Selected Writings by Sanmugam Sabesan, சபேசன், அவுஸ்திரேலியா அர்த்தமுள்ள புத்த மதம் 2 October 2006
இன்று இலங்கையில் சமாதானப்பேச்சு வார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டு பிரகடனப் படுத்தப்படாத யுத்த நடவடிக்கைகளும், சமாதான ஒப்பந்த மீறல்களும், மனித உரிமை மீறல்களும் தினமும் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு அனர்த்தங்களுக்கும் மூலகாரணமான சிறிலங்கா அரசு சமாதானப்பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காகப் பல புதிய நிபந்தனைகளை தினமும் தெரிவித்து வருகின்றது. சிறிலங்கா அரசு தனது பல அரிதார முகங்களினூடாக முன்னுக்குப்பின் முரணான நடைமுறைச் சாத்தியம் இல்லாத, நியாயமான பேச்சு வார்த்தைகளுக்குப் புறம்பான நிபந்தனை விதித்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சமாதானப்பேச்சு வார்த்தைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லக்கூடுமா என்ற ஐயமும் பலமாக எழுந்துள்ளது.
‘சிங்கள - பௌத்த பேரினவாத அரசுகள், தமிழீழ மக்களின் தேசிய மற்றும் வாழ்வியல் பிரச்சனைகளை, சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாக தீர்த்து வைக்க மாட்டாது’ - என்ற கருத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம். இக்கருத்தைப் பல தளங்களில் பலகோணங்களில் ஏற்கனவே நாம் தர்க்கித்து வந்தும் உள்ளோம். அவற்றில் ஒரு கருத்தை வேறு ஒரு பரிமாணத்தில் வைத்து சிந்திக்க விழைகின்றோம்.
சிங்கள-பௌத்த பேரினவாதம் என்று நாம் கூறும்போது, சிங்கள மொழிக்கும், இனத்துக்குமான ஆதிக்க வெறியையும், பௌத்தமதத்தின் தனி மேலாண்மைக்கான மதவெறியையும் இணைத்த பேரினவாதக் கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்கின்றோம். இன்று சிங்கள மொழியைப் பேசுபவர்களில் கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள் ஆகியோர் இருந்தாலும் பேரினவாதம் என்பதானது பௌத்த மதத்தை கடைப்பிடிப்பவர்களாகத் தங்களை காட்டிக் கொள்பவர்களிடமிருந்து தான் மூர்க்கமாகப் புறப்படுகின்றது. சிங்கள இனத்தின் பேரினவாதச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்பவர்கள், அவற்றை பௌத்தப் பேரினவாத செயற்பாடுகள் ஊடாகத்தான் செயற்படுத்தி வருகின்றார்கள். சிங்கள பேரினவாதத்திற்கான செயற்பாடுகள் யாவும், பௌத்த பேரினவாதத்தை குறியீட்டாக வைத்து மேற்கொள்ளப்படுகின்ற விசித்திரத்தையும் நாம் இங்கே காண்கின்றோம். சிங்களமொழிக்கும், சிங்களப் பண்பாட்டிற்கும் கொடுக்கப்படுகின்ற உயர்வைக் காட்டிலும், புத்தமதத்தின் மேலாண்மைக்கே முதலிடம் கொடுக்கப்படுகின்றது. அதற்குக் காரணம் உண்டு.! பௌத்தப் பேரினவாதம் என்ற குறியிPட்டின் ஊடாகத்தான் சிங்கள பேரினவாதத்தை இந்தச் சக்திகள் முன்னிறுத்த விழைகின்றன. பெரும்பான்மையான புத்ததுறவிகளும், பீடங்களும் இவற்றிற்குத் துணையாக நிற்பதை நாம் வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் புத்தமதம் ஒரு பேரினவாத மதமா? அதனை போதித்த புத்தர் ஒரு பேரினவாதியா? புத்தரையும் புத்த மதத்தையும் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள் உண்மையாகவே அவ்வாறு செயற்படுகின்றார்களா? அர்த்தமுள்ள புத்தமதத்தை இவர்கள் ஓர் அர்த்தமற்ற பித்த மதமாக்குகின்றார்களா?
புத்தர் யார்? - புத்த மதம் என்ன சொல்கின்றது? மிகப்பெரிய விடயத்தை இயன்றளவு சுருக்கமாகப் பார்ப்போம்.
தவிரவும் அரசியல் ரீதியாகப் பல கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்ற இன்றைய - இந்தக் காலகட்டத்தில், புத்தர் குறித்தும், புத்த மதம் குறித்தும் ஒரு தெளிவான பார்வை அவசியம் என்றும் நாம் கருதுகின்றோம்.
புத்தரின் பின்புலத்தை அவரது வாழ்க்கையை நாம் ஆய்வு செய்வதற்கு முதல் ‘தாசர்கள்’ என்று முன்னாளில் அழைக்கப் பட்ட திராவிட இனத்தவர்களின் சிந்துவெளி வாழ்வினையும், பின்னர் ஏற்பட்ட ஆக்கிரமிப்புக்கள், போர்கள், மாற்றங்கள் குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பண்டைக்கால உலகில் வௌவேறு நாடுகளில் சிதறிக் கிடந்த மனித இனம் தத்தம் நாடுகளின் தட்ப வெட்பத்திற்கும், சுற்றுப்புற சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டார்கள். மக்கள் பல தொகுதிகளாக பிரிந்து வாழ்ந்து அறிவிலும் வளர்ச்சியடையத் தொடங்கினர்.
இவர்களில் ஒரு பகுதியினர் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விலங்கு வாhழ்க்கையிலிருந்து விடுபட்டு வேட்டையாடவும், கால் நடைகளை வளர்க்கவும், தானியங்களை பயிரிடவும் கற்றறிந்தார்கள். இவ்வாறு அறிவால் முதிர்ச்சியடைந்தவர்கள் “மத்தியதரைக் கடலைச் சுற்றிய பகுதிகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆபிரிக்காவில் சில இடங்கள், எகிப்து, தென்னிந்தியா, அடங்கிய சிந்து வெளிப்பகுதி போன்ற இடங்களில் வாழ்ந்தார்கள்”- என்று வரலாற்று அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் “தாய்லாந்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள், பர்மிய, மலேய நாட்டினர், சிந்துவெளி தென்னிந்திய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்”- ஆகியோர்களே உலகில் முதன் முதலில் பயிர் சாகுபடி செய்யத் தொடங்கிய முதல்கட்ட விவசாயிகள். முதன் முதலில் பருத்தியை பயிரிட்டு அதனைப் பயன்படுத்தியவர்கள் சிந்துவெளியினர் ஆவார்கள். அதாவது அன்றைய திராவிட தேசத்தில் பரந்து ஆங்காங்கே வாழ்ந்து வந்த திராவிடர்களே பருத்தியை பயிரிட்டார்கள். இந்த மக்களிற் சில பகுதியினர் 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறந்த நகர நாகரிக வாழ்வைத் தொடங்கினார்கள். அன்றைய உலக ஒப்பீட்டளவில், ஏற்றம் பெற்ற நாகரிக மக்களாக அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த மக்கள்தாம் “மெசப்பொட்டேமியர், பாபிலோனியர், எகிப்தியர், பொனீசியர் சிந்துவெளி மக்கள்” ஆகியோராவார். இதற்கடுத்த ஆயிரம் ஆண்டுகளில் சீனமும் தொடர்ந்து நகர-நாகரிக வாழ்வில் முன்னேறியது.
சிந்துவெளி மக்களின் பண்பாடும், நாகரீகமும் பின்னாளில் ஆக்கிரமிப்புக் காரர்களினால் மாறியது. சீனர்கள் மாற்றம் எதுவும் இல்லாமல் வாழ்வதோடு புத்தரைப் போற்றுகின்ற மக்களையும் அங்கு காண்கின்றோம்.
‘தாசர்கள்’ என்கின்ற ‘திராவிட மக்களின்’ சிந்துவெளி நாகரிகம், கண்ட பண்பாடும் நாகரிகமும் எப்படிச் சிதைந்தது என்ற கேள்விக்கு ஆரியர் படையெடுப்பும், ஆக்கிரமிப்புமே காரணமென்பதை இன்று சகல வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புக் கொள்கின்றார்கள். இந்த ஆரியர் ஆக்கிரமிப்பு எப்போது நடைபெற்றது என்பது குறித்து பல முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் இந்த ஆக்கிரமிப்பு, கிறிஸ்துவிற்கு முன் 1700களில் நடைபெற்றிருக்கலாம் என்ற ஆய்வுக் கருத்தை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஓர் ஆதாரத்தையும் நேயர்களின் கவனத்துக்கு இங்கு தருகின்றோம்.
பாபிலோனியாவில் எருதுகளுக்கு பின்னர்தான், குதிரைகள் பழக்கத்திற்கு வந்தன. யேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்புவரை அந்த நாட்டில் குதிரைகளைப் பயன்படுத்துவது பற்றி ஒன்றுமே தெரியாது. பாhபிலோனியாவில் கிறிஸ்துவிற்கு முன்னர் 1760ம் ஆண்டளவில் தனது குதிரைப் படையின் வலிமை கொண்டு ஒரு பேரரசைக் கேகிகளின் தலைவனான கந்தச் என்பவன் நிறுவியதாக வரலாறு கூறுகின்றது. ஆரியர்களின் வேதத்தில் பல இடங்களில் குதிரையின் பெருமை குறித்து வர்ணிக்கப் பட்டுள்ளது. ஆரியர்கள் சப்த சிந்து மீது படையெடுத்த நிகழ்ச்சி, கிறிஸ்துவுக்கு முன் 1700 ம் ஆண்டுக்கு முன்பாக நிகழ்ந்திருக்க முடியாது என்று ஆய்வாளர் கோசம்பி குறிப்பிடுகின்றார். மேலும் ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த (புசகைகiவா) கிறிவித் என்பவர் இவ்வாறு கூறுகின்றார். ‘தாசர்கள் இந்தியாவின் பழங்குடியினர். ஆரியர்களைக் கடுமையாக எதிர்த்து நின்றவர்கள். எனவே ஆரியர்களை எதிர்த்த பழங்குடியினரை ‘நாஸ்திகர்கள் கொடுமையானவர்கள், அசுரர்கள், இராட்சதர்கள்’ என்று வேதத்தைப் பாடியவர்கள் குறிப்பிடுகின்றார்கள்’ என்று கிறிவித் குறிப்பிட்டுள்ளார். அதாவது பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்தை எதிர்த்த மகாத்மா காந்தியை பிரிட்டிஸஷ் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் (ர்யடக-யேமநன குயமசை) அரை நிர்வாண பக்கரி- என்று இழிவுபடுத்தியது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன் வாசகர்களே!
திராவிட மக்களின் பொருளதாரமும், வாழ்வியலும் எவ்வாறு சிதைக்கப் பட்டன? அதையும் ரிக்வேதம் சொல்லுகின்றது.
‘இந்திரன் அகி என்ற தாசனைக் கொன்று ஆறுகளை விடுதலை செய்தான்’- (ரிக்வேதம்-சுலோகம் 2-12-3)
இதன்மூலம் தாசர்கள் கட்டிவைத்த அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் உடைக்கப் பட்டன என்பது தெளிவாகின்றது.
‘நீ ஐம்பதாயிரம் கருப்பர்களை கொன்றாய் சம்பரனின் நகரங்களை அழித்தாய்!’ - (ரிக் வேதம்-சுலோகம்-1-53-13)
இங்கே கறுப்பர்கள் என்பது தாசர்களை-திராவிடர்களை!
ஆரியர்கள் மதுவை குடித்தார்கள். பசு, குதிரை போன்ற விலங்குகளின் மாமிசத்தையும் உண்டார்கள்.
‘இந்திரனே! இங்கே வா! இந்தப் புதிய சோமபானத்தைக் குடி’! ‘சோமக்குடியனே! குதிரைக்கறியை உண்டு களித்திரு. எங்களைத் தாசர்களிடமிருந்து காப்பாற்று!’ (ரிக் வேதம்-சுலோகம் 1-162-2-13)
இது அன்றைய வரலாற்றின் ஒரு பகுதி. சரி, இதற்கும் புத்தருக்கும் என்ன சம்பந்தம்? என்று வாசகர்கள் கேட்பது எமக்கும் புரிகின்றது. இதுவரை நேரமும் பின்புலத்தைச் சொன்னதற்குக் காரணம் புத்தர் எவ்வளவு பெரிய ஆக்கிரமிப்புக் காலத்தில் வாழ்ந்தவர் என்பதைக் காட்டுவதற்கு தான்.
ஏனென்றால் புத்தர் என்பவர் இன்றைய சிங்கள பிக்குகளின் கைகளில் இருக்கும் பொம்மைப் புத்தர் அல்ல. உலக வரலாற்றில் சமஉரிமைக்குப் போர் தொடுத்த முதல் சரித்திர நாயகர்களில் ஒருவர். உண்மையை சொல்லப் போனால் திராவிடர்களை அடித்து விரட்டியதற்கு, ஆரியர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த முதல் மனிதர் அவர் தான். தாசர்களின் ஒரு பிரிவினரான யாதவர்கள் ஆட்சி செய்த கங்கை வெளியையும் ஆரியர்கள் வெற்றி கொண்டது குறித்து பின்னர் புத்தர் இவ்வாறு கூறுகின்றார்.
‘நமது யாதவர்களை எங்கோ இருந்து வந்த அன்னியர்கள் அன்று தாக்கிக் கொன்றார்களே, அப்போது உங்களுடைய இந்தக் கோபம், ரோசம், வேகம் எல்லாம் எங்கே சென்றிருந்தன? இன்று எமது உற்றார் உறவினர்களை அடிப்பதற்குக் கம்புகளைத் தூக்குகின்ற நீங்கள், யாதவர்களை ஏன் காப்பாற்றப் போகவில்லை?’
என்று தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்ளும் தாசர்களைப் பார்த்து புத்தர் கேட்டுள்ளார்.
புத்தர்மீது ஆரியர்கள் மிகுந்த வெறுப்பையும், கோபத்தையும் காட்டினார்கள் என்பதை வேதநூல்களிலிருந்து நாம் அறியலாம். ‘வேதபாவியான சாக்கியன் செய்யத் தகாத காரியங்களைச் செய்கின்றவன். அவனை பிராமணர்கள் மதிக்கக் கூடாது.! உணவு அளிக்க கூடாது. பேசவே கூடாது’ (மனுதர்மம்-அத்தியாயம் 4-சூத்திரம் 30)- சாக்கியன் என்பது புத்தனை!
இன்னும் ஏன்? இராமாயணம் எழுதிய வால்மீகி, புத்தனை ஒரு திருடன் என்றே கூறுகின்றார். அது வருமாறு- ‘அந்தப் புத்தன், திருடன் எப்படியோ அப்படித்தான்! இந்த உலகில் புத்தமதம் வேதத்திற்கு புறம்பானது. என்று நன்கு அறிவீராக! ஆகையினால் நாஸ்திகருக்குப் புத்திமான் முகம் கொடுக்க மாட்டான்!’ (வால்மீகி இராமாயணம்-ஸர்க்கம் 1502)
இதன் மூலம் புத்தர் ஒரு திருடனாகவும், நாஸ்திகனாகவும் சித்தரிக்கப் படுகின்றார்.
புத்தரின் போதனைகள் என்ன? எவற்றை அவர் வலியுறுத்தினார்?
புத்தரின் கோட்பாடுகள் வர்ண தர்மத்தை- சாதிப் பாகுபாட்டை-முற்றாக நிராகரித்தன. அவை சமூக உறவுகளில் பரிவையும், ஒழுக்கத்தையும் பகிர்ந்து கொள்ளுதலையும் வலியுறுத்தின. மதத்தையும் அரசையும் ஒட்ட விடாமல் பிரித்தன. வாசகர்களே! இது ஒரு முக்கியமான விடயம். புத்தரின் போதனைகள் மதத்தையும் அரசையும் ஒட்டவிடாமல் பிரித்தன. ஆனால் சிறிலங்காவில் நடப்பதென்ன? புத்தமதமே அரசு. அரசே புத்த மதம். இதேபோல் இந்தியாவின் இந்துத்துவ வாதத்தையும் நோக்க வேண்டும்.
சமூக நடைமுறைக்கேற்ப ஒழுங்கமைவு கொண்ட தத்துவமும், மக்கள் ஆதரவைத் திரட்டி வழி நடத்துவதற்கான ஸ்தாபனமும் படைக்கப் பெற்று சாதிய எதிர்ப்பு பின்னாளில் முழுமையாக மலர்ந்தது. இந்தப் பெரும் புரட்சியை சாதித்தவர் புத்தர்! அவரது கோட்பாட்டுத் தொகுதியும் சகல சாதியினருக்கும் இடமளித்த சங்கமும், பார்ப்பனிய ஆதிக்கத்தைக் குலைத்தன. வருண தர்மத்தைப் புத்தர் முற்றாக நிராகரித்ததன் மூலம் மேல் சாதிகளுக்கு, குறிப்பாக பார்ப்பனருக்கு அரசியல் சிறப்புப் பங்கு கிடைப்பதைத் தடுத்தன. அதற்குப் பதிலாக அனைவருக்கும் பொதுவான அரசையும், பொதுச்சட்டத்தையும் முன் வைத்தன.
புத்தரின் இயக்க வளர்ச்சியும் பார்ப்பனியச் செல்வாக்கற்ற மகதப் பேரரசின் வளர்ச்சியும் ஒன்றாகவே நிகழ்ந்த விடயங்கள்.! தற்செயலாக நடந்தவையல்ல. வருண தர்மத்திற்கு மாற்று கண்டறியப் பட்டதும் அதற்கேற்ப ஒரு நல்ல சமூகத்தைக் கட்டியமைக்க அரசு கருவியாக்கப் பட்டதும் பல்வேறு சமூகத் துணுக்குகளின் சார்பில் செய்யப்பட்ட கூட்டு முயற்சியாகும். மகதப் பேரரசின் மன்னர்கள் சூத்திரர்களும், கலப்பு இனத்தவர்களுமாவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். புத்தருக்கென்ற மிகத் தெளிவான மொழிக் கொள்கை ஒன்று இருந்தது. இந்த வட்டாரங்களிலுள்ள மக்களது மொழிதான் போற்றிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற புத்தர் வெளிப்படையாகவே நிலைப்பாடு எடுத்தார். (இப்போதைய சிங்கள சிறிலங்கா அரசுகளின் நிலைப்பாடு இதுவல்ல என்பதையும் நேயர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.) சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்பது முக்கியமெனக் கொள்ளப் பட்டது. புத்தரது போதனை முழுவதும் ‘மகதநாட்டின் அர்த்தமாகதி’ என்னும் மக்கள் மொழியில்தான் அமைந்தது.
புத்தரைத் தூண்டிய காரணங்கள் வேறு எவையாக இருக்க முடியும்? அன்றைய காலகட்டத்தில் பார்ப்பனிய மதம், கடவுளையும் ஆன்மாவையும் நிரந்தரம் என்றது. ஆன்மாவை முன்னிட்டு வேள்விகள், பலிகள், சடங்குகள் என வலைகள் விரிக்கப் பட்டன. கடவுள் ஆன்மா பற்றிய அறிவு பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்றது. அதையும் புரியாத மொழியில் பதுக்கி வைத்துக் கொண்டது. ‘எங்களது வடிவில் இறைவனை தரிசி. ஏனென்றால் நேரடி அறிவுக்கு நீ அருகதை அற்றவன்!’ என்று பார்ப்பனியம் போதித்தது.
பின்னாளில் அசோகச் சக்கரவர்த்தியின் தடையுத்தரவு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வேள்வியும் உயிர்ப்பலிகளும் நிறுத்தப்பட்டன. அதனால் பல்லாயிரம் உயிர்கள் பிழைத்தன. பார்ப்பனப் புரோகிதர்கள் தங்கள் மீதான நேரடித் தாக்குதலாக இதனை எடுத்துக் கொண்டார்கள்.
சமுதாய ஏற்றத் தாழ்வுகளை, ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடியவர் புத்தர். நிலையாமை என்ற கருத்தை வலியுறுத்தியவர். அவரைப் பொறுத்தவரையில் கடவுள் என்ற கருத்துக்கும் நிலையாமை பொருந்தும். பின்னாளில் கார்ல் மார்க்ஸ் கூறியது போல மாற்றம் ஒன்றுதான் நிரந்தரமானது.
ஆனால் புத்தருக்குப் பின்னர் நிலைமைகள் விரைந்து மாறின. சுகபோக வடிவான இந்திரனைவிட சுயநல மறுப்பின் உருவான புத்தரே வழிபாட்டிற்கு பொருத்தமானவர் என்ற நம்பிக்கை பரவத் தொடங்கியது. இது கடவுள் நம்பிக்கை என்ற வடிவத்தில் மாற்றம் பெற்றது. புத்தரின் இயக்கம் புத்தரின் மதமானது. புத்தரின் சமூகப் பொறுப்பு வாய்ந்த கருத்தாக்கங்களை யேசுநாதரிடமும் நபிகளாரிடமும் காணக் கூடியதாக உள்ளது. இவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களே!
புத்தர் நிலையாமைக் கொள்கை மூலம் சமூக வளர்ச்சிக்கு வழிவகுத்தார். இதே நிலையாமைக் கொள்கையைத்தான் சைவ சமயமும் வலியுறுத்தி நின்றது. சிவன் நெருப்பு உருவமானவன். நிலையாமையை உணர்த்துபவன். தன் பாதியை உமையவளுக்கு தருபவன். தக்கனின் வேள்வியை அழித்தவன். இந்திரனின் தோளை முறித்தவன். சந்திரனின் முகத்தை காயப்படுத்தி, சூரியனின் பல்லை உடைத்தவன். யாகத்தின் அதி தேவதையாம் எச்சனை அழித்தவன். இச் செயல்களுக்குரிய அடிப்படைக் காரணங்கள் இப்போது நேயர்களுக்கு புரிந்திருக்கும்.
பின்னாளில் இவை திரிபு படுத்தப்பட்டதும், சைவ சமயம் இந்துமதம் என்பதற்குள் உள்வாங்கப் பட்டு சிதைந்து போனதும் வேறு ஆய்வுக்கு உரியதாகும்.
அன்புக்குரிய வாசகர்களே!
கருணையே வடிவான புத்தனை, சமநீதிக்காகப் போராடிய புத்தனை மொழிக் கொள்கையில் தெளிவான புத்தனை, ஆரியர்களை எதிர்த்துத் திராவிடர்களுக்காக குரல் கொடுத்த புத்தனை ஒரு புரட்சிக்கார புத்தனை இன்றைய சிங்கள சிறிலங்கா அரசுகளும், பௌத்த மட பீடங்களும், பிக்குகளும் எவ்வளவு திரிபுபடுத்தியுள்ளனர் என்பதை நேரம் கருதி இயன்ற அளவில் ஒரு வரைமுறைக்குள் வைத்துச் சுட்டிக் காட்ட முனைந்தோம். இதற்கு ‘சிந்து முதல் குமரி வரை’ ‘சமூக நீதிப்போராட்டம்’, ‘புதைந்த உண்மைகள் - புதிய ஆய்வுகள்’ போன்ற ஆய்வு நூல்களும், கட்டுரைகளும் உதவியதோடு ரிக்வேதம், மனுதர்மம், வால்மீகி இராமாயணம் போன்ற நூல்களும் பயன்பட்டன. சில நூல்களின் சொல்லாக்கங்கள் அப்படியே எடுத்தாளப் பட்டுள்ளன. சம்பந்தப் பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள். |