தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > மீறப்படுவது ‘போர் நிறுத்த ஒப்பந்தம்’ மட்டுமல்ல. . . நம்பிக்கை ஒப்பந்தமும் கூட

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

மீறப்படுவது ‘போர் நிறுத்த ஒப்பந்தம்’ மட்டுமல்ல. . .
நம்பிக்கை ஒப்பந்தமும் கூட

28 August  2006


சிறிலங்காவின் புதிய அரச அதிபராக, மகிந்த ராஜபக்ச பதவியேற்றுக் கொண்ட கடந்த ஒன்பது மாதக்காலப் பகுதிக்குள, இலங்கையில் நிலைமைகள் விபரீதத்தின் எல்லைகளை தொட்டு விட்டன. அதிபர் ராஜபக்சவின் சிந்தனைகளும், பேச்சுக்களும், செயற்பாடுகளும் பெரும் போர் ஒன்றை தமிழ் மக்கள் மீது வலிந்து திணிப்பதற்கான பாதையிலேயே பயணித்து வருவதை நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நிழல் யத்தமொன்றை நடாத்திக் கொண்டிருந்த சிறிலங்கா அரசு பின்னர் மென்தீவிர யுத்தம் என்கின்ற அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இப்போது பிரகடனப் படுத்தப்படாத தீவிர யுத்தமொன்றை மேற்கொண்டு வருகின்றது. மகிந்த ராஜபக்சவின் அரசு இத்தோடு மட்டும் நிற்கவில்லை. யுத்தச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், நிவாரண உதவிகளையும் செய்யாமல், இவற்றை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

கடந்த மாதமான ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் இருந்து போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை சிறிலங்கா அரசு மிக வெளிப்படையாகவே மீறத் தொடங்கியது மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட பாரிய தாக்குதல்கள் ஆக்கிரமிப்புக்கள் யாவும் போர்நிறத்த ஒப்பந்த விதிகளை அப்பட்டமாகவே மீறிய செயல்களாகும். விமானக்குண்டு வீச்சுகள், எறிகணைத் தாக்குதல்கள், இராணுவ நகர்வுகள் போன்றவை மூலம் சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் செயல் இழக்கச் செய்து விட்டது. ஜீலை மாத இறுதியில் சிறிலங்கா அரசு மாவிலாறு பகுதியில் ஆரம்பித்த தேவையற்ற வலிந்த இராணுவ நடவடிக்கையும், பின்னர் தேனகம் மீதும், முகமாலை, கஞ்சிகுடிச்சாறு பிரதேசங்களில் நடாத்திய தாக்குதல்களும் சிpறிலங்காவின் உள்நோக்கத்தை கட்டியம் கூறின. செஞ்சோலை வளாகப் படுகொலைகளும், சம்பூர் பிரதேச ஆக்கிரமிப்பும் சிறிலங்கா அரசு தமிழர்களின் பிரச்சனைக்கு எந்த விதமான தீர்வைத் தர விரும்புகின்றது என்பதைத் தெளிவாக்கி விட்டது.

இன்று சிறிலங்கா அரசு, தமிழ் மக்கள் மீத உத்தியோக பூர்வமற்ற போர் ஒன்றை வெளிப்படையாகவே ஆரம்பித்துள்ளது. தமிழ் மக்களை பொறுத்த வரையில் போர் நிறுத்த ஒப்பந்தம் என்பதானது இன்று சிறிலங்கா அரசால் உத்தியோக பூர்வமாக மீறப்பட்டுள்ளதாகவே கருதுகின்றார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட சர்வதேச நாடுகள் இது குறித்துக் காத்திரமான செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாமல் வாளாவிருக்கின்றன. இதன் காரணமாக தமிழீழ மக்கள் தமது மனத்தளவில் சர்வதேச நாடுகளோடு கொண்டிருந்த நம்பிக்கை ஒப்பந்தமும் சீர்குலைந்து போகின்றது.

நாம் இவ்வாறு தர்க்கிப்பதற்குத் தகுந்த காரணங்கள் உண்டு.

நாலரை ஆண்டுகளுக்கு முன்பு 2002ம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும, சிறிலங்காவின் அன்றைய அரசும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டபோது தமிழ் மக்கள் மகிழ்ச்ச்p மட்டுமல்ல, மிகுந்த நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள். கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் தமிழ் மக்கள் எத்தனையோ சமாதான முன்னெடுப்புக்களையும் பேச்சு வார்த்தைகளையும் ஒப்பந்தங்களையும் பார்த்தவர்கள்தான். அவை யாவும் எவ்வாறு கானல் நீராகக் கைக்கு எட்டாமல் போனதையும் தமிழீழ மக்கள் அறிவார்கள்தான். இவ்வாறு எதுவும் கைக்கூடாமல் போனதற்கு காரணம் மாறி மாறி அரசாண்ட சிறிலங்கா அரசுகளின் மாறாத சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைகள் தான். என்பதையும் தமிழீழ மக்கள் அறிவார்கள்தான் எந்த (சிங்கள)சிறிலங்கா அரசும் தமிழ் மக்களுக்கு நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான தீர்வைச் சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாக தரமாட்டாது என்பதையும் தமிழீழ மக்கள் தமது பட்டறிவினால் அறிந்து புரிந்து வைத்திருந்தார்கள்தான்.

ஆனாலும் அன்று - அதாவது நாலரை ஆண்டுகளுக்கு முன்பு 2002ம் ஆண்டின் பெப்ருவரி மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும், சிறிலங்கா அரசும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டபோது தீர்வு என்பது சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகச் சாத்தியப்படும் என்று சத்தியமாகவே தமிழீழ மக்கள் நம்பினார்கள். புலம் பெயர்ந்த தமிழீழ மக்களும் இன்னும் ஒரு படி மேலாக நம்பினார்கள்.

இவர்களது நம்பிக்கைக்கு ஆதாரமாக தகுந்த சரியான காரணங்களும் இருந்தன.

முன்னர் எப்போதும் நடந்திராதவாறு இம்முறை பல சர்வதேச நாடுகள் இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கும் சமாதானப்பேச்சு வார்த்தைகளுக்கும் ஆதரவாக இருந்தன. நோர்வே நாட்டின் அனுசரணையுடன் நோடிக் (Nழுசுனுஐஊ) நாடுகளைப் பிரதிநிதிப்படுத்திப் போர்நிறுத்த கண்காணிப்புக்குழு ஒன்றும் அமைக்கப்படவிருந்தது தமிழ் மக்களுக்கு நிம்மதியை தந்தது. மேலும் நம்பிக்கையூட்டும் வகையில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரொப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகள் யாவும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் சமாதானப் பேச்சுககள் ஊடான தீர்வுக்கும் தமது ஆதரவை தெரிவித்திருந்தன. அத்துடன் மட்டுமல்லாது பாரிய நிதி உதவிகளையும் இதன் பொருட்டு தந்து உதவுவதாக இந்தச் சர்வதேச நாடுகள் உறுதியளித்திருந்தன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஊடாக சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் சமபங்காளிகள் என்ற நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் சமாதானப் பேச்சு வார்த்தையையும் ஏற்றுக் கொண்டு அதற்கு ஆதரவும் அனுசரணையும் தரமுன் வந்துள்ள இந்த சர்வதேச நாடுகள் தமிழ் மக்களின் பிரதிநிதியான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சம பங்காளி நிலையை அங்கீகரித்து தன் மூலம் சமாதானப்பேச்சு வார்த்தைகளில் தங்களுடைய பாராபட்சமற்ற நடுநிலைப் போக்கினை கடைப் பிடிப்பார்கள் என்றும் தமிழ் மக்கள் உளமார நம்பினார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டு காலமாக சிறிலங்கா அரசுகள் மீது தாம் வைக்காத நம்பிக்கையை இந்த உலக நாடுகள் மீது தமிழ் மக்கள் வைத்தார்கள். தமிழீழ மக்களும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களும் இந்த உலக நாடுகளை உளமார நம்பினார்கள். ஆகவே நாலரை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்படாத கைச்சாத்திப்படாத ஆனால் இதயபூர்வமான நம்பிக்கை ஒப்பந்தம் ஒன்றை தமிழீழ மக்கள் இந்த உலக நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

ஆனால் இன்று அந்த நம்பிக்கை ஒப்பந்தம் நட்டாற்றில் தள்ள விடப்பட்டிருக்கின்றது. இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கும் முதற் குற்றவாளி சிறிலங்கா அரசு அல்ல. நம்பிக்கைத்துரோகம் செய்த சர்வதேச உலகம் தான் முதற் குற்றவாளி. முதற் குற்றவாளி கொடுத்த உற்சாகத்தாலும், உதவியாலும், தூண்டுதலாலும் சமாதானத்தைக் குலைத்த சிpறிலங்கா அரசு இரண்டாவது குற்றவாளியாகப் பின் தள்ளப்பட்டிருக்கின்றது.

ஐம்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக நீதிகேட்டு, போராடி வந்திருக்கின்றது தமிழீழம். அறவழியில், அமைதி முறையில், சாத்வீக நெறியில, ஜனநாயக பாதையில் தமிழினம் மேற்கொண்ட போராட்டங்களையெல்லாம் வன்முறை கொண்டும், அரச பயங்கரவாதம் ஊடாகவும் சிங்கள அரசுகள் அடக்க முயன்றன. ஈற்றில் தமிழினம் மேற்கொண்ட ஆயுதப்போராட்டம்தான் சிங்கள அரசை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு கொண்டு வந்தது. தமிழீழ மக்களின் இராணுவ சமநிலைதான் உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் நீதி கேட்டுப் போராடிய தமிழினத்திற்கு எதிராக அழுத்தங்களையும், தடைகளையும் இந்த உலகநாடுகள் விதித்தன. ஐம்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக அநீதியாகவும் அராஜகமாகவும் செயற்பட்டு வந்த சிறிலங்கா அரசுகளுக்கு இந்த உலக நாடுகள் துணை நின்றன. கடந்த நாலரை ஆண்டுகளில் சமாதானத் தீர்வுக்கு எதிராக, அரசுகள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்த உலக நாடுகள் எந்த விதமான அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை. தமிழ் மக்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் சமர்ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய ஆலோசனைத் திட்டத்தையும் சிpறிலங்கா ஏற்றுக் கொள்ளவில்லை. சுனாமி ஆழிப்பேரலை தந்த அனர்த்தங்களை எதிர்கொள்வதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக் கட்டமைப்பு திட்டத்தையும் சிறிலங்காவின் நீதித்துறை ஏற்றுக் கொள்ளாமல் தடையுத்தரவை பிறப்பித்தது. ஒட்டுக்குழுக்கள் ஊடாக கொலைகளையும், ஆட்கடத்தல்களையும் நடாத்தி ஒரு நிழல் யுத்தத்தை தொடர்ந்தும் சிறிலங்கா அரசு நடாத்தி வந்தது.

ஆனால் உலக நாடுகளோ, சிறிலங்கா அரசிற்கு எதிராக விரலைக்கூட அசைக்கவில்லை. மாறாக நீதி கேட்டு போராடிய தமிழினத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தொடர்ந்தும் அரசியல் அழுத்தங்களையும் தடைகளையும் பிரயோகித்தன. உலக நாடுகளின் இந்த பாரபட்சமான போக்க்pனால் உற்சாகமடைந்த ராஜபக்சவின் அரசு சமாதானத்திற்கு எதிரான செயற்பாடுகளில் மேலும் உத்வேகத்துடன் இறங்கியது.

இன்று இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டும், பாதிக்கப்பட்டும், இன்னலுற்று வருவதற்கும், மீண்டும் ஒரு பாரிய போர் மூளக்கூடிய அபாயம் தோன்றி இருப்பதற்கும் உரிய தார்மீக பொறுப்பை இந்த உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் என்ற செயற்பாட்டின் மூலம் சிpறிலங்கா அரசு தன்னுடைய இரண்டு நோக்கங்களை நிறைவேற்ற முனைந்து வருகின்றது. ஓன்று தமிழ்ப் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடாத்தி அவர்களை இடம் பெயர வைப்பது. இரண்டாவது இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்குத் தேவையான நிவாரண நிதிகளையும் செயற்பாடுகளையும் முடக்குவது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிவாரணப்பணிகளுக்கான நிதியை சிpறிலங்கா அரசு முடக்கியிருப்பதன் காரணத்தை நாம் இந்த இராணுவ நடவடிக்கைகளுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். சிறிலங்கா அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பின் ஒரு செயற்திட்டம்தான் இது!

இன்று யாழ்குடாநாட்டில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளார்கள். அவர்களுக்கான உணவுப்பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றிற்கான அடிப்படை மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் உள்ளது. இன்று தமிழீழப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்தோர் தொகையும் அதிகரித்து வருகின்றது. யாழ் குடாநாட்டினுள் 51,427 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 41,897 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 10,803 பேரும், வவுனியாவில் 9,560 பேரும், மன்னாரில் 9,695 பேரும், திருகோணமலையில் 48,810 பேரும், மட்டக்களப்பில் 37,738 பேரும், அம்பாறையில் 1,353 பேரும் இடம்பெயர்ந்து கடின வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்கள். இந்த வேதனையான புள்ளி விபரத்தொகை கடந்த எட்டு மாத காலத்துக்குரியதாகும்.

இன்று தமிழர்களைச் சிறிலங்கா அரசு கொல்கிறது. இன்று தமிழ்ப் பிரதேசங்கள் மீது சிறிலங்கா அரசு குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்துகின்றது. இன்று சிறிலங்கா அரசால் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வாழுகின்றார்கள். இன்று சிறிலங்கா அரசால் தமிழர்களின் நிவாரணப் பணிக்கான நிதி முடக்கப்பட்டுள்ளது. இன்று யுத்தநிறுத்த ஒப்பந்தத்தைச் சிறிலங்கா அரசு முழுமையாக மீறி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளது. இத்தகைய ஆக்கிரமிப்புக்கள் மேலும் மேலும் தொடர்ந்து நடைபெறும் என்று சிறிலங்காவின் பிரதமமந்திரி அறைகூவல் விடுக்கின்றார்.

ஆனால் சர்வதேச நாடுகள் வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்த முக்கியமான - மிகமுக்கியமான -காலகட்டத்தில் சர்வதேச நாடுகள் வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்குமேயானால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.

ஒன்று, தமிழ் மக்கள்மீதும் அவர்களுடைய உரிமைப் போராட்டம் குறித்தும், அவர்களுடைய நல்வாவழ்வு குறித்தும் இந்த சர்வதேச நாடுகளுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது.

இரண்டு, சிறிலங்கா அரசின்மீது உரிய அழுத்தங்களையோ, தடைகளையோ விதிப்பதற்கு இந்த சர்வதேச நாடுகளுக்கு வல்லமை கிடையாது, அல்லது நடுநிலை எண்ணம் கிடையாது.

எது எப்படியிருப்பினும் சர்வதேச நாடுகளை நம்பி, அவர்களுடைய நேர்மையை நம்பி, அவர்களுடைய நடுநிலையை நம்பி, அவர்களுடைய பொறுப்புணர்வை நம்பி, இனியும் தமிழினம் காத்திருப்பதில் பயனில்லை. ஏனென்றால் தமிழினத்தின் நம்பிக்கை ஒப்பந்தம் சர்வதேச நாடுகளால் மீறப்பட்டு விட்டது.

ஆகவே தமிழ் மக்களின் அவலத்தையும், அழிவையும் தடுக்க வேண்டிய தார்மீகக் கடமையைத் தமிழீழ விடுதலைப்புலிகள் செவ்வனே செய்ய வேண்டி வரும். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக இயல்பு வாழ்க்கைக்காக பூரண உரிமைக்காக உரிய நடவடிக்கைகளை தமிழினத்தின் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டி வரும். போர் நிறுத்த ஒப்பந்தமும் மீறப்பட்டு சர்வதேச நாடுகளின் மீதான நம்பிக்கையும் குலைந்து போயுள்ள இவ்வேளையில் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு சர்வதேச நாடுகள் உடனடியாக ஒன்றை மட்டும் செய்து காட்டலாம்.

சிறிலங்கா அரசின்மீது உரிய அழுத்தங்களையும், ஏற்ற தடைகளையும் சர்வதேச நாடுகள் உடனடியாக விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழர் பிரச்சனையில் பார்வையாளர்களாக இருக்கும் தகுதியைக் கூட சர்வதேச நாடுகள் இழந்துவிடும்.

 

Mail Usup- truth is a pathless land -Home