தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >  நெகிழ்ச்சிப்போக்குத் தொடருமா?


Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

 நெகிழ்ச்சிப்போக்குத் தொடருமா?

20 December 2005

"...தமிழீழத் தேசிய தலைமை இதுவரைகாலமும் கடைப்பிடித்து வந்த நெகிழ்ச்சித் தன்மையை எதிர்காலத்திலும் கடைப்பிடிக்கும் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. கடந்த நான்காண்டுக் காலத்தில் தமிழீழத் தேசியத்தலைமை நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடித்து வந்ததோடு, அதனூடே சமாதான முயற்சிகளுக்குத் தொடர்ந்தும் வாய்ப்பினை வழங்கி வந்திருந்தது. ஆனால் சிங்கள பேரினவாதத்தின் கடும்போக்குக் காரணமாக உரிய முறையில் சமாதான முயற்சிகள் நகரவில்லை. ஆகவே தமிழீழத் தேசியத் தலைமை வருங்காலத்தில் நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைபிடிக்கும் என்று நாம் கருதுவதற்கில்லை..."


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு ஆறுமுகம் தொண்டமான் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை கடந்த சனிக்கிழமை (17.12.2005) அன்று கிளிநொச்சி சென்று சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணித் தலைவரான திரு பெ. சந்திரசேகரன், திரு ஆறுமுகம் தொண்டமான் திரு சு.ப தமிழ்ச்செல்வனை சந்திக்கச் சென்றுள்ளதானது உலகின் கவனத்தைத் தமிழ் மக்களின்பால் ஈர்க்கின்ற வரலாற்று நிர்ப்பந்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ‘மலையக வாழ் தமிழர்கள் வேறு, வடகிழக்குத் தமிழர்கள் வேறு, கொழும்பு வாழ் தமிழர்கள் வேறு என்கின்ற ரீதியில் நாம் பிளவு பட்டுப் பிரிந்து நிற்பது எதிரிகளுக்கு சாதகமே தவிர, வேறு எந்தப் பயனையும் நமது சமூகத்திற்கு ஏற்படுத்தப் போவதில்லை. சகல இலங்கைவாழ் தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டால் எந்தச் சவால்களையும் முறியடித்துச் சாதிக்க முடியும்.’ என்றும் மலையக மக்களின் முன்னணித் தலைவர் திரு பெ. சந்திரசேகரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

இப்போது நடைபெற்ற இச்சந்திப்பின் அடிப்படையிலும், ஏற்கனவே நடந்து முடிந்து விட்ட பல சம்பவங்களின் அடிப்படையிலும், சில கருத்துக்களை முன்வைத்து தமிழிழ விடுதலைப் போராட்டத்திற்குரிய, எதிர்கால நகர்வுகளை தர்க்கிப்பதுவே எமது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு ஆறுமுகம் தொண்டமானுடனான சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின்போது தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பல முக்கியமான விடயங்களைத் தெரிவித்திருந்தார்.

அவற்றில் ஒன்று தமிழீழத் தேசியத் தலைவரின் நெடுநாளைய எதிர்பார்ப்பாகும். ‘அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழ் மக்களுடைய பிரச்சனைகளில் இணைந்து செயற்பட வேண்டும்’. என்பது தேசியத் தலைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது என்பதையும், ‘தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்’ என்பதைத் தேசியத் தலைவர் அவர்கள் முன்னைய பல சந்திப்புக்கள் ஊடே தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளார் என்பதையும் திரு தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.

தமிழீழ தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமான பார்வையும் சிந்தனைகளும் இப்போது யதார்த்தமாகி வருவதை நாம் இப்போது காண்கின்றோம். திரு ஆறுமுகம் தொண்டமான் சிங்களப் பேரினவாதத்தின் அழுத்தத்தை தாங்க முடியாமல் தமிழீழத்தை நோக்கி ஓடிவந்திருக்கவும் கூடும். ஆயினும் தற்போதைய மற்றும் முன்னைய அரசியல் வரலாற்றை இந்தச் சந்தர்ப்பத்தில் மீட்டிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கக் கூடும்.!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னரும் ஒரு தடவை, தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைந்திருந்தமை பலருக்கு ஞாபகத்தில் இருக்கக் கூடும். தமிழர் விடுதலைக் கூட்டணியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்தது. பின்னாளில் மெதுவாக விலகியது. ஆயினும் அன்றைய தினம் அதாவது 1972ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கீழ்வருமாறு கூறினார்.

இந்த நாட்டில் வாழுகின்ற மலையக வாழ் தமிழர்கள் இப்போது ஒரு விடயத்தை உணர்ந்திருக்கின்றார்கள். இலங்கைத்தீவில் வாழுகின்ற சகல தமிழர்களும் ஒரு தலைமையின் கீழ் அணி திரள வேண்டும்.!(Ceylon Daily News,11.10.1972)

அப்போது தேசியத் தலைவருக்கு 18 வயதுகூட ஆகவில்லை!

இன்று தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலின் கீழ் தமிழர் தேசத்தின் மிகப்பெரும்பான்மையான பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டு ஒரு நிழல் அரசாங்கமாகச் செயற்பட்டு வருகின்றன. பலத்தின் அடிப்படையில். தமிழர் தேசம் தனது உரிமைக்குரலை எழுப்பி வருகின்றது. இந்தவேளையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட இருப்பதானது சிங்கள தேசத்திற்கு மட்டுமல்ல, சர்வதேச நாடுகளுக்கு ஒரு பலத்த குரலின் ஊடாக, ஒரு பலமான குரலின் ஊடாக ஒரு செய்தியை தெரிவித்து நிற்கின்றது.

‘தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்கான வேட்கையை சம்பந்தப்பட்டவர்களாகிய நீங்கள் தொடந்தும் அலட்சியப்படுத்தி வருவதை நாம் இனியும் பொறுத்திருக்க முடியாது! நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் முன்வாருங்கள்! இல்லாவிட்டால் நாங்களே எமக்குரிய நீதியைப் பெறுவதற்கு செயலாற்ற முன்வருவோம்.!’

இந்தச் செய்தியும் அதற்குரிய செயல்வடிவமும் மிக்குறுகிய கால அவகாசத்தில் எரிமலையாய் எழுந்து நிற்கப் போகின்றதை நாம் இப்போதே உணரக் கூடியதாக இருக்கின்றது.

இந்தவேளையில் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும், சரியான நிதர்சனத்தை, நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கி விட்டது என்றே நாம் கருதுகின்றோம். சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழ் மக்களிடையேயும் பிரிவினையைத் தொடர்ந்து திட்டமிட்டுச் செயல்படுத்தி வந்துள்ள உண்மையை தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எல்லாம் இப்போது பெருவாரியாகக் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளமையை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அம்பாறை மாநிலம் முன்னர் இருந்த நிலைமையையும் தற்போது உள்ள நிலைமையையும் முஸ்லிம்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். முஸ்லிம் மக்களுடைய தலைமைகள் இவை குறித்து ஒரு போதும் அலட்டிக் கொள்வதேயில்லை. மாறாக தமது தலைமைகளை நிலை நிறுத்திக் கொள்வதற்கே முக்கிய அக்கறை காட்டி வருகின்றன. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தவிர்த்து, தமது பதவி மற்றும் அதிகார தேவைகளுக்கே முஸ்லிம் தலைமைகள் முதலிடம் கொடுத்து வந்துள்ளன.

இந்தவேளையில் ஒரு யதார்த்திற்கு நாம் முகம் கொடுத்தாக வேண்டும். இது இந்தக் காலகட்டத்தில் மிகமுக்கியமான ஒரு விடயமாகும்.

சிங்கள பேரினவாதம் என்பதானது, தனக்குள் எத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை புறந்தள்ளி ஒருமுகமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதை வரலாறு சுட்டிக்காட்டி நிற்கின்றது. சிங்களப் பேரினவாதம் தனக்குள்ளே இருக்கும் பிரிவினைகளைப் புறம் தள்ளி தமிழ்த் தேசியத்திற்கு எதிராக எப்போதும் செயல்பட்டு வந்துள்ளது. அதேவேளை தமிழ்த்தேசியம் பிரிவுற்று நிற்க வேண்டும் என்பதற்காக தனது முழுமையான சக்திகளையும் பிரயோகித்தும் வந்துள்ளது.

அதாவது சிங்களப் பேரினவாதம் தம்மிடையே உள்ள பிரிவினைகளைப் புறம்தள்ளுகின்ற அதே வேளையில் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையை உடைக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் தற்போதைய நிகழ்கால விடயங்களையும் நாம் தர்கிக்க விழைகின்றோம்.

சிறிலங்காவின் புதிய அரச அதிபரான மகிந்த ராஜபக்ஸ பேச்சு வார்த்தைகளுக்கான சமாதானக் கரத்தை நீட்டியிருக்கின்றார் என்று-பல செய்தி ஊடகங்கள் புளகாங்கித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதே வேளையில் சமாந்தரமான வேறு சில விடயங்களும் அரங்கேறி வருகின்றன. உண்மையில் அவை முன்னரும் அரங்கேறி வந்தவைதான்.!

இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் கூட்டம் இன்று திங்கட்கிழமை (19.12.2005) அன்று பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சில் நடைபெற உள்ளது. இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து மட்டுமல்ல தற்போது முடங்கிப் போய்க்கிடக்கும் பேச்சு வார்த்தைகளை மீளத் தொடங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னைய காலங்களில் இவ்வாறான நிதி உதவி வழங்கும் நாடுகளின் கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் அப்போதைய சிங்கள அரசுகளும் பேச்சு வார்த்தைகள் குறித்துப் பேசி வந்துள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எப்போதெல்லாம் இவ்வாறான மகாநாடுகள் நடைபெறுகின்றனவோ அப்போதெல்லாம் சிங்கள அரசுகள் சமாதானம் குறித்தும், சமாதானப் பேச்சுக்கள் குறித்துப் பேசுவதும், பின்னர் பழையபடி கடும்போக்கை கடைப்பிடிப்பதும், முன்னரும் அரங்கேறிய விடயங்கள் தான்.!

கடந்தகால வரலாறு வேறு ஒரு விடயத்தையும் நிரூபித்து நிற்கின்றது. கடுமையாகப் போர் நடந்த காலங்களில் சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது சிங்கள பேரினவாதிகள் சமாதானம் பற்றி பேசுவதும், சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆதரிப்பதும் வழக்கமாகும். அதேபோல் சமாதானத்திற்கான காலத்தின்போது பொருளாதார மேம்பாட்டை ஓரளவு பெற்றுவிட்ட பின்னர், இதே பேரினவாதிகள் சமாதானத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் வழக்கமாகும்.

கடந்த நான்கு ஆண்டு காலப்பகுதி, தமிழ் மக்களுக்கு நியாயமான எதையுமே பெற்றுத் தரவில்லை. சுனாமி ஆழிப்பேரலை அழிவு வந்து ஓராண்டு ஆகப்போகின்றது. தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்தையும் சிறிலங்காவின் நீதித்துறை தடைபோட்டு வைத்துள்ளது. தமிழ் மக்களுடைய வாழ்க்கை இயல்பு முறைக்குத் திரும்பவில்லை. தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சனைக்கும் தீர்வு கிட்டவில்லை. தமிழீழத் தேசியத் தலைமை இக்கால கட்டத்தில் நீண்ட தொரு நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடித்து பொறுமை கொண்டு காத்திருந்தது.

இப்போது அந்தப் பொறுமைக்குரிய காலம் கடந்து விட்டது.

ஆயினும் தமிழீழத் தேசியத் தலைவர் சிங்களத் தலைமைகளுக்கு இறுதியாக ஒரு கால அவகாசத்தை குறுகிய கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றார். இந்தக் குறுகிய கால அவகாசம் குறித்து ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். அது மிக முக்கியமான விடயமாகும்.

இந்தக் குறுகிய கால அவகாசம் கொடுக்கப்பட்டது உண்மையான நேர்மையான சமாதான முயற்சிகளை மேற் கொள்வதற்காகவே தவிர வீணாக இழுத்தடிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காக அல்ல! இழுத்தடிக்கும் சமாதான முயற்சிகளை மேற்கொள்வதும் தேவையற்ற நிபந்தனைகளை விதித்துத் கொண்டு காலத்தை இழுத்தடிப்பதும் நேர்மையான சமாதான முயற்சிகள் ஆகாது.

ஆசிய நாடொன்றில்தான் பேச்சு வார்த்தைகளை நடாத்த வேண்டும் என்றும், ஐரோப்பிய நாடுகள் விடுதலைப் புலிகளைத் தடை செய்யவேண்டும் என்றும், ஒற்றையாட்சி முறைக்குள்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசு கூறுவதும், அதற்கான செயற்பாடுகளில் இறங்குவதும் உண்மையான சமாதான முயற்சிகள் ஆகாது. அத்தோடு சர்வதேசப் பிரதிநிதிகள் மற்றும் ராஜதந்திரிகள் போன்றோர் தமிழீழப் பிரதேசங்களுக்குச் செல்வதை சிறிலங்கா அரசு தடுத்து வருவதும், சமாதான முயற்சிகளுக்கு உகந்தது அல்ல!

தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையையும், நாளாந்த வாழ்வியல் பிரச்சனையையும் உரிய முறையில் தீர்ப்பதற்குரிய உகந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் அந்த முடிவை எடுக்க வேண்டியது சிங்கள தேசம்தான். உகந்த முடிவை எடுப்பதற்கான பொறுப்பும், துணிவும் சிங்கள தேசத்திற்கு இருக்கிறதா? இல்லையா என்பது மிக விரைவில் தெரிந்து விடும்.

மிகவிரைவில் தெரிந்து விடும் என்று நாம் உறுதியாகக் கூறுவதற்குக் காரணம் இருக்கின்றது. தமிழீழத் தேசிய தலைமை இதுவரைகாலமும் கடைப்பிடித்து வந்த நெகிழ்ச்சித் தன்மையை எதிர்கலத்திலும் கடைப்பிடிக்கும் என்று நாம் எதிர்பார்க்க வில்லை! கடந்த நான்காண்டுக் காலத்தில் தமிழீழத் தேசியத்தலைமை நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடித்து வந்ததோடு, அதனூடே சமாதான முயற்சிகளுக்குத் தொடர்ந்தும் வாய்ப்பினை வழங்கி வந்திருந்தது. ஆனால் சிங்கள பேரினவாதத்தின் கடும்போக்குக் காரணமாக உரிய முறையில் சமாதான முயற்சிகள் நகரவில்லை. ஆகவே தமிழீழத் தேசியத் தலைமை வருங்காலத்தில் நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைபிடிக்கும் என்று நாம் கருதுவதற்கில்லை.

நெகிழ்சிப்போக்கு இனி இருக்காது!

தமிழீழத் தேசியத் தலைமையின் கீழ் இன்று தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து நிற்கின்றார்கள். தமிழீழத்திற்கு வெளியே உள்ள மலையக வாழ் தமிழ் மக்களும் தமிழ்க்கட்சிகளும் இன்று தமிழர்கள் என்கின்ற வகையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருப்பதற்கு முன் வந்திருக்கின்றார்கள். சம்பந்தப்பட்ட உலக நாடுகளுக்கு இலங்கைத்தீவின் நிதர்சனநிலை நன்கு புரியும் என்றே நாமும் நம்புகின்றோம். இன்று உரிய சமாதானத்தீர்வு உருவாகாமால் இருப்பதற்கு காரணம் சிங்களப் பேரினவாத அரசுகளின் கடும்போக்கும், அநீதியான இவர்களுடைய கொள்கைகளும்தான் என்பதை சர்வதேச உலகம் நன்கறியும்.

ஆகவே உரிய சமாதானத்தீர்வு இலங்கையில் வரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட உலக நாடுகள் உண்மையாகவே விரும்பினால், அவை சிறிலங்கா அரசிற்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்து அவை மூலம் உரிய சமாதான தீர்வு உருவாகுவதற்கான வாய்ப்பை உண்டாக்க வேண்டும். மாறாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தேவையற்ற அழுத்தங்களை சம்பந்தப்பட்ட உலக நாடுகள் விதிக்கும் பட்சத்தில் தங்களுடைய நம்பகத்தன்மையை இந்த உலகநாடுகள் இழந்துவிடும். அது மட்டுமல்லாது தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளைப் பிரதிபலிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது எதிர்காலத்தில் தேவையற்ற அழுத்தங்கள் விதிக்கப்பட்டால் அவை ஈற்றில் பயனற்று, பலனற்று போகும் நிலைதான் உருவாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தேவையற்ற தடைகள் நீக்கப்பட வேண்டியதற்குரிய வேளைதான் இதுவே தவிர, தடைகள் போடப்படுகின்ற வேளையல்ல இது!


 

Mail Usup- truth is a pathless land -Home