கற்பு என்பது நம்பிக்கை
காதல் என்பது
எப்படி இருபாலருக்கும் பொதுவானதொன்றோ
அது போலவே கற்பும்.
இது விவாதத்திற்காக நான்தரும் வார்த்தைகள் அல்ல, பல ஆண்டுகளாக ஆண்களுடன் வாதாடிய வார்த்தைகள்தான்; எனினும் உலகத்தோடு வாதாட வெப்தளம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்து விட்டது. இந்த ஏற்பாடு காரணமாக, இதை வாசிப்போரில் பகுத்தாய்வதற்கான சிறு பொறியை ஏற்படுத்துமாயின், அதுவே வெப்தளத்திற்கு வாசகர்தரும் வாழ்த்துக்கள்.
முன்பு ஒருமுறை எழுதிய அதே வரிகளை இங்கு குறிப்பிட முனைகிறேன்.
“பகுத் தறியாதவருக்குப் பட்டப்பெயர்
பகுத்தறிவாளி - அதைப்
புடமிட்டுப் புரியவைப்பவனுக்குப் பெயர்
பைத்தியக்காரன்.
இப்போதெல்லாம் என்னையும் அப்படித்தான்
பூமி சொல்கிறது.”
ஊரோடும் வேளையில் ஒருவர் புறம்பே ஓடினால்?. . .
கடவுளாயினும் பிழைசெய்வது தெரிந்தால், அப்பிழையைச் செய்து மோட்சத்தில் இருப்பதிலும்பார்க்க, அதைத்தவிர்த்து நரகத்தில் தவிப்பது மேல் என்று நினைப்பவன் நான்.
இந்தவகையில,; வெப்தளத்தின் ஊடாக இத்தலைப்பு இன்றைய எமது சமுதாயத்தில் விவாதித்து விடுவிக்கப்படவேண்டிய கட்டுக்கள்தான.;
ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பார்த்து, அதோகெதியாகிக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் தவறுதலான பார்வைதான் பல சங்கடத்திற்குக் காரணம்.
பலவருடங்களுக்கு முன்பு மட்டுமல்ல, இப்போதும் பல ஐரோப்பியர் எமது கலாசாரத்திற்கு ஏற்றாற்போல் வாழ்வதை கண்கள் ஊடாகக் கண்டவன் நான்.
தான் செய்வது தவறு என்பதை இன்னொருவர் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஒருமுழு மனிதனுக்குத் தேவையில்லை; தெரிந்தே செய்யும் தவறை மீண்டும் தெரியப்படுத்தவேண்டிய அவசியமுமில்லை.
காதலைப்போன்றே, கற்பும் பொதுவானதே என்பது அனைவருடைய ஆழ்மனதில் அரித்துக்கொள்ளும் கறையான்தான்; இருந்தாலும் ஆண்களின் ஆதிக்கமும் அதிகாரத் தோரணையும் அவர்களிடம் உள்ள அக் கறையானை அவ்வப்போது தூங்கிவிடச் செய்கிறது.
என்னைப்பொறுத்தவரையில் கற்பு என்றால் என்னவென்று கேட்டால் அதற்கு நான்தரும் விளக்கம் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதாவது கற்பு என்பது நம்பிக்கை.
கணவன் மனைவியிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
தந்தை மகளிடத்தில்வைக்கும் நம்பிக்கை கற்பு.
தாய் மகனிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
நண்பன் தன் நண்பனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
காதலன் காதலியிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
காதலி காதலனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
தொண்டர்கள் தலைவனிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
அரசன் மக்களிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
மக்கள் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
…
இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்…
இந்த நம்பிக்கைக்கு எப்போது பங்கம் வருகிறதோ அப்போது கற்பு அங்கே அழிக்கப்படுகிறது;
இதில் ஆண் என்ன பெண் என்ன ?
பலாத்காரமாக ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தினால் அப்பெண்ணுக்குச் சமுதாயம் கொடுக்கும் பெயர் கற்பழிக்கப்பட்டவள்
சுயவிருப்புடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு தன்னை வெளிக்காட்டும் பெண்ணுக்கு இச்சமுகம் கொடுக்கும் பெயர் கற்புக்கெட்டவள்.
சந்தர்ப்ப வசத்தில் ஒரு ஆடவனுடன் பெண் தன் உணர்வுகளைப்பகிர்ந்து கொண்டது தெரியவந்தால், அவளுக்கு கொடுக்கப்படும் பெயர் கற்பிழந்தவள்.
இப்படிச்சொல்லப்படும் பெண்களுக்குச் சூட்டப்பட்ட முள்முடியில் இருந்து காலம் முழுதும் குருதி வடிந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் இதற்கு உடந்தையான ஆண்களுக்கு அது பொன்முடியாய் பிரகாசிக்கிறது.
காதலிக்கும் போது, காதலர்கள் தம்மை உணர்ச்சிகளுக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளும் போது அங்கு பெண்களைச் சுடுசொல்லால் சுட்டுக்காட்ட, தப்பிக்கொள்ளும் ஆண்களின் நிலை சமுதாயத்தில் இருந்து மறைக்கப்படுகிறது.
ஒருவர் கொலைசெய்யப்பட்டால் அக்கொலையைச் செய்தவர் எச்சந்தர்ப்பத்தில் செய்தார் என்பதைப்பொறுத்து தண்டனை அல்லது தீர்ப்பு மாறுபடுகிறது, ஆனால் கற்பு என்ற இந்த விடையத்தில் சமுதாயம் மட்டுமல்ல சட்டம் கூட சந்நியாசிதான்.
ஆண்கள், மனைவி இறந்ததும் மறுமணத்தைச் சிறப்புடன் செய்கின்றனர்; ஆயினும் பெண்கள் கணவனை இழந்த பின்பு அவளுக்கு வாழ்வுதர சமுகத்தின் பார்வை சங்கடமாகத்தான் இருக்கிறது.
கணவனை இழந்த பெண்களுக்கு வழங்கப்படும் பெயர் பிரபல்யந்தான், அது விதவை (கைம்பெண்).
இதே போல் மனைவியை இழந்த கணவனுக்கு மக்கள் அதற்கான பெயரைக்கொடுக்க மறந்து விடுகின்றனர், பலருக்கு அதற்குப் பெயர் இருப்பதே தொரிவதில்லை. நான் சொல்வது இன்றைய எமது மாறுபட்ட சமுகத்திற்கு மங்கலாய்த் தெரியும் மாலை வேளைதான்.
மனைவியை இழந்தவன் “தபுதாரன்”.
இந்தவார்த்தை எத்தனைபேருடைய வாழ்க்கையில் வந்து போனது? இது தேவையற்றது என்று கைவிட்டீர் என்றால், விதவை என்ற பெயரும் கைவிடப்பட வேண்டியதே!
கணவன் இழந்தாலும் அவளுடைய கனவுகளும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் இழந்தோ அழிந்தோ போவதில்லை.
எங்களுடைய சில பாரம்பரியங்கள் (மூடநம்பிக்கைகள்) கண்டிக்கப்பட வேண்டியவை.
கணவன் இழந்த பெண்களை எந்த நல்லவொரு காரியத்திற்கும் தலையாக்குவதற்கு மறுக்கும் எங்கள் சமுகம், தவறுதலாக பல காரியத்தை மறந்துவிட்டுச் செயற்படும். அதற்குப் பதவிகளும் பட்டங்களும்; பாலமாக அமைந்து விடுகிறது.
என்ன புரியவில்லையா?!
இலங்கையின் ஜனாதிபதி ஒரு விதவை. விதவைக்குக் கொடுக்கப்பட வேண்டிய எந்த வடிவமும் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழிதானே!
என்னுடைய மகன் அல்லது மகள் ஜனாதிபதியின் கையால் பரிசு வாங்கினார் என்று பெருமையாகச் சொல்வோர், ஒரு விதவையின் கையாலா பரிசை வாங்கினாய் என்று தட்டிவிடவில்லையே!
பதவியும் பணமும் பறித்து மறைத்துவிட்டது கைம்பெண் என்ற கடிவாளத்தை;
பதவி, பணம் அற்றவர்களைமட்டும் கட்டிப்போடுவது ஏன்?
கணவன் உயிருடன் இருக்கும் போது மனைவி இன்னொருவருடன் தொடர்பு...
மனைவி உயிருடன் இருக்கும் போது கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு…
இது அன்றாடம் மற்றவரைப்பற்றிப் புறம்பேசும் இந்தப் பூமியின் வாடிய பூக்கள்;
அப்பேற்பட்ட உண்மை நடைமுறைகள் தாலி, குடும்பம், என்ற காரணத்தால் கண்களுக்கு மைபூசப்படுகிறது.
போலி வாழ்க்கைக்குப் புகழாரஞ் சூட்டுவதுதான் தரணியின் தார்மீக மந்திரம்.
பெண்களுக்குச் சில விடையங்களை நாசுக்காகச் சொல்லவேண்டிய அவசியமுண்டு.
தமிழ்ப்பாரம்பரியத்தில் பெண்களுக்கே உரிய பண்பெண்று நாற்குணங்களை சிறப்பாகக் கூறுவதுண்டு. அப்பண்புகள் இப்போதெல்லாம் பாழடைந்து போய்விட்டது, அதற்கான விளக்கம் என்னவென்று இன்றைய இளம் பெண்கள் கேலிசெய்யும் காலமாகிவிட்டது.
• அச்சம்
• மடம்
• நாணம்
• பயிர்பு
இப்பண்புகள் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களும் உணரக்கூடியதே, இருந்தும் பெண்கள் அப்பண்புகளைத் தாங்கியிருந்தபோது தரணி நலமாகத்தான் இருந்தது, இது (வெளிநாட்டவருக்கும் பொருந்தும் )தடம்புரண்டபோது தாறுமாறாகப்போனது.
இதில் எனக்கு மிகவும் பிடித்த பண்பு எதுவென்றால், மற்றவர்களுக்குப் புரியாத, மற்றும் விரும்பாத ஒன்றாக இருக்கும் பயிர்பு மட்டுந்தான். இந்தப் பண்பு இல்லாத ஆண்களும் , பெண்களும் தமக்குரியவரிடமிருந்து நம்பிக்கையை இழக்க நேரிடுகிறபோது அங்கே கற்புக் கலங்கம் ஏற்படுகிறது.
பயிர்ப்பு என்பது தன் (கணவன்) காதலனைத்தவிர்ந்த மற்றைய ஆடவரின் தீண்டலில் காணப்படும் அருவருப்பைக் குறிக்கும். ஆனால் இப்போது எந்தப் பெண்ணிடமும் இந்த அருவருப்புத் தன்மையைக் காணமுடிவதில்லை.
இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான். தன் (காதலி) மனைவிதவிர்ந்த மற்றைய மங்ஙையரின் ஸ்பரிசத்தின்போது அவனுக்கு அருவருப்பு வந்தாகவே வேண்டும்; ஆனால் இப்போதுள்ள ஆடவருக்குத்தான் ஏராளம் காதலி, காலத்திற்குக் காலம் மாறுபட்டுக் காணப்படுகிறதே! இப்படியிருக்க, இந்த விபரங்களை சொல்லும் போது பைத்தியக்காரத் தனமாகத்தான் இருக்கும்.
மனிதரைத்தவிர்ந்த மற்றைய உயிரினங்கள் ஆரம்பத்தில் இருந்தே இப்பண்பிலிருந்து விலகி வந்துள்ளன, அந்த மிருகங்களின் பண்பு மனிதர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதனால் மனிதர்கள் இப்போதெல்லாம் மிருகங்களோடு ஒப்பிடும் அளவிற்கு வந்துவிட்டார்கள்.
எனக்குத் தெரிந்த ஒருவர் பத்துவருடங்களாக ஒரு மனைவியுடன் வாழ்ந்தார் அது சட்டத்திற்கு உட்பட்ட பதிவுத்திருமணம். பத்துவருடத்தின் பின், அக்குடும்பத்திடையே பிணக்குப் பலமானதன் காரணத்தால் அவர்களிடையே பிரிவு ஏற்பட்டது. பிரிவின்பின், ஒன்றரை வருடத்தின் பின்னர் அந்த ஆடவன் இன்னொரு பெண்ணை திருமணஞ்செய்து கொண்டு (முதல் மனைவியை விவாகரத்துச் செய்யாமலே), அவளுடன் சிறிதுகாலம் வாழ்ந்து விட்டு வெளிநாட்டில் தொடர்ந்த வேலைகாரணமாக, அவர்கள் தொலைவில் வாழ்ந்த காலத்தில் (இரண்டாவது பெண்ணிடமிருந்து) வேறு ஒரு பெண்ணுடன் இப்போது இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த ஆடவனை எந்த கட்டத்திற்குள் இணைத்துக் கொள்வது!? இந்தச் சம்பவம் இன்றிலிருந்து கடந்த மூன்றரை வருடத்திற்குள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, இதனை அறிந்த அமைப்புக்கள் கூட எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் அந்த “வாலிபன்” இன்னும் தலைநிமிர்ந்து, தான்செய்வது சரி என்ற செருக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்; இப்போதுள்ள பெண்ணுடனாவது தொடர்ந்து வாழ்வானா என்பது எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது.
சமுதாயம் அறிய, அவன் குறித்த காலத்தில் மூன்று பெண்களுடன் பிரபல்யமாகத் தொடர்பு கொண்டுள்ளான், தெரியாமல் எத்தனையோ!! இத்தனைக்கும், அவனுடன் இணையும் பெண்களை என்னவென்று சொல்வது?.
ஒரு ஆடவனுடன் பெண் தொடர்பு கொள்ளும் போது, அவனுடைய வாழ்வைப் பற்றித் தெரிந்தாக வேண்டுமென்ற விளக்கமெல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டதால், ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையும் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
மேலே சொன்னது போல் இன்னொரு சம்பவம்: - என்கையாலே கண்ணீரோடே அந்தக் கடிதத்தை அப் பெண்ணின் விருப்பின் பெயரில் எழுதிக் கொடுத்தேன், அது விடுதலைப் புலிகளின் குறிப்பிட்ட காரியலயத்திற்கு எழுதப்பட்டது, அதாவது ஒன்பது வருட குடும்ப வாழ்விலிருந்து இன்றோடு அவர்கள் பிரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் சாராம்சம். என்னால் முடிந்தவரை அறிவுரை வழங்கியும் அது ஆற்றில் போடப்பட்ட குப்பையானது.
ஒருகுடும்பத்தில் எத்தகைய மகிழ்ச்சி இருக்க வேண்டுமோ அதற்கு மாறுதலான பிணக்கே இன்று காணப்படுகிறது.
இத்தகைய சீர் கேடுகளை எத்தகையோர் சீர்திருத்துவார். பல குடும்பங்கள் இதுபோன்று சின்னாபின்னமாகிக் கிடப்பதை கண்ணீரோடு கண்டதால் சொல்லுகிறேன்
தன்னிடம் உள்ள தாழ்வு மனப்பாங்கை மற்றைய நபரிடம் செலுத்துவோராலே அதிகபட்சமான பிணக்குகள் உருவாகின்றது
தனது தவறை மறைப்பதற்குப் பதிலாக மற்றவருடைய தவறைத்திட்டமிட்டுக் காட்டுவதால் தகாத வார்த்தைப்பிரயோகத்தில் ஆரம்பித்து தமது வாழ்வையே தாறுமாறாக்கிவிடுகின்றனர் பலர்.
வருடம் புதிது, வந்தவரும்புதிது
ஆனால் வாழ்க்கை முறையோ பழையதுதான்!
மகிழ்ச்சிக்குப் புன்னகை
மனநோவிற்குக் கண்ணீர் - இது
உயிர்களிடத்தில் உறைந்துவிட்ட உணர்ச்சி.
புன்னகையையும், கண்ணீரையும் காட்ட, நாம் காட்டிக் கொள்ளும் முறைகள் தான் மனிதருக்கிடையில் மாறுபடுகின்றது.
சில நியதிகளும் நிர்ப்பந்தங்களும் மனிதர்களுக்குள் மனிதர்களால் திணிக்கப்பட்டது.
“நான் நல்லவானகத்தான் இருக்கிறேன்.”
இன்னொரு வகையில் சொன்னால்,
“எனக்கு கெட்டவனாவதற்குச் சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை” என்பதுதான் உண்மை.
இதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
உனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தும், உரிமையில்லாத அந்தப் பெண்ணுடன் உறவு கொள்ளாமல் தவிர்த்தாயோ?.
இல்லை.
அத்தகைய சந்தர்ப்பம் கிடைக்காததால், இன்றுவரை நீ நல்லவனாக இருக்கிறாய் என்பதை, நெஞ்சை நிமித்திச் சொல்லிக் கொள்கிறாயா?
என்னோடு நடந்த பெண்கள் பலர், அவர்கள் எனது பயணத்தில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்கள், காரணம் காதலுக்கும் காமத்திற்கும் விளக்கம் புரியாதவர்கள.;
இன்று வரை விளங்கிக் கொண்டவளைக் காணவில்லை.
இது போலவே எனது கேள்விகளுக்கும் என்னுள்ளத்தைத்விர வேறுயாரிடமும் இருந்துதக்க பதிலைக் கண்டதுமில்லை
பலருக்கு எனது கேள்வியே புரிவதில்லை,
புரிந்தவரில் சிலருக்கு அதற்கான பதிலே புதிராகக்காணப்படும்;
இப்படி இருக்க அதற்கான விடையை ஏற்றுக் கொள்வார் யார்?.
அது போலத்தான் வாழ்க்கையின் பல கேள்விக்குப் பலருக்கு விடைதெரிந்தும் அவற்றை ஏற்றுக் கொள்ள முன்வரார், காரணம் அது அவர்களின் வாழ்வைப் பொறுத்தது.
சமுதாயம் என்று தட்டிச்சொல்லாமல், தன்னைத்தானே முட்டிக்கொண்டால் பாதி வலி தீர்ந்து விடும்.
கால் தடக்கி கீழே விழுந்தால் கை கொட்டிச் சிரிக்கும் சமுகம் இது;
இதற்குப் பயந்து வாழ்பவர்களின் வாழ்க்கைப் பயணம் பயங்கரமான முடிவில் போய்ச் சேரும் என்பதில் ஐயமில்லை.
ஆக, எப்படி உணர்வுகளும் உணர்ச்சிகளும் மனிதருக்குப் பொதுவானதோ, அது போல கற்பும் (நம்பிக்கை) இருபாலருக்கும் பொதுவானதே!
இச்சமுகத்தில் கற்பிழந்த பெண்களை விட கற்பிழந்த ஆண்களே அதிகம்.
இங்கு யார் கற்பு இழக்காத ஆடவரோ, இங்கு யார்தன் மனைவியின் நம்பிக்கைக்குப் பங்கமில்லாதவரோ, அவர் பெண்களின் கற்பைப் பற்றி இனி பேசட்டும்.
பூக்கள் இன்னும் மலரும்…