தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > ஜூலை 1983ம், தொடர்கின்ற தமிழின அழிப்பும்

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

ஜூலை 1983ம், தொடர்கின்ற தமிழின அழிப்பும்

27 June 2006


‘இனக்கலவரம்’ என்கின்ற பெயரால் அன்றைய சிங்கள அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப் பட்ட மிகப்பாரிய இன அழிப்பு - தமிழின அழிப்பு - நடாத்தப்பட்டு இந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகின்றன.

 சிங்கள பௌத்தப் பேரினவாத அரசு அன்று தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அந்த அரச பயங்கரவாதச் செயல்கள் தமிழினத்தின் நெஞ்சில் ஒரு நீங்காத மறையாத வடுவை நிரந்தரமாகவே ஏற்படுத்தி விட்டன. உலக நாடுகளையும் உலுக்கி விட்ட இந்த கொடூரமான கோரச் செயல்கள் நடைபெற்று இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகின்ற இவ்வேளையில் சில முக்கியமான விடயங்களை நினைவுக்கு கொண்டு வந்து சில கருத்துக்களை தர்க்கிக்க விழைகின்றோம்.

சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் ஈழத் தமிழ்pனத்தைப் பூண்டோடு அழித்தொழிப்பதற்காகக் கடைப்பிடித்து வருகின்ற பல செயற்பாடுகளின் ஒரு முகம்தான் இந்த இனக்கலவரம் என்கின்ற இனப் படுகொலைகளாகும். இந்த ஒரு முகத்திற்குக் கூட பல பிறவிகள் உண்டு. இலங்கை சுதந்திரம் பெற்றுப் பத்து ஆண்டுகள் ஆகின்ற காலத்திலேயே ஆரம்பித்த இந்த இனக் கலவரச் செயற்பாடுகள் 1983ல் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. இவை மட்டுமல்லாது, சிறிலங்கா அரசுகள் தமிழினத்தின் மீது மேற்கொண்ட யுத்தங்கள் அடக்குமுறைகள், உணவு மருந்து - பொருளாதாரத் தடைகள் போன்றவையும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளின் வௌவேறு முகங்களே!

அன்றைய ஜூலை- கறுப்பு ஜூலை 83 - தமிழின அழிப்பு, சில அடிப்படையான விடயங்களைக் காரணத்தில் கொண்டு சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்டதாகும். அதில் ஓர் முக்கிய காரணம், தமிழ் மக்களின் பெருளாதாரத் தளத்தைச் சீர்குலைப்பதாகும். அன்றைய தினங்களில்- அதாவது 1983ம் ஆண்டு ஜூலைமாதக் கடைசி வாரத்தில் சிங்கள அரசால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்களின் மதிப்புக்கள் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பீடு செயப்பட்டாலும், உண்மையான இழப்பு இன்னும் பல மடங்காகும் என்றே கருதப்படுகிறது.

ஒரு தர்க்கத்திற்காக, 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற கணிப்பீட்டை ஏற்றுக் கொண்டாலும் கூட இருபத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு மிகப்பாரிய இழப்பீடு என்பதில் ஐயமில்லை. அதைத்தவிர இலங்கை, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற தினத்திலிருந்து மிக அண்மைக்காலம் வரை மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் தமிழினத்தின் மீது மேற்கொண்ட பொருளாதாரத் தாக்குதல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இச்சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழீழ மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளும், விதித்த பெருளாதாரத் தடைகளும் தமிழீழ மக்களின் வாழ்க்கையை ஓர் இன்னல் மிக்க, துயரம் மிக்க வாழ்க்கையாக மாற்றின.

1983ம் ஆண்டு இனக்கலவரங்களுக்குப் பிறகு நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இலங்கைத்தீவில் சுமார் 65,000 பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 800,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும், சுமார் 700,000 மக்கள் புலம் பெயர்ந்துள்ளதாகவும் உலகவங்கியின் அறிக்கை ஒன்று தெரிவித்து இருந்தது. அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்காக, சிங்கள அரசுகள் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டிருந்தார்கள்.

அன்புக்குரிய வாசகர்களே! இதுவரை காலமும் தமிழர்களை அழிப்பதற்காக ‘உத்தியோக பூர்வமாக’ ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்த சிறிலங்கா அரசு இன்று ‘சில பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவித் தொகையாகப் பெறுவதற்காக ஓடித் திரிகிறது.’ ஆனால் இன்று அந்த உதவித் தொகையைப் பெறுதற்கு சிங்கள அரசிற்கு, தமிழர் தரப்பின் அங்கீகாரம் தேவையாக இருக்கிறது. இந்த வேளையில் நாம் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள விழைகின்றோம். 2003ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க அரசின் அன்றைய உதவிச் செயலர் றிச்சட் ஆமிடேஜ் ஒரு விடயத்தைத் தெரிவித்திருந்தார். அது ஒரு முக்கியமா விடயமாகும்.

‘சிறிலங்காவிற்குச் செய்து வந்த உதவிகள் யாவற்றையும் நிறுத்தி விடுவதற்கு அமெரிக்கா எண்ணியிருந்த வேளையில்தான் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.’ என்றும் ‘அதன் காரணமாக சிறிலங்காவிற்கு உதவிகளை நிறுத்துகின்ற தன்னுடைய எண்ணத்தை அமெரிக்கா மாற்றிக் கொண்டது.’ என்றும் அமெரிக்க அரசின் அன்றைய உதவிச் செயலர் றிச்சட் ஆமிடேஜ் தெரிவித்திருந்தார். இதற்குரிய அடிப்டைக் காரணம் அன்றைய சிறிலங்கா அரசு சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கும், யுத்த நிறுத்தத்திற்கும் விருப்பம் தெரிவித்ததேயாகும்.

அன்புக்குரிய வாசகர்களே! ஜூலை 83 -தமிழின அழிப்பு - தமிழ் மக்கள் மீது திட்டமிட்டுப் பிரயோகிக்கப்பட்டதில் சில அடிப்டைக் காரணங்கள் இருந்ததென்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அதில் ஒன்று நாம் இப்போது குறிப்பிட்டவாறு தமிழரின் பொருளாதாரத் தளத்தை அழிப்பதாகும். ஆனால் தன்வினை தன்னைச் சுடும் என்ற முதுமொழிக்கிணங்க சிறிலங்கா அரசு தன்னைத்தானே பொருளாதார ரீதியில் எரித்துக் கொண்டது. இதனை மனத்தில் நிறுத்திக் கொண்டு ஜூலை 83 இனக்கலவரத்தின் இன்னுமொரு முக்கிய காரணியைச் சற்று விரிவாகத் தர்க்கிக்க விழைகின்றோம்.

ஜூலை 83 இனக்கலவரத்தின் மூலம் தமிழ் மக்களின் மனவலிமையை அழித்து அவர்களுக்குக் கடுமையான, கொடுமையான வன்முறை ஊடாக ஒரு பாடத்தைப் புகட்டுகின்ற முயற்சியை அன்றைய சிறிலங்கா அரசு-ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசு - மேற்கொண்டது. அதாவது உளவியல் ரீதியாக “தமிழர்கள் தாங்கள் ஒரு நிர்க்கதியான இனம்இ தங்களை காப்பாற்றுவதற்கு எவரும் இல்லைஇ தாங்கள் எந்நேரமும் சிங்களவர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்படலாம். தாங்கள் எப்போதும் ‘சிங்கள-பௌத்த ஆட்சியின் கருணையின்(?)’ கீழ், தயவின் கீழ் வாழ வேண்டிய இரண்டாம் தரக் குடி மக்கள்” என்கின்ற ஏக்கமான எண்ணத்தை தமிழ் மக்களின் நெஞ்சங்களுக்குள் ஆழமாகப் புதைக்கும் நோக்கோடும், இந்த ஜூலை 83 இனக்கலவரம் நடாத்தப்பட்டது.

ஆனால் கடந்த இருபத்திமூன்று ஆண்டுக்காலத்திற்குள் ஈழத்தமிழினம் தனிப்பெருமையோடு தலைநிமிர்ந்து எழுந்து விட்டது.! வரலாற்று நாயகன் ஒருவன் வழி காட்டுகின்ற வரலாற்று காலத்திலேயே விடுதலைப் போராட்டத்திற்கு பங்களித்து பங்குபற்றி ஒருமித்த சிந்தனையோடு ஈழத்தமிழினமும், புலம் பெயர்ந்த ஈழத்தவர்களும் தலைநிமிர்ந்து வாழ்கின்ற காலமிது.!

ஆனால்-அன்றைய ஆண்டு அதாவது 1983ம் ஆண்டு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்பார்ப்பும், சிந்தனையும் வேறுவிதமாக இருந்தது. அன்றைய சிறிலங்கா அமைச்சரான காமினி திசநாயக்காவின் உரையை நாம் எடுத்துக் காட்டாக கொள்ளலாம்.

1983ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான காமினி திசநாயக்கா பின்வருமாறு கொக்கரித்தார். ஆமாம் கூறவில்லை -கொக்கரித்தார்- என்பதே சரியா சொல்லாகும்.

தமிழ் மக்களைப் பார்த்து காமினி திசநாயக்கா இவ்வாறுதான் கொக்கரித்தார்.:-

‘உங்களை தாக்கியது யார்?-சிங்களவர்கள்!
உங்களை காப்பாற்றியது யார்?-சிங்களவர்கள்!

ஆமாம் எங்களால் தான் உங்களைத் தாக்கவும், காப்பாற்றவும் முடியும்! உங்களைக் காப்பாற்ற இந்திய இராணுவம் இங்கே வருமாக இருந்தால் அதற்கு 14 மணித்தியாலங்கள் தேவை! ஆனால் 14 நிமிடங்களுக்குள் இந்த நாட்டினில் உள்ள ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தையும், இந்த நாட்டிற்காக நாம் அர்ப்பணிப்போம். உங்களுடைய நெற்றிகளில் நீங்கள் ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றோ, மட்டக்களப்புத் தமிழன் என்றோ, மலையகத் தமிழன் என்றோ, இந்துத் தமிழன் என்றோ, கிறிஸ்தவத் தமிழன் என்றோ எழுதப்படவில்லை! எல்லோருமே தமிழர்கள்தான்!’

- இவ்வாறு அமைச்சர் காமினி திசநாயக்கா 1983ல் கொக்கரித்தார்.

ஆனால் பின்னாளில் தமிழீழ மக்களின் அமைதி கொல்லும் படையாக வந்திறங்கிய இந்திய இராணுவத்தையும், சிறிலங்கா இராணுவத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடித்து துரத்தியதை வரலாறுகூட வியந்து தான் கூறும்.

1983ம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 4ம் திகதியன்று நியூயோர்க்-வொஷிங்டன்-போஸ்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தீர்க்கதரிசனமான கருத்தொன்றைக் கீழ்வரும் பொருட்பட எழுதியது.:-

‘சேர்ந்து வாழ்வது இவ்வளவு கஷ்டமென்றால் ஏன் பிரிந்து வாழ முடியாது? தமிழ் மக்களுக்கு தனி ஆட்சி கொடுத்தால் என்ன? ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பல நாடுகள் போல் தமிழ் மக்களும் தாங்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதற்குரிய சரியான சான்றுகளை வைத்திருக்கிறார்கள். இந்த ஒருங்கிணைந்த இலங்கைத்தீவில் சிங்களவர்கள் மட்டுமே அதிகாரங்களை வைத்திருக்கின்றார்கள். இந்த அதிகாரங்களை கொண்டுள்ள சிங்களவர்களுக்கு தமிழர்கள் இந்த ஒருங்கிணைந்த இலங்கையில் வாழமுடியாத அளவில் நடத்தப் பட்டிருக்கின்றார்கள் என்ற அறிவாவது உள்ளதா?’

-என்று ‘நியூயோர்க் வோஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை 1983ம் ஆண்டிலேயே எழுதியிருந்தது.

1983ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற தமிழின படுகொலைகளின் மூலம் உலக நாடுகள் யாவும் முதன் முறையாக விழித்தெழுந்தன. ஆனால் ஒரே ஒரு நாடு மட்டும் விழித்தெழவேயில்லை. விழித்தெழாத அந்த நாடு வேறெந்த நாடும் அல்ல, சிங்கள பௌத்த சிறிலங்காவேதான். அதன் அன்றைய ஜனாதிபதியான ஜேஆர் ஜெயவர்த்தனா அன்று நடந்து கொண்ட விதமும், பேசிய பேச்சுக்களும் ஒரு சிங்கள பௌத்த பேரினவாதியின் சிந்தனைகளை அப்படியே பிரதிபலித்தன. தமிழினப் படுகொலைகள் நடைபெற்று தமிழர்களின் சொத்துக்களும் நாசமாக்கப்பட்ட, நாசமாக்கப்படுகின்ற அந்தவேளையில் அன்றைய ஐக்கிய தேசியக்கட்சியின் அரசு நடந்து கொண்ட விதங்கள் ஏற்கனவே ஆவணப் படுத்தப்பட்டு அவற்றின் சிலவற்றை-நேயர்களுக்கு இங்கே தருவதற்கு விழைகின்றோம்.

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இரவிலிருந்து தொடந்து இலங்கைத்தீவே எரிந்து கொண்டிருந்த போதும் அன்றைய ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனா மௌனமாகவே இருந்தார். ஐந்து கோரமான நாட்களுக்குப் பின்னர் தான் அதாவது ஜூலை 28ம் திகதியின் பின்னர்தான்- அதாவது ஜூலை 28ம் திகதி வியாழக்கிழமை இரவுதான் ஜனாதிபதி ஜெயவர்த்தனா முதன்முதலாக இனக்கலவரம் குறித்து நாட்டுமக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது கூட தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற இந்த இன படுகொலைகள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தோ, கவலை தெரிவித்தோ, அனுதாபம் தெரிவித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக இந்தக் கோரமான இனப்படுகொலைகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஜனாதிபதி ஜேஆரின் உரை அமைந்திருந்தது.

‘1956 ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கொண்ட நம்பிக்கையின்மை வளர்ந்து வந்ததன் வெளிப்பாடே இந்த இனக்கலவரங்கள் என்றும், இவ்வாறான மனக்குறைகள் சிங்கள மக்களுக்கு இருக்கும் பட்சத்தில் அவர்கள் (அதாவது சிங்களவர்கள்) வன்முறையில் ஈடுபடுவது எளிதான செயலாகும்’ என்றும் 77வயது நிரம்பிய சிறிலங்கா ஜனாதிபதியான ஜேஆர் ஜெயவர்த்தனா அன்று தெரிவித்தார்.

அத்தோடு மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் மேலும் இவ்வாறு கூறினார்.

 ‘சிங்கள மக்களை அமைதிப் படுத்துவதற்காகவும், அவர்களுடைய இயல்பான வேட்கையைப் பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு புதிய சட்டத்தை நான் அமுலாக்க இருக்கிறேன். இப்புதிய சட்டத்தின் பிரகாரம் நாட்டுப் பிரிவினை கோரும் எவரும் இந்தப் பாரளுமன்றத்தில் அங்கத்தவர்கள் ஆகமுடியாது. அதுமட்டுமல்ல, நாட்டுப் பிரிவினை கோரும் எந்த ஒரு கட்சியும் தடை செய்யப்படும. இனிமேல் நாட்டைப் பிரிப்பது குறித்து எவரும் சட்ட ரீதியாக செயல்படமுடியாது.’

அன்புக்குரிய நேயர்களே! 23 ஆண்டுகளுக்கு முன்பு சிங்களபௌத்த பேரினவாதிகளின் வன்முறைச் செயல்களால் தமிழினம் எரிந்து கொண்டிருந்த நிலையில் சிங்கள ஜனாதிபதி கூறிய வார்த்தைகள் தாம் இவை. இது குறித்து tamilnation.org  இணையத்தளம் பின்வருமாறு குறிப்பிட்டது.

“சிங்கள ஜனாதிபதி தமிழர்களின் நிலை குறித்து கவலை தெரிவிக்க வில்லை. - ஏனென்றால் தமிழர்கள் குறித்து அவர் கவலைப் படவில்லை. சிறிலங்கா ஜனாதிபதி தமிழர்களுக்கு நேர்ந்தததையிட்டு அனுதாபம் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் சிறிலங்கா ஜனாதிபதி தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டிருக்க வில்லை. சிறிலங்கா ஜனாதிபதி தமிழர்களுக்கு நேர்ந்த கதி குறித்து பேரதிர்ச்சி தெரிவிக்க வில்லை. ஏனென்றால், அன்று தமிழர்களுக்கு ஏற்பட்ட கதி ஜனாதிபதிக்கு பேரதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கவில்லை.”

சிறிலங்கா ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து அதிர்ச்சியோ, அனுதாபமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பதை குறிப்பிட்டு International Commission of Jurist  டிசம்பர் 83ல் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

1983ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வெளிவந்த Economist சஞ்சிகையும் இதே கருத்தைத்தான் பிரதிபலித்தது. உலகளாவிய வகையில் சிறிலங்கா அரசிற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. சிறிலங்காவின் சிங்கள பௌத்த மேலாண்மையை மட்டும் உறுதி செய்கின்ற சிறிலங்காவின் அரசியல் யாப்புக் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

ஜூலை 83 இனக்கலவரத்த்pல் கோரமும், அழிவும் முழுமையாக ஆவணப் படுத்தப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட வில்லை. இதைப்பற்றி சிந்திக்கும்போது முன்பு உலகநாடுகளால் ‘பயங்கரவாதி’ என்று அழைக்கப்பட்டு பின்னாளில் உலகத் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்ட திரு நெல்சன் மண்டெலா அவர்களின் கூற்று ஒன்று எமது ஞாபகத்திற்கு வருகிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் திரு நெல்சன் மண்டெலா அவர்கள் கூறியது ஜூலை 83 இனக்கலவரத்திற்கு பொருத்தமாகவே அமைந்துள்ளது.

திரு நெல்சன் மண்டெலா கூறியது இதுதான்!

‘மன்னிக்கவும், மறக்கவும் வேண்டுமானால் என்ன நடந்ததென்ற முழு உண்மையும் எமக்கு தெரிய வேண்டும்.!’

இன்று - இந்த 2006ம் ஆண்டு - சிறிலங்காவின் புதிய அரச அதிபராக விளங்குகின்ற மகிந்த ராஜபக்சவின் ‘சிந்தனைகளும்’ அவருடைய முன்னோடிகளின் சிங்கள பௌத்தப் பேரினவாத சிந்தனைகளையே பிரதிபலிக்கின்றன. மகிந்த ராஜபக்சவின் முப்படைகள் இன்று வெளிப்படையாகவே தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஈழத் தமிழினத்தின் மீது வலிந்து ஒரு பாரிய போரைத் திணிப்பதற்காக இன்று சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீதான தனது படுகொலைகளை முடுக்கி விட்டிருக்கின்றது.

அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய தினம் நாம் மேற்கூறிய கருத்துக்களைத் தர்க்கித்தமைக்குச் சில முக்கிய காரணங்கள் உண்டு. அடிப்படையில் எந்தச் சிங்கள அரசும் தமிழினத்திற்கு சமாதானத்தைத் தரப்போவதில்லை. மாறாக சிங்கள அரசுகள் தமிழினத்தை அழித்தொழிக்கும் செயற்பாடுகளைத்தான் முன்னரைப் போல் தொடர்ந்தும் முன்னெடுக்கும். புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் இது குறித்து மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

 ஈழத்தமிழினம் தனது பாதுகாப்பிற்கும், தனது பொருளாதார நலனுக்கும், அதன் மேம்பாட்டிற்கும் தன்னைத்தானே நம்பியிருக்க வேண்டும். தனது சொந்தப்பலத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டும். இவற்றிற்கு புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் பக்கபலமாக உறுதுணையாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அதுவும் ஒரு ஜூலை மாதத்தில் நாம் சொல்ல வேண்டிய கருத்துக்கள் இவையாகும்.!
 

Mail Usup- truth is a pathless land -Home