"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா
பொதுக்கட்டமைப்பு எதற்காக?
19 May 2005
"எம்முடைய கவலையெல்லாம் ‘பொதுக்கட்டமைப்பு உருவாகுமா இல்லையா என்பது அல்ல.’ அப்படி ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாகினால் அக்கட்டமைப்பு உரிய முறையில் தக்க வகையில் செயற்படுத்தப் படுமா? என்பதுதான் எம்முடைய கேள்வி. ஒரு மேசையைக் கூட வாங்க வலுவில்லாத வரதராஜப் பெருமாளின் மாகாண சபையின் செயற்திறமையோடு இந்தப் பொதுக் கட்டமைப்பு அமையக் கூடுமோ? ...... 'போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது’"
கடந்த இரண்டரை ஆண்டு காலத்துக்கும் மேலாக நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ள ஒரு கசப்பான கருத்தை இப்போது மீண்டும் ஒரு முறை வலியுறுத்த வேண்டிய காலத்தின் தேவை வந்துள்ளது.
மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ள எந்த சிங்கள அரசுகளும் தமிழ் மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளைத் தரவில்லை என்பதோடு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கு இயல்பான வாழ்வியலையும் தரமறுத்து வந்துள்ளதை வரலாறு காட்டி நிற்கின்றது. அத்தோடு கருவிலேயே உயிரிழந்த அல்லது அற்ப ஆயுளில் மரித்துப்போன சமாதானப் பேச்சு வார்த்தைகளும் சமாதான உடன்படிக்கைகளும் இக்கசப்பான வரலாற்று உண்மைகளுக்கு உரம் சேர்த்து நிற்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசு, தமிழீழ விடுதலைப் புலிகளோடு நடாத்திய சமாதானப் பேச்சு வார்த்தைக் காலகட்டத்தில் ரணிலின் அரசாங்கத்தின் இதய சுத்தி குறித்து நாம் எம்முடைய சந்தேகங்களையும், கருத்துக்களையும் தொடர்ந்தும் தர்க்கித்தே வந்துள்ளோம். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பொருளாதார நலன் மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அவரது கட்சிக்கும் முக்கியமான நோக்கமாகும் என்கின்ற எமது கருத்தையும் நாம் வலியுறுத்தியே வந்துள்ளோம்.#தமிழ்த் தேசியப் பிரச்சனையை சிங்கள தேசத்தின் பொருளாதார நலன் என்கின்ற கறுப்புக் கண்ணாடியூடாகத்தான் ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டு வருகின்றார் என்பதையும் நாம் தொடர்ந்து தர்க்கித்தே வந்துள்ளோம். ரணில் விக்கிரமசிங்கவின் மறைமுகமான குள்ளநரித்தனமான அரசியலையும்விட ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் வெளிப்படையான தமிழர் விரோதப் போக்கு மேன்மையானது என்பதையும், அப்போதே அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தின் போதே நாம் சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிங்கள-பௌத்த தேசத்தின் பொருளாதார நலன் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ அதேபோல சந்திரிக்கா அம்மையாருக்குத் தனது அரசியல் எதிர்காலம் தான் அதி முக்;கியமானது என்ற கருத்தையும் தெரிவித்தே வந்துள்ளோம். வரலாறு நமக்கு காட்டி நிற்கின்ற உண்மைகளை தற்கால சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் வாதிகளின் நிலைப்பாடுகளுடன் சேர்த்தே நாம் தர்க்கித்து வந்துள்ளோம்.
கடந்த ஐம்பது ஆண்டு கால கட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகள் சமாதான முயற்சிகள் போன்றவற்றைத் தற்போதைய சமாதானப் பேச்சு வார்த்தை முயற்சிகளோடு ஒப்பிட்டால் அடிப்படையில் ஒரு முக்கியமான வித்தியாசத்தை நாம் அறியக் கூடியதாக உள்ளது. முன்னரைப் போல அல்லாது இம்முறை தமிழர் தரப்பு மிகவும் பலம் பொருந்திய நிலையில் இருந்து கொண்டு சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆயினும் பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. (அப்படி ஏதும் மாற்றம் ஏற்பட்டால் அதனை ஓர் ஆச்சரியமான விடயமாகத்தான் கருத வேண்டும்.!) ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைகள் தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்வியலில் பிரச்சனைகளுக்குக் கூட எந்தவிதமான தீர்வையும் பெற்றுத் தந்து விடவில்லை.சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்துக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் சமர்ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை திட்டவரவை சந்திரிக்கா அம்மையாரின் அரசு ஏற்றுக் கொள்வதாகவும் இல்லை. இப்போது பொதுக் கட்டமைப்பு ஒன்று குறித்துப் பேசப்பட்டு வருகின்றது.
சிங்கள அரசுகளின் இந்த இழுத்தடிப்புகளுக்கான அடிப்படைக் காரணிகளை நாம் கூர்மையாக அவதானிக்க வேண்டும் பொதுவாக வெளிப்படையான பார்வைக்கு சிங்கள ஆட்சி அதிகாரப் பரவலாக்கலை விரும்பவில்லை என்றே தோன்றும். அது உண்மையும் கூட. ஆயினும் இன்னுமொரு வலுவான காரணியும் உண்டு.
அது நிதி சம்பந்தப்பட்டது.
எந்த ஒரு ஆளுகின்ற வர்க்கமும் அதிகார சக்தியோடு நிதிப்பலத்தையும் தமக்குள்ளேயே வைத்திருக்க விரும்பும். சிறிலங்கா அரசைப் பொறுத்த வரையில் அதிகாரப் பலத்தையும் விட நிதிப்பலம்தான் இப்போது முக்கியமான சக்தியாக இருக்கிறது. இந்த கருத்தை நாம் சற்று ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
இன்று இலங்கைத் தீவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக விளங்குவதோடு மட்டுமல்லாது தமிழரின் பாரம்பரிய மண்ணின் பெரும் பகுதியை தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகித்தும் வருகின்றார்கள். இன்றைய தினம் இலங்கைத் தீவில் இராணுவ ரீதியாகவும,; நிர்வாக ரீதியாகவும் இரண்டு அரசுகள் இயங்கி வருகின்றன.
சிறிலங்கா அரசின் கைகளில் உள்ள ஒரே ஒரு பலம் தற்போதைய நிதிப்பலம்தான்.
இலங்கை பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இன்றைய தினம் வரை மாறி மாறி ஆட்சி செய்த, செய்து வருகின்ற சிங்கள அரசுகள் மாறமல் செய்து வந்துள்ள காரியம் ஒன்று உண்டு. அது முழு இலங்கையின் தேசிய வளத்தையும், வருமானத்தையும் தம்முடைய இனமான சிங்கள இனத்துக்குள்ளேயே தக்க வைத்துக் கொண்டிருப்பதுதான்.நடைமுறை வாழ்க்கையில் தனது நிர்வாகத்தையும், அதிகாரத்தையும் பெருமளவில் இழந்து விட்டநிலையில் சிறிலங்கா அரசு தன்னிடமிருக்கக் கூடிய ஒரே ஒரு பலமான நிதிப்பலத்தை தன்னிடையே வைத்திருக்க விரும்பும். அதனை அந்த நிதிப்பலத்தை சிறிலங்கா அரசு எளிதில் பங்கு போட்டுக் கொடுப்பதற்கு முன்வர மாட்டாது.
இந்த சிந்தனையின் அடிப்படையில்தான் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை குறித்துப் பொதுக் கட்டமைப்புக் குறித்தும் நாம் தர்க்கிக்க விழைகின்றோம்.
இன்றைய தினம் நிதிப்பலத்தைத் தன்னிடம் வைத்திருக்கும் சிறிலங்கா அரசிடம் உண்மையான நிதிபலம் இல்லை. என்பதும் ஒரு முக்கியமான விடயமாகும். அதாவது சிறிலங்கா அரசின் நிதி நிலைமையானது தற்போது ‘வங்குரோத்து’ நிலையிலேயே உள்ளது என்பது கவனிக்க தக்க விடயமாகும்.
ஆகவே ‘வங்குரோத்து’ நிலையில் உள்ள தன்னுடைய நிதி நிலைமையை மேம்படுத்துவதிலும் அப்படி மேம்படுத்தப் படுவதனால் மீளக்கட்டியெழுப்பப்படும் நிதிப்பலத்தைத் தன்னிடமேயே தக்க வைத்துக் கொள்வதிலும்தான், சிறிலங்கா அரசு அக்கறை கொண்டிருக்கும். இந்தச் சிந்தனையின் அடிப்படையில்தான் சிறிலங்கா அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்.
இதனை நிரூபிக்கும் விதத்தில்தான் சந்திரிக்கா அம்மையாரின் சமீபத்திய பேச்சுக்களும் அமைந்து வருகின்றன. சரியாகச் சொல்லப் போனால் அம்மையார் அண்மைக் காலமாக அதிகாரமாகவே பேசி வருகின்றார். இதனை எதிரொலிக்கும் வகையில்தான் தமிழீழ அரசியற் துறைப் பொறுப்பாளர் திரு சு.ப தமிழ்ச் செல்வன் அவர்களின் கூற்றும் அமைந்துள்ளது.கடந்த வார இறுதியில் யப்பானிய தூதுவரை சந்தித்த திரு தமிழ் செல்வன் அவர்கள் பொதுக் கட்டமைப்புத் தொடர்பாக அதிகம் பேசுவதும் அது வெகுவிரைவில் கைகூடப் போகிறது என்று கூறி வருகின்ற கருத்துக்களும் சர்வதேச சமூகத்தை கவர்ந்திழுத்து அதனிடமிருந்து உதவிகளை பெறுவதற்கான உத்திகளே என்று தெளிவு படுத்தியிருந்தார்.
மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ள சந்திரிக்கா அம்மையார் தற்போதைய நிலையைப் பயன்படுத்தி தனக்கு ஒரு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதற்காக செயற்பாடுகளில் இறங்கி விட்டார்.சகல பிரச்சனைகளையும் தீர்க்கவல்ல ‘சர்வரோக நிவாரணி’ மருந்தாக அம்மையார் அரசியல் யாப்பை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கும்நாள் வெகுதூரத்தில் இல்லை. தனது அரசாங்கம் கவிழ்ந்தாலும் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படும் - என்று அம்மையார் உறுதி தெரிவித்திருக்கிறார். அம்மையாருடன் சேர்ந்து வெளி விவகார அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர், நிதியமைச்சர் சரத் அமுனுகம ஆகியோரும் ‘பொதுக்கட்டமைப்பு நிறுவப்படும்’ என்று உறுதி அளித்துள்ளார்கள்.
எம்முடைய கவலையெல்லாம் ‘பொதுக்கட்டமைப்பு உருவாகுமா இல்லையா என்பது அல்ல.’
அப்படி ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாகினால் அக்கட்டமைப்பு உரிய முறையில் தக்க வகையில் செயற்படுத்தப் படுமா? என்பதுதான் எம்முடைய கேள்வி
ஒரு மேசையைக் கூட வாங்க வலுவில்லாத வரதராஜப் பெருமாளின் மாகாண சபையின் செயற்திறமையோடு இந்தப் பொதுக் கட்டமைப்பு அமையக் கூடுமோ? இலங்கையின் தேசிய வளத்திலும், வருமானத்திலும் இருந்தும் தமிழ் மக்கள் நியாயமாகப் பெற வேண்டிய பங்கினை கடந்த ஐம்பது ஆண்டு காலத்துக்கும் மேல் கொடுக்காமல் வருகின்ற சிங்கள-பௌத்த பேரினவாதம் இம்முறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா?
எமது இந்த ஐயத்தைப் பிரதிபலிக்கும் கருத்துக்களை கடந்தவாரம் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்திருந்தார். றொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு திரு தமிழ்ச்செல்வன் அளித்த செவ்வியின் போது பொதுக் கட்டமைப்பின் செயற்திறன் குறித்து தமது சந்தேகங்களைத் தெரிவித்த தமிழ்ச்செல்வன் தற்போது நடக்கும் சம்பவங்களை பார்த்தால் சர்வதேசத்தின் பார்வையைத் தனது பக்கம் திருப்பி அதன்மூலம் கிடைக்கும் நிதியைப் பெறுவதற்கான செயற்பாடுகளிலேயே அரசு ஈடுபடுவதாக தெரிகின்றது - என்றும் கூறியுள்ளார்.
அரச பயங்கரவாத போர்களினால் மட்டுமன்றி ஆழிப்பேரலை தந்த அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டு நொந்து போயுள்ள எமது மக்கள் இதுவரையும் சமாதானக் காலத்திற்கான பயனையோ, பலனையோ பெறவில்லை. அவர்களுடைய வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பற்றாக்குறைக்கு தொடர்ந்து யுத்த நிறுத்த மீறல்களை சிறிலங்கா இராணுவம் புரிந்து வருகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கை ஆட்டம் காணும் நிலைமை உருவாகியிருப்பதாக திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் எச்சரித்தும் உள்ளார்.
மனிதாபிமான உதவி விடயத்தில், தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் அரசின் செயற்பாட்டில் முற்று முழுதாக நம்பிக்கையை இழந்து விட்டனர். இப்போதுள்ள நிலைமையில் ‘தமிழ் மக்களை மீண்டும் ஆயுதம் ஏந்தச் சொல்லி கொழும்பு கேட்கிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ள திரு தமிழ்ச்செல்வன் இது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு கொழும்பிடம் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதானது ஒரு கெரில்லாப் போர் இயக்கம் என்பதிலிருந்து ஒரு மரபு வழி இராணுவமாக பெரிய பரிமாணத்தை அடைந்துள்ளதோடு மட்டுமல்லாது, தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தையும் பெற்றிருக்கின்றது.
எனவே தமது மக்களின் வாழ்வியல் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும், தேசியப் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும், தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டிய தார்மீக கடமை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உண்டு. ‘போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது’ என்று தீர்க்க தரிசனமாக கூறியுள்ள தேசியத் தலைவரின் வழிநடத்தலின் அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்கள் தோள் கொடுத்து உதவ வேண்டிய வேளை நெருங்கி வருவதைத்தான், தற்போதைய அரசியல் நிலைமைகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன.