Selected Writings by Sanmugam Sabesan சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா
அதிபர் தேர்தல் ஒருபுறம் - அக்கறையின்மை மறுபுறம் 14 November 2005 "...தமிழீழ விடுதலைப்புலிகள் கடைப்பிடித்து வந்துள்ள நெகிழ்ச்சிப் போக்கானது சமாதானத் தீர்வு குறித்த சர்வதேசக் கருத்துக்களைப் புலிகள் அனுசரித்து வந்ததன் வெளிப்பாடே என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச வலைப் பின்னலில் புலிகள் சிக்குண்டு விட்டார்கள் என்ற பொய்ப் பரப்புரை நெடுங்காலம் நிலைத்து நிற்காது.... அப்படி ஒரு சர்வதேச வலைப்பின்னலை சிங்கள தேசம் உருவாக்குமானால் அதற்குள் சிக்குவதற்கு புலிகள் ஒன்றும் எலிகள் அல்ல..."
நவம்பர் மாதம் பதினேழாம் திகதியன்று நடைபெற உள்ள அரச அதிபர் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டங்கள் ஒருவாறாக ஓய்ந்து போயுள்ளன. அரச அதிபர் தேர்தலுக்குரிய முக்கிய வேட்பாளர்களான பிரதமர் ராஜபக்ஸவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், கொடுத்த கொள்கை விளக்கங்களாலும், அள்ளி வழங்கிய வாக்குறுதிகளாலும் குழம்பிப் போயுள்ள சிங்கள மக்கள் தங்களுடைய தீர்ப்பையும், தங்களுக்கான தீர்ப்பையும் நவம்பர் பதினேழாம் திகதியன்று வழங்கப் போகி றார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் தங்களுடைய தீர்ப்பையோ, அல்லது தங்களுக்கான தீர்ப்பையோ வழங்குவது குறித்து பெரிதாக ஆர்வம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. என்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது. நடந்து முடிந்துள்ள தபால் மூலமான வாக்குப்பதிவும் இதனைத்தான் சுட்டிக் காட்டுகின்றது. யாழ் வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத வகையில் பத்து வீதத்திற்கும் குறைவாகவே தபால் மூலம் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் போதே தகுதியுடையவர்கள் பலர் விண்ணப்பிக்க வில்லை என்றும் விண்ணப்பித்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை தயால் மூலம் வாக்களித்த பலரும் தாம் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்றும், தமது வாக்குகளைச் செல்லாத வாக்குகளாக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த அரச அதிபர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பல தரப்பினரால் வேண்டுகோள்களும் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்தேசிய ஒற்றுமை ஒன்றியம் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி வருகின்றார்கள். சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலில் மக்கள் அக்கறை செலுத்த வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தெரிவித்துள்ளார்கள். அரச அதிபர் தேர்தல் குறித்தோ, அல்லது தேர்தலில் வர்களிப்பது குறித்தோ தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ளவில்லை என்று ஊடகங்களும் கருத்து வெளியிட்டு உள்ளன.
சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தல் குறித்துத் தமிழ் மக்கள் பெரிதாக அக்கறை கொள்ளாதற்கு தகுந்த காரணங்கள் இருக்க்pன்றன. சிங்களத்தின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இதுவரை முறையான சமாதானத் தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்குரிய தீர்வு சிக்கலடைந்து போனதற்கு சிங்களத்தின் இந்தப் பிரதான கட்சிகளே காரணமுமாகும். தமிழ் மக்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதித்தான் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் செயற்ப்பட்டு வந்துள்ளன. தமிழ்மக்களின் தேசியப் பிரச்சனையையும், நாளாந்த வாழ்வியல் பிரச்சனையையும் தீர்ப்பதற்குரிய திட்டங்கள் குறித்து எந்தவிதமான தெளிவான பரப்புரைகளையும் சிங்கள மக்களிடையே இந்தக் கட்சிகள் முன்வைக்கவில்லை. மாறாக சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைகளைத்தான் சிங்கள மக்களிடையே இந்தப் பிரதான கட்சிகள் விதைத்து வருகின்றன. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை தீர்க்கப்படக் கூடாது என்பதற்காக சிங்கள மக்களின் நலனைக்கூடக் காவு கொடுக்கும் செயலைத்தான் இந்த பேரினவாதக் கட்சிகள் செய்து வருகின்றன. நிலைமை இவ்வாறாக இருக்கையில் தமிழ் மக்கள் இந்த அரச அதிபர் தேர்தலில் அக்கறை காட்டாததில் ஆச்சரியம் என்ன இருக்கமுடியும்.
சமாதானம் ஊடாகத் தீர்வு ஒன்று வரவேண்டும் என்றால் அதனைத் தீர்மானிக்கின்ற சக்தியும், பொறுப்பும் சிங்கள மக்களிடம்தான் இருக்கின்றது. சமாதானம் ஊடாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையையும், நாளாந்த வாழ்வியல் பிரச்சனையையும் தீர்க்க கூடிய தீர்வு ஒன்றை தீர்மானித்து அதற்குரிய தீர்ப்பை வழங்க வேண்டியது சிங்களத் தேசமே தவிர தமிழ்த்தேசம் அல்ல. ஏனென்றால் அதற்குரிய தீர்ப்பை ஏகமனதாக ஏற்கனவே தமிழ்த்தேசம் வழங்கி விட்டது.
நாம் இதனைக் கூறுகின்ற இவ்வேளையில் இக்கருத்துக் குறித்துச் சில கேள்விகள் எழுவதும் நியாயமே! சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலில் அக்கறை கட்டாத தமிழ் மக்கள், சிறிலங்காவின் கடந்த பொதுத் தேர்தலில் அக்கறை காட்டியதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏகமனதாகத் தெரிந்தெடுத்துப் பாராளுமன்றம் அனுப்பியது ஏன்? என்று எழக்கூடிய தர்க்கத்திற்கு நாம் விடையளித்தாக வேண்டும்.
சிறிலங்கா அரசியல் யாப்பும், அதன் ஜனநாயக மரபும் தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளன. என்பது உண்மைதான். ஆனால் சிங்களத் தலைமைகள் மட்டும் போட்டியிட்டு வெல்லக்கூடிய அரச அதிபர் தேர்தல்போல் அல்ல பாராளுமன்றத் தேர்தல். தமிழ் மக்களின் சரியான பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் சிங்கள பேரினவாதங்களால் நியமிக்கப்படும் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தாத ‘தமிழர்களை’, ‘தமிழர்களின் பிரதிநிதிகள்’ என்று சிங்கள அரசுகள் பொய்மையை பரப்புரை செய்து வந்திருந்தன. சர்வதேச நாடுகளை நோக்கி இந்தப் பொய்மைப் பரப்புரைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தமிழ்தேசியக் கட்டமைப்பின் தெரிவும், அதன் பங்களிப்பும் தமிழ் தேசியத்தின் கருத்துருவாக்கத்திற்கு வலுச்சேர்த்ததோடு சிங்கள அரசின் பொய்ப்பரப்புரையையும் உடைத்தெறிந்தன.
ஆனால் சிறிலங்காவின் அரசஅதிபருக்கான தேர்தல் பாராளுமன்றத் தேர்தலின் குணாதிசயங்களைக் கொண்டது அல்ல. இது ஒப்பிட்டளவில் சிங்களத்தின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையே நடைபெறக்கூடிய தேர்தலாகும். சிங்களத்தின் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையே அதன் வேட்பாளர்களான இரண்டு சிங்கள பௌத்த அரசியல்வாதிகளுக்கு இடையே நடைபெறுகின்ற தேர்தல்தான் சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தல் இதில் தமிழ் மக்கள் என்பவர்கள் வெறும் வாக்கு வங்கிகள் தான்.
தமிழ்மக்கள் அரச அதிபர் தேர்தலில் அக்கறை கொள்ளாமல் போவதற்கு மேற்சொல்லப்பட்ட அழுத்தமான காரணங்களோடு வேறு பல காரணங்களும் உண்டு. சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தல் இன்னும் சில தினங்களுக்குள் நடைபெறவுள்ள இவ்வேளையில் சில முக்கியமான கருத்துக்களை தர்க்கிப்பது பொருத்தமானதாக இருக்ககூடும்.
தமிழீழ மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் வெளிப்படையாகவே நசுக்கி வந்துள்ள சிறிலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளரான பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் வெளிப்படையாகவே சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைகளை நசுக்க்p வருவதை நாம் இப்போது காண்கின்றோம். நாம் முன்னர் கூறி வந்திருப்பதைப் போல மகிந்த ராஜபக்ஸ ஐம்பது ஆண்டு காலத்திற்கு பின்னால் பயணம் செய்து சிங்கள பேரினவாத்தின் அடிவேரை அடிவருட ஆரம்பித்துள்ளார். கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தமிழர் தாயகம், கூட்டாட்சி, அதிகாரப் பகிர்வு என்பவற்றையெல்லாம் மகிந்த ராஜபக்ஸ முற்றாக எதிர்த்தும் வருகின்றார். அதுமட்டுமல்லாது தேர்தல் பரப்புரைகளின்போது முன்னுக்கு பின் முரணாகப் பேசி வருவதானது அவருடைய அரசியல் தெளிவின்மையை மட்டுமல்லாது எந்த விதத்திலாவது அரச அதிபர் பதவியை கைப்பற்றிவிடவேண்டும் என்கின்ற மூர்க்கத்தையும் சேர்த்தே பலப்படுத்தி வருகின்றது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு பேசிவருகின்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு மகிந்த ராஜபக்ஸ சற்று இறங்கி வந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுவார் என்பது போன்ற அபத்தமான கருத்துக்களையும் நாம் இப்போது கேட்கவேண்டியதாக உள்ளது. ‘சமாதானம்’ என்று பேசிப் பதவிக்கு வந்த இவரது முன்னோடிகளே பின்னர் சமாதானத்திற்கான(?) போரை ஆரம்பித்தவர்கள் என்னும் போது சமாதானத்த்pற்கான அடிப்படைக் கோட்பாடுகளையே எதிர்த்து வருகின்ற மகிந்த ராஜபக்ச ‘எந்த அளவுக்கு’ இறங்கி வருவார் என்பதே நாம் வைக்கக் கூடிய தர்க்கமாகும்! ஆகவே மகிந்த ராஜபக்ஸவின் கருத்துக்களும் கொள்கைகளும் எண்ணங்களும் தமிழ் மக்களுக்கு எதிரானவை என்பதானது வெளிப்படையாகவே தெரிகின்றது. ஒரு வெளிப்படையான எதிரி அவர்.!
ஆனால் சிறிலங்காவின் முன்னால் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் அரச அதிபர் வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறித்துத்தான் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். இவர் குறித்து கடந்த மூன்றாண்டு காலமாக நாம் தெரிவித்து வந்த கருத்துக்களும், எச்சரிக்கைகளும் இன்று 2005ம் ஆண்டு நிரூபணமாகி இருப்பதையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
கடந்த மூன்றாண்டு காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறித்து நாம் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கு எதிர்வினையாக வந்த கருத்துக்கள் புலம் பெயர்ந்த சில தமிழர்களிடமிருந்தும், குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்களிலிருந்தும் வந்தவை என்பதையும் நாம் பல தடவைகள் குறிப்பிட்டே வந்துள்ளோம். இவர்கள்மீது குற்றம் சாட்டுவதற்காக நாம் இன்றைய தினம் இதைச் சொல்லவில்லை. இவர்களையெல்லாம் ஒரு விதமான மயக்கத்தில் வைத்திருப்பதில் ரணில் விக்கிரமசிங்க எவ்வளவு வெற்றி பெற்றிருந்தார் என்பதனையே நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்த வேளையில் ஐக்கிய தேசியக்கட்சி நாடளுமன்ற உறுப்பினரும் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் அரச தரப்பில் மிக முக்கிய பங்கினை வகித்தவருமான மிலிந்த மொறகொட வெளியிட்டுள்ள விடயங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கலாம். ஆனால் அது எமக்கோ அல்லது எமது நேயர்களுக்கோ அதிர்ச்சி எதையும் தரப்போவதில்லை. ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் திருவிளையாடல்கள் குறித்து நாம் தொடர்ந்து எமது கருத்தினை வெளியிட்டே வந்துள்ளோம். ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அரசியல் வாழ்க்கையில் அவர் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்தும் விமர்சித்து வந்துள்ளோம். அவருடைய அரசியல் நேர்மை குறித்து கீழ் வரும் சம்பவங்கள் சந்தேகங்களையும் எழுப்பியிருந்தன.
• அதிகாரப் பரவலாக்கலையும், கூட்டாட்சி முறையையும் தமிழர் தேசியக் கோட்பாட்டையும் கருத்துருவாக்கத்திலாவது ஓரளவுக்கு ஏற்றுக்கொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தவர் தான் இந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.
• சந்திரிகா அம்மையார் முதல் முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் கொண்டு வந்த முதலாவது தீர்வுத் திட்டத்தை வன்மையாக எதிர்த்தவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்க. அது மட்டுமல்ல சந்திரிகா அம்மையாரின் இந்த தீர்வுத் திட்டத்தின் நகலை அன்று பாராளுமன்றத்தில் வைத்து எதிர்த்தவர்களும் இவரது ஐக்கிய தேசியக்கட்சினர்தான்.!
• எந்தவிதமான உருப்படியான பயனையோ பலனையோ தமிழர் தேசத்திற்குத் தராமல் சமாதானப் பேச்சு வார்த்தைகளை இழுத்தடித்துக் கொண்டு போன சாதனையை செய்தவரும் இதே ரணில் விக்கிரமசிங்கதான்.
• தற்போது அவசரகால சட்டத்தை சந்திரிகா அம்மையார் மூன்றுமுறை நீடித்தபோதும், அதற்கு ஆதரவு அளித்தவரும் இதே ரணில் விகிரமசிங்கதான்.
இப்போதுகூட தமிழரின் தேசியப் பிரச்சனை குறித்து ஒரு தெளிவான திட்டத்தை தருவதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லை. மாறாக தமிழ் மக்கள் இந்த அரச அதிபர் தேர்தலில் அக்கறை காட்டப் போவதில்லை என்று தெரிந்தவுடன் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சில உண்மைகளை மிலிந்த மொறகொட ஊடாக கசிய விட்டிருக்கிறார்.
சமாதானப்பேச்சு வார்த்தைகளின் போது மிக முக்கியமான பங்கினை வகித்தவரும் சர்வதேச அரங்கில் பல செயற்பாடுகளை செய்து கொண்டு வெளிநாடுகளின் பாராட்டுகளைப் பெற்றவருமான மிலிந்த மொறகொட அவர்கள் இந்த அரச அதிபர் தேர்தலின் கடைசிக் கட்ட வேளையில் ஒர் ஒப்புதல் வாக்குமூலத்தை(?) அளிக்க வேண்டிய கட்டாயம் என்ன?
கடும்போக்குடைய சிங்கள பொதுமக்களின் வாக்குகளைப் பெற்று ரணிலின் நிலையைச் சமன்செய்யும் காரியம்தான் மிலிந்த மொறகொடவின் ஒப்புதல் வாக்குமூலம்!
மிலிந்த மொறகொட கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்தான் என்ன?
‘அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடாத்திக்கொண்டு விடுதலைப்புலிகளின் வர்த்தக கப்பல்களை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அழித்தோம். விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பிளவினை உருவாக்கினோம். விடுதலைப்புலிகளின் போராட்டத்தை சர்வதேச பாதுகாப்பு வலையத்தினுள் சிக்க வைத்துள்ளோம். விடுதலைப் புலிகளை சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைத்துள்ளோம்.’ என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சமாதானப்பேச்சு வார்த்தைகளின்போது முக்கிய பங்கினை வகித்தவருமான மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள அடிப்படை உண்மைகள் குறித்தோ அல்லது உண்மையற்ற வீரப்பிரதாபங்கள் குறித்தோ இப்போது நாம் தரக்கிக்க முன்வரவில்லை. மாறாக மீண்டும் சொல்ல வருவது இதுதான். தமிழர்கள் அரச அதிபர் தேர்தல் குறித்து அக்கறை கொள்ளப் போவதில்லை என்று தெரிந்த உடன் தனது சுயரூபத்தை ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தி விட்டார் என்பதேயாகும். அவர் இப்போது கடும்போக்குச் சிங்கள மக்களின் வாக்குக்காக அலைய வேண்டிய நிலை. அதனைத்தான் மிலிந்த மொறகொடவின் திடீர் ஒப்புதல் வாக்குமூலம் மறைமுகமாக காட்டி நிற்கின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஒரு விடயத்தை முக்கியமான விடயத்தை மட்டும் சுமுகமாகத் தர்க்கிக்க விரும்புகின்றோம். அது சர்வதேச வலைப்பின்னல் என்கின்ற விடயம் பற்றியதாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகளையும் அவர்களது போராட்டத்தையும் சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைத்துள்ளோம் என்று மிலிந்த மொறகொட கூறியுள்ளார். சிங்கள மக்களின் அதுவும் கடும் போக்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இவ்வேளையில் இவ்வாக்குமூலம் கொடுக்கப் பட்டள்ளபோது இச் சொல்லாடல்pன் கருத்துக் குறித்து நாம் சில தர்க்கங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.
சமாதானத்தீர்வு குறித்த சர்வதேசக்கருத்தை அனுசரித்துப் போவது வேறு. சமாதானத்தீர்வு குறித்த சர்வதேச வலைப் பின்னலில் விழுவது என்பது வேறு. இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு உரிய தீர்வை சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தீர்த்துக் கொள்வதற்கு சர்வதேச சமூகம் வைக்க கூடிய கருத்துக்களை அனுசரி க்கலாம். ஆனால் மிலிந்த மொறகொட கூறுவதுபோல் சமாதானத்தீர்வு என்ற கருத்துருவாக்கத்தின் ஊடாக போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் வலைப்பின்னல் உருவாக்கப்பட்டால் அது சமாதானத்தீர்வு என்ற கருத்துருவாக்கத்தை ஆட்டம் காணப் பண்ணிவிடும்.
தவிரவும், அப்படி ஒரு சர்வதேச வலைப்பின்னலை சிங்கள தேசம் உருவாக்குமானால் அதற்குள் சிக்குவதற்கு புலிகள் ஒன்றும் எலிகள் அல்ல! சிங்கள தேசம் வலைகளை வீசட்டும். - வேறு இடத்தில்.!
தமிழீழ விடுதலைப்புலிகள் கடைப்பிடித்து வந்துள்ள நெகிழ்ச்சிப் போக்கானது சமாதானத் தீர்வு குறித்த சர்வதேசக் கருத்துக்களைப் புலிகள் அனுசரித்து வந்ததன் வெளிப்பாடே என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச வலைப் பின்னலில் புலிகள் சிக்குண்டு விட்டார்கள் என்ற பொய்ப் பரப்புரை நெடுங்காலம் நிலைத்து நிற்காது.
ஒரு மிகமுக்கியமான விடயத்தை இவ்வேளையில் நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். சமாதானத்தீர்வு என்பதனை தொடர்ந்தும் தேவையற்று இழுத்தடித்துக்கொண்டே போனால் அது சமாதானத்திற்கே ஆபத்தை உருவாக்கி விடும்! அப்படி ஏதும் நேராமல் நேர்மையான விடயங்கள் நடைபெற வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்புமாகும்!. இதுவே அரச அதிபர் தேர்தல் வேளையில் நாம் சொல்லக்கூடிய அக்கறையான கருத்துமாகும்.
|