அர்ச்சனைக்குள் சிலவார்த்தைகள்...! 1 June 2006
தமிழ் இலக்கியப் போக்கில் இன்றைய நிலையினை எடுத்துக்கொண்டால், எதிர்காலச்சமூகம் ஏராளம் இலக்கிய நூல்களை இழந்துகொண்டிருக்கிறதென்பது அப்பட்டமான உண்மை. வாசிப்புத்திறன், எழுத்தார்வம், விமர்சனப்போக்கு என்பன ஒரு குறிப்பிட்ட நபருக்கே உரியதொன்றாக எண்ணக்கூடிய அளவுக்கு உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. கணனியின் வளர்ச்சியென்பது, கண்களுக்கு, மற்றும் கைகளுக்கு எட்டாத தொலைவில் பறந்து சென்ற வேகம், அதிகரித்துப் பாய்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இது வாழ்க்கையின் வேகத்தை அதிகரித்த அளவுக்கு, அறிவின் வேகத்தை அதிகரிக்கவில்லையென்பது அணைக்க முடியாத வெளிச்சம்.
“பலரின் அறியாமையே ஒருவருக்கு மாபெரும் அறிவாகிறது.” “பலரின் தூக்கத்திலேயே ஒருவரின் விழிப்புப் பலன்கொடுக்கிறது.”
இது நல்லிலக்கியம், அது இலக்கியமன்று, என்று பாகுபடுத்த நீ யார்? அதனை, இன்றைய நீயல்ல, நாளைய வரலாறு தீர்மானிக்கட்டும். இன்றைய ஏராளம் எழுத்துக்களின் தொகுப்பு, இன்றைய உண்மை நிகழ்வுகளை, நாளை மீழ்பரிசீலனை செய்ய கைகொடுக்கும்.
ஆதிக்கச்சார்புடைய எழுத்துக்களின் அம்பலம் அவ்வப்போது வெளிவருவதில்லையே!! அவை காலந்தாழ்த்தித் தலைகுனியும். ஆதிக்கச்சார்பற்ற உண்மைகள் அமைதியாகவே தலைநிமிரும்.
அன்பனே, நாளை வாசிக்கப்படும் வரலாற்றில், நீயும் ஒரு பகுதி என்பதனை மறந்து விpடாதே. எழுத்துரிமை எழுத்தாளருக்குமட்டும் உரியதென்று ஒதுக்கப்படும் தவறான கருத்திலிருந்து உன்னை விலக்குகிறேன். உன் சிறு கடிதங்கூட நாளைய வரலாற்றில் பெரும் இடத்தைப் பிடிக்கலாம், இன்று யாரறிவார்?.
இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் நின்று பார்க்கும் போது, கூச்சப்பட்டுத், தலைகுனிந்து மனம் பொருமக்கூடியதாகவே இருக்கிறது. மனிதன் ஏன்வாழுகிறான் என்று எண்ணக்கூடிய நிலையில் எவரும் இல்லை. மத அமைப்புக்களும்சரி, சேவை அமைப்புக்களும்சரி, அரச அமைப்புக்களும்சரி, நிதி என்ற மையப்பொருளிலேயே இயங்குகின்றது. ஒரு தனிப்பட்ட உழைப்பாளி தன் சாதாரணதனி வருமானத்தைக்கொண்டு வாழ்க்கை நடத்துவதற்கு வெட்கப்பட்டு, வேதனைப்பட்டுக் கண்ணீர் விடவேண்டியிருக்கிறது; எனவே அவன் தன்சாதாரன வருமானத்திலும் பார்க்க வேறு துணைவருமான வழியினைத்தேட முயற்சிக்கிறான், அல்லது சாதாரண வருமானத்தைக்கொண்டு வாழ்க்கை நடத்தமுடியாத காரணத்திற்கு எதிராக தன்போன்ற பலரைச் சேர்த்துக்கொண்டு கோசம் போடமுயல்கிறான்; அந்தமுயற்சியினை சமாளிக்கமுடியாத அமைப்புக்கள் அதனை தடைசெய்ய முயலும்போது அந்த நபர்களின் செயற்பாடு ஒரு அமைப்பாகிறது. அது மேலும் மேலும் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புக்களால் (அரசால், பொதுவமைப்பால், சமய அமைப்புக்களால்) எதிர்க்கப்படும்போது அது தீவிரவாதம் என்று இவ்வமைப்புக்களால்ப் பெயர் சூட்டப்படுகிறது. அல்லது அவ்வமைப்பை அழிப்பதற்கு வகைதேடப்படுகிறது. இதற்குமாறாக, அவர்களின் கோசத்திற்கு ஏற்றவாறு நிலைமையினை மாற்றியமைக்க எந்த அமைப்பும் முன்வருவதில்லை; அப்படி முன்வந்தாலும் அதற்கு ஏராளமான நடைமுறைகளை ஏற்படுத்தி ஒருவருக்கு சலிப்பேற்படுமட்டும் ஆட்டிப்படைத்து அந்நபரைப் பிழிந்தெடுத்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சிறு விடையத்திற்கு பல மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணக்கிலோ இழுத்தடித்து அவர் வாலிபத்தைக் கரைத்துவிடுகிறது.
கல்விமுறையினை எடுத்துக்கொள்ளுங்கள், அதுகூட கேலிக்கிடமாகத்தான் தோன்றுகிறது. குறிப்பிட்ட ஒருநாட்டிலல்ல, பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இப்படித்தான் நிலைமை இருக்கிறது. விழுந்து விழுந்து ஒருமானவன் இரவுபகலாக கல்விகற்கிறான் அதுவும், பத்துவருடக்கல்வியின்பின் பயத்தோடு ஒரு பரிட்சை, அதில் பயத்தின்காரணமாகவோ அல்லது பிற மனம், மற்றும் உடல் சம்மந்தமான பாதிப்பாலோ அவன் அப்பரிட்சையில் பின்னடைவானாகில், அவனின் பத்துவருடமும் பாழாக்கப்பட்டதாக சமுகம் கருதிக்கொள்கிறது. ஒருவருடைய கல்வித்திறமையினை பரிட்சைமூலம்கணிப்பிடும் முட்டாள்த்தனத்திற்குப் பட்டதாரி என்று பெயர். ஒருவரின் அறிவை எடைபோட எவருக்கு தகுதியுண்டு என்று எனக்குப்புரியவில்லை. உலகத்தில் யாரும் யாருக்கும் அறிவூட்டவோ அல்லது யாருடைய அறிவையும் அறிவிழக்கவோ செய்யமுடியாது. மாறாக, ஒருவருக்குள் இருக்கும் அறிவினை வெளிக்காட்டவோ அல்லது உள்ளளடக்கவோ மட்டுமே இன்னொருவரால் முடியும். எந்த ஆசிரியனும் மாணவருக்கு அறிவூட்டுவதில்லை, மாணவனுக்குள் இருக்கும் அறிவினை தூசிதட்டவே முற்படுகின்றார். நாற்பது மணவர் இருக்கும் வகுப்பறையில் நான்கு மாணவர் சிறப்புத்தேர்ச்சி அடைகின்றார்கள் என்றால், அது யாருடைய தப்பு! நாற்பது மணவர் இருக்கும் வகுப்பறையில் நான்கு மாணவர் தேர்ச்சியே அடையவில்லை என்றால் அது யாருடைய தப்பு!? விஞ்ஞான அறிவில் ஒருவன் தன்சிந்தனையினைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது அவனுக்கு கணித அறிவைப் புகட்டித்திணிப்பது எந்தவகையில் ஏற்றுக்கொள்ளமுடியும். தாயின் வற்புறுத்தல், தந்தையின் வற்புறுத்தல், சகோதரத்தின் வற்புறுத்தல், ஆசிரியரின் வற்புறுத்தல், நண்பனின் வற்புறுத்தல்… இவைபோன்ற ஏராளம் பாதிப்புக்கள் ஒருவனுடைய தன்நிலையினை மாற்றிவிடுகிறது. சுயமாகச்சிந்திக்கும் மனிதர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். இதன்காரணம் தன்சுயநிலையில் ஆசிரியர் ஆகவேண்டிய ஒருவர், வற்புறுத்தலின் தாக்கத்தால் அவன் அதிகாரிகாகிவிட்டான். இதனால் தற்போது அவன் வீத அடிப்படையில் திறமைகுறைந்தவனாகக் காணப்படலாம் அல்லவா? திறமை குறைந்தவன் என்று நான்சுட்டிக்காட்டுவதன் கருத்தாவது: அதிகாரியாக இருப்பதிலும் பார்க்க ஆசிரியராக இருந்தால் அவன் திறமையின் வீதாசாரம் ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என்று காட்டவே. புவியியலில் மாவட்டரீதியில் அதிவிசேட உயர் பெறுபேறினைப்பெற்ற சிலரில் நானும்மொருத்தன், ஆனால் நான் இப்போது செய்யும் வேலைக்கும் அந்த பெறுபேற்றிற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. அத்தோடு அனுபவரீதியில் இப்போது அறிந்து கொண்ட கல்விமுறையே எனக்குக்கைகொடுக்கிறது. எதற்காக நான் ஏராளம் வருடங்களைப்பாளக்கிவிட்டேன் என்று சலித்துக்கொள்கிறேன்னிப்போது.
என்னைப்பொறுத்தவரையில் ஒருகுறிப்பிட்ட கற்கைக்காலத்தின்பின்னர் ஓவ்வொருவரும் தொழில்அடிப்படையில் பகுக்கப்படவேண்டும், பகுக்கப்பட்ட அனைவருக்கும் முடிவில் தொழில் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அது மணிக்கணக்கில் கணிக்கப்படும் பரிட்சைமூலம்அல்ல நாட்கணக்கில் எடுக்கப்படும் பயிற்சிக்கணிப்புமூலம் இடம்பெறவேண்டும். 10 நபரை வேலைக்கு எடுப்பதற்காக நுற்றுக்கணக்காணவரை எதற்காக வருடக்கணக்கில் அலக்களிக்கவேண்டும்?
அடிப்படையில் இருந்து ஏராளமான நடைமுறைகள் கட்டுக்கட்டாகப் படிப்படியாக மாற்றப்படவேண்டும். அதற்கு அரச நடைமுறைகளையோ அல்லது அமைப்புக்களின் நடைமுறைகளையோ எதிர்பார்த்து ஏமார்ந்து போவதைக்காட்டிலும், ஒவ்வொருதனி நபரிலும் இருந்து இந்த ஒளிப்பிளம்புகள் புறப்பட வேண்டும். ஓவ்வொருவிடையத்திற்கும் சமுகத்திலிருந்து ஒவ்வொரு தலையான ஒருவரை இனி எதிர்பார்க்க முடியாது; மதத்திற்காக ஒரு இயேசுகிறீஸ்துவை, அரசியலுக்கா ஒரு லெனினை, சேவைக்காக ஒரு அன்னைத் திரேசாவை, கொறில்லா முறைக்காக ஒரு சேகுவெராசை, தத்துவத்திற்கு ஒரு சோக்றடீசை, படைகளைத்தாங்குவதற்கு ஒரு ஜோன்ஓவ்ஆர்க்கை, வானியல்கண்டுபிடிப்புக்கு ஒரு கலிலேயோ கலிலேயியை, அகிம்சைக்கு ஒரு காந்தியை, கணிதமேதைக்கு ஒரு பித்தாகொராவை… இனியாரும் எதிர்பார்க்கத் தேவை இருக்கக்கூடாது.
இப்பேற்பட்ட ஆதங்கங்கள் புத்தம் புதிதாய் அருகனிடம் இருந்து வந்தகருத்துக்களல்ல, காலகாலமாக வந்திருக்கலாம், தப்பில்லை இதனை மீண்டும் நினைவுக்குக்கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தமும், நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்திலும் நாம் அனைவரும் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம். எனவேதான் என்னை எழுதத்தூண்டும் எண்ணங்களிலெல்லாம், மற்ற மனிதர்களின் ஆதங்க எண்ணங்கள் பிரதிபலிக்கின்றபோலும்.
இப்பேற்பட்ட ஆதங்கங்களோடு உட்செல்ல விரும்புகிறேன் அவைஅணைத்தும் உங்கள் விம்பங்கள் காட்டும் கண்ணாடியே. வாருங்கள் …!
“வாழ்க்கைதான் எத்தனை படிப்பினையைக் கற்றுத்தருகிறது”
பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு வினாடியிலும் ஆயிரக்கணக்கான அற்புத பாடங்களை அது கற்பிக்கிறது அவற்றைக் கற்றுக்கொள்ள நான்தான் அடம்பிடிக்கிறேன்.
இதோ, என் கண்களைமூடித் திறந்தேன் என்ன ஆச்சரியம்! முப்பது வருடங்கள் கடந்து விட்டன. கடந்த வருடங்களில் எண்ணில்லாச் சம்பவங்கள் நடந்தேறிவிட்டன. விரும்பியோ விரும்பாமலே அவற்றின் மிச்ச சொச்சம் இப்போதும் தொடர்கின்றது
இப்போது புரிகின்றது எனது வாழ்க்கை எவ்வளவு குறுகியதென்று. திறந்துள்ள கண்களை மூடிக்கொள்ளப் பயமாக இருக்கிறது. ஏனென்றால், மீண்டும் திறக்கும்போது மீதமுள்ள வாழ்வும் முடிந்து விடும் என்றுதான்.
வருடா வருடம் என்ற வார்த்தைகள் எல்லாம் மாறி நிமிடா நிமிடம் என்று மருகிவிட்டது.
இன்றிருப்போர் நாளைஇல்லை,
இன்றைய நண்பன் நாளைய எதிரி… இந்த இடத்தில் எங்களைச் சற்று நிறுத்த விரும்புகிறேன். நண்பன், தெரிந்தவன், பழக்கமானவன், உறவினன், நலன்விரும்பி, கூட வேலை செய்பவன், இப்படி ஏராளம் பிரிவுகள் இருந்த போதும் பொதுவாக நண்பன் என்று நாம் பயன்படுத்துவதுண்டு இதற்குள் பாதகமான விளைவும் சாதகமான விளைவும் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறது.
நான் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்தில் என்னுடன் ஏராளம் வேற்று நாட்டவர்கள் உள்ளனர் அதில் ஒரு வெற்று நாட்டவர் என்னிடம் நீ என்நன்பன் என்றான் அதற்கு நான் அவனிடம் கேட்டேன், நீ என்னுடன் வேலைதவிர்ந்த நேரத்தில் பழகியதுண்டா அல்லது உனக்கு நான் தொலைபேசித் தொடர்பு கொண்டதுண்டா அல்லது உனது வீட்டு விசேசங்களில் கலந்ததுண்டா அதற்கும் மேலாக உனது தனிப்பட்ட விடையத்திலோ நானோ அல்லது எனது தனிப்பட்ட விடையத்தில் நீயோ ஆழமாகத்தலையிட்டதுண்டா? இப்படி ஏராளம் வினாக்களுக்கு பாதகமான பதில்கள் இருக்கும் போது நானும் நீயும் எந்தவகையில் நண்பர்கள் என்று ஒத்துக்கொள்வது?... இனிமேல் வேண்டுமென்றால் நண்பர்களாக முயற்சிப்போம் என்று பதில் சொன்னேன். இதை ஆரம்பத்தில் அவன் எதிர்த்தாலும் பேசிமுடிந்ததும் அவற்றை முற்றாக ஏற்றுக்கொண்டான். விவாதத்திற்கு வேண்டும் என்றால் நீங்களும் வாதாடலாம் உண்மை என்பது?!!!...
இன்றுவரையில் உண்மையான, நிரந்தரமான நண்பர்களை தேடிக்கொண்டிருக்கிறேன்.
இயற்கை, மனிதனைத் தன்னுடன் போட்டி போடவைத்துக்கொண்டே இருக்கிறது. போதாதென்று மனிதன், மனிதனைத் தன்னோடு போட்டிபோடவைத்துக்கொண்டே இருக்கிறான். கடந்த காலங்களில் ஆசியாப்பகுதியில் சுனாமி, அமேரிக்காப்பகுதியில் பெருங்காற்று, தற்போதைய காலநிலை மாற்றங்கள் போன்றன இயற்கையின் எச்சரிக்கையாக இருக்க, பிரித்தானியாப் பகுதியில் நடாத்தப்பட்ட குண்டுவெடிப்புத்தாக்குதல், ஆப்கானிஸ்தான் மற்றும் நாடுகளில் இடையிடையே ஏற்படுத்தப்படம் பயங்கரவாதச் செயல்கள் மனிதனின் நச்சரிப்புக்களாக இருக்கிறது.
இவற்றுக்குள் மனிதன் தன்வாழ்க்கையைக் செலுத்திக் கொண்டிருந்தாலும், மூச்சுவிடமுடியாத அளவுக்கு அவனைத் தத்தளிக்கவைக்கும் விலைவாசிகள் அவசனுக்குச் சாவுமணியை சித்தரித்துக்காட்டுகிறது. இதில் முதலாளி வர்க்கத்தாருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை அரட்டை அடித்துக்கொள்வதற்கு ஒருசாராம்சம் கிடைத்ததோடு மேலதிகமான இலாபம் வேறு; ஆனால் மாதாந்த உழைப்பைநம்பிப் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருப்போருடைய தேரின் சக்கரங்களுக்குச் சாரம் குறைந்து ஓடிச்செல்லச் சங்கடப்படுகிறது.
|