"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings by Sanmugam Sabesan
இடைக்காலத்தின் நிகழ்காலம்
31 May 2004
ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அம்மையாரின் தலைமையில் அமைந்துள்ள தற்போதைய ஸ்ரீலங்கா அரசிற்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் எப்போது ஆரம்பமாகப் போகின்றன - என்ற கேள்விக்கு, உறுதியான பதிலைப் பெற முடியாத காலகட்டம் இது!. இந்த இழுபறி நிலைக்கான முழுப்பொறுப்பையும் - முழுப் பழியையும், சந்திரிக்கா அம்மையாரின் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். கொள்கை முரண்பாடும் கருத்து முரண்பாடும் கொண்ட கூட்டணியாக விளங்குகின்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, சமாதானப் பேச்சு வார்த்தைகள் குறித்துத் தெளிவான, உறுதியான முடிவை எடுக்க முடியாமல் இருப்பதற்கு, இந்த கூட்டணியின் இதய சுத்தியின்மையும் ஒரு முக்கிய காரணமாகும்.
இந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்ற சந்திரிக்கா அம்மையாரோ, தன்னுடைய சொந்த அரசியல் நலனுக்காக. சொந்த அரசியல் எதிர்காலத்திற்காக எத்தகைய அநீதியையும் அநியாயத்தையும் செய்யத் தயங்காதவராகவே விளங்குகிறார். அவருடைய கடந்த கால அரசியல் வரலாறும் இக்கருத்தை நிரூபித்து நிற்கிறது. இந்தப் புதிய ஆளும் கட்சிக் கூட்டணி உருவாகிய விதமும், சந்திரிக்கா அம்மையாரின் சுயநல அரசியலைத் தெளிவாகக் காட்டி உள்ளது.
1994ம் ஆண்டுக் காலப் பகுதிகளில், தான் பதவியை கைப்பற்றுவதற்காக, தன்னை ஒரு சமாதானத் தேவதையாகக் காட்டிக் கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வைக் காண வேண்டுமென்றும், சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறியது சந்திரிக்கா அம்மையார் தான்!. 2004ம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக சமாதானத்திற்கு எதிரான கருத்துக்களையும், சிங்கள-பௌத்த பேரினவாத சிந்தனைகளையும் வெளிப்படுத்தியதும் இதே சந்திரிக்கா அம்மையார் தான்!
முன்பு சமதானத் தேவதையாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, போர்த்தேவதையாக பின்னர் உருக்கொண்டு, தமிழினத்தின் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துத் தன் சுயரூபத்தை சந்திரிக்கா அம்மையார் வெளிக்கொணர்ந்து வந்தார். இப்போதோ சமாதானத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு அரசைக் கைப்பற்றிய பின்பு சமாதானத்திற்கு ஆதரவான போக்கைக் கொண்டிருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை அம்மையார் உருவாக்கிக் காட்டுகின்றார்.
அடிப்படையில் சந்திரிக்கா அம்மையார் ஒரு சிங்கள பௌத்தப் பேரினவாதியாக இருந்த போதிலும், அவருடைய இலட்சியம்-ஒரே இலட்சியம்-அவருடைய அதிகார-அரசியல் எதிர்காலம்தான்! தன்னுடைய சொந்த அரசியல் நலனுக்காக தன்னுடைய சொந்த அரசியல் எதிர்காலத்திற்காக-சந்திரிக்கா அம்மையார் எதையும் சொல்வார், எதையும் செய்வார் என்பதைத்தான் இவை சுட்டிக் காட்டுகின்றன. ஒரு சிங்கள-பௌத்த பேரினவாதப் பெண்மணியின் சுயநல அரசியல் எதிர்காலத்தின் பொருட்டு அரங்கேறுகின்ற இந்தத் திடீர் நாடகங்கள் ஊடாக, சமாதானப் பேச்சுக்கள் எப்போது ஆரம்பமாகும் என்ற கேள்விக்குரிய பதிலை, உலகம் எதிர்பார்த்து நிற்கின்ற நிலை, வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
நாம் இப்போது மட்டுமல்ல, முன்னரும் பல தடவைகள் வலியுறுத்தி வந்த, தர்க்கித்து வந்த கருத்துக்களில் இதுவும் ஒன்றாகும். அது மட்டுமல்ல, இன்னுமொரு கருத்தையும் நாம் பல காலமாகத் தர்க்கித்தே வந்துள்ளோம். 'தான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட முடியாத காலம் வரும் வேளையில், அம்மையார், ஜனதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைப் பிரதம மந்திரிப் பதவிக்கு மாற்றுவதற்கு முனைவார் என்றும், அதற்காக ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பை மாற்ற முனைவார் என்றும் தமிழர்களின் தேசியப் பிரச்சனைக்கு இறுதித்தீர்வு ஒன்றைக் காண்பதற்ககவே, அரசியல் யாப்பை மாற்ற இருக்கின்றேன் என்றும் அம்மையார் காரணம் காட்டுவார்" என்றும் நாம் பல தடவைகள் தர்க்கித்தே வந்துள்ளோம்.
அதாவது தான் மூன்றாவது முறையாக, ஜனதிபதிப் பதவிக்குப் போட்டியிட முடியாத நிலையில், அரசியல் துறவறம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலை அம்மையாருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதிப் பதவியின் அதிகாரங்களை, பிரதம மந்திரியின் பதவிக்குரிய அதிகாரங்களாக, மாற்றம் செய்யும் பட்சத்தில் தான் அம்மையார் எதிர்காலத்தில் பிரதம மந்திரியாக போட்டியிடவோ, ஆட்சியைக் கைப்பற்றவோ முடியும். இதனைச் செய்வதற்கு முதலில் ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பை மாற்ற வேண்டும். ஆனால் அரசியல் யாப்பை மாற்றுவதற்கு, ஸ்ரீலங்காப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதன் மூலம் முதல் அனுமதியைப் பெற வேண்டும்.
இதனை எவ்வாறு செய்ய முடியும்?
அரசியல் யாப்பின் பல முக்கியமான கருத்துக்களை மாற்றுவதற்கு வலுவான காரணம் ஒன்றைக் காட்ட வேண்டும். அது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலமான ஆதரவைப் பெறக்கூடிய காரணமாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட காரணமாக, எந்தக் காரணத்தைக் காட்டலாம்?
இருக்கவே இருக்கின்றது, தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனை! அதற்கு ஓர் இறுதியானதும், உறுதியானதும் தீர்வைக் காண்பதற்காக, ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும் - என்ற கருத்தாக்கத்தை முன் வைத்து, சர்வகட்சி ஆதரவைத் தேட முயல்வது பயனைத் தரக் கூடும். அதற்கான அடித்தளத்தை இப்போதே போட வேண்டும். ஆனால் நேரமோ நெருங்கிக் கொண்டிருக்கின்றது! இதற்கு என்ன வழி?
இதற்கு ஒரே ஒரு வழிதான் இருப்பதாகச் சந்திரிக்கா அம்மையார் எண்ணுகின்றார் போலும்.! சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் போது, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புத் தொடர்பான பேச்சுக்களோடு, தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காணும் பேச்சுக்களையும் சமகாலத்தில் நடத்த வேண்டும். அப்படி நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு அதனைக் காரணம் காட்டி, ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பை, தன்னுடைய அரசியல் எதிர்கால வளத்திற்கு ஏற்ற முறையில் மாற்ற வேண்டும்! இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், வேறு ஏது சந்தர்ப்பம்?
ஆகையால்தான் அம்மையார் இப்போது, சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புத் தொடர்பான பேச்சுக்களையும், தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காணும் பேச்சுக்களையும், சமகாலத்தில் நடத்த வேண்டும்-என்று வற்புறுத்தி வருகின்றார்.
இதனால் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகாமல், தடைப்பட்டு நிற்கின்றன. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்குத் தடைக்கல்லாக சந்திரிக்கா அம்மையாரின் அதிகாரவெறி குறுக்கே நிற்கின்றது. ஜனதா விமுக்தி பெரமுன, 'இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை குறித்து, பேச்சுவார்த்தைகளோ நடைபெறக்கூடாது" - என்று விடாப்பிடியாக நிற்கின்றது.ஆனால் தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளான, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ, 'சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கும்போது, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக் குறித்தே முதலில் ஆராயப்பட வேண்டும்" என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியாக நிற்கின்றார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு, அரசு தடையாக நிற்கும் இவ்வேளையில், முக்கிய காரணியாக விளங்குகின்ற ~இடைக்கலத் தன்னாட்சி அதிகார சபை| குறித்து சில விடயங்களைச் சிந்தித்துத் தர்க்கிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகின்றேம்.
இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவு, எந்த-எந்த விடயங்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, இவை எழுதப்படுவதற்கு என்ன-என்ன விடயங்கள் காரணமாக இருந்துள்ளன, என்பது குறித்து நாம் சிந்திப்பது அவசியமாகும்.
இரண்டு சகாப்த காலத்திற்கும் மேலாக, போரினால் உருவாகிய அவலத்திற்கு முகம் கொடுத்து, இன்னல் நிறைந்த வாழ்வை அனுபவித்து வருகின்ற, தமிழ் மக்களுடைய வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.அவர்களுடைய சமூக-பொருளாதார வாழ்வியல் முன்னேற்றம் காணவேண்டும். வடக்கு-கிழக்கிலே மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகள் அரம்பிக்கப்படவேண்டும். அது மட்டுமல்ல, அவை செயல்திறனுடன் விரைவாக நிறைவேற்றப்படவேண்டும்.
இந்த அவசிய-அத்திhவசியப்பணிகள், தமிழ் மக்களுடைய அடிப்படை வாழ்வியல் உரிமையும் கூட! ஆகவே இவை நிறைவேற்றப்படுவதற்கு உரிய, உகந்த அதிகார சபைக்குரிய ஆலோசனைகளை உருவாக்க வேண்டும். இந்த அடிப்படையில் முறையாக உருவாக்கப்பட்டது தான் இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை ஆலோசனைத் திட்ட வரைவு.
இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை தோன்ற வேண்டிய நிலைக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர்களில் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் முக்கியமானவர் என்ற கருத்தையும் நாம் இங்கே வலியுறுத்த விரும்புகிறோம். அரச பயங்கரவாதப் போர்கள் காரணமாகவும், அரசு விதித்த உணவு-மருந்து-பொருளாதாரத் தடைகள் காரணமாகவும் தான், எம்மக்களின் இயல்பு வாழ்க்கை அவலம் நிறைந்த வாழ்வாக மாறியது. ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில்தான், தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா இராணுவம் கடுமையான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்பையும், சொத்து இழப்பையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்தியது.ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் ஓர் இரவிலேயே அகதிகளாக இடம்பெயர்ந்த வரலாற்றுக் கொடுமையும், சந்திரிக்கா அம்மையாரின் அதிகாரத்தின் கீழேயே நடைபெற்றது. ஆகவே அவர் மூலமாகத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை மாற்றியமைக்க வேண்டிய தார்மீக கடமையும், நேர்மையும் அம்மையாருக்கு இருக்க வேண்டும். ஆனால் இவற்றை இலட்சியம் செய்யாது தன்னுடைய சொந்த அரசியல் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளவராக, சந்திரிக்கா அம்மையார் செயல்படுகிறார்.
அறுதிப் பெரும்பான்மை அற்ற அரசுக்குத் தலைமை வகித்துக் கொண்டிருக்கின்ற சந்திரிக்கா அம்மையாருக்கு தன்னுடைய ஆளும் கட்சிக் கூட்டணியை சேர்ந்த ஒருவரை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கக் கூடிய வல்லமை கூட இன்று இல்லை. இந்த இலட்சணத்தில் இடைக்காலத் தன்னாட்சி குறித்தும், தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குரிய இறுதித் தேர்வு குறித்தும் ஒரே நேரத்தில் பேசித் தீர்க்கப் போவதாக சந்திரிக்கா அம்மையார் கூறி வருவதானது, வியப்பை மட்டுமல்ல, ஆத்திரத்தையும் உருவாக்குகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விடயத்தையும் நாம் சுட்டிக் காட்ட விழைகின்றோம். 'இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை" என்பது அதன் பெயருக்கு ஏற்றால் போல், இடைக்காலத்திற்கு உரியதே தவிர நிரந்தரமான அதிகாரம் உள்ள நிர்வாகக் கட்டமைப்பு அல்ல, என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தவிரவும் இந்த ஆலோசனை வரைவு, சமாதானத் தீர்வுக்கு உரிய ஆலோசனை வரைவு அல்ல, என்ற யதார்த்தத்தையும் நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். தமிழ்த் தேசத்தின் தேசியப் பிரச்சனைக்குரிய நிரந்தரமான-நியாயமான-கௌரவமான சமாதானத் தீர்வினை- ஓர் இறுதித் தீர்வினை- அடைவதற்கும், அதனை அமுல்படுத்துவதற்கும் நீண்ட காலமெடுக்கலாம்.
ஆனால் தமிழ் மக்களின் இன்னல் நிறைந்த வாழ்க்கை இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சரியாக சொல்லப் போனால், இந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்குரிய ஆலோசனைகளை ஏற்று, மிக விரைவில் இந்த அதிகார சபையை முறையாக உருவாக்கி, அதனைச் செயற்பட வைப்பதன் மூலம்தான் இறுதித் தீர்வுக்குரிய அத்திவாரம் பலமாக போடப்படும் என்பதே உண்மையாகும்.
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை முறையாகத் தீர்க்கக்கூடிய எந்தத் தீர்வும், ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பிற்கு முரண்பட்டதாகவே இருக்கும் - என்ற யதார்த்தத்தை நாம் எல்லோரும் அறிவோம். இந்தத் தடையை தாண்டுகின்ற காலம் வரும் வரை, தமிழ் மக்களின் வாழ்க்கை தொடர்ந்தும் இன்னல் நிறைந்ததாகவே இருக்கக் கூடாது என்பதற்காகவும் தான், இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய ஆலோசனைத் திட்ட வரைவு உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட அதிகார சபைக்குரிய ஆலோசனைத் திட்டமும், இந்த அரசியல் யாப்புச் சிக்கலுக்குள் மாட்டித் தவிக்குமேயானால், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குரிய இறுதித்தீர்வு, பேச்சு வார்த்தைகள் ஊடே பெறப்படலாம் என்ற நம்பிக்கையும் விரைவில் பொய்த்து விடும்.
இன்று தமிழீழ மக்கள் பொதுத்தேர்தல் ஊடாக, ஏகமனதாக வழங்கிய இறையாணைகளில், இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய, ஆணையும் ஒன்றாகும். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய ஆலோசனைகள், உடனடியாக பேச்சுவார்த்தைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, முறையான அதிகாரசபை உருவாக்கப் பட வேண்டும் - என்ற தமிழீழ மக்கள் தெளிவான தீர்க்கமான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள். இப்படிப்பட்ட, ஜனநாயக ரீதியாக ஏகமனதாகக் கொடுக்கப்பட்ட ஆணையையும், சந்திரிக்கா அம்மையாரின் ஸ்ரீலங்கா அரசு புறக்கணிக்குமேயானால்.
இச்சமாதானப் பேச்சு வார்த்தைகளினால், உருப்படியான பலன் எதுவும் வரப்போவதில்லை என்பதே உண்மையாகும்.
இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை இவ்வாறு இழுபட்டுக் கொண்டு போவதுதான், நிகழ்காலச் சம்பவங்களாக இருக்கப் போகின்றது- என்றால், இடைக்காலத்தையும், நிகழ்காலத்தையும் பற்றி யோசிப்பதை விட்டு, நிலையான எதிர்காலம் குறித்து தமிழீழம் முடிவொன்றை எடுக்கும் காலம் நெருங்கி வந்து விடும் என்பதை சந்திரிக்கா அம்மையார் உணர்ந்திட வேண்டும்.