“போர் நிறுத்த உடன்படிக்கையை முறையாக அமல்படுத்தும் பொருட்டு ஜெனிவாவில் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறையான பலனைப் பெற்றுத் தருமா?” என்ற ஐயம் இப்போது எழுந்துள்ளது. சிறிலங்கா அரசின் முரண்பட்ட நடவடிக்கைகள் சமாதானச் சுழலுக்குச் சாதகமாக இல்லை. சிறிலங்கா ராணுவத்தினால் இயக்கப்படுகின்ற தமிழ் ஒட்டுக் குழுக்களின் சமாதான விரோதச் செயற்பாடுகள் சமாதானத்தைக் கலைக்கும் நோக்கினையே குறி வைத்து நடாத்தப்படுகின்றன. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சமாதான முயற்சிகள் படுதோல்வியை அடைவதோடு மட்டுமல்லாது மீண்டும் போர் வெடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளையும் தவிர்க்க முடியாமல் போய் விடும்.
சிறிலங்கா ராணுவத்தினால் இயக்கப்படுகின்ற தமிழ் ஒட்டுக்குழுக்களின் சமாதான விரோதச் செயற்பாடுகளின் பின்னணி குறித்தும், சிpறிலங்கா அரசின் உள்நோக்கத் திட்டங்கள் குறித்தும் சில கருத்துக்களை முன்வைத்துத் தர்க்pப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.!
அண்மையில் நடந்து முடிந்த ஜெனிவாப்பேச்சு வார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களில் மிக முக்கியமான விடயம் சிறிலங்கா அரசு ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைந்து இவ்ஒட்டுக்குழுக்களை வடக்கு-கிழக்கு பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துவது ஆகும். இந்த இணக்கப்பாட்டின் மூலம் ஒரு விடயம் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் இதுவரை காலமும் மறுத்து வந்த, மறைத்து வந்த இவ் ஒட்டுக் குழுக்கள் பற்றிய விடயமானது இந்த இணக்கப்பாட்டினூடாக ஒப்புக் கொள்ளப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமாதான முயற்சிகளுக்குச் சவாலாக இருந்து வந்த ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதனால் எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்ற எதிர்பார்ப்பும் அப்போது உருவாகியது.
ஆனால் ஜெனிவாப் பேச்சு வார்த்தைகள் முடிந்த பின்னரும் ஒட்டுக் குழுக்களின் சமாதான விரோதச் செயற்பாடுகளும், தாக்குதல்களும் நிறுத்தப்படாமல் தொடர்கின்றன. அது மட்டுமல்லாது சிறிலங்கா அரசம் அதன் இராணுவமும் அமைச்சர்களும் முன்னுக்குப்பின் முரணாகப்பேசவும் அறிக்கைகள் விடவும் ஆரம்பித்துள்ளார்கள். சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வி ஒன்றில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதக் குழுக்கள் எதுவும் செயற்படவில்லை என்றும் கருணாகுழு விவகாரம் வீடுதலைப் புலிகளின் உட்பிரச்சனை என்பதனால் அது தொடர்பாகத் தம்மால் எதுவும் செய்யமுடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார். பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்ணாண்டோ கூறுகையில், இராணுவத்தின் துணைக் குழுவாகச் செயல்படுவது சிpறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை மட்டும்தான் என்றும் வேறு எந்த ஆயுதக்குழுவும் சிறிலங்கா அரசிடம் இல்லை என்றும் ஒரே போடாகப் போட்டிருக்கின்றார். இதேவேளை தமிழ் ஒட்டுக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையக் கூடாது என்று பௌத்த பிக்குகளின் அமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றது. சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரான எச்.எம்.ஜி .கொட்டகதெனிய அவர்களோ வித்தியாசமான கோணத்தில் ஒரு கருத்தை வெளியிட்டள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ’த மோர்னிங் லீடர்’ நாளேட்டுக்கு கொட்டகதெனிய அளித்த நேர்காணல் ஒன்றின்போது சிறிலங்கா ராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களைக் களைய வேண்டும் என்ற கருத்தை தெரிவிக்கும் முன்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களைக் களைய முனைந்தால் அவர்கள் அரச படையினருடன் மோதும் நிலை உருவாகும். சிறிலங்காவில் அரச படைகள் தவிர்த்து எந்தக் குழுவும் ஆயுதம் வைத்திருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பாகும் அவர்களுக்கு ஆயுதம் வைத்திருக்க உரிமை இல்லை என்று கூறியிருக்கின்றார்.
இவர்களுடைய இந்தக் கருத்துக்களும் ஒட்டுக்குழுக்களின் சமீபத்திய தாக்குதல்களும் ஜெனிவாவில் சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்ட ஒப்புக் கொண்ட விடயங்களுக்கு முரணாணவையும் எதிரானவையுமாகும். இவை குறித்து நாம் தர்கிப்பதற்குப் பதிலாக வேறு சில தர்க்கங்களின் கருத்துக்களை முன் வைக்க விரும்புகின்றோம்.
2005ம் ஆண்டிற்கான இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள பதினாறு பக்க அறிககையில் அரசாங்க முகவர்களால் நடாத்தப்படுகின்ற சட்ட விரோத மரணங்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற படுகொலைகள் துணை இராணுவக் குழுக்களினால் அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படுகின்ற படுகொலைகள் குறித்த வகைப்படுத்திக்கண்டனம் தெரிவித்துள்து. அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாகச் சந்தேகிக்ககப்படும் துணை இராணுவக் குழுக்கள் அரசியல் எதிரிகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடாத்தி வருகின்றார்கள்-என்றும் அமெரிக்கா இந்த அறிக்கையின் மூலம் சிpறிலங்கா அரசைக் குற்றம் சட்டியுள்ளது. நீதிக்குப்புறம்பான காவல்துறையினரது இத்தகைய செயற்பாடுகளை முதல் முறையாக அமெரிக்க அரசாங்கம் தனது அறிக்கையில் பட்டியலிட்டுளதாக ஆசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
‘அரச கட்டுப்பாட்டுப்பகுதியில் ஒட்டுக்குழுக்கள் எதுவும் செயற்படவில்லை’ என்று அமைச்சர் மங்கள சமரவீர கூறிய கருத்தை போர் நிறுத்த கண்ணகாணிப்புக் குழுவின் பேச்சாளரான ஹெலன் ஒல்ஃடொட்ஸ்ரெயர் கடுமையாக நிராகரித்துள்ளார். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆயுதக்குழுக்கள் செயற்படுகின்றன என்பதனைத் தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக ஹெலன் மேலும் தெரிவித்துள்ளார்.
‘சிறிலங்காவில் துணை ஆயதக் குழுக்கள் செயற்படுவது தொடர்பாக சிறிலங்கா அரசிற்கு நாம் எடுத்துக் கூறியிருக்கின்றோம்.-என்று போர் நிறுத்தக் காண்காணிப்புக் குழுவின் தலைவரான ஹெக்ரூப் ஹொக்லண்ட் அவர்களும் தெரிவித்துள்ளார். ‘துணை ஆயுதக் குழுக்கள் இயங்குகின்றன என்ற விடயத்தை நாம் சிறிலங்கா அரசுக்கு எடுத்துக் கூறியுள்ளோம். துணை ஆயுதக் குழுக்கள் எதுவும் இல்லை என சிறிலங்கா அரசு தெரிவிப்பது அவர்களைப் பொறுத்ததாகும். ஆனால் அவர்கள் அதனை ஏற்கின்றார்களோ இல்லையோ ஆயுதக்குழுக்கள் இயங்குகின்றன என்பதை நாம் சிறிலங்கா அரசுக்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். என்று ஹக்ரூப் தெரிவித்துள்ளார்.
இவை மட்டுமல்லாது சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்புக்குழுவின் அமைப்பான ‘பல்ரெல்’ இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் இயங்கி வருவதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று அறிவித்துள்ளது. கிழக்குப் பகுதியில் உள்@ராட்சித் தேர்தலை நடத்துகின்ற வகையில் நிலைமை சாதகமாக இல்லை. அங்கே ஆயுதக் குழுக்கள் இயங்குகின்றன என்பதற்கான ஆதாரங்களை நாம் வைத்திருக்கின்றோம் என்று பல்ரெல் அமைப்பின் தலைவரான கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
‘ஒட்டுக் குழுக்கள் சிpறிலங்கா இராணுவத்தின் அனுசரணையுடன் இயங்குகின்றன என்பதனைச் சர்வதேச உலகம் இவ்வாறு வெளிப்படுத்தி வருகின்ற போதும் சிறிலங்கா அரசம் அதன் நிர்வாக இயந்திரமும் அதனைத் தொடர்ந்து மறுத்து வருவது கவனிக்கத் தக்கதாகும். இதனடிப்படையில் சில கருத்துக்களை முன் வைத்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.
இந்த ஒட்டுக் குழுக்களைச் சிறிலங்கா அரசு உருவாக்கி வைத்திருப்பதற்கான அடிப்படைக் காரணங்களை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். சில விடயங்களைத் திட்டமிட்டு வைத்திருக்கின்ற சிங்கள அரசு எதிர்காலத்தில் இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக இந்த ஒட்டுக் குழுக்களை உபயோகித்து வருகின்றது. சிறிலங்கா அரசு தான் செயற்படுத்துவதற்காக எண்ணியிருக்கும் திட்டங்களை நாம் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.
இந்த ஒட்டுக்குழுக்களின் செயல்களின் மூலம்,: - • தமிழ் மக்களை கூறு போட முயல்வது • தமிழ் -முஸ்லிம் மக்களை கூறு போட முயல்வது • தமிழ்த் தேசியக் கோட்பாட்டை கூறு போட முயல்வது • தமிழர் தாயகத்தை கூறு போட முயல்வது • தேவைப்படும் பட்சத்தில் மலையக மக்களைக் கூறு போட முயல்வது
இதற்கும் அப்பால் • தமிழீழ மக்களை அழிப்பது. இந்தத் திட்டங்களை மகிந்த ராஜபக்சவின் அரசு கட்டம் கட்டமாகச் செயற்படுத்த விரும்புவதாக நாம் சந்தேகிக்கின்றோம். அதற்குரிய அடிப்படை வேலைகளைச் செய்வதற்காக ஒட்டுக்குழுக்களை மகிந்தவின் அரச உபயோகித்து வருகின்றது. இப்போதுள்ள தன்னுடைய பலவீனமான நிலையைப் பலப்படுத்தும் முகமாக இந்தச் சமாதானத்திற்கான காலத்தையும் ஒட்டுக்குழுக்களையும் மகிந்த ராஜபக்சவின் அரசு பயன்படுத்தி வருகின்றது. இது இந்த ஒட்டுக்குழுக்களுக்கும் நன்கு தெரியும்! தம்மை சிறிலங்காவின் அரசு எதற்காகப் பயன்படுத்தி வருகின்றது என்பது இந்தத் தமிழ் ஒட்டுக் குழுக்களுக்கு மிக நன்றாகவே புரியும். ஆயினும் தமது குறுகிய கால சுயநல இலாபத்திற்காக இவர்கள் தமது சொந்த இன மக்களின் எதிர்காலத்தையே காட்டிக் கொடுக்க முனைந்துள்ளதை வரலாறு மன்னிக்க போவதில்லை.
சமாதானத்தை குலைக்கின்ற பணியில் ஈடுபட்டுள்ள இந்த ஒட்டுக் குழுக்கள் தாம் தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்வதாக கூறிவருகின்றார்கள். துமிழ் மக்களுக்கு தொண்டு செய்வதற்காக இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதுவதாகவும் சொல்லி வருகின்றார்கள். ஆனால் இதிலே விசித்திரம் என்னவென்றால் தமிழீழ மக்களுக்கு தொண்டு செய்வதாக சொல்கின்ற இந்த ஒட்டுக் குழுக்கள் தாம் தனித்து நின்று போரிடவில்லை. இவர்கள் நிற்பதோ தமிழ் மக்களின் எதிரியின் பாசறையில். தமிழ் மக்களை தொடர்ந்தும் அழித்து வந்த பொது எதிரியின் பாசறையில் இந்த ஒட்டுக் குழுக்கள் தங்கியிருந்து கொண்டு தாம் தமிழ் மக்களுக்கு தொண்டு செய்வதாக கூறி வருவதை என்னவென்றுதான் சொல்வது? இவர்கள் தங்கள் சொந்த சுயநலனுக்கு மட்டும்தான் தொண்டு செய்து வருகின்றார்கள்.
இந்த ஒட்டுக் குழுக்கள் செயல்படுகின்ற பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு இந்த ஒட்டுக் குழுக்களின் உள்நோக்கம் நன்கு புரியும். இவர்களைத் தமிழ் மக்கள் வெளிப்படையாக அடையாளம் காண்பிக்கும் வகையில் அவர்களது பொறுமை எல்லை மீறும்போது இந்த ஒட்டுக்குழுக்கள் ஒட்ட இடமில்லாது ஒழிந்து போக வேண்டி வரும்.!
தமிழ்-முஸ்லிம் மக்களை கூறு போடும் எண்ணத்தில் ஜிகாத் குழு, பின்லாடன் குழு போன்ற ஒட்டுக்குழுக்களும் சம்பந்தப்பட்டவர்களின் அனுசரணையுடன் இயங்கி வருகின்றன. இந்த முஸ்லிம் ஒட்டுக்குழுக்களின் இருப்பை முஸ்லிம் தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள. சிறிலங்காவின் அரச ஆதரவுடன் இயங்குகின்ற இந்த முஸ்லிம் ஒட்டுக் குழுக்களின் எதிர்கால வளர்ச்சியானது தங்கள் நலனைப் பேண நினைக்கின்ற சில வெளி நாடுகளுக்கும் எதிர்வினையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை இந்த விடயம் குறித்து மேலும் விரிவாக சிந்திக்கும் பொறுப்பை எமது வாசகர்களிடமே விட்டு விடுகின்றோம்.
அடிப்படையாகச் சில முக்கிய கருத்துக்கிளைச் சொல்ல விழைகின்றோம். • தமிழ் மக்களைப் பலம் இழக்கச் செய்த பிறகு பாரியபோர் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று மகிந்த ராஜபக்சவின் அரசு நினைக்கின்றது.
• இதற்குரிய செயற்பாடுகளில் ஒன்றாக ஒட்டுக்குழுக்கள் ஊடாகத் தொடர்ந்தும் மறைமுகமாக விடுதலைப் புலிகளுடன் போர் ஒன்றை சிறிலங்கா அரசு நடாத்தி வருகின்றது.
• ஆகவே ஒட்டுக்குழுக்களின் ஆயுதக் களைவு குறித்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் வேண்டுகோள் சிறிலங்கா அரசை நோக்கியே அமைவதில் வியப்பில்லை.!
• ஒட்டுக்குழுக்களின் பிரச்சனை உட்பிரச்சனை என்று கூறி போரைத் தமிழ் மக்கள் மீது திணிக்க முயல்பவர்கள் நாளை சர்வதேசப் பிரச்சனையை முகம் கொடுக்க வேண்டி வரும்.!
• நாளை சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிந்தாலோ, அல்லது மீண்டும் போர் வெடித்தாலோ அதற்காகத் தமிழ் மக்கள் மீது எவரும் குற்றம் சாட்ட முடியாது!
|