Selected Writings by Sanmugam Sabesan, சபேசன், அவுஸ்திரேலியா போருக்குள் எத்தனை அர்த்தங்கள்! 21August 2006
இலங்கையில் இப்போது நடைபெறுவது போர் அல்ல! என்று சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவரது கருத்துப்படி இன்று தமிழ்ப்பொது மக்களும், அப்பாவி பாடசாலை மாணவிகளும் சிறிலங்கா அரச படைகளால் கொல்லப்பட்டு வருவதற்கு காரணம் போர் அல்ல என்பதுதான். இந்த ஆகஸ்ட் மாதத்தின் எட்டாம் திகதியிலிருந்து பதினைந்தாம் திகதிக்குட்பட்ட எட்டுத்தினங்களில் மட்டும் 141 தமிழ்ப்பொதுமக்கள் சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. மகிந்த ராஜபக்சவின் கருத்துப்படி இந்தத் தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் போர் அல்ல!
சிறிலங்காவின் புதிய அரச அதிபராக கடந்த ஆண்டு இறுதியில் பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச சமாதானத்திற்கு எதிராகத்தான் பேசியும் செயலாற்றியும் வந்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் கடந்த ஒன்பது மாதப் பதவிக்காலத்திற்குள் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவுஜீவிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுநலத் தொண்டர்கள் ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் வகை தொகையின்றி சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டார்கள். தமிழ்ப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளும், உயர் மட்டத்தளபதிகளும் சிறிலங்கா இராணுவத்தினால் நயவஞ்சமாக கொல்லப்பட்டார்கள். மகிந்த ராஜபக்சவின் கருத்துப்படி இந்தக் கொலைகளுக்குரிய அடிப்படைக் காரணமும் போர் அல்ல.!
கடந்த வாரம் பதினான்காம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வல்லிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலைச் சிறுவர் இல்ல வளாகத்தின் மீது சிறிலங்காவின் வான்படை நடாத்திய திட்டமிட்ட குண்டுத் தாக்குதல்கள் காரணமாக 51 பாடசாலை மாணவிகளும், நான்கு பணியாளர்களும் மாண்டு போயுள்ளார்கள். அத்தோடு நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் காயமுற்றுள்ளார்கள். இத்தகைய படுபாதகச் செயலைச் செய்த பின்னரும் இதனை நியாயப்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி பாசறைமீதுதான் விமானப்படையினர் குண்டுகளை வீசியதாகவும் கொல்லப்பட்டவர்கள் பாடசாலை மாணவிகள் அல்ல என்றும் மகிந்த ராஜபக்ச nதிவித்துள்ளார். அவரது கருத்துப்படி இப்போது போர் நடைபெறவில்லைதானே!
மிகக் கொடூரம் வாய்ந்த படுகொலைகளை திட்டமிட்டு நடாத்தியதோடு மட்டுமல்லாது இப்பயங்கரவாதத் தாக்குதலை நியாயப்படுத்த முனைகின்ற மிகக கேவலமான முயற்சிகளிலும் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது. ஆனால் இம்முறை உண்மையை மறைப்பதற்கு சிறிலங்கா அரச எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. பல உலகநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் சிறிலங்கா அரசின் இந்த பயங்கரவாத கொலைகளை கண்டித்துள்ளன. முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோக பூர்வ அறிக்கையில் இக்குண்டு வீச்சுக்களின்போது புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மூன்று மாணவிகளும், விசுவமடு மகா வித்தியாலயத்தை சேர்ந்த பதினொரு மாணவிகளும், முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தை சேர்ந்த எட்டு மாணவிகளும், குமுழமுனை மகாவித்தியாலயத்தை சேர்ந்த ஐந்து மாணவிகளும், முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவிகளும், செம்மலை மகாவித்தியாலயத்தை சேர்ந்த நான்கு மாணவிகளும், ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயத்தை சேர்ந்த ஒரு மாணவியும், முருகானந்தா மகா வித்தியாலயத்தை சேர்ந்த இரண்டு மாணவிகளும், தர்மபுரம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மூன்று மாணவிகளும், பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தை சேர்ந்த ஒரு மாணவியும், நான்கு பணியாளரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களுடைய முழுப்பெயர் பிறந்த திகதி வதிவிட விலாசம் போன்ற விபரங்களும் இந்த அறிக்கையில் தரப்பட்டுள்ளது
முல்லைத்தீவீpல் சிறிலங்கா விமானப்படை குண்டுகளை வீசிய இடத்தில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததாக கூறி சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த வீடியோப்படக் காட்சிகளை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் நிராகரித்துள்ளார். கண்காணிப்புக்குழு தவறான இடத்தைப் போய்ப் பார்வையிட்டுள்ளது.- என்று அமைச்சர் ரம்புக்வெல கூறியதையும் ஹென்றிக்சன் மறுத்துள்ளார். “கண்காணிப்புக் குழுவினர் சரியான இடத்தைத்தான் சென்று பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பாக எமக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. விமானக்குண்டு வீச்சு நடாத்தப்பட்ட இடத்தில் சிறிலங்கா அரச கூறுவதைப் போல எந்த ஒரு ஆயுதப்பயிற்சி முகாமும் இருக்கவில்லை. செஞ்சோலை வளாகத்தினுள் குறைந்த பட்சம் பன்னிரண்டு குண்டுகள் வீசப்பட்டுள்ளன. வெடிக்காத குண்டு ஒன்றையும் எமது கண்காணிப்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளார்கள். இத்தகைய குண்டுகளை சிறிலங்கா விமானப்படையினர்தான் பயன்படுத்துகின்றார்கள”
என்று கண்காணிப்புக் குழுத்தலைவர் உல்ப் ஹென்றிக்சன் அறிவித்துள்ளார்.
இந்தப் பாடசாலை மாணவிகளுக்கான முகாமைத்துவ பயிற்சி நெறியினைத் தமது அமைப்புக்கள்தான் ஒழுங்கு செய்திருப்பதாக முல்லைத்தீவு கண்டாவளை அதிபர் சங்கங்கள் யூனிசெவ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளன. பெண்கள் அபிவிருத்தி புனர் வாழ்வு நிதி உதவியுடனும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்துடனும் இந்தப்பயிற்சி நெறி ஒழுங்கமையப் பட்டிருந்ததாக இந்த அதிபர் சங்கங்கள் தெரிவித்தன. யூனிசெவ் அமைப்பைச் சேர்ந்த பணியாளர்களும் உடனடியாக செஞ்சோலை வளாகத்தைப் பார்வையிட்டு அவசர உதவிகளைச் செய்துள்ளார்கள். யூனிசெவ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆன்வெனமென் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு இக்காப்பகம் அருகே விடுதலைப் புலிகளின் இராணுவ நிலைகள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தார். ‘அப்பாவிச் சிறுமிகள் மீதான குண்டுத் தாக்குதல்’ என்று யூனிசெவ் நிறுவனம் உத்தியோகபூர்வமாகத் தனது கண்டனத்தையும், அதிர்ச்சியையும் வெளியிட்டது.
யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழு யூனிசெவ் அமைப்பு போன்றவை மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையும் தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் சட்ட சபை உறுப்பினரான டெனி டேவிஸ் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் அல்பினோ கௌர்னியேறி போன்ற பல மக்கள் பிரதிநிதிகளும் சிpறிலங்கா அரசைக் கண்டித்துள்ளார்கள். இந்தியாவின் தமிழ் நாடு மாநில அரசு மிகக் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் கருணாநிதியும் அவரது கூட்டணிக்கட்சிகளும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்கள் அது மட்டுமல்லாது எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அம்மையாரும் அவரது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொல்.திருமாவளவன், வைகோ ஆகியோரும் சிறிலங்கா அரசுக்கு எதிராகத் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகமெங்கும் சிறிலங்கா அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இங்கே உபரியாக ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். இந்திய மத்திய அரசு இச்சம்பவத்தை கண்டித்து இதுவரை அறிக்கை எதையும் வெளியிடவில்லை. ஆனால் மாநில அரசின் முதல்வரான கருணாநிதி கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுவரை காலமும் இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கை எதுவோ அதுதான் மாநில அரசின் கொள்கை என்று கூறிவந்த கலைஞர் கருணாநிதி முதல்முறையாக மாநில அரசின் கொள்iகையை இக்கண்டனத்தின் ஊடாக வெளிpயிட்டுள்ளார். இனிமேல் மாநில அரசின் கொள்கைதான் மத்திய அரசின் கொள்கையாக விளங்குமா(?!) என்பதை வருங்காலம் சொல்லக்கூடும்.
புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழீழ மக்கள் தமது கோபத்தை வேதனையை மிகுந்த உணர்வுடன் வெளிப்படுத்தி வருவதை நாம் காண்கின்றோம். இக்கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டங்களில் இளைய தலைமுறையினர் பெரும்பங்கை வகிப்பதையும் நாம் காண்கின்றோம். புலம் பெயர்ந்த நாடுகளின் அரசுகள் குறிப்பாக அண்மைக் காலங்களில் தேவையற்ற தடைகளையும், அழுத்தங்களையும் தமிழர் போராட்டத்தின்மீது விதித்த நாடுகள் இப்போது அசௌகரியப்படுகின்ற நிலையில் இருப்பதையும் நாம் பார்க்கின்றோம். அதனை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இந்த நாடுகளின் அறிக்கைகள் - செஞ்சோலைப் படுகொலைகளுக்குப் பின்னர்- அமைந்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள பின்லாந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடியாகப் போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை இரு தரப்பினரும் ஆரம்பிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கனடிய அரசாங்கமும் இதே கருத்தைத்தான் சொல்ல்pயுள்ளது. போரைக் கைவிட்டு அமைதிப்பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கனடிய அரசாங்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க அரசும் சும்மா இருக்கவில்லை. அவசர அவசரமாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பிரதி அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஸ்டீவன் மான் என்பவரை கொழும்புக்கு அனுப்பியது. ஸ்டீவன் மானும் கொழும்புக்கு அவசர அவசரமாக வந்து தமிழ் மக்களின் சட்டரீதியான துயரங்ளை களைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மிகவும் ஆழமாக வேலை செய்ய வேண்டும். அரசாங்கப்படைகளின் நீதியான செயற்பாட்டை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் அமெரிக்க அரசு இங்கு நடைபெற்ற வன்முறைகள் மற்றும் சண்டைகளையிட்டு மிகுந்த கவலையடைந்துள்ளது. இந்த விடயங்களை ஆழமாக அவதானித்து வந்ததால் இது குறித்துப் பேசுவதற்கு என்னை அவசரமாக அமெரிக்கா அரசு அனுப்பி வைத்துள்ளது. உடனடியாக யுத்தத்தை நிறுத்துமாறு இரு தரப்பையும் அமெரிக்கா கோருகின்றது- என்று கூறிவிட்டு உடனே அடுத்த விமானத்தில் ஏறிப்பறந்து சென்று விட்டார்.
ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் போரை நிறுத்துமாறு கூறியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் போரை நிறுத்துமாறு கூறியுள்ளன. கனடா அரசாங்கமும் போரை நிறுத்துமாறு கூறியுள்ளது. அவசரமாகப் பறந்து வந்த அமெரிக்க பிரதிநிதியும் போரை நிறுத்துமாறு கோரி விட்டு அவசரமாக பறந்து போய்விட்டார்.
ஆனால் மகிந்த ராஜபக்சவோ இலங்கையில் இப்போது போர் நடைபெறவில்லை என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்தும் வருகின்றார்.
இது என்ன முரண்பாடு என்று வாசகர்கள் எண்ணக்கூடும்! இந்த முரண்பாட்டை விளங்கிக்கொள்வதற்கு நாம் மகிந்தவின் சிந்தனைகளைத்தான் அணுக வேண்டும்.!!
மகிந்தவின் சிந்தனையின் படி - அவருடைய அகராதியின்படி தமிழ்ப் பொதுமக்கள் இந்த அளவில் கொல்லப்படுவது வழமையான சாதாரண சம்பவங்கள்தான். இவை போர்க்கால சம்பவங்கள் அல்ல! போர்க்காலம் தொடங்கிவிட்டது என்று சிறிலங்கா அரசு பிரகடனம் செய்த பின்னர்தான் உத்தியோகபூர்வமான தமிழினப் படுகொலைகள் ஆரம்பமாகும் என்று அவர் சிந்தித்து வைத்திருக்கின்றார். அச் சிந்தனையின்படி செயலாற்ற முனைந்தும் வருகினறார்.
‘போர்’ என்ற சொல்லை உபயோகிப்பதற்கு சிறிலங்கா அரசு முன்வராது என்பதை நாம் பல வாரங்களுக்கு முன்னதாகவே தர்க்கித்திருந்தோம். நடைமுறையில் தமிழ் மக்கள் மீது போரை ஆரம்பித்திருந்தாலும் அச் செயற்பாட்டை போர் என்று குறிப்பிட்டால் அநதச் சொற்பிரயோகத்தின் மூலம் சிpறிலங்கா அரசு போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிவிட்டதாகத்தான் கருதப்படும் என்பதையும் நாம் முன்னரேயே விளக்கமாகத்தான் தர்க்கித்திருந்தோம். கடந்த வாரம் ஊடகவியலாளரகளுக்குத் தந்த செவ்வி ஒன்றின்போது சிறிலங்காவின் அமைச்சர் ரம்புக்வல, “ஆம் நாங்கள் போர் என்ற சொல்லை உபயோகிக்கவில்லைதான்” என்று உண்மையை ஒப்புக்கொண்டதையும் இவ்வேளையில் சட்டிக்காட்ட விழைகின்றோம்.
போர் என்று சொல்லாமலேயே தமிழ்ப் பொதுமக்களைச் சிங்கள அரசு கொன்று குவித்து கொண்டு தமிழீழப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்ற இவ்வேளையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து மீண்டும் கதைகள் அடிபடத் தொடங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனானொடு தொலைபேசியில் உரையாடிய மகிந்த ராஜபக்ச சமாதானப்பேச்சு வார்த்தைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளது. என்ற தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் அகராதியில் போர் என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் வைக்கப்பட்டிருப்பது போல் சமாதானப்பேச்சு வார்த்தை என்பதற்கு என்ன அர்த்தம் வைக்கப்பட்டிருக்கும் என்பது புத்த பகவானுக்கு மட்டுமே வெளிச்சம்!
இன்று சிறிலங்காவின் அரச அதிபர் சமாதானப்பேச்சு வார்த்தைகள் பற்றிப்பேச ஆரம்பித்துள்ளமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவர் எதிர்பார்த்ததுபோல் சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகள் வெற்றி பெறாததோடு விடுதலைப்புலிகள் மிக வலிமையாகவும் இருக்கின்றார்கள் என்ற நிரூபிக்கப்பட்டுள்ள கள யதார்த்தம்.! இரண்டாவது காரணம் சர்வதேச உலகத்தின் தற்போதைய அழுத்தம்!! தங்களுடைய செல்லப்பிள்ளை மீண்டும் குழப்படி செய்து வாங்கிக்கட்டிக்கொண்ட படியால் பிள்ளையை கொஞ்சம் கட்டுக்குள் வைக்கவேண்டிய நிலை, சர்வதேசத்திற்கு உருவாகியுள்ளது. அதனடிப்படையில் வெளிநாடுகள் தங்களுடைய செல்லப்பிள்ளையான சிறிலங்காவிற்குச் சில அழுத்தங்களை விதித்து சமாதானப்பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிகள் செய்து வருகின்றன.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உருவமான சிறிலங்கா அரசு சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களுக்குரிய நீதியான கௌரவமான சமாதானத்தீர்வைத் தரும் என்று இன்று எவருமே நம்பமாட்டார்கள். செஞ்சோலை வளாகப் படுகொலைகள் இன்று உலகெங்கும் வெளிப்படையாக நிரூபணமாகிவிட்ட நிலையிலும் கூட இதனை ஒப்புக்கொள்ளாத சிறிலங்கா அரசா, தமிழர்களுக்குக் தேசியப் பிரச்சனை உண்டு என்பதனை ஒப்புக்கொண்டு சமாதானத்தீர்வை தரக்கூடும்? சமாதானத்தீர்வுக்கும் சிpறிலங்கா அரசிற்கும் இடையேயான தூரம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான தூரமாகும். தினமும் இந்தத் தூரம் நீண்டு கொண்டே போகின்றது.
ஆயினும் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுப்பபதற்காக சர்வதேசம் விடுதலைப்புலிகள் மீது மென் போக்கு சமிக்ஞைகளை விரைவில் காட்டக்கூடும். இந்த மென்போக்கு சமிக்ஞைகள் ஊடாகச் சர்வதேசம் தன்னை ஒரு நடுநிலையாளனாகக் காட்டிக் கொண்டு தனது அடுத்த கட்ட செயற்பாட்டை நோக்கி நகரக்கூடும்.
நாம் அடுத்த கட்ட நகர்வு என்று குறிப்பிடுவது கருத்தற்ற, முறையற்ற தீர்வுத்திட்டம் ஒன்றைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைத்தான். இது குறித்துத் தமிழீழத்து மக்கள்-குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்கள்- மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம்.
சமாதானப் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததற்கும் தமிழ்ப்பொதுமக்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதற்கும் உரிய தார்மீகப்பொறுப்பை சம்பந்தப்பட்ட உலக நாடுகள் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனடிப்படையில்தான் போரா, சமாதானமா என்ற விடயமும் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்! காலம் கடந்து போவதற்குள் சர்வதேசம் தனது தவறுகளை திருத்தி தம்முடைய நம்பகத் தன்மையை நிலைநிறுத்த வேண்டும்.! |