தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil Digital Renaissance  > Tamilnet'99 >  Murasoli Maran - பனை ஓலையில் இருந்து, கணிப்பொறித் திரை வரை...நான்காவது தமிழ் உதயமாகிறது!

TamilNet'99
TamilNet'99
பனை ஓலையில் இருந்து
கணிப்பொறித் திரை வரை...
நான்காவது தமிழ் உதயமாகிறது!

முரசொலி மாறன், எம்.பி., February 1999
வரவேற்புக் குழு தலைவர், தமிழ் இணையம் 99,
துணைத் தலைவர், தமிழ் நாடு அரசு தகவல்
தொழில் நுட்ப பணிக்குழு

[Tamilnet '99 மாநாட்டை ஒட்டி தமிழ்.காம் க்காக் திரு. மாறன் எழுதிய பிரித்யேக கட்டுரை இது. இது உலகத் தமிழர்களுக்கு தமிழ் இணையம் 99 இன் அவசியத்தை எளிமையாக விளக்குகிறது.]

[see also Tamil Digital Renaissance - Nadesan Satyendra, May 1998 - " ..The print revolution brought Tamil from the ola leaves to paper, from the select few literati to the many. The digital revolution is bringing Tamil from paper to the computer and the internet. Swaminathatha Iyer and Thamotherampillai heralded the Tamil renaissance in the 19th century. Today, a Tamil digital renaissance is taking place - and is helping to bring Tamil people together not simply culturally but also in political and economic terms..."]

"...கன்னியாகுமரியில் வாழும் தமிழன் காஷ்மீரில் வாழும் தமிழனோடு மட்டுமின்றி, கலிபோர்னியாவில் வாழும் தமிழனோடும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியனோடும் தொடர்பு கொள்ள முடியும்...தமிழில் பேசி உரையாடும் ஆற்றலும் கணிப்பொறிக்கு வந்துவிட்டால் தமிழ் நாடு மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகே ஒரு குக்கிராம்மாக மாறிவிடும்...இயல் - இசை - நாடகம் - என்று வகுத்து தமிழை முத்தமிழ் என்பார்கள். இப்போது "நான்காவது தமிழ்" உருவாகிறது. அதன் பெயர்தான் கணிப்பொறித்தமிழ்."


சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு - 1780களில் - பிரிட்டனில் தொழிற் புரட்சி (Industrial Revolution ) வெடித்தது.

மனிதன் செய்த வேலைகளைச் செய்வதற்கு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விவசாய சமுதாயம் (Agricultural Society) கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரங்கள இயங்கும் தொழிலையும், தொழிற்சாலைகளையும் சார்ந்த சமுதாயமாக (Industrial Society) மாறிற்று.

இப்போது தோன்றியிருப்பது தகவல் தொடர்புப் புரட்சி. ( Information Revolution)

தொழிற் புரட்சிக்கு அடிப்படை இயந்திரங்கள் என்றால் தகவல் தொடர்புப் புரட்சிக்கு அடிப்பட கணிப்பொறி (computer) ஆகும்.

1957 இல் அன்றைய சோவியத் நாடு "ஸ்புட்னிக்" என்கிற விண்வெளிக் கோளை வானில் செலுத்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பியது.

இவை காரணமாக விண்வெளிப் பயணம் சாத்தியமாயிற்று என்பது ஒரு புறம் இருக்க, இதன் விளைவாக பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்க்ள் மூலம் பூமிப் பந்தின் எல்லாப் பகுதிகளோடும் உடனடியாகத் தொடர்பு கொள்ளமுடியும். Global Satellite Communication என்கிற மகத்தான சாதனை பிறந்தது; ஆம், மார்ஷல் மாக்லூகன் சொன்னது போல் இந்த பூமிப் பந்தே ஒர் குக்கிராமமாக மாறிவிட்டது.

குக்கிராமத்தில் எப்படி யாரும் செய்தித்தாளை படித்து உள்ளூர்ச் செய்தியைத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லையோ - எப்படி ஒரு செய்தி மின்னல் வேகத்தில் பரவுகிறதோ - அது போல் பூவுலகு முழுதும் நொடிப்பொழுதில் செய்தித் தொடர்பு கொள்வது சாத்தியமாகிவிட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளில் விவசாய சமுதாயம், தொழில் துறை சமுதாயமாக (Industrial Society) மாறுவதற்கு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. ஆனால் தகவல் தொடர்புப் புரட்சியைப் பயன்படுதிக்கொண்டு அதைச்சார்ந்த தகவல் தொடர்புப் சமுதாயம் (Industrial Society) மாறுவதற்கு கால் நூற்றாண்டே போதுமானதாகிவிட்டது.

அமரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி இலண்டன் மாநகரத்திற்கு தெரிவதற்கு 5 நாட்கள் பிடித்தன. இப்போது இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அஞ்சல் போய்ச் சேர்வதற்கு 10 நாட்கள் ஆகின்றது. நம் நாட்டில் விரைவு அஞ்சல் போய்ச் சேர்வதற்கு இரண்டு மூன்று நாட்கல் ஆகின்றன.

கணிப்பொறியில் கடிதத்தை தட்டச்சு செய்து அதை E-Mail என்கின்ற மின் அஞ்சலாக அனுப்பவேண்டுமா? அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அண்டத்தின் எந்தப் பகுதிக்கும்செல்ல இரண்டு நொடிகல் போதும்!

நாம் அன்னியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தமையால் 'முதல் தொழிற் புரட்சி' யைத் தவறிவிட்டோம்.

தகவல் தொடர்புப் புரட்சியைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் அதற்கு இந்த தலைமுறையைச் சார்ந்த நாம் ஒவ்வொருவரும் காரணமாகிவிடுவோம்.

தகவல் தொடர்புப் புரட்சியின் வாகனம் கணிப்பொறி.

'இண்டர்நெட்' என்க்ற 'இணையம்' அந்தப் புரட்சியை உலகெங்கும் எடுத்துச் செல்கிற மின்னல் வேக 'ஜெட்' விமானம்.

இன்றைய நவீன உலகில் நீங்கள் படிப்பறிவு பெற்றவர்களாகக் கருதப்படவேண்டுமானால் உங்களுக்கு ஆங்கில மொழி, கம்ப்யூட்ட்ர் மொழ் ஆகிய இரு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். - என்பது நிலைமை.

ஏன் தமிழால் முடியாதா? - என்று கேட்கக்கூடும். முடியும் - என்று நிரூபித்துக் காட்டிவிட்டனர் தமிழர்கள்.

பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் போற்றிப் காப்பாற்றி வரப்பட்டிருக்கும் தமிழ் இன்று கணிப்பொறி திரைமூலம்
தகவல் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

தமிழ் மொழி உலகின் பல நாடுகளில் பேசப்படுவதாலும் - அங்கெல்லாம் ஆட்சி மொழியாக இருப்பதாலும் - உலகெங்கிலும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் முயற்சியால், இன்று தமிழ் கணிப்பொறியில் - வேறு எந்த இந்திய மொழியையும் விட - நம்பமுடியாத அளவிற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கணிப்பொறி என்பது ஒரு தொலைக்காட்சி பெட்டியைப் போல. வெறும் தொலைக்காட்சி பெட்டியின் திரையில் எதுவும் தோன்றாது. அலைவரிசைக்கேற்ப் நிகழ்ச்சிகளை - ஒளிநாடாக்களை - இயக்கினால்தான் அந்தப் பெட்டியின் திரை மனமகிழ் வெள்ளித் திரையாக மாறும்.

அதுபோல் "சாப்ஃட்வேர்" என்கிற "மென்பொருள்" இருந்தால்தான் கணிப்பொறியோடு பேசமுடியும், "இண்டர்நெட்" என்கிற இணையத்தின் மூலம் உலகெங்கும் தொடர்பு கொள்ள முடியும்.

ஆங்கிலத்தில் எல்லா "மென்பொருள்" களும் ASCII என்ற ஒரே உள் குறியிட்டு முறையை (Coding Standard) ப் பயன்படுத்திகின்றன - அதாவது ஒரே அலைவரிசையில் நிகழ்ச்சியல் ஒலிபரப்பப்படுவது போல்.

ஆனால், தமிழிலோ ஒவ்வொருவரும் தங்களுக்கு உசிதம் என்று தோன்றிய மென்பொருளை தயாரித்துவிட்டார்கள் - ஒருவர்க்கொருவர் போதிய் தொடர்பின்மை காரணமாக.

இன்று சுமார் 350 மென்பொருள்கள் கணிப்பொறியில் உலாவந்து கொண்டிருக்கின்றன். இது உண்மையிலேயே பெருமைக்குரிய செய்திதான்.

ஆனால் ஒவ்வொருவரும் ஒரு தமிழ் வடிவக் குறியீட்டு முறையைக் கையாண்டுக் கொண்டிருக்கிறார்கள். (அதாவது - ஒவ்வொருவரும் தனித்தனி அலைவரிசையில் ஒலி பரப்புவது போல.)

வ்ளைவு என்ன? இன்று இண்டர்நெட் இணையத்தில் 350 "தமிழ்கள்" இடம்பெற்றிருக்கின்றன. அதாவது - ஒரு மென்பொருளில் தயாரிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கலை மற்றொன்று ஏற்றுக்கொள்ளாது.

இதனால் கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தும் தமிழர்கள் தனித் தனித் தீவுகளாக தொடர்பின்றி நிற்கிறார்கள். அதுபோலவே நுறுக்கு மேற்பட்ட விசைப்பலகை வடிவங்கள் (Key Board Configurations) பழக்கத்தில் உள்ளன.

மேலும் வெளிநாட்டுத் தமிழ் ஆர்வலர்கள் இந்திய அரசின் மின்னனுத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள  "கணிபொறி மேம்பாட்டு மையம்" (C-DAC) இத்துறையில் செய்துள்ள முயற்சிகளை அறியாமலும் செயல்பட்டு வந்திருக்கின்றனர்.

எனவேதான் தனித்தனித் தீவுகளாகச் செயல்படும் மென்பொருள்களை ஒன்றிணைத்து, அவற்றின் குறியீட்டு அமைப்பையும், விசைப்பலகை வடிவத்தையும் பொதுமைப்படுத்தும் இன்றியமையாத பணியைத் தமிழ் நாடு அரசு இப்போது மேற்கொண்டிருக்கிறது.

அதன் விளைவுதான் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், மொரிஷியஸ், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா - போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்களையும் கணிப்பொறி வல்லுநர்களையும் தமிழக அரசு ஒரு இடத்தில் திரட்டி, அவர்களிடையே ஒத்த கருத்தினை உருவாக்கும் வரலாற்றுச் சிற்ப்பு மிகுந்த உன்னதப் பணியினை மேற்கொண்டிருக்கிறது.

இதைச் செய்து முடித்த பிறகுதான் - பனை ஓலையில் இடம் பெற்றுப் பாங்குற வளர்ந்த தமிழ் மொழி எந்தவிதத் தடையுமின்றிக் கணிப்பொறித் திரை மூலம் உலகெங்கும் வலம் வரமுடியும்.

கன்னியாகுமரியில் வாழும் தமிழன் காஷ்மீரில் வாழும் தமிழனோடு மட்டுமின்றி, கலிபோர்னியாவில் வாழும் தமிழனோடும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியனோடும் தொடர்பு கொள்ள முடியும்.

கிறித்துவ சகாப்தத்திற்கும் முற்பட்ட சங்க இலக்கியங்களை மட்டுமல்ல, உலகத்தின் அறிவுக் களங்சியங்களையெல்லாம் கணிப்பொறிக்குள் தமிழில் திணித்து விட்டால் நகரத்தில் வாழும் தமிழன் மட்டுமல்ல, பட்டிகாட்டில் வாழும் தமிழனும் அவற்றையெல்லாம் மெய்ந்து அறிவுச் சுடரை அடைய முடியும்.

தமிழில் பேசி உரையாடும் ஆற்றலும் கணிப்பொறிக்கு வந்துவிட்டால் தமிழ் நாடு மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகே ஒரு குக்கிராம்மாக மாறிவிடும்.

இயல் - இசை - நாடகம் - என்று வகுத்து தமிழை முத்தமிழ் என்பார்கள். இப்போது "நான்காவது தமிழ்" உருவாகிறது. அதன் பெயர்தான் கணிப்பொறித்தமிழ்.

அந்த நான்காவது தமிழைச் செப்பனிட்டுப் பொதுமைப்படுத்தி, தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க இருக்கும் பன்னாட்டுத் தமிழர் தலைவர்களையும், தமிழ் அறிஞர்களையும், கணிப்பொறி வல்லுநர்களையும், இவ்விதம் நான்காவது தமிழ் உதயமாகிட உரிய முயற்சி மேற்கொண்டிருக்கும் கலைஞரையும், அவர்தம் அரசையும், "நும் முயற்சி வெல்க" என்று வாழ்த்துவது தமிழர் கடமையாகும்.

இனி நான்காவது தமிழ் அடுத்த தலைமுறையினரைச் சென்று சேர்ந்திட முயற்சி மேற்கொள்வது நம் கடமையும், அரசின் கடமையாகும்.

Mail Usup- truth is a pathless land -Home