தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >வேளை வருகின்ற வேளை!

Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

“ வேளை வருகின்ற வேளை!”

"தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளைப் பிரயோகிக்க வேண்டியதற்கான வேளை நெருங்கிக் கொண்டிருப்பதனைத்தான் தற்போதைய அரசியல் இராணுவச் சூழ்நிலைகள் தெளிவாக்கியுள்ளன.வேளை வருகின்ற வேளை!"

26 July 2005


சிறிலங்காவின் தலைமை நீதிமன்றம் பொதுக் கட்டமைப்புக்கு ஓர் இடைக்காலத் தடை உத்தரவை 15-07-2005 அன்று விதித்த போது நாம் சில விடயங்களைத் தர்க்கித்திருந்தோம். அப்போது சர்வதேச சமூகத்தின் பொறுப்புக்கள் குறித்துச் சில விடயங்களைக் கீழ் வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

‘இன்று இலங்கைத்தீவின் யதார்த்த நிலையை சம்பந்தப்பட்ட உலக நாடுகள் அறியும். சிங்கள-பௌத்த பேரினவாத அரசுகள் தொடர்ந்து தமிழீழ மக்களுக்கு புரிந்து வருகின்ற அநீதி குறித்தும் இந்த உலக நாடுகள் நன்கு அறியும். சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாக நியாயமான நிரந்தரமான தீர்வு கிட்டவேண்டும் என்று உலக நாடுகள் விரும்புவதில் தப்பில்லை. ஆனால் சமாதானத்தின் பெயரால் ஓர் இன மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது நீதியாகாது. உண்மை தெரிந்தும் உறங்குவது போல் பாவனை செய்வதும் நீதியாகாது. சிறிலங்காவின் நீதித்துறையின் தரத்திற்கு சம்பந்தப்பட்ட உலக நாடுகளும் கீழிறங்கி விடலாகாது என்பதே எமது வேண்டுகோளுமாகும்.’

இவ்வாறு அன்றைய தினம் நாம் தெரிவித்திருந்தோம்.

தமிழ் மக்களின் நெருக்கடி நிலைமைகள் குறித்து சர்வதேச சமூகத்தினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டணியினரும் இணைந்து முறையிட முடிவு செய்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள செய்தியினை இதனடிப்படையில் நாமும் வரவேற்கின்றோம்.

கடந்த வெள்ளிக்கிழமை (22.07.2005) அன்று சிறிலங்காவிற்கான ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளதோடு எதிர்வரும் நாட்களில் பல்வேறு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தச் செயற்பாடுகளையும் நாம் வரவேற்கிறோம்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக இரண்டு சிங்கள அரசுகளும் அமைதி வழித் தீர்வுகளுக்கான முயற்சிகளை இழுத்தடித்து வந்திருப்பதையும் தமிழ் மக்களுக்கான இயல்பு வாழ்க்கை மேம்படுத்தப்படுவதற்கான எந்த ஓர் உருப்படியான புனருத்தாரண, புனர் நிர்மாண செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல் இருப்பதையும் நாம் அறிவோம். இவ்வாறு சிறிலங்கா அரசுகள் கெடுபிடியாக தொடர்ந்திருக்கையில் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவதனால் பலனேதும் இருக்குமா? என்ற கேள்வி எமது நேயர்க்கு மத்தியில் எழுவதும் இயல்பானதுதான். இந்தக் கேள்விக்கும் நாம் முன்னர் தெரிவித்த ஒரு கருத்தினையே பதிலாக முன் வைக்கிறோம்.

நான்கு வாரங்களுக்கு முன்பு நாம் இவ்வாறு கூறியிருந்தோம்.

‘இந்தப் பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கையில் புலிகள் கைச்சாத்திட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட உலக நாடுகளின் எதிர்பார்ப்பிற்கு ஒரு வாய்ப்பையும் இப்பொதுக் கட்டமைப்பினூடாக நியாயமாகச் செயல்படுத்துவதற்காக சிறிலங்கா அரசிற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கியிருக்கிறார்கள்.

என்று நாம் கருத்து தெரிவித்திருந்தோம்.

பொதுக் கட்டமைப்பு என்பது மனிதாபிமான நெருக்கடி ஒன்றிற்கு உதவுகின்ற சாதாரணமான ஒரு கட்டமைப்புதான். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சாதாரணமான கட்டமைப்பு இது! ஆனால் இப்படிப்பட்ட ஒரு சாதாரண கட்டமைப்பைக் கூடச் செயல் இழக்கச் செய்வதிலேயே சிங்கள பௌத்தப் பேரினவாத அரசியல் கவனம் செலுத்தி வருகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் இப் பொதுக் கட்டமைப்பினூடாக நியாயமாகச் செயல்படுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசு புறக்கணித்து விட்டது.!

முன்னர் நாம் கூறிய இன்னுமொரு கருத்தையும் நாம் மீண்டும் தர்க்கிக்க விரும்புகின்றோம். இக்கட்டமைப்பில் கைச்சாத்திட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட உலகநாடுகளின் எதிர்பார்ப்பிற்கு ஒரு வாய்ப்பையும் விடுதலைப் புலிகள் வழங்கியிருக்கிறார்கள் - என்றும் நாம் தெரிவித்திருந்தோம். சிறிலங்கா அரசிற்கு விடுதலைப் புலிகள் வழங்கிய சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசு புறக்கணித்து விட்ட இவ்வேளையில் உலக நாடுகளின் எதிர்பார்ப்பிற்கு விடுதலைப் புலிகள் வழங்கிய வாய்ப்பிற்காவது ஏதாவது ஒரு பலன் இருக்கிறதா என்பதை அறிய வேண்டிய வேளை இது. தமிழீழ மக்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு முதல் சில விடயங்களை அதாவது வெளிப்படையான உண்மைகளை- அரசியல் ரீதியாக நிரூபிக்க வேண்டிய வேளை இது.

கடந்த மூன்றரை ஆண்டுகால அமைதிவழி முயற்சிகளும் கடந்த ஐம்பது ஆண்டு கால அரசியல் மற்றும் போர்கால வரலாறும் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக நிரூபித்து நிற்கின்றன.

சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகள் தமிழ் மக்களுக்குரிய நீதியை ஒருபோதும் அளிக்க போவதில்லை என்ற உண்மை சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஆனால் அமைதி வழி ஊடாக சமாதானத் தீர்வினை அடைய முடியும் என்று எதிர்பார்த்த சம்பந்தப்பட்ட சில உலகநாடுகளும் யதார்த்தத்தை அறிய வேண்டிய காலம் இது! தமிழீழ மக்கள் தமது விடிவுக்கான அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்வதற்கு முதல் சர்வதேச சமூகத்திடம் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து முறையிடுவது பொருத்தமானதேயாகும். என்று நாமும் திடமாக நம்புகிறோம்.

முறைப்பாட்டிற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்குச் செயலுருவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றே நாம் கருதுகிறோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நீண்ட காலமாக தமது மாவீரர் தினப் பேருரைகளின் போது தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமை குறித்து தெளிவு படுத்தி வந்துள்ளார். அமைதி வழிப்பேச்சுகள் ஆரம்பமாவதற்கு முதல் 2002ம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு குறித்து விரிவான விளக்கம் அளிக்கப் பட்டிருந்தது.

அமைதி வழிப்பேச்சு வார்த்தைகளும் யுத்தநிறுத்த உடன்பாடும் பயனளிக்காமல் போகும்போது தமிழீழ மக்கள் தமக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையை பிரகடனப் படுத்த வேண்டி வரும்- என்ற கருத்து சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின்போது வலியுறுத்தப் பட்டிருந்தது. அதற்கு முன்னரும் பின்னரும் தமிழீழத் தேசியத் தலைவர் இதே கருத்தைத் தனது மாவீரர் தினப் பேருரைகளின் போது தெளிவு படுத்தி வந்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தல் ஊடாக இதே கருத்தை தமிழீழ மக்கள் ஜனநாயக ரீதியாகவும் வழிமொழிந்து விட்டார்கள். இன்றைய தினம் இராணுவ பலம் மிக்க தமிழினம் ஜனநாயக ரீதியில் தனது ஆணையை வழங்கியிருக்கிறது. அதனைச் சிங்கள-பௌத்த பேரினவாதம் நிராகரித்துள்ள நிலையில் சர்வதேச சமூகம் நீதியின்பால், நியாயத்தின்பால் நின்று செயல்படுமா? என்ற கேள்விக்கு விடை விரைவில் தெரிந்து விடும்.!

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து நாமும் பல ஆண்டு காலமாக தர்க்கித்தே வந்துள்ளோம். எதிர்வரும் காலத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து பலமாகப் பேசப்பட போகின்றது என்று நாம் இப்போதும் கருதுவதனால் சுருக்கமாகச் சில விடயங்களை எமது நேயர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அண்மைக் காலத்தில் கைச்சாத்திடப்பட்ட தென் சூடான் இனச்சிக்கலுக்கான தீர்வுத்திட்டம் குறித்துச் சில தகவல்களை இவ்வேளையில் தருவது பொருத்தமாக இருக்கக் கூடும். இத்தீர்வுத் திட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள பல முடிவுகள் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்கும் ஒரு வகையில் பதிலாக அமையக் கூடியவையாகும்.

ஆபிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய நாடு எனக் கருதப்படும் சூடான் நாட்டில் சுமார் நாற்பது ஆண்டு காலமாக இனச்சிக்கல் காரணமாக ஆயுதப்போர் நடைபெற்று வந்துள்ளது. சூடான் நாட்டின் தெற்குப் பகுதியினைத் தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள கறுப்பின மக்களுக்கும் வடக்கு பகுதிகளை மையப்படுத்தி வாழுகின்ற அரபு இன மக்களுக்கும் இடையே எழுந்த முரண்பாடுகளை - இனச்சிக்கல்களை தீர்ப்பதற்காக கடைசி இரண்டு ஆண்டு காலத்தில் மிக முன்னேற்றத்துடன் இந்த இரண்டு தரப்பினரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாவதற்கும், தொடர்ந்து முன்னேற்றம் கண்டதற்கும் சர்வதேச சமூகம் பெரு முயற்சிகளை எடுத்திருந்தது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் அதாவது 2005 ஜனவரி 9ம் திகதியன்று இறுதி உடன்பாட்டில் சூடான் அரசும், சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் கைச்சாத்திட்டன. இந்த நிகழ்வின் போது ஆபிரிக்காவின் பிராந்தியத் தலைவர்கள், பிரமுகர்கள் மட்டுமன்றி அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சரும் கலந்து கொண்டார். இந்த இறுதி உடன்பாடு என்ன தீர்வினை தந்துள்ளது என்பதைச் சற்று சுருக்கமாக பார்ப்போம்.

இந்த இறுதி உடன்படிக்கையின்படி தென் சூடானிய மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதனடிப்படையில் ஆறு ஆண்டு கால இடைக்கால தன்னாட்சி அதிகாரம் தென் சூடானிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆறு ஆண்டுகளின் பின்னர் தென் சூடானிய மக்கள் சூடான் நாட்டுடன் இணைந்து வாழ விரும்புகிறார்களா? அல்லது பிரிந்து செல்ல விரும்புகிறார்களா? என்ற முடிவை சர்வசன வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கிற வாய்ப்பையும் இந்த இறுதி உடன்பாடு வழங்குகிறது.

இது மட்டுமல்ல நேயர்களே! இந்தப் புதிய இடைக்காலத் தன்னாட்சி அரசு தனக்கென்று ஒரு தனித்துவமான கொடியையும், நாணயத்தையும் கொண்டிருக்கும். தென் சூடானின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சூடான் நாட்டின் இராணுவம் அப்பகுதிகளை விட்டு முற்றாக வெளியேறவும், சூடான் மக்கள் விடுதலை இராணுவம் ஓர் உத்தியோக பூர்வ இராணுவமாகச் செயல்படவும் இந்த இறுதி உடன்பாடு வழிவகுத்துள்ளது.

இந்த இறுதி உடன்பாடானது, தமது சுதந்திரத்திற்காகப் போராட்டங்களை நடாத்துகின்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை காட்டக் கூடியதாகும். தமிழீழ மக்களும் இந்த தென் சூடானுக்குரிய தீர்வுத் திட்டத்தினூடே பல ஒற்றுமை வேற்றுமைகளை உணர கூடும்.

ஆயினும் இந்த இறுதி உடன்படிக்கையின் பின்னால் வல்லரசான அமெரிக்காவின் அக்கறையும் ஈடுபாடும் இருந்தது என்பதும் வெளிப்படையான விடயமே! சூடான் நாட்டின் பெற்றோலிய எண்ணெய் வளம், வட சூடான் அரசின் தீவிர இஸ்லாமிய மதவாத போக்கு, தென்சூடான் மக்களின் கணிசமான கிறிஸ்தவ மதச் சார்பு போன்ற விடயங்கள் அமெரிக்காவின் அக்கறைக்கு காரணமாக உள்ளன என்பதும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டியதே! (சூடான் குறித்த பல விடயங்கள் ‘எரிமலை’ சஞ்சிகையில் இருந்து பெறப்பட்டவை.)

இந்த இறுதி உடன்பாட்டின் பின்னணியில் உள்ள ஆதரவுகள், அழுத்தங்கள் எதுவாக இருந்தாலும் அடிப்படையில் உள்ள ஒரு விடயத்தை நாம் தர்க்கிக்க விழைகிறோம். இந்த தீர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப் படுவதற்கு அடித்தளமாக ஒரு விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. தென்சூடான் மக்கள் சுயநிர்ணய உரிமைகளை கொண்டவர்கள் என்ற கோட்பாடு இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதே போன்றுதான் தமிழீழ மக்களும் சுயநிர்ணய உரிமைகளைக் கொண்டவர்கள் ஆவார்கள். தமக்கென்று ஒரு பாரம்பரிய தேசத்தையும் தனித்துவமான மொழியையும், பண்பாட்டையும் கொண்ட ஒரு தேசிய இனத்தவர்கள்தான் தமிழீழ மக்கள். ஆயுதப் போராட்டம் ஊடாக ஒரு வலுவான நிலையில் இருந்து கொண்டு தாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்ற தீர்ப்பை ஜனநாயக முறையிலும் வழங்கியவர்கள் தமிழீழ மக்கள்!

கடந்த பொதுத் தேர்தலின் ஊடே தமிழீழ மக்கள் வழங்கிய இறையாணையின் மிக முக்கியமான பகுதி இதுவாகும்.:

“ தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கைகள் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு நியாயபூர்வமான அரசியல் தீர்வு மறுக்கப்பட்டு இராணுவ ஆக்கிரமிப்பும் அரசு அடக்கு முறையும் மீண்டும் தொடருமானால் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் தமிழரின் இறைமையும், சுதந்திரமும் நிலை நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாத யதார்த்தமாகி விடும் .”

இது தமிழீழ மக்கள் அளித்துள்ள இறையாணை!!

இன்று இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் இராணுவ சூழ்நிலைகள் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக்கியுள்ளன.

தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளைப் பிரயோகிக்க வேண்டியதற்கான வேளை நெருங்கிக் கொண்டிருப்பதனைத்தான் தற்போதைய அரசியல் இராணுவச் சூழ்நிலைகள் தெளிவாக்கியுள்ளன.

வேளை வருகின்ற வேளை!

நன்றி.
 

Mail Usup- truth is a pathless land -Home