Selected Writings by Sanmugam Sabesan சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா
ஒரு தேர்தல் இரண்டு தீர்ப்புகள் 21 November 2005 "...தமது வாக்குகளை அளித்து மகிந்த ராஜபக்சவிற்கு வெற்றியை வழங்கியவர்கள் தாங்கள் பேரினவாதிகள் என்றும், பேரினவாதத்திற்கும் அதன் செயற்பாடுகளுக்கும், ஆதரவானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள். அது வாக்களித்த அவர்களுடைய தீர்ப்பு. இந்த அரச அதிபர் தேர்தலை புறக்கணித்து தமது வாக்குகளை அளிப்பதற்கு ஒட்டுமொத்தமாக மறுத்த தமிழ் மக்கள் தாங்கள் பேரினவாதத்திற்கு அடிபணிய மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். இது வாக்களிக்க மறுத்த தமிழ் மக்களின் தீர்ப்பு! ஒரு தேர்தல்-இரண்டு தீர்ப்புகள்!.."
நடைபெற்று முடிந்துள்ள இலங்கை அரச அதிபர் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று மகிந்த ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளார். சிங்கள மக்கள் தாங்கள் வாக்களித்ததன் மூலம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். அதேவேளை தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை அளிப்பதற்கு ஒட்டு மொத்தமாக மறுத்ததன் மூலம் தங்களுடைய தீர்ப்பை ஏகமனதாக வழங்கியிருக்கின்றார்கள்.
தமது வாக்குகளை அளித்து மகிந்த ராஜபக்சவிற்கு வெற்றியை வழங்கியவர்கள் தாங்கள் பேரினவாதிகள் என்றும், பேரினவாதத்திற்கும் அதன் செயற்பாடுகளுக்கும், ஆதரவானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள். அது வாக்களித்த அவர்களுடைய தீர்ப்பு.
இந்த அரச அதிபர் தேர்தலை புறக்கணித்து தமது வாக்குகளை அளிப்பதற்கு ஒட்டுமொத்தமாக மறுத்த தமிழ் மக்கள் தாங்கள் பேரினவாதத்திற்கு அடிபணிய மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். இது வாக்களிக்க மறுத்த தமிழ் மக்களின் தீர்ப்பு!
ஒரு தேர்தல்-இரண்டு தீர்ப்புகள்!
இதன் அடிப்படையில்தான் இலங்கைத்தீவின் எதிர்காலம் எழுதப்பட இருக்கின்றது. இப்போது நாம் சொல்வது அரசியல் ஆரூடம் அல்ல கடந்த கால வரலாறு கூட இதற்கேற்பவே பல கசப்பான உண்மைகளைச் சுட்டிக் காட்டி நிற்கின்றது.
வரலாறு ஒரு விடயத்தைத் தெளிவாக சொல்கின்றது. பொதுவாக சிங்கள மக்கள் பேரினவாதத்திற்கு சார்பாகவே இருந்து வந்துள்ளார்கள். அதனைத்தான் இந்த அரச அதிபர் தேர்தலும் வெளிப்படுத்தி உறுதிப் படுத்தியுள்ளது. தங்களுடைய அரசியல்வாதிகளும், தலைவர்களும் மட்டுமல்ல, தாங்களும் பேரினவாதிகள் என்பதை சிங்கள மக்கள் இன்று மீண்டும் நிரூபித்துள்ளார்கள் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனையையும், செயற்பாடுகளையும் வெளிப்படையாக முதலில் முன்வைத்தவர் முன்னைய பிரதமரான ளுறுசுனு பண்டாரநாயக்கா ஆவார். அவருடைய செயற்பாடுகள் இலங்கைத் தீவு எதிர்காலத்தில் பிளவுபடுவதற்கு அடிகோலியது மட்டுமல்லாது, அவரையும் பலி வாங்கியது. சிங்கள பௌத்த பேரினவாதத்தால் அவர் இறந்தார். பண்டாரநாயக்காவை சுட்டுக் கொன்றவர் ஒரு சிங்கள பௌத்த பிக்கு ஆவார். (ஆனால் அந்த சிங்கள பிக்கு தனது மரண தண்டனையை பெற முன்பு தன்னை ஒரு கிறிஸ்தவராக மதம் மாற்றிக் கொண்டார் என்பதும் அதனால் தூக்க்pலிடப் பட்டவர் ஒரு புத்த பிக்குவாக இறக்கவில்லை என்பதும் ஒரு தனிக் கதையாகும்.)
இந்தக் பேரினவாதச் சிந்தனைகளும், செயற்பாடுகளும் தொடர்ந்து வந்த காரணத்தினால்தான் ஜனநாயக மரபு முறைகள் யாவும் மீறப்பட்டு அவை வெறும் கேலிக்கூத்தாகின. தமிழ் மக்கள் முன்னர் நம்பிய, நம்பியிருந்த இந்த ஜனநாயக மரபுகள் சிறிலங்காவின் யாப்பின் ஊடாகவும், அதன் சட்டங்கள் ஊடாகவும் அரச வன்முறைகள் ஊடாகவும் மீறப்பட்டன. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களது நாளாந்த வழ்வியலும் நாதசமாக்கப் பட்டது. ஜனநாயக ரீதியாக தமிழ் மக்கள் மேற்கோண்ட போராட்டங்கள் யாவும் அரச வன்முறையூடாக நசுக்கப்பட்டு வந்ததன் காரணமாகத்தான் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக கூர்மையடைந்தது. இன்று அதனடிப்படையில் தமிழர்கள் பெற்ற வெற்றிகளும், வலிமையும்தான் இன்று தமிழர்கள் தம்முடைய எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்ளக் கூடியதாக உள்ளது.
இன்று தமிழ் மக்கள் அரச அதிபர் தேர்தலில் அக்கறை காட்டாமல் அதனை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்த காரணங்களில் நாம் மேற்கூறியவைகளும் அடங்கும். தமிழ் மக்கள் முந்தைய தேர்தல்களின் போது அளித்திட்ட ஆணையை சிங்கள தலைவர்கள் பரிசீலிக்க கூட முன்வரவில்லை. தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி தமிழ்மக்கள் ஜனநாயக முறையில் முன்னர் கொடுத்திட்ட இறையாணையை சிங்களத் தலைமை நிறைவேற்றவும் இல்லை. பரிசீலிக்கக்கூட முன்வரவில்லை.
ஆகவே தமிழ் மக்களுக்கு இயல்பாகவே சில ஐயங்கள் எழுந்திருப்பதில் வியப்பில்லை! எத்தனை தடவைகள் நாம் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும். எமது கோரிக்கையையும் ஆணையையும் எத்தனை தடவைகள் நம் திருப்பித்திருப்பி வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். இவையெல்லாம் ஏன் நிறைவேற்றப்படவில்லை இவையெல்லாம் ஏன் ஏற்கக் கூடப்படவில்லை. இவைதான் சிறிலங்காவின் ஜனநாயகம். தமிழ்த் தேசத்திற்கு தரக்கூடிய தீர்ப்பா? இதுதான் நியாயமா? இது நீதியாகுமா? இவைகள் தமிழ் மக்களின் நியாயமான சந்தேகங்களாகும்.
ஆகவே தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையையும், வேட்கையையும் ஏற்றுக் கொள்ளாத, ஏன் செவிமடுக்கவும் மாட்டாத தேர்தல்களில் நாம் ஏன் தொடர்ந்தும் பங்கெடுக்க வேண்டும்? ஏன் பங்களிக்க வேண்டும்?. தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையின் இறையாணையை ஒருமித்த குரலாக வெளிப்படையாக நாம் தெரிவிப்பதற்குரிய வாய்ப்பாக இந்த முந்தைய தேர்தல்கள் அமைந்ததை தவிர வேறு என்ன பலன்கனோ, பயன்களோ நடைமுறையில் எமக்கு வழங்கப்பட்டுள்ளன.?
தமிழீழ மக்கள் தாங்கள் எழுப்பிய இந்த வினாக்களுக்கு தாங்களாகவே பதில் அளித்துள்ள விதம்தான் இந்த அரச அதிபர் தேர்தல் புறக்கணிப்பு.
இதேவேளை நாம் இன்னுமொரு விடயத்தையும் தர்க்கிக்க விரும்புகின்றோம். தமிழீழ மக்கள் சிறிலங்காவின் அரசியல் பொய்மையில் இருந்து என்றோ தெளிவு பெற்று விட்டார்கள். ஆனால் சிங்கள மக்கள் இன்னும் தெளிவு கொள்ளாதது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தெளிவு கொள்வார்களா என்பதும் ஐயத்திற்கு உரியதாகவே உள்ளது. இதற்குச் சான்றாக சில கருத்துக்களை முன்வைக்க விழைகின்றோம்.
சிங்கள பொதுமக்கள் பேரினவாத சிந்தனைக்கும், அதன் கொள்கைக்கும் ஆதரவாக தொடர்ந்து வாக்களித்ததும், ஆதரவளித்தும் வந்துள்ளது போல் வேறு சில பொய்மைகளுக்குள்ளும் சிக்குண்டு போயுள்ளார்கள். சிங்கள அரசியல் தலைவர்கள் சிங்கள மக்களுடைய நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகக் கொடுத்த வாக்குறுதிகளையும் நம்பி அவர்கள் ஏமாந்து போயுள்ளார்கள்.
சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் சந்திர மண்டலத்தில் இருந்தாவது உங்களுக்கு அரிசி கொண்டு வந்து தருவேன் என்று கூறியதை நம்பி வாக்களித்தவர்களும் இந்த சிங்கள மக்கள் தான்.
பின்னாளில் சந்திரிக்கா அம்மையார் நான்கு ரூபாய்க்கு நான் பாண் வழங்குவேன் என்று கூறியதை நம்பி வாக்களித்தவர்களும் இந்த சிங்கள மக்கள் தான்.
நூற்றுக்கணக்கான உதாரணங்களை சுட்டிக்காட்ட முடியும் என்ற போதிலும் ஒரு பானை சோற்றுக்கு இரு சோறுகளை மட்டும் பதம் காட்டினோம்.
சிங்கள மக்களின் தேர்தல் வாக்களிப்பு முறையானது இன்னுமொரு உண்மையையும் புலப்படுத்தி நிற்கின்றது. நடைமுறைச் சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளையும் நம்பி இந்தச் சிங்கள மக்கள் வாக்களித்தார்கள் என்பதே அது.
சிங்கள மக்களது இந்த மனப்பான்மை உடனடியாகவே மாற வேண்டும். இல்லாவிட்டால் அது ஒரு மிகக் கசப்பான படிப்பினையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப் போகின்றது என்றே நாம் இந்த வேளையில் கருதுகின்றோம். தாங்கள் அதாவது சிங்கள மக்கள் இதுவரை காலமும் தெரிவு செய்த, செய்து வருகின்ற தமது சிங்கள தலைவர்கள் எந்த விதமான பிரச்சனைளையும் என்றுமே தீர்க்கப் போவதில்லை என்பதை மிகக் கசப்பான ஓர் அனுபவம் ஊடாக இவர்கள் உணரப் போகின்ற காலம் வெகுதூரமில்லை.
சிங்கள மக்கள் தங்களைச் சூழ்ந்திருக்கும் பொய்மையில் இருந்து விடுபட்டு வெளிவர வேண்டும். ஏனென்றால் இப்போது நடைபெறுகின்ற தேர்தல்கள் ஜனநாயகத்தை அடிப்டையாகக் கொண்டு நடைபெறுவதில்லை. அவை வெறும் கவர்ச்சிப் பொருட்களாகவே, போதைப் பொருட்களாகவே செயற்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளைத் தமது தலைவர்கள் நிறைவேற்றியதேயில்லை என்ற நிதர்சனத்தைத் சிங்கள மக்கள் என்று உணர்கின்றார்களோ அன்றுதான் அவர்களுக்கு விடிவெள்ளி தெரியும்.
நடந்து முடிந்த அரச அதிபர் தேர்தலின் முடிவுகள் குறித்தும் அதனுடைய பின்புலம் குறித்தும் இதுவரை தர்க்கித்து இருந்தோம். அத்துடன் மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்துச் சில கருத்துக்களை இவ்வேளையில் முன்வைப்பதானது பொருத்தமானதாக இருக்ககூடும் என்றும் எண்ணுகின்றோம். நடந்து முடிந்துவிட்ட இந்த தேர்தல் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு சகல நிறைவேற்று அதிகாரங்களைகயும் கொண்டுள்ள அரச அதிபர் பதவியை வழங்கியிருக்கின்றது.
இன்று இலங்கைத்தீவு எதிர்நோக்கியிருக்கின்ற தலையான பிரச்சனைகளை அவர் எவ்வாறு கையாளப்போகின்றார் என்பது குறித்த ஊகங்களும், புலம்பல்களும் இப்பொழுதே கிளம்பி விட்டன. சமாதான முன்னெடுப்புக்கள் குறித்தும், குறிப்பிட்ட சில வெளிநாடுகளின் தலையீடுகள் (?) குறித்தும் ஏற்கனவே சிலர் தமது எதிர்பார்ப்புக்களை எழுதவும் தொடங்கி விட்டனர். தற்போது சகல நிறைவேற்று அதிகாரங்களையும் மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டுள்ளதால் அவருக்கு இனிமேல் ஜேவிபி போன்ற கடும் போக்காளர்களின் ஆதரவு தேவை இருக்காது என்றும் அதனால் மகிந்த ராஜபக்ச நாட்டின் நலம் கருதி நல்ல செயற்பாடுகளை முன்னெடுக்கவும் கூடும் என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். புதிய ஜனாதிபதி ராஜபக்சவும் தீர்க்கமான தெளிவான அறிக்கைகளை வெளியிடாமல் வளவள, கொள கொள என்று பேசி வருகின்றார்.
புதிய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச நாட்டின் தலையான பிரச்சனைகளைச் சந்திப்பதற்காக எத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எழுந்திருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் அவருக்கு யாரும் வழிகாட்டத் தேவையில்லை காரணம் சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனைகளின் செயற்பாடுகளின் விளைவுகள் ஏற்னவே ஒரு பாடத்தையும் வழியையும் காட்டி நிற்கின்றன. அவற்றை அவர் அறிந்து அதற்கேற்றாப்போல் நடந்து கொண்டாலே போதுமானது.
சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைகளும், செயற்பாடுகளும் அவற்றை கடைப்பிடித்தவர்களையே ஈற்றில் அழித்து விட்டிருப்பதை முன்னர் கூறியிருந்தோம்.
இன்று ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் முழங்குகின்ற 'பண்டாரநாயக்கா சகாப்தம்' என்பதானது முதலில் S.W.R.D. பண்டாரநாயக்காவையும், நாட்டையும் எவ்வாறு அழிவுக்கு உள்ளாக்கியது என்பதனை இவர் முதல் உணர வேண்டும். அது ஒரு படிப்பினையாகும்! அந்தப் படிப்பினை போதாது என்றால் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொடிய போர் ஈற்றில் என்ன பயனைத் தந்தது என்பதையும் மகிந்த ராஜபக்ச எண்ணிப் பார்க்க வேண்டும். சந்திரிக்கா அம்மையார்கூட ஒற்றை ஆட்சி முறையை தவிர்த்து ருNஐழுN ஆட்சி என்ற கருத்துருவாக்கத்தை முதலில் வெளியிட்டிருந்தவர்தான்! ஒற்றையாட்சி முறை என்பது களரீதியாகச் சாத்தியமில்லை என்ற நிதர்சனத்தையும் மகிந்த ராஜபக்ஸ உணர்ந்தாக வேண்டும்.
இவ்வாறு மகிந்த ராஜபக்ஸவின் அறிவுக்கண்ணைத் திறப்பதற்கு ஆயிரம் படிப்பினைகள் காத்திருக்கின்றன. அவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாகி விடும். இப்போது தலையான பிரச்சனைகள் என்று கருதப்படுபவை பின்னர் 'தலைபோகின்ற பிரச்சனைகளாகவே' மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.
மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடுகளில் மாற்றம் இல்லாமல் போனாலும் அவருடைய எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறக் கூடிய வாய்ப்பு ஒன்று வரக்கூடும். தமிழீழத் தேசியத் தலைவரை நேரில் சந்திக்க விரும்புகின்ற மகிந்த ராஜபக்சவின் ஆசை நிறைவேற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. 'அண்டை நாட்டுச் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழத்திற்கு சினேக பூர்வ விஜயம்' என்ற செய்தி தலைப்பின் கீழ் மகிந்த ராஜபக்சவின் விருப்பம் விரைவில் நிறைவேறட்டும்.!
சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தல் இப்போது முடிவடைந்து விட்டது. நாம் முன்னர் கூறியிருந்தது போல், சரியான தீர்ப்பைத் தரப்போவது நவம்பர் பதினேழு அல்ல! நவம்பர் இருபத்தியேழு வழங்கவிருக்கின்ற தீர்ப்பைத்தான் நாம் ஆவலோடு எதிர்பார்த்து நிற்கின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இந்த நவம்பர் 27 அன்று வழங்கவிருக்கின்ற மாவீரர் தின பேருரை தெளிவுகளைத் தந்து தீர்க்கமான பாதையைச் சுட்டிக்காட்டும்.
தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகளைத் தேசியத்தலைவர் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்திருக்கின்றார். தமிழீழ தேசத்தின் நியாயமான போராட்டத்தை உலக நாடுகள் புரிந்து கொண்டு அதற்குரிய அரசியல் அழுத்தங்களைச் சிறிலங்காவின் சிங்களத் தலைமைகளிடம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள்களை விடுத்து வந்துள்ளார். இன்று தமிழீழ மக்கள் பொங்கு தமிழாகவும், புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள், 'எழுக தமிழாகவும்' வீறுகொண்டு தேசியத் தலைமையின் பின்னே அணி திரண்டு நிற்கின்ற வேளையில், தமிழீழத் தேசியத் தலைவர் வழங்கவிருக்கின்ற மவீரர் தினப் பேருரையை உங்கள் எல்லோரையும் போல் நாமும் எதிர்பார்த்து நிற்கின்றோம். |