடிவின் ஆரம்பம்’ என்று சொல்லவதையும் விட, ‘ஆரம்பத்தின் முடிவு’ என்று கூடச் சொல்லலாம்.
ஈராக்மீது அமெரிக்க போர் தொடுக்கவிருந்த வேளையில், அதாவது சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, நாம் சில கருத்துக்களை தர்க்கித்திருந்தமை, எமது வாசகர்களுக்கு ஞாபகத்தில் இருக்ககூடும். அமெரிக்கா இன்று ஈராக்மீதான போரை முன்னெடுப்பதற்குக் காரணம் ஈராக் வைத்துள்ள பேரழிவு தரவுள்ள ஆயுதங்களே என்றால், அதே நிலைப்பாட்டை அமெரிக்கா வடகொரியா மீதும் எடுக்க வேண்டும். ஈராக்கின் ஒற்றுமைப் பாட்டைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு, ஈராக்கில் யுத்தத்தில் இறங்குகின்ற அமெரிக்கா, ஈராக்கின் ஒற்றுமைப்பாட்டைத் துண்டாடுகின்ற நிலையைச் சந்திக்க நேரிடும். . .பின்லாடனையும் சதாமையும் வளர்த்து விட்டதும் இதே அமெரிக்காதான்.!. . . . தேன்கூட்டைக் கலைத்ததுபோல் வியட்நாமில் வாங்கிய அடியையும் விட, பாரிய இழப்புக்களை அமெரிக்கா ஈராக்கில் சந்திக்க நேரிடும் என்று நாம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், மிகவிரிவாகவே தர்க்க்pத்திருந்தோம்.
இன்று மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு மேலும் சில கருத்துக்களை முன்வைத்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.
அமெரிக்கா, வியட்நாமில் ஒரு பாரிய இழப்பை சந்தித்தபின்பு அமெரி;க்காவிற்கு ஓர் உளவியல் பிரச்சனை தொடர்ந்தும் இருந்து வந்துள்ளது. இந்தத் தோல்வ்pயை வேறொரு வெற்றியின் ஊடாக ஈடு செய்யவேண்டும் என்ற எண்ணம் அமெரிக்க அரசுக்கு தொடர்ந்தும் இருந்தே வந்துள்ளது. சதாம் ஹீசெய்யினை ஒழி;ப்பதன் மூலம் தாம் ஓர் வல்லரசு என்பதை மீண்டும் நிரூபிக்கும் எண்ணம் அன்று அமெரிக்காவிற்கு இருந்தது. ஆனால் வியட்நாமைவிட மிக மோசமான சிக்கலுக்குள் இன்று அமெரிக்கா சிக்குண்டு போய் நிற்கின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும், ஈராக் போன்ற நாடுகள் தங்கள் குறிக்கோளுக்கு தகுந்த இலக்குகள் (Target) என்று அமெரிக்கா நினைத்து அதற்கேற்ப செயற்பாடுகளில் இறங்கியது. ஆனால் இன்று நிலைமையென்ன? ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தலையெடுத்து விட்டார்கள். ஈராக்கின் ஒற்றுமைப்பாடு குலைந்துபோய் அங்கே பல குழுக்கள் தலையெடுத்து விட்டன. இப்போது ஓர் இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகலாவிய வகையில் எழுச்சி பெற்று வருவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.
‘உலக அமைதிக்கு இன்று யாரால் ஆபத்து?’ என்று ஒரு கருத்துக் கணிப்பு அண்மையில் நடைபெற்றது. இது மேற்குலகம் நடாத்திய கருத்துக் கணிப்பாகும். உலக அமைதி;க்கு பின்லாடனைவிட ஜோர்ஜ் புஷ்ஷால்தான் ஆபத்து என்று பெரும்பான்மையான பொதுமக்கள் கருத்துத் தெரிவித்து இருந்தார்கள். இந்த மக்கள் கணிப்பு எதனைக் காட்டுகிறது என்றால் பெரும்பான்மையான பொதுமக்கள் பின்லாடனைவிட, புஷ்ஷைக் குறித்துத்தான் அச்சமுறுகிறார்கள் என்பதைத்தான்! இன்று அமெரிக்கா எதையோ நினைத்து, எதையோ செய்யப்போய் மிகப்பெரிய எதிர்வினையை சந்தித்து நிற்கின்றது.
இது பலருக்கு முதலிலேயே தெரிந்த விடயம்தான்.! எல்லோரும் ஈராக்குள் போவது ஆபத்து! இந்த அணுகுமுறை பிழை, ஆபத்து! என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, உளவியல் காரணத்திற்காகவும், ஒரு குறிப்பிட்ட சில உயர்தட்டு மக்களின் பன்னாட்டு வணிக நலன்கருதியும், அமெரிக்கா ஈராக் விடயத்தில் தேவையற்று நுழைந்து, அடிவாங்கி நிற்கின்றது.
மிஞ்சி மிஞ்சிப்போனால் சில மாதங்களுக்குள்ளேயே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் - என்றும், அமெரிக்க விPரர்கள் யாவரும் ஓரிரு மாதங்களுக்குள் அமெரிக்கா திரும்பிவிடுவார்கள் என்றும் கூறி வந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்வெல்ட் எடுத்த முடிவுகள் பிழையானவை என்று இன்று நிரூபிக்கப்பட்டு விட்டன. அவருடைய பதவி விலகல் இதனை மீண்டும் மீள் உறுதி செய்கின்றது. இனி அவர்மீது மனிதஉரிமை மீறல் வழக்குகள் தனியாகவும், கூட்டாகவும் தொடரப்படலாம்.
இத்தோடு வேறு சில பிரச்சனைகள் வித்தியாசமான முறையில் கிளைவிட ஆரம்பித்திருப்பதையும் நாம் காண்கின்றோம். பின்லாடனையும், சதாமையும் வளர்த்துவிட்டது அமெரி;க்காதான் என்று நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இங்கே சதாமைக் குறித்து முதலில் சற்று கவனிப்போம். அமெரிக்;கா சதாமை முதலில் ஆதரித்து வளர்த்துப் பின்னர், அவர்மீது போரைத் தொடுத்தது. இங்கே அடிப்டை முரண்பாடு என்னவென்றால், முதலிலேயே சதாம் நேர்மையாகவோ, நியாயமாகவோ செயற்படவில்லை. அப்போதும் அமெரி;க்கா சதாமிற்கு ஆதரவு தருகின்றது சதாம் தன் எதிரிகள்மீது நச்சுவாயுவைப் பிரயோகித்துக் கொல்கின்ற போதிலும், அமெரிக்கா சதாமின் பக்கபலமாக நின்றது. அதாவது அமெரிக்கா தங்கள் நலன் சார்ந்து ஒரு சர்வாதிகாரியை பலப்படுத்திய விழுமியமே பிழையான ஒன்றாகும். இதன் காரணமாகவே, இன்று அமெரிக்கா ஈராக்கில் மூக்குடைபட்டு நிற்கின்றது.
சதாம் ஹீசையின் விடயம் இப்படியென்றால், பின்லாடன் விடயம் வேறு விதத்தில் அமெரிக்காவிற்குச் சிக்கல்களைக் கொண்டு வரக்கூடியது. சதாமும் ஈராக்கும் ஒரு நாடு மட்டும் சம்பந்தப்பட்ட விடயங்களாகும். ஆனால் பின்லாடனோ அப்படியல்ல! பின்லாடன் தனி ஒரு நாட்டுடன் மட்டும் சம்பந்தப்படாதவர். பல இஸ்லாமிய நாடுகளுடன் பின்னிப்பிணைந்து அமெரிக்காவிற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருபவர். ஆகவே பின்லாடனை எதிர்த்து எந்த நாட்டோடு, அல்லது எத்தனை நாடுகளோடு அமெரிக்கா போரிடும் என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா? ஒருவேளை நாளை பின்லாடன் கொல்லப்பட்டாலும், இப்பிரச்சனை தீரப்போவதில்லை பின்லாடன் ஒரு அரசு அல்ல! அது தவிர, அவர் எந்த அரசிலும் இல்லை. ஆகவே குறிப்பிட்ட அரசிற்கோ, நாட்டிற்கோ தடையை விதிக்க முடியாது! இது ஒரு புதிய பாரிய பிரச்சனை. இதைக் கிளப்பியது அமெரிக்காதான். அமெரிக்காவே பிரச்சனையைக் கிளப்புகின்றது. பின்னர் அமெரிக்காவே தீர்வையும் தேடி அலைகின்றது. அமெரிக்காதான் செய்திட்ட பாரிய தவறுகள் காரணமாக தம்மையும் பாரிய அழிவுக்குள் நிறுத்தியுள்ளதோடு மட்டுமல்லாது உலக நாடுகளையும் சேர்த்து இந்த அழிவுக்குள் நிறுத்தியிருப்பதாக மக்கள் கருத்துக்களும், கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
ஆயினும் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்றுதான் நாம் கருதுகின்றோம். அது உண்மையும்கூட.!
உலக வல்லரசான அமெரிக்கா கொண்டிருக்கின்ற ஒரு கோட்பாட்டை அதனுடைய நாட்டு மக்களே மாற்றுகின்ற வேளை இப்போது வந்துவிட்டது. என்பதைத்தான் நிகழ்காலம் காட்டுகின்றது. அமெரி;க்காவின் சமீபத்திய தேர்தல் இதனைத்தான் சுட்டிக்காட்டுகின்றது. இங்கே ஜோர்ஜ் புஷ்ஷிற்கு அரசியல் பிரச்சனை என்றால், அங்கே பிரித்தானியாவில், ரோனி பிளேயருக்கும் அரசியல் பிரச்சனை! இவர்கள் இருவரது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இவர்களது மக்களே ஏற்றுக்கொள்ளாத நிலைதான் இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கூடாக இன்னுமொரு விடயமும் சுட்டிக் காட்டப்படுகின்றது. போருக்கு முன்னால் இருந்த நிலையையும் விட மிக மோசமான நிலையை அமெரிக்காவும், பிரித்தானியாவும் இன்று உருவாக்கி விட்டுள்ளன. இவர்களுக்கு ஏற்பட்ட அரசியல் இராணுவத் தோல்விகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பல இலட்சக்கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். சதாமின் ஆட்சிக்காலத்திலிருந்த அடிப்படை வசதிகள் கூட இன்று ஈராக்கில் இல்லை. இப்படியான இமாலயத் தவறுகளை அவ்வப்போது தொடர்;ச்சியாக மேற்குலகம் செய்து வருவதானது வருந்தத்தக்க உண்மையாகும்.
எதிர்காலத்தில் அமெரிக்கா தனித்து நிற்க வேண்டிய நிலையும் உருவாகக் கூடும். இக்கருத்தினை தர்க்கிப்பதற்காக முன்னர் நடைபெற்ற ஒரு விடயத்தைச் சுட்டிகாட்ட விழைகின்றோம். பல்லாண்டுகளுக்கு முன்பு சூயஸ் கால்வாயை நாசர் தேசிய மயப்படுத்தியபோது பிரிட்டன் எகிப்துமீது படையெடுத்தது. ஆனால் அவ்வேளையில் அமெரிக்கா பிரிட்டனுக்கு ஒத்தழைப்பு தரமறுத்தது. இந்தப் போரில் பிரிட்டன் பலத்த அடி வாங்கிப் பின்வாங்கியது. அதன் பின்னர் பிரிட்டன் கொள்கையளவில் ஒரு தீர்மானத்தை எடுத்ததாக நம்பப்படுகின்றது. அதாவது எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துழைத்து பரஸ்பரம் உதவிகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் முடிவெடுத்தாக அறியப்படுகின்றது. இதனை பிரித்தானியாவின் தற்போதைய பிரதமமந்திரி ரோனி பிளேயர் இன்னும் உயரப் பிடித்து ஈராக் விடயத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தார். இவ்வகையான ஒத்துழைப்பு பிரித்தானியாவின் ஒரு கொள்கையாகவே இருந்து வந்துள்ளது. அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி பிரிட்டனின் இந்தக் கொள்கை இனி மாற்றத்துக்கு உள்ளாகக் கூடும். அமெரிக்கா சொல்வதற்கெல்லாம் தாளம் போடுவதற்கு வருங்காலத்தில் பிரித்தானியா இணங்காது. அமெரிக்கா தனிமைப்படுத்தப்படும். பிரித்தானியாவின் எதிர்காலப் பிரதமர்கள் இந்தப் புதிய கொள்கைளை அமல்படுத்தும் நிலை உருவாகும். விசித்திரம் என்னவென்றால் அந்தப்பாரிய மாற்றத்தையும் ஈராக்தான் கொண்டு வருகின்றது. அதேபோல் முஸ்லிம் உலகைக் கொள்கையளவில் ஒருங்கிணையச் செய்த புண்ண்pயத்தையும் புஷ்தான் சம்பாதித்துள்ளார்.
ஈராக்கில் நடைபெறுகின்ற போருக்கு எதிராக இன்று அமெரிக்கா மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அமெரிக்கா மக்கள் தங்கள் மனச்சாட்சிப்படி போருக்கு எதிராக தமது தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். ஆகவே ஈராக் மீதான போருக்கு ஆதரவாக இன்று யாராவது பேசினால் அது அமெரி;க்க மக்களுக்கு எதிராக அவர்களுடைய நலனுக்கு எதிராகப் பேசுவது என்றே கருதப்படும் போருக்கு ஆதரவானவர்கள் அமெரிக்கா மக்களுக்கு எதிரானவர்கள் ஆவார்கள்.
அமெரிக்கா போன்ற மேற்குலகங்கள் சில விடயங்களைப் பொதுமைப்படுத்திப் பார்ப்பது, இன்றைய பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளது. பயங்கரவாதச் செயல்களையும், நீதியான விடுதலைப் போராட்டங்களையும் பொதுமைப்படுத்தி அவற்றை பயங்கரவாதம் என்றே அடையாளப்படுத்தித் தனிமைப்படுத்த முனைவது மேற்குலகின் தற்போதைய கோட்பாடாக உள்ளது. இத்தோடு இன்னமொரு தவறையும் மேற்குலகம் தெரிந்தே செய்கின்றது. அது என்னவென்றால், பேரினவாத அரசுகள் எது செய்தாலும் தவறில்லை. ஆனால் போராட்டக் குழுக்கள் செய்வது யாவுமே தவறு என்ற நடுநிலை தவறி நடக்கும் செயலாகும். இந்தப் பொதுவான பொதுமைப் படுத்துகின்ற கோட்பாடு ரீதியான பிழைகாரணமாக அழிவுபடுவது அப்பாவிப் பொதுமக்கள்தான். மேற்குலகத்தின் இந்தப் பொதுமைப்பாட்டுக் கொள்கை இலங்கையிலும் கடைப்பிடிக்கப்படுவதனால் இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு தனது கடும்போக்கை இன்னமும் வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகின்றது.
எவ்வாறு மேற்குலகம் ஈராக்கின் உள்ளுர்ப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாமல் அந்த நாட்டு விவகாரங்களில் தலையிட்டதோ, அதேபோல் இலங்கையின் உட் பிரச்சனைகளை முற்றாகப் புரிந்து கொள்ளாமல் அங்கே நடுநிலை பிறழ்ந்த நிலையை எடுத்து வந்துள்ளது. இதன் காரணமாக, அரசு என்றால் எதனையும் செய்யலாம் அதனைக் கண்டிக்க தேவையில்லை என்றும் விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கு எத்தகைய நியாயங்கள் இருந்தாலும் அவற்றை ஏற்று நிற்பதில்லை. என்றும் மேற்குலகம் இதுவரை செயற்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக இலங்கையின் பேரினவாத அரசைத்தான் மேற்குலகம் இதுவரை பலப்படுத்தி வந்துள்ளது. பேரினவாத அரசு எத்தகைய அராஜகச செயல்களைச் செய்தாலும் பரவாயில்லை, ஆனால் உங்கள் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்காக நாம் உங்களுக்கு எதையும் செய்வோம் என்று மேற்குலகம் இதுவரை கூறி வந்ததன் காரணமாகத்தான் சிங்கள அரசு துணிவு கொண்டு தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றது.
சிறிலங்கா அரசுகளின் அநீதிகளை அறிந்த பின்னரும், அதற்கு பயிற்சி வழங்குவோம், ஆயுதங்களை வழங்குவோம் என்ற பழைய கோட்பாடு அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவாது. ஒவ்வொரு நாட்டுக்கும் தன் நலன்சார்ந்து இயங்குகின்;ற போக்கு உண்டுதான். அது உலகநியதியாகவும் இருந்து வருகின்றது. ஆனால் அதற்காக இலட்சக்கணக்கான பொதுமக்களைப் பலியிடுவது என்பது நவீன உலகிற்குப் பொருந்தாத ஒன்றாகும். மேற்குலகம் 15ம், 16ம் நூற்றாண்டுச் சிந்தனைகளை இன்னமும் வைத்துக்கொண்டு மக்கள் நலனுக்கு புறம்பாகச் செயற்பட்டு வருவதற்கு எதிராக மேற்குலகப் பொதுமக்களே எழுந்து வருவதைத்தான் தற்போதைய நிலைமைகள் சுட்டிக் காட்டுகின்றன.
இங்கே மேற்குலகத்தின் பொதுமக்களுக்கும், சிpறிலங்காவின் சிங்களப் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பட்ட இடைவெளி இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். மேற்குலகப் பொதுமக்கள் இப்போது உதாரணத்திற்கு அமெரி;க்கப் பொதுமக்கள்-தங்களுடைய முன்னைய கருத்துக்கள் பிழையானவை என்று உணர்ந்தால் அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. ஆனால் சிங்களப் பொதுமக்களோ சமாதானத்தின் பயனைத் தாங்கள் மட்டும் அனுபவித்துக் கொண்டு, யுத்தத்தை முன்னெடுக்கும் கடும்போக்கினரை ஆதரித்து வருபவர்களாவார்கள். சிங்கள மக்களின் பெரும்பான்மையானோர் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தைக் கண்டிப்பதில்லை. அமெரிக்க மக்களைப் பொறுத்தவரையில் ஈராக் யுத்தம் குறித்து முதலில் ஒன்றும் விளங்காது போயிருந்தாலும் காலப்போக்கில் அவர்கள் நிலையைப் புரிந்து கொண்டுள்ளார்கள். முதலில் அமெரிக்க அரசின் பரப்புரையில் அள்ளுண்டு அவர்கள் போயிருந்தாலும், பிறகு உண்மை நிலையை அறிகின்றபோது தமது அரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள். முதலில் சதாம் பெரிய அழிவு தரக்கூடிய குண்டுகளை வைத்திருக்கின்றார். அவற்றை அமெரிக்காமீது போடப்போகின்றார். அல்கொய்தாவுடன் அவருக்கு தொடர்பு என்றெல்லாம் அமெரிக்கப் பொதுமக்கள் நம்பினார்கள்தான்! ஆனால் இப்போது அமெரிக்கப் பொதுமக்களுக்கு தமது அரசின் உள்நோக்கம் புரிந்து வருகின்றது. தம்மீதான அச்சுறுத்தல் என்பது ஒரு பரப்புரைப் பொய் என்பதையும், அமெரிக்க மக்கள் உணர்;ந்துள்ளார்கள். அங்கே மக்களுக்கு உரிமையும், வலிமையும் உண்டு. அதற்கேற்ற நடுநிலையான உண்மையை எழுதுகின்ற பேசுகி;ற ஊடகங்களும் அங்கு உண்டு.
இவை எதுவும் சிறிலங்காவில் இல்லை.! சிங்களப்பௌத்தப் பேரினவாதத்தை ஊடகங்களும், கட்சிகளும் பிக்குமார்களும் கக்கி வருகி;ன்றார்கள். சிங்கள மக்கள் போருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார்கள். சிறிலங்கா அரசோ ஹிட்லருக்கு ஒப்பான பயங்கரவாதச் செயல்களை தமிழினத்தின் மீது புரிந்து வருகின்றது. ஆனால் மேற்குலகமோ மரபு சார்ந்து சிpறிலங்கா அரசைக் கண்டிக்காது இதுவரை நடந்து வந்துள்ளது. எனினும் இது குறித்து மாற்றம் உடனடியாக வராவிட்டாலும் திருத்தம் ஒன்று வருவதைத் தவிர்க்க முடியாத நிலை மேற்குலகத்திற்கு ஏற்படக்கூடும். இந்தத்திருத்தம் கோட்பாட்டு ரீதியான கொள்கை ரீதியான மாற்றத்தையும் மேற்குலகிற்கு கொண்டுவரும்!
அமெரிக்க மக்கள் உட்பட்ட மேற்குலக மக்கள் அநியாயம் என்று தமக்குத் தெரிந்தவற்றிற்கு எதிராக போராடும் குணம் படைத்தவர்கள். ஆவார்கள். அன்றும் தமது அரசுக்கு எதிராக வியட்நாம் போருக்கு எதிராக போராடினார்கள். இன்றும் தமது அரசிற்கு எதிராக ஈராக் போருக்கு எதிராக போராடுகின்றார்கள். இதற்காக அமெரிக்கா மக்கள் தங்களது சகல ஜனநாயக உரிமைகளையும் விழுமியங்களையும் உபயோகிக்கின்றார்கள். அவர்களது அரசும் அவர்களைத் தடைசெய்வதில்லை. நாளை சிpறிலங்காவின் உள்விடயம் வெளிவரும்போது அமெரிக்க மக்கள் தங்களுடைய அரசின் அரசியல் போக்கை முற்றாக நிராகரிப்பார்கள்.
ஆனால் இத்தகைய உயர் ஜனநாயக விழுமியங்களைப் போற்றி பேணுகின்ற பண்பு, சிங்களத் தலைவர்களிடமும் இல்லை. பெரும்பான்மையான சிங்களப் பொதுமக்களிடமும் இல்லை. ஆகவே இன்றைய கொடூரச் செயல்களுக்கும், நாளைய விளைவுகளுக்கும் இவர்களே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டி வரும்! |