தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > தனமா? - சீ-தனமா?


Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

 தனமா? - சீ-தனமா?

"...தமிழ்ப் பெண்ணைப் பூச்சூடிப் - பொட்டு வைத்து -பொன் நகையால் அலங்கரித்து - பட்டு உடுத்தி, பாட்டெழுதி மெட்டமைத்து, போற்றிப் பாடிப்புகழ்ந்து வந்தாலும் ‘பெண்அடிமை’ என்ற பிற்போக்குவாதச் சிந்தனையின் அடிப்படையில்தான் எமது தமிழ்ப் பெண் இனம் வாழ்ந்து(?) வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சமுதாயச் சீர்கேட்டுக் கொடுமைகளின் வெளிப்பாடு ஒன்றுதான் கட்டாயச் சீதனத்தின் கொடுமை!.."

[see also Women in Tamil Society  - Ideology, Nation & Gender]

4 September 2005


செப்டெம்பர் மாத ஆரம்பத்தில், நாம் இப்போது காலடி எடுத்து வைக்கின்றோம். இதே செப்டெம்பர் மாத ஆரம்பத்தில்தான் தமிழீழத்தின் சமுதாய கொடுமை ஒன்றிற்கு சாவு மணி அடிக்கின்ற சரித்திரத்தின் ஆரம்பமாகவும், அத்திவாரமாகவும் அமைந்துள்ளது. ஆமாம், செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி - 1995ம் ஆண்டன்றுதான் முதன் முதலாக – ‘மணக் கொடைத் தடைச் சட்டம்’ என்கின்ற சீதனத் தடைச் சட்டம் தமிழீழத்தில் அமுலாக்கப்பட்டது.

“தமிழீழ விடுதலைக்கான போராட்டம், மண் விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான்! - என்று எம்மில் பலர் இன்னமும் எண்ணியும், எழுதியும் வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் மண்ணை மட்டும் மீட்பதற்கான போராட்டம் அன்று! பெண்ணிய அடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, வர்க்கபேதம்’ போன்ற பல சமூகக் குறைபாடுகளைக் களைவதற்கான போராட்டங்களையும், தமிழ்மொழி மீட்பு, மண்மீட்பு, நெறிமீட்பு போன்றவற்றிற்கான போராட்டங்களையும் ஒருங்கு சேர விடுதலைப் புலிகள் இயக்கம் நடாத்தி வருவதை நாம் இந்த வேளைகளில் சுட்டிக் காட்ட விழைகின்றோம்.

ஆனால் சிறிலங்கா அரசுகளின் தமிழின அழிப்பு யுத்தத்தை தம் ஆயுதப் போராட்டம் மூலமாக விடுதலைப் புலிகள் முகம் கொடுத்துப் போராடியது மட்டும்தான் பிறரின் பார்வையில், ஏன் எம்மவரின் கண்களில் கூடத் தெரிகிறது. முன்னைய சிறிலங்கா அரசுகள் தொடுத்த ஆயுதப் போர்களுடன் பொருளாதாரத் தடை, உணவுத்தடை, மருந்துத்தடை போன்ற உடல் உளவியல் ரீதியான போர்களையும் முகம் கொடுத்துப் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம் எம்மவரிடையே பரவிக் கிடக்கும் சமூக அநீதிகளையும் ஒருங்கு சேர எதிர்த்துப் போராடி வருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றோம்.

ஈழத்தமிழன் மீது சிறிலங்கா அரச பயங்கரவாதம் திணிக்கப்பட்டதன் காரணம் அவன் யாழ்ப்பாணத் தமிழன் என்பதாலோ, மட்டக்களப்பு தமிழன் என்பதாலோ, அல்லது அவன் மன்னார் வன்னித்தமிழன் என்பதாலோ அல்ல அவன் தமிழன் என்பதால் மட்டுமே! தமிழன் தமிழனாக வாழ்வதாலும், அவன் பேசுவது தமிழ் மொழியாக இருப்பதாலும், அவனுக்கு மதங்களைக் கடந்த தனித்துவமான பண்பாடும், நாகரீகமும் இருப்பதனாலும், அவனுக்கென்று ஒரு பாரம்பரிய பூமி வாழ்விடமாக இருப்பதனாலும் அவனுடைய இனம் ஒரு தேசிய இனமாக இருப்பதனாலும்

அவனை அந்தத் தமிழனை, அவனது மொழியை, அவனது பண்பாட்டை அவனது நாகரிகத்தை, அவனது பாரம்பரிய மண்ணை அவனது இனத்தை,

ஒழிப்பதற்காக - அழிப்பதற்காக - மாறிமாறி வந்த சிங்கள அரசுகள் தங்கள் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டன. இவை அனைத்தையும் எதிர்த்துப் போராடியது மட்டுமல்லாது, தனது இனத்திலேயே காலகாலமாக புரையோடிப் போயிருக்கும் பல சமூக அநீதிப் புண்களுக்கும் மருத்துவம் செய்ய வேண்டிய தார்மீக கடமையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கு உண்டு.! அதில் ஒன்றுதான் இந்த ‘மண்கொடைத் தடைச் சட்டம்’ என்கின்ற சீதனத் தடைச் சட்டம்! தன்நாடு மட்டுமல்ல, தனது இனமும், மொழியும், பண்பாடும், கலைகளும் உண்மையாக முழுச் சுதந்திரத்தைப் பெற வேண்டும்; என்பதற்காக தமிழீழ தேசியத் தலைவன் மேற்கொண்ட, மேற்கொண்டுள்ள செயல்பாடுகளில் ஒன்றுதான் இந்தச் சீதனத் தடைச்சட்டம்!

தமிழ்ப் பெண்ணைப் பூச்சூடிப் - பொட்டு வைத்து -பொன் நகையால் அலங்கரித்து - பட்டு உடுத்தி, பாட்டெழுதி மெட்டமைத்து, போற்றிப் பாடிப்புகழ்ந்து வந்தாலும் ‘பெண்அடிமை’ என்ற பிற்போக்குவாதச் சிந்தனையின் அடிப்படையில்தான் எமது தமிழ்ப் பெண் இனம் வாழ்ந்து(?) வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சமுதாயச் சீர்கேட்டுக் கொடுமைகளின் வெளிப்பாடு ஒன்றுதான் கட்டாயச் சீதனத்தின் கொடுமை!

சீதனத்தின் நன்மை தீமைகளை நாம் ஆராயப் போவதற்கு முதல் இதற்கு அடிப்படையாக விளங்கும் ஆணாதிக்கம் -பெண்ணடிமைத் தனம், சமூகவியலின் பொருளாதாரம் போன்றவற்றைச் சற்று விளக்கமாகத் தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

‘பெண்ணியம்’ குறித்து ஆய்வாளரான ‘கேட் மில்லட்’ என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் ‘பால்வகை’ என்பது ஆண், பெண்ணை அதிகாரம் செய்யும் பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் ‘பால்வகைப்’ பிரிவு என்பது! ஆண்தனத்துக்குரிய சமூகக் களமாக ‘இராணுவம், தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில்நுட்பம் கல்வி போன்றவற்றை முன்பு தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான். பெண்ணுக்கு ‘இல்லம்’ என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான்.

அதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண், சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப் பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும் போது அது அவளைச் சுய சிந்தனை இல்லாதவளாக, ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்குத் துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு ‘குடும்பம்;’ என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனம், கருத்துருவம் (ideology), உயிரியல் (biological), சமூகவியல் (sociological), வர்க்கம் (class), பொருளாதாரமும் கல்வியும் (economics and education), சக்தி (force) மானுடவியல் (anthropology), உளவியல் (psychology) என்ற பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக ‘கேட் மில்லட்’ மேலும் குறிப்பிடுகின்றார்.

மேலைத்தேய ஆய்வு இவ்வாறு இருக்கையில், எமது தமிழ்ச் சமுதாயத்தில் இந்தப் பண்பு குறித்துச் சற்றுத் தர்க்கிப்போம். தமிழ் நூல்களில் மிகப்பழமை வாய்ந்ததாக கருதப்படும் தொல்காப்பியத்தின் நூற்பாக்கள் கூட பெண்ணடிமைக் கருத்துருவங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம் ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும் தொல்காப்பியரின் வரைமுறைகள் ஆணாதிக்கத்தையும் - பெண்ணடிமைத் தனத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே தான் எண்ணத் தோன்றுகின்றது. மேலைத்தேய பெண்மணியான ‘கேட் மில்லட்டின்’ மேலைத்தேய ஆய்வுக்குச் சார்பாக, மேலைத்தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் சான்று காட்டி நிற்கின்றது. உதாரணமாக தொல்காப்பியர் ஆண்மகனின் இயல்பைப் பற்றிக் கூறும் போது,

“ பெருமையும், ஊரனும் ஆடூஉ மேன” (தொல்காப்பியம்-பொருள்-களவு 7)

என்று உயர்த்திக் கூறுகின்றார். பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும் போது,

“அச்சமும் நாணமும் மடனம் முந்துறல் நிச்சமும் பெண்பாற் குரிய”-

என்று தொல்காப்பியர் கோடு கீறி வரையறுக்கின்றார். இதன் அடிப்படையில் ஆண்மகன் உரமுடையவனாகவும், பெருமைக்கு உரியவனாகவும் காட்டப்படுகின்றான். பெண்ணோ, அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (the four sex), இரக்கம் உடையவளாக (the gentle Sex), மெல்லியளாக (the softer sex), உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக - செயல் திறம் அற்றவளாக (the weaker sex) உருவாக்கப் படுகின்றாள்.

மேலும் தொல்காப்பியர் இல்லத் தலைவிக்கு உரிய பண்புகளைக் கூறும் போது,

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்,
மெல்லியர் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்

-(தொல்காப்பியம்-பொருள்- கற்பு-11) என்று வரையறுக்கின்றார். அதாவது இல்லறத்தில் பெண் ஒரு பதிவிரதையாகவும,; நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், மென்மையும், பொறுமையும் மனக்கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்து சுற்றம் ஓம்புபவளாகவும் இருக்க வேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். அது மட்டுமல்ல நேயர்களே, கணவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் பரத்தையர்களிடம் - விலைமாதர்களிடம் சென்று வரும்போதும் மiவியானவள் சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகவும் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தொல்காப்பியர் கூறுகின்றார்.

தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆண்மைய வாதம்’, அன்றைய தொல்காப்பியம்- மற்றும் சங்கக் கால இலக்கியங்களில் இருந்து இன்றைய படைப்பிலக்கியம் வரை காணக் கூடியதாக உள்ளது. கோவலனின் பரத்தன்மையைப் பொறுத்துக் கொண்ட கண்ணகியைப் போற்றுவதை நாம் சிலப்பதிகாரத்தில் கூட காண்கின்றோம்.

பருவம் என்றால் என்ன? - என்பதை ஒரு புதுக்கவிதை அழகாக சொல்கிறது.

“பருவம் என்றால்
ஆணுக்குச் சிறகுகளும்
பெண்ணுக்கு விலங்குகளும்
உருவாகும் காலம்.”

இன்று இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளிலும், வெளிவருகின்ற தமிழ் திருமண விளம்பரங்களை நேயர்கள் பார்த்திருப்பீர்கள். சாதி-சமயக் குறிப்புகளோடு, மணமகள் என்ன நிறத்தில் - என்ன அளவில் எப்படி இருக்க வேண்டும் என்றுதான் விளம்பரங்கள் வெளி வருகின்றன. ஆனால் எந்த ஒரு பெண்ணும் தனக்கு வாழ்க்கைத் துணையாக வரக்கூடியவன் இந்த உயரத்தில், இந்த நிறத்தில் இந்த உருவத்தில் இருப்பவனாக இருக்வேண்டும் என்று எளிதில் விளம்பரம் செய்ய முடியாத நிலைதான் இ;ன்றைய யதார்த்த நிலை!

ஆரியர்கள் வருகைக்கு முன் தாய்வழிச் சம்பிரதாயமே பழங்குடி மக்கள் சமுதாயங்களில் நிலவி வந்திருக்கின்றன என்பதற்கு தகுந்த சான்றுகள் உள்ளன. அன்றைய தாய்வழிச் சம்பிரதாயத்தில் பெண் வீட்டை விட்டுப் போகமாட்டாள். அவள் பிறந்த வீடு அவளுக்கு உரிமையுள்ள வீடு. அவளை மனைவியாக ஏற்றுக் கொள்பவன் அவளது வீடு தேடி வந்து அங்கேயே வாழ்வான். - இந்த வழக்கம் இன்று தமிழ் நாட்டில் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாலும் தமிழீழத்தில் மாறாமல் - அப்படியே இருப்பதை நேயர்கள் அறிவீர்கள்!

இனிச்சற்று ஆழமாக -தாய்வழிச் சம்பிரதாயத்தையும் சீதன வழக்கு முறையையும் பற்றிச் சிந்திப்போம்!

ஈழத்தமிழ் மக்களினதும் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் மக்களினதும் சீதன முறைமையைப் பற்றிச் சுருக்கமாக - அதே வேளை தெளிவாக கூற வேண்டுமானால் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘சுதந்திர வேட்கை’இ ‘உடையாத விலங்கு’ போன்ற நூல்களை மேற்கோள் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும். தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனப் பார்வையையும், செயல்பாட்டையும,; தமிழ் மக்களின் சீதன முறையின் நிறைகுறைகளையும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் ஒரு தெளிவான பார்வையுடன் விளக்குகின்றார். அவருடைய பல கருத்துக்களுடன் நாமும் இணைந்து கொள்கின்றோம்.

திருமணத்தின் போது பெண்களுக்கு சீதனம் வழங்குகின்ற முறையை நாம் ஆராய்ந்து பார்த்தால் அது குறிப்பாக - யாழ்ப்பாணச் சமூகத்தில் மிகவும் ஆழமாக வேரோடிப் போய் நிறுவன மயப்பட்ட வழக்கமாக இருப்பதை நாம் காணலாம். யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய சொத்துடமைச் சட்டமாகிய தேச வழமைச் சட்டக் கோவையில், இந்த சீதன முறையும் ஒரு சமூக ஒழுங்கு முறையாகவே கொள்ளப் படுகின்றது. இந்தச் சொத்துடமை சட்டத்தின்படி ஒரு பெண் தனது தாய்வழியாகப் பெறுகி;ற சொத்துக்களை பேணுவது குறித்த விதிமுறைகள் விளக்கப் பட்டுள்ளன. தேசவழமைச் சட்டத்துக்கு கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனால் தாய்வழிச் சொத்துடமையின் மூலம் இதற்கும் அப்பாலானது யாழ்ப்பாணத்து சீதன வழமையின் வரலாற்று வேரும் ஆழமானது. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய தமிழர்களிடமிருந்தே இந்த வழக்கு முறை தோன்றியிருக்கலாம,; என்ற கருத்தும் உள்ளது. பின்னாளில் காலனித்துவ வாதிகள் இந்தச் சொத்துடைமைச் சட்டத்தைத் திருத்திய போதும் பெண்களுக்கு சீதனம் வழங்கும் மரபுமுறை அடிப்படையில் மாறவேயில்லை. தமிழ் சமூகத்தில் நிலையூன்றி - நீடித்து வருகின்ற சீதன முறைமை இன்றும் இன்றும் தமிழ் மக்களின் வாழ்வை நிர்ணயித்து வருகின்ற சக்தியாகவே விளங்குகின்றது. இந்தப் பிரச்சனையின் அடிப்படையில்தான் ஒரு தமிழ்ப் பெண்ணுடைய சமூக அந்தஸ்தும் அவளுடைய சமூகப் பொருளாதர வாழ்வும் நிர்ணயமாகின்றது.

சீதன வழக்கு முறையானது யாழ்ப்பாண சமூகத்த்pன் சமூக-பொருளாதார வாழ்விற்கு ஓர் அச்சாணியான பிரச்சனை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ‘ஒரு குடும்பத்தின் பாரம்பரிய சொத்துடைமைகளே பெண்ணுக்கு சீதனமாக வழங்கப் படுகின்றது.’ என்றும், ‘சீதனமுறை அகற்றப்பட்டால் இந்தச் சொத்துரிமையை பெண்கள் இழக்க நேரிடும்’ என்றும் சீதனத்திற்கு ஆதரவாக வலுவான கருத்துக்களும் உண்டு. அத்துடன் பொதுவாகவே அது ஒரு கட்டாயச் சேமிப்பாகத் தொடங்கி ஒரு சமூகத்தின் நல்ல பொருளாதாரக் கட்டுமானத்திற்கு உதவுகின்றது’- என்று சீதனத்திற்குச் சார்பான தர்க்கங்களும் உண்டு.

ஆனால் மணமகன்களிடமிருந்தும் அவர்களது - குடும்பங்களிடம் இருந்தும், மட்டுக்கு மீறிய அளவில் மிகுந்த பேராசையுடன் எழுப்பப்பட்ட சீதன வற்புறுத்தல்கள் - பல குடும்பங்களைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய சமூகப் பிரச்சனையயாக சீதனக் கொடுமை உருவாகுவதற்கும் வழிவகுத்தன. ‘சீதனக் கொடுமை அழிக்கப் படவேண்டும்’ என்று ஏற்கனவே 1992ல் சர்வதேச மகளிர் மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப் படுத்தமாறு தமிழ்ப் பெண்கள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கை தேசியத் தலைவருக்கு சமர்ப்பிக்கப் பட்டபோது முறையான நடவடிக்கை எடுப்பதற்கு அவர் முடிவு செய்தார்.

முதலில் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப் பட்டன. இப்பிரச்சனை குறித்துப் பகிரங்க விவாதங்களும், கூட்டங்களும் கிராமம் கிராமமாக நடந்தன. பாடசாலைகள், - கல்லூரிகள், - பல்கலைக்கழகம் மற்றும் பொது இடங்களில் எல்லாம் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியச் சொத்துடமைச் சட்டமான, தேச வழமைச் சட்டம் மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்டன. இந்த மரபுச் சட்டங்களை நன்கு பரிசீலனை செய்த பிறகு பெண்களின் நலன் கருதி மரபுச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன - என்று திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிலவிய தாய்வழிச் சொத்துடைமை முறை பேச்சுத் திருமணம் - மற்றும் பல சமூக - பண்பாட்டு வழமைகளை ஆழமாகப் பார்த்தபோது, சீதனப் பிரச்சனையானது, பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறையின் ஒரு வெளிப்பாடு என்பது தெளிவாகியது.

ஈற்றில் திருமதி பார்வதி வேலுப்பிள்ளையின் மகனின் பணிப்புரையின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நீதி நிர்வாகப் பிரிவினர் சீதன நடைமுறை சம்பந்தமான புதிய சட்ட விதிகளை இயற்றினார்கள். இந்தப் புதிய சட்டங்கள் - பெண்களின் சொத்துரிமையைப் பேணிக் காத்ததுடன் மணமகனின் உறவினர்களுக்கு ரொக்கப் பணமாக அன்பளிப்புக் கொடுக்கும் முறையையும் தடை செய்தன. மனைவியின் சொத்துமீது கணவனுக்கு மேலாண்மை வழங்கும் தேச வழமையின் விதிகளும் நீக்கப் பட்டது.

ஒரு நாட்டு மண்ணின் விடுதலைக்காக - மொழியின் விடுதலைக்காக -இனத்தின் விடுதலைக்காக - பிற வெளிச் சக்திகளால் மழுங்கடிக்கப் பட்டுள்ள தமிழ்ப்பண்பாட்டின் விடுதலைக்கு - வெளிச் சக்திகளுடன் போராடி வருகின்ற அதே வேளையில் தனது சொந்த இனத்திலேயே புரையோடிப் போயிருக்கும் சமுதாயக் கொடுமைகளையும் களைந்து எறிய முற்படுவது சாதாரண விடயம் அல்ல.! அதனால்தான் அது சரித்திரத்தில் இடம் பெறப் போகி;ன்ற விடயம் என்று இக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே கூறினோம்.

‘ஒருபெண்ணின் ஒழுக்கத்தை இராமன் போன்ற கணவன் பகிரங்கத்தில் சந்தேகப்பட்டுச் சோதிக்கலாம்.’ என்பது மட்டுமல்ல ‘அவளை’ இலக்குவன் போன்ற மைத்துனர்களும் கோடு கிழித்துக் கட்டுப்படுத்தலாம்’ - என்பது போன்ற ஆரிய சிந்தனைகளையும், அவர்களது வழிமுறைகளையும் தமிழினம் ஏற்றுக் கொண்டு தெலுங்கில் பாடி, சமஸ்கிருதத்தில் வழிபட்டு தன்னைத்தானே இருளில் கட்டிப் போட்டுக் கொண்டான். தமிழ் பண்பாடும், கலைகளும் மீண்டும் புத்துயிர் பெற்று உயர்வதற்கு சரியான தலைமைதான் வழிவகுக்க வேண்டும்! வழிவகுக்க முடியும்!!

கட்டாயச் சீதனக் கொடுமை எமது சமுதாயத்தில் பெண்ணின் மானுட மதிப்பையே அடியோடு அழித்துவிட முயல்கிறது. அது கர்ப்பத்pல் இருக்கும் சிசுவை அடையாளம் கண்டு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அழித்துவிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேரூன்றி உள்ளது. ஏன் கர்ப்பத்தில் வளரும் சிசு, ஆணாக மாறி, வலிமை பெறுவதற்காக - ஆரியர்களால் சொல்லப்படுகின்ற ‘மந்திரங்கள்’ தோன்றிய அதர்வ வேத காலத்தில் இருந்து, இந்த நூற்றாண்டு வரை பெண்ணை ஓர் அடிமைக் கூடமாக்கி அழிப்பதற்கு எமது தமிழினத்தில் புகுந்த ஆரிய சக்திகளும், எம்மினத்து ஆணாதிக்கமும் உதவின. அவற்றிற்கு தெரிந்தோ, தெரியாமலோ பெண்ண்pனமும் துணை போயிருக்கின்றது என்பதுதான் வேதனையான உண்மை!

ஆனால் தமிழினத்தைப் பொறுத்தவரையில் பெண்ணினத்தின் மேம்பாடு குறித்து உற்சாகமான உணர்வூட்டும் செய்திகளைக் கேட்டு மகிழ்கின்றோம். அன்று பாரதி கண்ட புதுமைப் பெண்ணையும் விஞ்சி விட்டாள் ‘தமிழீழ வஞ்சி’ இன்று தமிழ் பெண்ணானவள் தனது விடுதலைக்காக மட்டுமல்லாது, தனது தேச விடுதலைக்காகவும் களம் இறங்கியுள்ளதை காலம் காட்டி நிற்கின்றது. தன்னையும் விடுவித்து, தன் இனத்தையும் விடுவிக்கப் போராடுகின்ற தமிழீழப் பெண்களுக்கு எமது வணக்கங்கள்.! பெண் விடுதலை என்பது வெறும் பேச்சில் மட்டுமல்லாது, செயலாகவும் எழுந்து நிற்பதை நாம் இன்று ஈழத்தில் காண்கின்றோம்.!

அன்புக்குரிய நேயர்களே! இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு ‘பெண்ணியம் - அணுகு முறைகள்’இ “சுதந்திர வேட்கை” ‘காலந்தோறும் பெண்” போன்ற நூல்களும் ‘வெளிச்சம்’ சஞ்சிகையும் பெரிதும் பயன் பட்டன. பல இடங்களில் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.!



 

 
 
Mail Usup- truth is a pathless land -Home