Selected Writings by Sanmugam Sabesan சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா
சமாதானத்திற்கு எதிராக, மகிந்தவின் இருமுனைச் செயற்பாடுகள்! 10 January 2006
தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்கும் நாளாந்த வாழ்வியல் பிரச்சனைக்கும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாக உரியதொரு தீர்வு கிட்டக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இப்பொழுது குலைந்து வருவதை நாம் காணக் கூடியதாக உள்ளது. தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற தாக்குதல்களும், கொலைச் செயல்களும் மனிதஉரிமை மீறல்களும் வெளிப்படையாகவே நடைபெற்றுக் கொண்டு வருவது ஒருபுறம் இருக்கையில் மறுபுறத்தில் தற்போதைய சிறிலங்கா அரசு சமாதான முன்னெடுப்புக்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதையும் நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்த இரு முனைச் செயற்பாடுகளை நன்கு திட்டமிட்ட முறையிலேயே சிங்கள-பௌத்தப் பேரினவாத ஆட்சி பீடம் மேற்கொண்டு வருவதைச் சுட்டிக் காட்டி, அதனூடே பல முக்கியமான விடயங்களைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
சிறிலங்காவின் புதிய அரச அதிபராக திரு மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்பு இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிராக முன்னரும் செயல்பட்டு வந்தவராவர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு சரத் பொன்சேகா முன்னரும் மறுதலித்தே வந்துள்ளார். ‘இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பொதுமக்களின் வாழ்விடங்களை விட்டு இராணுவம் வெளியேற மாட்டாது’ என்ற 2002ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சரத் பொன்சேகா பகிங்கரமாகவே அறிவித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க மறுத்த விடயம், நேயர்களுக்கு நினைவிருக்க கூடும்.
இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவியேற்ற பின்பு தமிழ் பொது மக்களுக்கு எதிரான இராணுவ வன்முறைகள் அதிகரித்து வருவதோடு அவற்றிற்கு எதிரான மக்கள் போராட்டங்களையும் இராணுவம் தன் தாக்குதல்கள் மூலம் அடக்க முயன்று வருகின்றது.
இவற்றோடு இன்னுமொரு விடயமும் நிலைமையை மேலும் மோசமாக்கி வருவதை நாம் காண்கின்றோம். அது இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தமிழ்த் துவேஷக் கருத்துக்கள்.!
யாழ் குடாநாட்டில் தமிழ்ப் பொதுமக்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட மேற்கொண்டு வருகின்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை இராணவத் தளபதி சரத் பொன்சேகா நியாயப்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாது, அவை தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்திருக்கின்றார். தமிழ் மக்களானவர்கள் தங்கள் மீது சிங்கள இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளை எதிர்த்து ஜனநாயக முறையில் மேற்கொள்கின்ற அமைதி வழிப் போராட்டங்களையும் சரத் பொன்சேகா நிராகரித்துப் பேசியுள்ளார். இத்தகைய மக்கள் போராட்டங்களை இராணுவப்பலம் கொண்டு அடக்குவது நியாயமானதுதான் என்கின்ற வகையில் இராணுவத் தளபதி தன் கருத்துக்களைத் தெரிவித்தும் வருகின்றார்.
‘தமிழ்ப் பொதுமக்கள் பலர் ஆயுதப்பயிற்சி பெற்றுள்ள காரணத்தினால் அவர்கள் மேற்கொள்கின்ற எதிர்ப்புப் போராட்டங்களை இராணுவப் பலத்தினூடாகத்தான் அடக்க வேண்டும்’ என்றும் சரத் பொன்சேகா கூற ஆரம்பித்துள்ளார். சரத் பொன்சேகா கூறுவது போல் தமிழ்ப் பொதுமக்கள் ஆயுதப்பயிற்சி பெற்றவர்களாகவே இருக்கட்டும். இன்று அமெரிக்கா சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் குடிமக்கள் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் அந்த மக்கள் தங்கள் அரசுகளுக்கு எதிராக நடாத்துகின்ற ஜனநாயக வழிப் போராட்டங்களை அவர்களின் அரசுகள் இராணுவப் பலத்தைப் பிரயோகித்து அடக்குவதில்லை என்பதை ஏனோ சரத் பொன்சேகா மறந்து விட்டார்!
ஆனால் இவையெல்லாவற்றையும் விட இந்த ஆங்கில புத்தாண்டு ஆரம்பத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள் இளையதம்பி தர்சினி என்கின்ற 20 வயது இளம்பெண்ணின் பாலியல் வல்லுறவுப் படுகொலை குறித்துத் தெரிவித்த கருத்து ஹிட்லரின் கொடுங்கோன்மைக் கருத்துக்களையும் விட கொடூரமானவையாக அமைந்து விட்டது. தர்சினியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவரை படுகொலை செய்தது சிறிலங்கா கடற்படையினராகவே இருக்கட்டும்!. ஆனால் இச்செயலை எதிர்த்துத் தாக்குதல் நடாத்துவதற்கு இவர்கள்(புலிகள்) யார்? என்ற சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.!
இதுதான் சிறிலங்கா இராணுவத்தலைமை தமிழ் மக்களுக்குத் தருகின்ற சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் நீதியாகும்.!
சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா என்பவர் சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் இராணுவக் குரலாக மட்டுமன்றி சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் அரசியல் குரலாகவும் இரட்டைப் பொறுப்பு எடுத்து செயல்படுவதை நாம் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்றோம்.!
சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தன்னை 1958ம் ஆண்டுக் காலப்பகுதியில் இருத்திக் கொண்டு, தமிழர்களை அடித்துக் கொன்றால் அவர்கள் பயந்தோடி ஒளித்துக் கொள்வார்கள் என்ற நினைப்பில் பேசிச் செயலாற்ற முனைந்து வருகின்றார். அவர் தற்போதைய கள யதார்த்தத்தை உணரவில்லை என்பதைத்தான் அவரது பேச்சுக்களும் செயலும் புலப்படுத்துகின்றன. அவர் யதார்த்தத்தை உணரும்வேளை நெருங்கி வந்து கெண்டிருக்கின்றது என்பதைத்தான் அவர் இன்னும் உணரவில்லை. ஆனால் அந்தக் காலம் நெருங்கி வருகின்றது என்பதை நாம் இப்போதே சொல்லி வைக்க விழைகின்றோம்.!
இத்தருணத்தில் சில முக்கிய விடயங்களை நேயர்கள் முன்வைக்க விரும்புகின்றோம். சமாதானப்பேச்சு வார்த்தைகள் குறித்து தற்போதைய சிறிலங்கா அரசு பேசி வருகின்ற போதிலும் அது ஓர் இராணுவத் தீர்வை முன்வைத்துத்தான் செயற்பட்டு வருகின்றது. இன்றைய தினம் சிறிலங்கா இராணுவத்திற்குக் கட்டுப்பாடற்ற அதிகாhரங்கள் வழங்கப்பட்டு இருப்பதனால் சட்டத்தையும் நீதியையும் ஒப்பந்தங்களையும் மீறி தமிழ் மக்களுக்கும் அவர்களது உரிமைகளுக்கும் எதிராகச் சிறிலங்காவின் இராணுவம் வெளிப்படையாகவே செயற்பட்டு வருகிறது. இவை ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானவையாகும். தமிழீழம் என்பது தமிழர்களின் இறைமையுள்ள தேசமாகும். தம்முடைய இறையாண்மையை நிலைநிறுத்துவதற்காகத் தமிழ் மக்கள் தமது குரலை வெளிப்படையாகத் தெரிவித்தாக வேண்டும். அவர்கள் மௌனமாக இருக்கமுடியாது. அவர்கள் பேசாமல் மௌனமாக இருந்தால் சிறிலங்கா அரசினதும் அதனது இராணுவத்தினதும் அராஜகத் தன்மைக்கு எதிராகத் தமது எதிர்ப்பினைத் தம்மால் முடிந்த சகல வழிகளிலும் காட்டி வருகின்றார்கள். சிறிலங்கா இராணுவ ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், காணாமல் போவதும் சர்வதேச நீதியை பொறுத்த வரையில் மிகப்பாரிய குற்றங்கள் ஆகும்.
சிறிலங்காவின் அரசுகளும், அவற்றின் இராணுவமும் தமிழ் மக்களின் மீது தொடர்ந்து செய்து வருகின்ற கொடுமைகள் முன்பு ஹிட்லர் யூதர்களுக்குச் செய்த கொடுமைகளைத்தான் எமக்கு ஞாபகப் படுத்துகின்றன.
சமாதான முயற்சிகளுக்கு எதிராக, இராணுவ ரீதியாக சிங்கள இராணுவம் செயற்பட்டு வருவது குறித்து இதுவரை நாம் தர்க்கித்து இருந்தோம். சமாதான முயற்சிகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக தற்போதைய சிறிலங்கா அரசு புதிய அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனைகளின்(?) ஊடாக செயல்பட்டு வருவது குறித்துச் சில முக்கியமான விடயங்களைச் சொல்ல விழைகின்றோம்.
சிறிலங்காவின் புதிய அரசின் பிரதிநிதிகள் அண்மையில் மேற்கொண்ட இந்திய அமெரிக்க விஜயங்கள் குறித்தும் சிறிலங்காவின் புதிய அரசு சமாதானப் பேச்சு வார்த்தைகள் குறித்துக் கடைப்பிடித்து வருகின்ற அலட்சியப் போக்குக் குறித்தும் சுருக்கமாக சில கருத்துக்களைத் தர்க்கிக்க விழைகின்றோம்.
அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம் பலத்த தோல்வியில் முடிந்துள்ளதாகப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைப் பிரச்சனையில் நேரடியாக இந்தியா தலையிட மாட்டாது என்றும் சிறிலங்காவின் அரசிற்கு ஆயுத உதவிகள் செய்வதற்கும் இந்தியா முன்வராது என்றும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சிறிலங்கா அதிபர் ராஜபக்சவைச் சந்திப்பதனைக் கடைசி நேரத்தில் தவிர்த்து விட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இவை நம்மவருக்கு உற்சாகம் தருவதில் வியப்பில்லைதான். எனினும் இச்சம்பவங்கள் குறித்து நாம் எமது பார்வையைத் தரவிரும்புகின்றோம்.
சிறிலங்காவின் சிங்கள அரசுகளுக்கு கொள்கை ரீதியாக இந்தியா முக்கியமில்லை. அன்று தொட்டு இன்று வரைக்கும் இந்தியாவிற்கும் இந்திய நலனுக்கும் எதிரான செயற்பாடுகளைத்தான் சிறிலங்காவின் சிங்களக் கடும்போக்காளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். தவிரவும் முன்னர் இந்தியா இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஒற்றையாட்சித் தீர்வு முறை நிராகரிக்கப் பட்டுள்ளதோடு தமிழரின் தாயகக் கோட்பாடும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் சிறிலங்காவிற்கு ஒரு பிரச்சனை. சிறிலங்காவின் ஆட்சி மாறியபோதெல்லாம் புதிய தலைவர்கள் டெல்லிக்கு காவடி தூக்கிச் செல்வது ஓர் ஏமாற்று வித்தைதான். ஈழத்தழிழர்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு வரும்வரைக்கும் சிறிலங்காவின் இந்தக் காவடி வேஷம் தொடந்தும் நடைபெறும். தமிழரின் தேசியப் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு கிடைத்துவிட்டால் சிறிலங்காவிற்கு இந்தியா தேவையில்லாது போய்விடும்.
உண்மையில் சிறிலங்கா மிக முக்கியமானவையாகக் கருதுவது மேலைநாடுகளைத்தான். சுpறிலங்கா இந்தியாவிற்கு காவடி தூக்கும் அதே வேளையில் மேலை நாடுகளுக்குத் தனது பிரதிநிதிகளை அனுப்பி பொய்மைப் பரப்புரைகளை மேற்கொண்டு சமாதான முயற்சிகளை இழுத்தடிக்கும் வேலைகளை மேற்கெண்டு வருகின்றது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் அண்மைய அமெரிக்க விஜயத்தை நாம் ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மங்கள சமவீர தன்னுடைய அமெரிக்க விஜயத்தின் போது சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கண்டத்திலேயே மிக நெடுங்காலமாக ஜனநாயக மரபுகளைப் பேணி வருகின்ற நாடு சிறிலங்கா என்றும் இனப்பிரச்சனையை ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலும் மனித உரிமைகளின் அடிப்படையிலும் சிறிலங்கா அரசு தீர்த்து வைக்கும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எளிதில் நம்பக் கூடிய, ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களா இவை?
சிறிலங்காவின் ஜனநாயகம் தமிழ் மக்களுக்கு எதிராக இயங்கி வருகின்றது. சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு எதிராக ஆக்கப் பட்டுள்ளது. சிறிலங்காவின் நீதித்துறை தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது. சிறிலங்காவின் சிங்கள அரசுகளும் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுக்கு எதிராக இயங்கி வருகின்றார்கள். சிறிலங்காவின் அரச மதமான பௌத்த மதத்தின் பிக்குமார்கள் தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். சிறிலங்காவின் முப்படைகள் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து புரிந்து வருகின்ற மனித உரிமை மீறல்களும், படுகொலைகளும் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஒப்பானவை. ஆனால் இந்த அப்பட்டமான உண்மைகளையெல்லாம் தனது பொய்ப்பரப்புiயூடாக அமைச்சர் மங்கள சமரவீர மறைக்க முனைகின்றார்.
மங்கள சமரவீர வேறு ஒரு விடயத்தையும் சொல்லியிருக்கின்றார்.
இதுவரை காலமும் சிறிலங்கா அரசு ஏராளமான விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டு நெகிழ்ச்சி போக்கினை கடைப்படித்து வருகின்றது. அதே போல் விடுதலைப் புலிகளும் நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டும். இது மங்கள சமரவீரவின் வாயினூடாக வெளிப்பட்டுள்ள மகிந்தவின் சிந்தனை.!
சிறிலங்கா அரசுடன் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகளின் போது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த ஒரு விடயமும் அரசால் அமலாக்கப் படவில்லை. எந்த ஒரு உருப்படியான யோசனையும் செயல் வடிவம் பெறவில்லை. விடுதலைப் புலிகள் சமர்ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகர சபைக்குரிய ஆலோசனை வரைவை கூட சிறிலங்காவின் தலைமைப் பீடம் ஏற்றுக் கொள்ளவில்லை. சுனாமிப் பேரழிவை எதிர் கொள்வதற்காக மனிதாபிமான ரீதியில் உருவாக்கப்பட்ட பொதுக் கட்டமைப்பிற்கு கூட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினாலும் அதன் அரசினாலும் மேற்கௌளப்பட்ட அரசியல் படுகொலைகளையும் யுத்த நிறுத்த மீறல்களையும் விடுதலைப் புலிகள் பொறுத்துக் கொண்டதோடு மேற்கூறிய சிங்களக் கடும்போக்குகளுக்கும் பொறுமையாக முகம் கொடுத்தே வந்துள்ளார்கள்.
ஆனால் அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது பிரதிநிதிகளும் உண்மைக்குப் புறம்பான விடயங்களை உலக நாடுகளுக்குச் சொல்ல முனைந்து வருகின்றார்கள். இவ்வளவற்றையும் பேசுபவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து வெளிநாடுகளில் பேசுவதில்லை. காரணம் அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.!
நாம் முன்னர் கூறியது போல் சிறிலங்கா அரசு ஓர் இராணுவத் தீர்வை முன்வைத்துத்தான் தனது காய்களை நகர்த்தி வருகின்றது. உள்நாட்டில் இராணுவ வன்முறைகளையும் மென்தீவிர யுத்தத்தையும் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.
சமாதானப் பேச்சு வார்த்தைகளைக் குழப்புவதற்கான பல செயற்பாடுகளை சிறிலங்கா அரசு இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதானது கவலையை தரக் கூடிய விடயமாகும். பெல்ஜியத்தில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தின் போது சிறிலங்கா அரசிற்கு ஒரு விடயம் தெரிவிக்கப்பட்டது. சமாதான ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை சிறிலங்கா அரசு களைய வேண்டும். என்பதுதான் அது.
அதற்கு மகிந்த ராஜபக்சவின் அரசு கொடுத்த பதில்தான் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை.!
ஆகவே மகிந்த ராஜபக்ச உள்நட்டிலும் வெளிநாடுகளிலும் இந்த இரு முனைச் செயற்பாடுகளை மேற்கொண்டு சமாதான முன்னெடுப்புக்களை நசுக்கி ஓர் இராணுவத்தீர்வை திணிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதனை நாம் கவலையுடன் அவதானிக்கின்றோம். இவருடைய முன்னோடிகளான புகழ் வாய்ந்த ஜனநாயகவாதிகளின் வழிகாட்டலின் பிரகாரம் மீண்டும் ஓர் இனக்கலவரம் வெடிக்காமல் இருந்தால் சரி! எது எப்படி இருப்பினும் தற்போதைய சிங்கள அரசு சமாதானப் பேச்சுக்களை குழப்பி இராணுவத் தீர்வு ஒன்றினைத் திணிக்கும் நோக்கிலேயே இருக்கின்றது என்பதை நாம் மீண்டும் சொல்லி வைக்க விழைகின்றோம்.
இவையெல்லாவற்றையும் தவிர்க்க நினைக்கும் உலக நாடுகள் செய்ய வேண்டிய அத்தியாவசிய அவசர கடமை ஒன்று உண்டு. உரிய முறையில் ஜனநாயக மரபுகளைப் பேணி உண்மையான சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கும்படி சிறிலங்கா அரசிற்கு உலக நாடுகள் உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்! இல்லாவிட்டால் நடைபெறக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு உலக நாடுகளின் இந்த அலட்சியப் போக்கும் ஒரு காரணமாகி விடும். |