Selected Writings by Sanmugam Sabesan, சபேசன், அவுஸ்திரேலியா ஹிட்லரும் மகிந்தவும் 1 August 2006
சிறிலங்காவின் புதிய அரச அதிபராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்ட கடந்த எட்டு மாத காலத்துக்குள், இலங்கைத்தீவில் நிலைமைகள் விபரீதத்தின் எல்லைகளை தொட ஆரம்பித்து விட்டன. மகிந்தவின் அதிகாரத்துக்கு உட்பட்ட சிறிலங்காவின் முப்படைகளின் செயற்பாடுகள் சமாதானத்திற்கான காலத்தை சீர்குலைத்து, மென் தீவிர யத்தம் ஒன்றைத் தமிழ் மக்கள் மீது ஆரம்பித்து உள்ளன. சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள இந்த மென்தீவிர யுத்தத்தமானது எவ்வேளையிலும் முழு அளவிலான பாரிய யுத்தமொன்றாக உருவெடுக்கும் சூழ்நிலைதான் உருவாகி வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒரு புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்கப் போவதாக தெரிவித்து வந்த அதிபர் ராஜபக்ச நடைமுறையில் தனது முன்னோடிகளான சிங்களப் பௌத்த பேரினவாதத் தலைவர்களின் அணுகுமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச புதிய அரச அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்திருந்ததுடன் போர் நிறுத்தத்தை முழுமையாக கடைப்பிடித்து அமைதியையும், சமாதானத்தையும் பேணப் போவதாகவும் அறிவித்திருந்தார். தன்னுடைய சிந்தனைகளின் - அதாவது மகிந்தவின் சிந்தனைகளின் - அடிப்படையில் அரசின் செயற்பாடுகள் நடைபெறும் என்றும் மகிந்த ராஜபக்ச எட்டு மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
மகிந்தவின் சிந்தனைகளின் அடிப்படையில்தான் இன்று நிலைமைகள் விபரீதமாகி வருகின்றன என்றால் மகிந்தவின் சிந்தனைகளின் அடிக்கருத்துக்கள்தான் என்ன என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா? ஆகவே மகிந்தவின் சிந்தனைகளில் உள்ள மேம்போக்கான வார்த்தைச் சிலம்பாடல்;களைத் தவிர்த்து அவற்றின் அடிக்கருத்துக்கள், உட்கருத்துக்ள் குறித்து நாம் சிந்திப்பது அவசியமாகும்.! அதாவது மகிந்தவின் சிந்தனைகள் குறித்த, எமது சிந்தனைகள்.!!
மகிந்தவின் சிந்தனைகள் குறித்து நாம் எமது தர்க்கத்தைத் தெரிவிப்பதற்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் சுட்டிக் காட்டிய சில விடயங்களைக் கருத்தில் கொள்வது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகி;ன்றோம். எட்டு மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் புதிய அரச அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வேளையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தன்னுடைய மாவீரர் தினப்பேருரையின் போது சில முக்கியமான விடயங்களைச் சுட்டிக் காட்டித் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதன் போது மகிந்தவின் சிந்தனைகள் பற்றியும் தேசியத் தலைவர் குறிப்பட்டிருந்தார்.
தமிழீழத் தேசியத் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:-
சிங்களப் பெரும் பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச இலங்கை வாழ் மக்கள் சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. இது ஒரு முற்று முழுதான சிங்கள-பௌத்த ஆட்சி பீடமாகும். மகிந்த ராஜபக்ச சிங்க பௌத்த மக்களின் நலனைப் பேணும் அரச அதிபராகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கின்றார். அரச அதிபர் மகிந்தவின் சிந்தனைகளையும், கொள்கைகளையும் நாம் நன்கறிவோம். தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அவருடைய அரசியல் தரிசனத்திற்கும், தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இசைவற்ற இடைவெளிகளையும், இணங்காத முரண்பாடுகளையும் நாம் அறிவோம்.
-என்று தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு உரிய அடிப்டைக் காரணிகளை நாம் சற்று விரிவாக பார்க்கலாம்.
சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனைகள் தமிழர்களின் தாயக கோட்பாட்டை முற்றாக எதிர்க்கின்றன. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை முற்றாக எதிர்த்து மறுக்கின்ற மகிந்தவின் சிந்தனைகள் இவற்றினூடாக தமிழர்களின் தேசிய இன அடையாளத்தையும் முற்றாக மறுக்கின்றன. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டையும், தேசிய இன அடையாளத்தையும் மறுக்கின்ற மகிந்தவின் சிந்தனைகள் இதன் அடிப்படையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் மறுக்கின்றன.
அதாவது மகிந்தவின் சிந்தனைகள் தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை தமிழர்களின் தேசிய இன அடையாளத்தை தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முற்றாக மறுத்து எதிர்க்கின்றன.
மகிந்தவின் இந்தச் சிந்தனைகளை விரிவான பார்வையில் வைத்து ஆராய்ந்தால் அடிப்படை உண்மைகள் பல தெளிவாகும்.
தமிழர்களின் தாயக கோட்பாட்டை, தேசிய இன அடையாளத்தை, சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் மூலம் மகிந்தவின் சிந்தனைகள் தம்முடைய உட்கருத்துக் கொள்கைகளைத் தெளிவாக்குகி;ன்றன. அவை வருமாறு:
• தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை ஏற்கமுடியாது. ஏனென்றால் இந்த முழுத்தீவும் சிங்களவர்களுக்கே சொந்தமானதாகும். இது சிங்களவர்களின் தாயக மண்.
• தமிழர்களின் தேச இன அடையாளத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏனென்றால் சிங்களவர்கள் மட்டுமே தேசிய இனத்தவர்கள் ஆவார்கள்.
• தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இது சிங்களவர்களின் தேசம். இது சிங்களவர்களின் ஆட்சி! மற்றைய இனத்தவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளே! ஆதலால் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. முக்கியமாக சுயநிர்ணய உரிமை கிடையாது.
இவைதான் மகிந்தவின் சிந்தனைகளில் முக்கியமானவையாகும்.
இங்கேதான் மகிந்த ராஜபக்ச, ஹிட்லருடைய சிந்தனைகளோடு ஒத்துப் போகின்றார். அதனடிப்படையில் ஹிட்லருடைய நடவடிக்கைகளோடு மகிந்தவின் நடவடிக்கைகளும் ஒத்துப் போகி;ன்றன.
ஹிட்லரின் சிந்தனைகளின் படி, “நாங்கள் ஆரியர்கள்! இந்த நாடு தூய்மையான ஆரியர்களுக்கு மட்டுமே உரித்தானது. மற்றைய இனமக்களுக்கு உரிமை எதுவும் கிடையாது!. ஏனென்றால் அவர்கள் காட்டுமிராண்டிகள்! ஆகையினால் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்.”
ஹிட்லரைப் போலத்தான் மகிந்தவும் சிந்திக்கின்றார்!. ஹிட்லரைப் போலத்தான் மகிந்தவும் செயல்படுகி;ன்றார்.
மகிந்தவின் சிந்தனைகளின்படி நாங்கள் சிங்களவர்கள்! நாங்கள் தூய்மையான சிங்கள - பௌத்தர்கள்! இந்த நாடு சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமே உரித்தான நாடு. மற்றைய இனமக்களுக்கு உரிமை எதுவும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் தாழ்ந்தவர்கள் ஆகையால் அழிக்கப்பட வேண்டியவர்கள்!
மகிந்தவின் இந்தச்சிந்தனைகளின் அடிப்படையில் கடந்த எட்டு மாத காலத்திற்குள் சமாதானத்திற்கான முயற்சிகள் யாவும் முடக்கப்பட்டன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், மாணவர்கள் என்று வகைதொகையின்றி அப்பாவித் தமிழ் பொதுமக்களை சிறிலங்காவின் முப்படைகளும் கொன்று குவிக்க ஆரம்பித்துள்ளன. தமிழ் அறிவுஜீவிகள், மக்கள் பிரதிநிதிகள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் ஊடகவியலாளர்கள் போன்றோரையும் சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் விட்டு வைக்க வில்லை. போர்நிறுத்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை சிறிலங்கா இராணுவம் கொலை செய்து வருகின்றது. யுத்த நிறுத்த உடன்பாட்டை மீறி தமிழீழ பகுதிகளில் சிpறிலங்கா விமானப்படை குண்டு வீச்சுக்களை நடாத்தி வருகி;ன்றது. திருகோணமலைப் பிரதேசத்தில் விடுதலைப்புலி உறுப்பினர்களை சந்தித்த கண்காணிப்புக் குழுத்தலைவர் உல்ப் ஹென்ரிக்ஸன் சிறிலங்கா அரசாங்கத்தை நீங்கள் நம்ப வேண்டும். என்று விடுதலைப் புலிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கும் சற்று 750மீற்றர் தொலைவில் சிறிலங்கா விமானப்படை குண்டு வீச்சினை நடாத்தியுள்ளது. இவ்வாறு மகிந்தவின் அரசு தமிழின படுகொலைகளை நடாத்தத் தொடங்கி விட்டது. அடுத்த கட்டமாக தமிழின அழிப்பைக் கருத்தில் கொண்டு யுத்தமொன்றை வலிந்து திணிக்கும் முயற்சிகளை மகிந்தவின் சிந்தனையூடான செயற்பாடுகள் முன்னெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஹிட்லரின் சிந்தனை!- மகிந்தவின் சிந்தனை! ஹிட்லரின் கோட்பாடு!- மகிந்தவின் கோட்பாடு! ஹிட்லரின் பேரினவாதம்! - மகிந்தவின் பேரினவாதம்! ஹிட்லரின் அரச பயங்கரவாதம்! - மகிந்தவின் அரச பயங்கரவாதம்! ஹிட்லரின் யுத்தம்! - மகிந்தவின் யுத்தம்! ஹிட்லரின் யூத இன அழிப்பு- மகிந்தவின் தழிழின அழிப்பு!
ஹிட்லரின் சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு சிங்களத் தலைவர் மகிந்த ராஜபக்ச மட்டுமே என்று நாம் சொல்ல முடியாதுதான். சரியாகக் கணித்துப் பார்த்தால் ளுறுசுனு பண்டாரநாயக்கா காலத்திலிருந்து இன்றைய மகிந்த ராஜபக்ச காலம் வரை சகல சிங்களத் தலைமைகளும் ஹிட்லரின் சிந்தனைகளை வெளிப்படையாகவே செயலாக்கி வந்துள்ளன. அவர்களில் மகிந்த ராஜபக்ச மட்டும்தான்; மொழிபெயர்ப்பு உரிமையை பெற்று மகிந்தவின் சிந்தனைகள் என்று ஹிட்லரின் சிந்தனைகளை மொழி பெயர்ப்பு செய்துள்ளார். செயலாற்றியும் வருகின்றார்.
இப்படிப்பட்ட விடயங்களில் உலக வரலாறு காட்டி நிற்கின்ற நிகழ்வுகளை நாம் கருத்தில் கொள்வது இன்றைய காலகட்டத்த்pல் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூத இன மக்கள், உலகெல்லாம் புலம்பெயர்ந்து அலைந்து திரி;ந்தார்கள். உலகின் பல பாகங்களிலும் சிதறி வாழ்ந்தார்கள.; ஆயினும் தமக்கென ஒரு தாயகம் அமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றார்கள். இந்தத் தாயக கருத்து அவர்களுடைய சந்ததி சந்ததியாக வம்சம் வம்சமாக விதைக்கப்பட்டு வந்தது. முப்பாட்டன் பாட்டனுக்கும், பாட்டன் தந்தைக்கும், தந்தை மகனுக்கும், மகன் தன் மகனுக்கும் என்று சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்த யூத இனம் தன் தாயகக் கனவோடு உலகெல்லாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தது. இந்த மிக நீண்ட காலப் பகுதிக்குள் யூத இனம் எத்தனையோ போராட்டங்களையும், அழிவுகளையும் சந்தித்தது. ஆயினும் ஈற்றில் யூத இனம் தனக்கென்று ஒரு தாயகத்தை அமைத்தது.
யூதர்கள் தமக்கென்று அமைத்துள்ள தாயகம் பற்றிய கருத்து முரண்பாடுகள் குறித்து நாம் இப்போது தர்க்கிக்கப் போவதில்லை. நாம் சொல்ல வருவது என்னவென்றால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக புலம் பெயர்ந்து சிதறி வாழ்ந்து வந்த ஓர் இனத்திற்கே தங்களது தாயகம் குறித்த வேட்கை - இரண்டாயிரம் ஆண்டுகாலமாக உறுதியாக இருக்குமென்றால் சுமார் இருபது ஆண்டு காலமாக மட்டும் புலம் பெயர்ந்து வாழுகின்ற எமக்கு எவ்வளவு மகத்தான உறுதி இப்போது இருக்க வேண்டும். என்பதுதான்.!
இந்த வேளையில் மிகப்பெருமை வாய்ந்த உண்மை ஒன்றையும் நாம் தர்க்கிக்க விழைகின்றோம். யூதர்கள் தாயகக் கனவு கொண்டிருந்தபோது அவர்களுக்கென்று தாயகம் எதுவும் நிதர்சனமாக இருக்கவில்லை. ஆனால் எமக்கென்று ஒரு தாயகம் இப்போதே நிதர்சனமாக உண்டு. அந்தத் தயகமாம் தமிழீத்தின் பெரும் பகுதிகள் சிங்கள ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டு அங்கே தமிழர்களின் ஆட்சி நிலவுகின்றது. ஆகவே ஒப்பீட்டளவில் இன்றைய தினம் யூதர்களை விட மிகப் பலமான இடத்தில் எமது தமிழீழச் சுதந்திரப் போராட்டம் நிலை கொண்டிருக்கின்றது.
அன்று ஹிட்லர் யூதஇன மக்களைக் கொன்றொழித்த போதும் ஹிட்லருக்கு ஆதரவாக சில நாடுகள் துணை நின்றதை உலக வரலாறு கூறும். இன்று தமிழின மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு ஆதரவாகவும் சிலநாடுகள் துணை நிற்பதை நாம் காண்கின்றோம். அத்தோடு நீதி கேட்டு போராடும் மக்களுடைய பிரதிநிதிகளைத் தடை செய்யும் செயற்பாடுகளிலும் சில நாடுகள் இறங்கியுள்ளன. ஆனால் இப்படிப்பட்ட பல அழுத்தங்களை முறியடித்து பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த வெற்றிகளுக்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாக மக்கள் சக்தி விளங்கியது.
இன்று புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள் தம்மிடையே மிகப்பாரிய சக்தியையும், வலிமையையும் கொண்டிருக்கின்றார்கள். தமிழீழ மக்களின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடி வருகின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைமையும் இன்று ஒப்பிட முடியாத உயர்வான வலிமையான விடுதலை இயக்கமாகத் திகழுகின்றது. நாம் சற்று முன்னர் கூறியது போல் ஒப்பீட்டளவில் தமிழீழ சுதந்திரப் போராட்டம் பலமான இடத்தில் உள்ளது. அதனை இன்னும் மிகப்பலமாக மாற்றுவதற்குரிய பொறுப்பு புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நம்மிடம் தான் உள்ளது.
இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழுகின்ற நாடுகளிடையே ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. எவ்வளவுதான் முரண்பட்ட வெளிநாட்டுக் கொள்கைகளை இந்த உலக நாடுகள் கொண்டிருந்தாலும் தத்தமது நாடுகளின் உயர் ஜனநாயக மரபுகளை இவை கடைப்பிடித்து வருகின்றன. அந்தவகையில் ஜனநாயக ரீதியாக, தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்தவும், உரிய நியாயத்தை கோரவும் இந்த நாடுகள் வழி சமைத்துத் தருகின்றன. புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தங்களது வேட்கையை முற்றாக வெளிப்படுத்துவதற்காக ஒருங்கிணைய வேண்டிய தருணம்தான் இது! இப்போது உலகெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழர்களின் உணர்வுச் செயற்பாடுகள் எதிர்வரும் மாதங்களில் மேலும் மிகப்பிரமாண்டமாக எழுச்சி பெறுவதற்காகப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஒருங்கிணைய வேண்டும். மகிந்த ராஜபக்ச கைக்கொண்டிருக்கும் ஹிட்லரின் சிந்தனைகள் யாவும் சிதறுண்டு போகும் வேளையும் இதுதான். |