தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Diaspora - a Trans State Nation > Tsunami Disaster &  Tamil Eelam  > Tsunami & an Outpouring of Poems - Kavithaikal - சுனாமி கவிதைகள்

Tsunami Disaster & Tamil Eelam

An Outpouring of Poems
சுனாமி கவிதைகள்

" The healing power of poetry - the Truth that lives within each and every one of us;
the Truth that always liberates and never dies..." -  Jamie Walker
[see also Eelam Tamil Literature]


புரியவில்லை உனக்கு மட்டும்  -முத்தையனூர் ப.துஷ்யந்தன்

அலையே!   -ரத்னா

மீண்டும் மீண்டும் எழுவோம்   -சுவிசிலிருந்து புதியவன்

ஆழ்கடலே ஆர்த்தெழுந்து மீள்குடியை ஏன்- அழித்தாய் - சுவிசிலிருந்து சுபாஸ்

மன்னிப்பு இல்லை   -தி.குன்றன்

அலையின் அனர்த்தம்   -க.சி.சிவதில்லைநாதன்

புன்னகை புதைத்த புத்தாண்டு   -நோர்வேயிலிருந்து தமிழன்

பொங்கலுக்கு நீயும் புரவியிலே வருவாயா --டென்மார்க்கிலிருந்து சோதிராசா

courtesy - tamilnaathan

உணர்சிக்கவி காசியானந்தன் அவர்களின் வைரவரிகள் - Kavingar Kasi Ananthan

சுனாமி பாடல்- K.Shasitharan, Australia.

After Shocks - Tamilarasan.R

எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு- யாதுமானவள், குவைத்

ஏ கடலே - Kaviarasu Vairamuthu

யார் மேல் குற்றம்? - கருணாநிதி,  தி.மு.க. தலைவர்

கழுகிறங்கும் கடற்கரை - புதுவை

கடல் தன் நிலை உரைத்தல் - நடந்தவை முடிந்து, நாட்கள் நகர்ந்த பின்னும், என்னை நெருங்க அஞ்சுகிறீர்! -  Karthikeya Rajan

கடற்புவி நடுக்க ஆழிப்பேரலை: உலகத் தமிழர்களுக்கு கவிஞர் அறிவுமதி வேண்டுகோள்!

கடலே, கடலே - audio


புரியவில்லை உனக்கு மட்டும்
- முத்தையனூர் ப.துஷ்யந்தன்

அரசில் அரங்கேறி
அமர்ந்திருக்கும் அம்மணியே - உன்
அறாயகத்தின் காலமிதா?
அவலம் எம் தொடர்கதையா?

ஆழக்கடல் வந்து - எம்
ஈழக்கரை கொள்ள
வாழும்வழியற்று

வருந்துகிறாற் எங்களினம் - நீ
மீளக்கிழம்புகிறாய் - எம்
வாழ்வழிக்கும் போரிற்காய்

உதவிக்கு அழைக்கிறாய்
உலக நாடுகளை - எம்
இதயத்தை கிழிப்பதற்கு
இதுவும் உன் சதிவலையோ?

தந்திரத்தால் புலியை வெல்ல
பரப்புகிறாய் பொய் வதந்தி
எந்திரமான இவ்வுலகி;ல்
எடுபடுமா உன் வதந்தி

உறங்கினான் தமிழன் என்று
உன்நினைப்பு - அதனால்
இறங்கி வருவான் என்றோற்
இனிய கனவோ?

அழிவு கண்டு புனரமைக்க
அன்னியத்து படைகள் வாறான்
மகிழ்வு கொண்டு ஏற்போமா
மானமுள்ள தமிழர்நாம்

சுனாமி அடித்து ஓய்ந்துபோச்சு
ஆமி அலைகள் தொடருதிங்கே
ஆடுகள் நனையுதென்றே
அழுகிறது ஓநாய்கள்


பசித்தாலும் புல்தின்னா
பாயும்புலி தமிழன் என்று
பரந்திருக்கும் உலகறியும்
புரியவில்லை உனக்குமட்டும்
 
மீண்டும் மீண்டும் எழுவோம்
 -சுவிசிலிருந்து புதியவன்

ஆழிக்கடல் பேரலையே
நீ
அந்நியனின் பிறப்பா?

இல்லை

தமிழினத்தை அழிக்கவென்றே
எம் கடலில் குடிகொண்டிருந்தாயா?

அழகாய் எம் மண்ணை நீ
தொட்டு தொட்டு சென்றாய்

எம் மண்மீது
நீ கொண்ட காதலை
நொடிக்கொரு முறையும் உணரவைப்பாய்

நீ எம் மண்மீது காதல் கொண்டது
எம் இனத்தையும்
விடுதலை இலட்சியத்தையும் அழிப்பதற்கா?

உன் ஒரு நொடி கோபத்தால்
எத்தனை ஆயிரம்
உயிர்கள்
காலத்தால் அழியா சொத்துக்கள்.

இன்று
அத்தனையும் எங்கே?

அம்மா அம்மா என்று உனை நம்பி
பல ஆயிரம் உயிர்கள்

ஆசையாய் வந்த எமக்கெல்லாம்
அள்ளி அள்ளி தந்தாய்

கோபம்
ஏன் அம்மா
உனக்கிந்த கோபம்?

எம் இனம்
போரால் அகதி ஆனோம்
பொருளாதார தடையால்
அல்லல்பட்டோம்

இன்று
உன்னால் எம் தேசமே
அழிந்து விட்டது

அந்நியன்
உன்னை விலைபேசி விற்பான்
என்று

உனை காக்கும் பணியில்
நாம்
வினாடிகளை தவறவிட்டதில்லை

இன்று

அந்த வினாடிகள்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
உயிர்கள்...

நாம்
மண்ணை நேசித்தோம்
உன்னை சுவாசித்தோம்

அதனால் தானோ
எம் காதுகளுக்குள் ஓலக்குரல்கள்
ஒலிக்க தவறுவதில்லை

விடுதலையை
வென்றெடுக்க விலைமதியா
உயிர் தந்தோம்

எம்
துயர் அறிந்திருந்தும்
எம் முன்னே
நீ
வந்தாய்

நாம்
அழிய பிறந்தவர்கள்
அல்ல
ஆளப்பிறந்தவர்கள்

நீ
ஒரு நொடி கோபப்பட்டாய்
அதற்கு
நாம் இரையானோம்

நாம் விடுதலையை வேண்டி நிற்கும் இனம்
எவரும்
உதவிக்கு வரவில்லை
எம் மக்களே எமக்குதவினர்

எம்மை
தீவிரவாதிகள் என்று கூறியவர்கள்

இன்று

எம் புனரமைப்பு பணி கண்டு
தலை குனிந்து விட்டனர்

நாம்
தனி அரசுக்கு நிகரானவர்கள்
என்று எம்மை
பாராட்டியும் விட்டனர்

ஆழிக்கடல் பேரலையே
நீ
எம் தலைவன் முன்
தீச்சுவாலை போல்

எதிரியையும் ஓடவைத்தோம்
உன்னையும் முறியடித்தோம்

எந்த அழிவையும்
கண்டு நாம்
ஓயப்போவது இல்லை

வெகு விரைவில்
ஈழம் விடியும்

உன் மடிமீது
புலிக்கொடி பறக்கும்

உலகத்தமிழினமே தலை நிமிர்ந்து நிற்கும்

அதுவரைக்கும் பொங்காதே

பொறுத்திரு

இறப்பது தமிழ் இனமாக இருப்பினும்
பெறுவது தமிழ் ஈழமாக இருக்கட்டும்.
 

அலையின் அனர்த்தம்
 -க.சி.சிவதில்லைநாதன்


ஆள் வைத்தடிக்கும் சண்டியன் போல்
அலை வைத்தடித்த கடலே
அனர்த்தம் தந்தாய் அதில்
ஆனந்தம் கண்டாய்
தரைக்கும் தரைக்கும் தகராறு
அதில் உனக்கு வந்த கோபம்
ஆயிரம் மைல் ஓடியும்
ஆவேசம் அடங்கவில்லை
பொங்கி எழுந்து
பொழுது புலர்வதுக்குள்;;
உன் பணி முடித்தாய்
உலகையே உலுக்கி விட்டாய்
வலை எறிந்து
வந்ததை அள்ளுவது போல்
அலை எறிந்து
அத்தனையும் எடுத்தாய்
உயிர் எடுத்து
உடல் எறிந்தாய்
சட்டி சருவம் போல்
கவிட்டும் பிரட்டியும்
உருட்டியும் போட்டுவிட்டு
உன்பாட்டிலே போய்விட்டாய்
சொல்லாமல் வந்து - எதுவுமே
இல்லாமல் செய்துவிட்டாய்
என்ன சுகம் கண்டாய்
உடுதுணியில்லை
உணவில்லை
உறக்கமில்லை
நடைப்பிணமாய்
பித்துப்பிடித்து
பிணக்காட்டில்
பிதற்றித்திரிகின்றார்
உடன் பிறப்புகள்
நஞ்சை சுமந்தவர்
அஞ்சார் சாதலுக்கு
காரணத்தோடு மரணமா
கவலையில்லை
ஏற்றிடுவோம்
ஆனால்
காரணமில்லாமல் உயிர்;;
காவு கொடுத்திருக்கின்றோம்
சி-ஆமியால் முடியாததை
சுனாமி நீ முடித்துள்ளாய்
அடையாளம் தெரியாமல்
அடித்து துவைத்துவிட்டாய்
ஆனாலும் என்ன
எழுந்து வருவோம்
எதிர்காலம் எதிர்கொள்வோம்
வருங்காலம் உனக்கு
ஏமாற்றமேதான்
உன் காண்டம் எம் கையில்
நீ வரும் சேதி அறிவோம்
வந்து சேரும் தேதியும் சொல்வோம்
அடுத்த சந்திப்பு என்று ஒன்று
இனி வேண்டவே வேண்டாம்
அளவாய் அலை மோதி
அழகாய் இருந்துவிடு.

 
   பொங்கலுக்கு நீயும்...
-டென்மார்க்கிலிருந்து சோதிராசா

பூமித்தாய் குலுங்கியதால்
பொங்கு கடல் அன்னையவள்
காளியவள் உருக்கொண்டு
கரையெல்லாம் தாக்கியதும்
காய்களும் பிஞ்சுகளும்
கனியுடனே பூக்களுமாய்
எங்கள் குல மாந்தரெல்லாம்
இருந்தவிடம் தெரியாமல்
கனத்தவிவ் வனர்த்தத்தால்
கண்மறைந்து போனதுவும்
பார்த்திருந்தும் பகலவன் நீ
பரிதவிக்கும் மக்கள் முன்
பொங்கல் நாள் பார்த்திடவும்
புரவியிலே வருவாயா.

உழுது பயிரிட்டு
உரம்போட்டு நீர்ப் பாய்ச்சி
செந்நெல் எடுத்துச்
சிறுதானியம் சேர்த்து
கன்னஞ்; சாற்றோடு
கலந்து செய்த பொங்கலுன்முன்
வைத்தவர்க் கெல்லாம்
வரங்கொடுத்த வைகறை நீ
வருவாய்தான் இம்முறையும்
வரம் வேண்டும் மக்களில்லை.

களனிகள் எல்லாம்
கடலாகிப் போயின.
கட்டுமில்லைää வரப்புமில்லை
காணிகளின் இடமுமில்லை.
பிணங்களெல்லாம் புதைபட்டுப்
பேயலையும் இடமாச்சு.
உழுதுதந்த மாடுகளும்
உயிரோடு போயாச்சு.
அழுகின்ற உளவர்களின்
அவலக் குரல் ஒலிக்கும்
தைப்பொங்கல் தினம்தான்
தமிழ் மண்ணில் காண்பாய் நீ
வருவாய்தான் இம்முறையும்
வரவேற்க மக்கள் இல்லை.

பட்டாசு கொழுத்துதற்குப்
பையன்கள் இங்கில்லை.
கூட்டி மெழுகிக் கோலமிடும்
பெண்கள் இல்லை.
தேங்காய் திருவி உடன்;
திகட்டாத சர்க்கரையும்
பாகாக்கித் தந்த
பாட்டியும் இன்று இல்லை.

தட்டுமுட்டு வேலை செய்த
தாத்தாவையும் காணோம்
தான் செய்கிறேன் என்று
தகராறு பண்ணிவிடும்
சின்னஞ் சிறிய
சிட்டுகளும் போயாச்சு.
இழவு வீடாக
இருக்கையிலே எம்ஈழம்
வருவாய்தான் இம்முறையும்
வடம் பிடித்துப் பரித்தேரில்.

ஆதவனே உந்தனக்கு
அரியதொரு சேதி சொல்வோம்
வானமது வீழ்ந்தாலும்
வையமது பிளந்தாலும்
ஏழ்கடலும் சூழ்ந்து
எம்மெதிரே வந்தாலும்
நாமதிர மாட்டோம.;
நலிந்துவிட்ட தேசமதை
வானுயர வைத்து
வளம் பெருக்கி வாழவைப்போம்.
நவக்கிரக நாயனனே
நல்லாசி தா எமக்கு.
 
ஏ கடலே

- Kavi Perarasu Vairamuthu

ஏ கடலே!
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகின்றோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா?

நீ கலங்களின் மைதானமா?
பிணங்களின் மயானமா?

துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டு
நீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?

உன் அலை
எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?

நீ தேவதை இல்லையா
பழிவாங்கும் பிசாசா?

உன் மீன்களை நாங்கள் கூறுகட்டியதற்கா
எங்கள் பிணங்களை நீ
கூறுகட்டுகிறாய்?

நீ அனுப்பியது
சுனாமி அல்ல
பிரளயத்தின் பினாமி

பேய்ப்பசி உன்பசி
பெரும்பசி

குமரிக்கண்டம் கொண்டாய்
கபாடபுரம் தின்றாய்
பூம்புகார் உண்டாய்

போதாதென்று
உன் டினோசார் அலைகளை அனுப்பி
எங்கள் பிஞ்சுக்குழந்தைகளின்
பிள்ளைக்கறி கேட்கிறாய்

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

என்னபிழை செய்தோம்?
ஏன் எம்மைப் பலிகொண்டாய்?

சுமத்ராவை வென்றான்
சோழமன்னன் ராஜராஜன்

அந்தப் பழிதீர்க்கவா
சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்
சோழநாடு கொண்டாய்?

காணும் கரைதோறும்
கட்டுமரங்கள் காணோம்
குழவிகளும் காணோம்
கிழவிகளும் காணோம்
தேசப்படத்தில் சில கிராமங்கள் காணோம்

பிணங்களை அடையாளம்காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள்
பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே
மரியாதை போய்விட்டது
பறவைகள்
மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

அழுதது போதும்
எழுவோம்
அந்த
மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்

நாம் மனிதர்கள்
எதிர்கோள்வோம்

மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்

ஆனால்
உனக்குள் அஸ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்
 

கழுகிறங்கும் கடற்கரை
 - புதுவை

கடல்தின்ற சோகத்திலிருந்து
மீளாதோர் முன்னே
ஆரம்பமானது அரங்கேற்றமொன்று
ஒப்பனையிட்ட கட்டியக்காரன்
தருப்பாடியபடி சபைவந்துளான்
கூத்தின் நாமம்
'பேரிடர் உதவி" என்பதாய் எழுதி
போர்க்கப்பலின் அணியத்தில்
ஒட்டியுள்ளது.
நங்கூரமிட்டகப்பலிருந்து
குளிருக்குப் போர்வையும்
கூடாரப் பொருட்களும்
இறக்கப்படுகின்றன.
இயல்பு மறைந்து
இறக்கைக்கு வர்ணம் தீட்டி
கூரிய கத்தி நகங்கள் தெரியா
வண்ணம்காலிற் சப்பாத்துத் தரித்து
பட்டாளமுகத்தைத் தற்காலிகமாக
அப்பாவி முகமென்றாக்கி
எங்கள் மலைமீதும்
பனை மீதும்அழகிய வயல்மீதும்
நதிக்கரை மீதும்
வந்து இறங்குகின்றன வல்லுறுகளும்
பருந்துகளும்.

மலர் வளையங்களுடன்
இறக்கை மடித்தமர்கின்றன
எங்கள் இலுப்பைமரமீதும் கழுகுகள்.
சுனாமியால் புதையுண்டோருக்கு
அழுவதாய்
தொப்பி கழற்றி அஞ்சலிவேறு.

வியட்நாம் வயல்களிலும்
ஒட்டகநாட்டின் ஈச்சைமரத்திலும்
இவை இப்படித்தான் இறங்கின முன்னரும்.
உங்களுக்காக அழவும் ஆராதிக்கவுமே
வந்தோமெனும் வார்த்தைகளின் பின்னே
இனிவரும் நாளில்
இச்சிறுதேசம் சிந்தப்போகும்
கண்ணீரும் குருதியும் இருக்கலாம்.
வலசை போகும் வழியில்
வந்தனவல்ல இவை.
கூத்து ஆரம்பமானதைச் சொல்லி
அரங்கிற் கோமாளியே முதலில்.
கோமாளிகள் கொலையாளிகளாவதை
அறியாதஏமாளிகளல்ல நாம்.
கழுகிறங்கும் கடற்கரையில்
வண்ணத்துப் பூச்சிகளின் வடிவிருக்காது.
சின்னப்புட்கள் சீட்டியடிக்காது.
ஆமை புகுந்த வீடும்
......புகுந்த நாடும் விளங்காதென்பது
அடிபட்ட ஒருவனின் அனுபவமொழி.
கழுகளுக்கு அப்படியென்ன கரிசனை
எம்மேல்?
இந்தச் சின்னமணித்தீவுமீதேன்
இத்தனை அன்பு?
வியட்நாம்.
ஒ... அந்த அழகிய வயல்கள்
இந்தக் கழுகுகளின் எச்சத்தால்
எத்தனை வருடங்கள் எரிந்தன.
இன்னுமொரு பாவப்பட்ட பாலைவனம்
இன்னும்தான் அழுதுகிடக்கிறது.
நெடுநாள் தவத்துக்குவரம் கொடுத்தது சுவாமி.

சுனாமி
நீயாகவும் வந்தழித்தாய்
அழைத்துவந்தும்
அழச் செய்யப்போகிறாய்.
வரலாற்றுத் துயரம் தலைமுறை கடத்தும்
கடத்தப்படுமா எம் முதுகில்?சவாரி செய்பவர்களுக்கு எம் கண்ணீரளவுஎப்படித் தெரியும்?
மௌனத்தைச் சம்மதமென்றாக்கும்
வழக்கொண்றுண்டு.
உரத்த குரலேதும் இல்லாமை
கழுகுகளுக்கே வாய்ப்பாகும்.
புல்வெளிச் சொந்தமான
வண்ணத்துப்பூச்சிகளே
வாய்திறவுங்கள்.
கடலுறவான ஆட்காட்டிப் பறவைகளே
அவலமுணர்த்திக் குரலிடுங்கள்.

 
அலையே!

 -ரத்னா

அலையே!
ஞாயிறு அன்று ஒளியிழந்தது.
அழகு தந்த அலை
அன்று அவலம் தந்தது
முத்து தந்த கடல்
மூக்கைச் சிந்த வைத்தது.

கடலே!
உன்னை நம்பி வாழ்ந்த மக்கள்
உயிர்பறித்ததேனோ?
உணவு தந்தாய்
உயர்வு தந்தாய்
உணர்வும் தந்தாய்
ஏன் இப்போது உயிர் பறித்தாய்.

மூன்று மடங்கில் நீ
ஒரு மடங்கில் தானே நாம்?
அதிலும் தமிழனுக்கு
ஒருகிடங்குதானே!
அதிலும் உனக்கென்ன விருப்போ?

ஆடும் அலையே
இதென்ன கோரத்தாண்டவம்?
ஈவிரக்கம் இல்லாமல்
உனை ரசித்த மக்கள்
உலை களைந்தேனோ?

வாழ்ந்தவர் மட்டுமா மாண்டனர்?
நேற்று வந்த மழலையும்
இன்று போனதே!
உனது இரைச்சலையும்
இசையாய்க்கேட்ட மக்கள்
கூக்குரல் கூட
உன் செவியில் கேக்கலையோ?

போரிலும் எமை இழந்தோம்
இன்று நீரிலும் எமை இழந்தோம்.
பாரினில் எமைப்போன்று
பாவம் செய்தவர் யார் உளர்?
சாவதற்கென்று பிறந்த
உயிருள்ள பிணம்தான் நாமோ?

ஒன்றா இரண்டா எண்ணிச்சொல்ல
அள்ளிச்சென்று நீ
அணைத்தெல்லா தந்துவிட்டாய்
எங்கள் தீபங்களை!
தாயில்லாப்பிள்ளைää
கணவன் இல்லா மனைவி
மகன் இல்லாத அன்னை
உன்னைச் சொல்லி பயனில்லை
தாயாய் உனை பாடிப்பாடி
பேயாய் போனான் தமிழன் போ!
அதிகமாய் உனைப்புகழ்ந்து
அவலப்பட்டுப்போனான் காண்!

ஊழிக்கூத்து நீயாட
உயிர்துறந்தான் தமிழன்.
ஏ அலையே!
கவலையின்றி எங்கனம்
உன்னால் இங்கனம் செய்ய நேர்ந்தது.
கங்கனம் என்பது இதுதானோ?

வீதி செய்ய வந்த வாகனம்
நீ காவுகொண்ட உடல் புதைக்குது.
பாடையிலும் பகட்டாய்ப்போனவன்ää
பத்தோடு பதினொன்றாய்ää
செத்த நாய்போல் அங்கங்கே புதைகிறான்.
யாருக்காக யார் அழ?

ஏய் கடலே
உனக்காக இன்னும் காத்திருக்கிறோம்!
உன் அழகைக்காண அல்ல!
நாம் அழ அழ
நீ எடுத்துச் சென்ற உறவுகளின்
உடலைகாண!
தருவாயா திரும்ப.

அலையே வா!
ஆனால் எல்லை தாண்டாதே!
வாசலில் நில்.
எங்கள் பாசங்களைப்பறிக்காதே!
பாசாங்கு செய்யாதே!
பாவிக்கவிஞர்களே!
பாடுவதை நிறுத்துங்கள்
இந்த பாழாய்ப்போன அலையை!
ஆடும் அலையே
இன்று நீ
எமை ஆடவைத்துவிட்டாயே.
யேசுபாலன் பாலன் பிறப்பில்
மகிழ்ச்சிக் களிப்பில் இருந்த
மக்கள் உயிர் பறித்துச் சென்றாயே!
உன் நத்தார் பரிசு
நம் உயிர்தானோ?

 

ஆழ்கடலே

-சுவிசிலிருந்து சுபாஸ்

ஆழ்கடலே ஆர்த்தெழுந்து
மீள்குடியை ஏன்- அழித்தாய்
ஊர் விடியும் வேளையிலே
உறவுகளில் உயிர் குடித்தாய்
பாருலகில் பைந்தமிழர்
படுதுயர்க்கோர் எல்லையில்லை
பேரழிவை ஏன் தொடுத்தாய்
பெண்கடலே நீ உரைப்பாய்

பெயரளவில் பெண்கடல் நீ
பெரும் சீற்றம் கொண்டது - ஏன்
பால்வடியும் பாலரையும்
பசியாறிக் கொண்டது- ஏன்
உன்னை எம் அன்னையென்றே
உலாவருவோம் உன்மடியில்
அலைமடியால் ஓங்கி
அனர்த்தம் ஏன் விளைவித்தாய்
அன்னை நீ ஆழித்தாய்
ஜயகோ கொடுமை - என்றேன்
பின்னர் உணர்ந்து கொண்டேன்
பிரளயத்தின் காரணத்தை.

தன்னவரை இழந்து மக்கள்
தனித்திங்கு துடிக்கையிலே
தென்னகத்தார் தெருவெல்லாம்
திருவிழாக் கோலம் கண்டேன்
அண்ணல் துடித்தெழுந்தான்
அணைத்தெடுத்தான் தன்னவரை
மன்னன் இவனென்று- இம்
மண்டலமே கண்டதம்மா

என்னை நானுணர்ந்தேன்
என் நாமம் நானறிந்தேன்
கண்ணை இமைகாக்குமென்று
கண்ணெதிரே கண்டு கொண்டேன்

தன்னை உணர்ந்த தமிழினத்தின் தற்குறியே
உன்னை நீ உணர்ந்து - ஊன்றி
உன் காலில்
மன்னவன் பணிதொடரும்
மக்கள் தம் மறு வாழ்வில்
அன்னவன் பின்னே
அனைவரும் அப்பணி தொடர்வோம்

அண்ணல் வழிநின்று
ஆண்டபரம்பரை - நாம்
மண் மீட்க புறப்படுவோம்
மாகடலே சூளுரைப் பேன்
அன்னை நீ ஆடிவிட்ட
அகோர தாண்டவத்தால்
மரணித்த மக்களெல்லாம்
மாவீரர் ஆவாரம்மா
 

மன்னிப்பு இல்லை

 -தி.குன்றன்

எத்தனை ஷெல்கள் எல்லாம்
தாக்கியே நின்ற போதும்
எத்தனை தோட்டா ரவைகள்
துளைத்திட வந்த போதும்
எத்தனை விமானக் குண்டு
பாய்ந்துமே வீழ்ந்த போதும்
எத்தனை இரவு தன்னைப்
பயத்துடன் கழித்த போதும்
எத்தனை துன்பம் வந்து
பசித்திட இருந்த போதும்
நித்தமும் வறுமைக் கோட்டில்
வாழ்ந்துமே வந்த போதும்
இத்தனை அரக்கர் நின்றும்
தப்பிய மக்கள் கூட்டம்
செத்துமே மடியத் தானோ?
சிதைந்துமே அழியத் தானோ?
உறவினர் எங்கே? எங்கே?
உற்றத்தார் சுற்றம் எங்கே?
இருந்திட்ட மனைகள் எங்கே?
இதமான மரங்கள் எங்கே?
தரணியின் உயிரை மாய்க்க(ப்)
பிறந்திட்ட அலையே! நீயும்
சிறந்தவை இவைகள் என்று
சீண்டியே பார்த் தனையோ!
தாயில்லைப் பிள்ளை யுண்டு
தந்தைக்கு மகனு மில்லை
சேயில்லைத் தாயு முண்டு
சேர்ந்திட்ட துணையு மில்லை
காயில்லைக் கனியு மில்லை
பிஞ்சுடன் பூவு மில்லை
மாய்த்திடப் பிறந்த அலையே!
மன்னிப்பே உனக்கு இல்லை.
 

புன்னகை புதைத்த புத்தாண்டு
 - நோர்வேயிலிருந்து தமிழன்

ஒளிவிழா வந்து
ஒளிவீசும் எனக் காத்திருந்தோம்
இருள் பூசிய மேகங்கள் எழுந்து
இடியாய் விழு;ந்தது இதயத்தில்

ஓ... சுனாமியே! நீ-
யார் அனுப்பிவைத்த பினாமியோ?
எங்கள் பிணம் திண்ட சாமியோ!

ரணங்களால்
பிழிந்த இதயத்தை
பிணங்களால்
பிழிந்த இயற்கையுனை
ரசிக்க இனி... ருசிக்க இனி
எப்படி முடியும்?

காலையிலே கதிரவன்
கண்கள் பார்த்து
காலாற நடந்தோம்
மணல்வீடு கட்டிய
மழலையின் சங்கீதமும்
கேட்டு நடந்தோம்!
மாலையிலே நிலா நீந்த
கடல்அலை பார்த்து
கும்மாளம் போட்டுக்
குதுகலித்தோம்! - இன்று
எங்கள் தேசம் எங்கும்
ஒரே அவலக்குரலே கேட்கிறது!

மழலை தவழ்ந்த
தடம் அழித்து
அலை மகிழ்ந்து
போனது போனது!

மலையென அலையெழுந்து
மணிப் பிஞ்சுகளை
மண் போட்டு மூடிப்போனது!
ஆண்டாண்டாடு காலமாய்
அழுது அழுது முடித்தோம்!
கண்ணீர் வரவில்லை- எம்
கண்களில் கடல்நீரே வழிகிறது!

அமைதிப் பூங்காவின்
வாசலை வாஞ்சையோடு
பார்த்திருந்த வேளையில்
இயற்கைத் தாயவள்
கோரத் தாண்டவம்
ஆடி முடித்தாளே!

அலை வந்து
உயிர் பருக
உணர்வுருகி - எங்கள்
உதிரம் உறைந்தது!

ஒற்றுமையில் நனைந்த - எங்கள்
ஊடகங்களைப் பார்த்தோம்
பார்க்க முடியவில்லை- ஐயோ
பார்க்காமலும் இருக்க முடியவில்லை!
கேட்க முடியவில்லை
கேட்காமலும் இருக்க முடியவில்லை!

வேதனைக் கண்ணீரில்
முளைவிடும் வரிகள்
விரக்தியின் உச்சத்தில்
இயற்கையை வேட்டையாடும்!

ஆழிப்பேரலையே - உன்
கோரப் பற்களுக்கு - எங்கள்
தேசத்தின் தேகங்களும்
இரை போனதே!

அலைகளே
நீங்கள் கீறிப்போட்ட
வளவுகள் - எங்கள்
உறவுகளின்
பிணம் தின்னுதே!

என்ன செய்வது?
நோர்வேயை
இலங்கையாகவும்
இலங்கையை
நோர்வேயாகவும்
மாற்றிப் பார்க்க
நினைத்த - எங்கள்
எரிக் சூல்கைமின்
ஆசையில் கூட
அலை விழுந்ததே!!
அலைகளால்
அன்னைபூமி
அழிந்தபோதாவது
உலகம் வந்து
கண்ணீர் மழையோடு
காசு மழையும்
பொழிகிறதே!

இனிமேலாவது
எங்கள் தேசம்
நிமிரட்டும்!!
 

 
 - Tamilarasan.R

To see the beaches which were
with waves inspiring life,
now carrying bodies
dont know dead or alive.

Decline to understand the
difference between life and death,
awed at the chaos in me,
loosing the belongingness,
with the creation of god,
guilt to feel that I am alive.
 

எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு
யாதுமானவள், குவைத்

தமிழர் திருநாளாம்
தைப் பொங்கல் வந்துடிச்சி

ஆரத்தி ஏத்தி வச்சி
ஆண்டவனை கும்பிட
எம்மனசு ஏக்கலே
எனக்கில்ல திருநாளு

பொல்லாத கடலும்
பொங்கி வந்து அழிச்சதாலே
திருநாளு கொண்டாட்டம்
துண்டிச்சு போயாச்சி

என்வூட்டு மக்களெல்லாம்
மண்ணுக்கு போனபின்னே இனி
பொங்கி வச்சாலும்
திங்க யாரிருக்கா?


போகி பண்டிகைக்கு
பழசெல்லாம் போக்கணும்தான்

பழசுன்னு நெனச்சு ஒரு
பாகத்தையே அழிச்சிட்டியே
பாற்கடலே உன் வேகம்
தீராத பெரும் பாவம்

வெள்ள அடிச்ச சொவரு
வீதியில மாக்கோலம்
பழசெல்லாம் எரியவச்சி
விடியகால கூடும் கூட்டம்

ஒண்ணயும் காணோமே
இது என்ன திருநாளு?

வெளஞ்ச பயிர்களின்
வௌரம் கூட்டி வச்சி
புதுப்பானை மேலேத்தி
பொங்கி வரும் நாள்தானே
பொங்கல் திருநாளு?

வெளஞ்ச பயிரெல்லாம்
வெள்ளதுல போயிடுச்சேன்னு
புலம்பி நான் நிக்கயிலெ

ஆளுக்கு அரக்கிலோ
அரசாங்கம் அரிசிதர
புரட்டாசி கொண்டாட்டமா
பிச்சை எடுத்து பொங்கி திங்க?

எம்மனசு ஒப்பல
எதயும் நான் ஏக்கலே
எழவு வூட்டுல
எதுக்கு புதுப்பானை?

மாட்டுப் பொங்கலுக்கு
மாடாச்சும் மிஞ்சுதான்னு
தேடிப் பாத்தா ஒரு
தடயமும் கெடைக்கலே

மாவீரன் சுனாமின்னு
மார்தட்டி பேர்வாங்க
மயானமாக்கிப்புட்டு
மறைஞ்சே போயிட்டான்

பாலு பொங்கலான்னா
பசுமாட்ட இங்க காணோம்
வீட்டுல கட்டிபோட
ஒத்த மாடும் பொழைக்க காணோம்

எம்மனசு ஏக்கலே
எனக்கில்ல திருநாளு

கலர் கலரா துணிபோட்டு
மொகம் பூரா சிரிப்போட
ஊரு கொழந்தைங்க
வீடு வீடா ஓடிவந்து

கால்தொட்டு கும்பிட்டு
ஆசி வாங்கயில

அவுத்து கொடுக்கணும்னு
சீலயில முடிஞ்சு வச்ச
சில்லற கனக்குதே
சிறுசுங்க காணலியே

காணும் பொங்கலிலும்
காண முடியலியே
கலங்கும் எம்மனச
கட்ட முடியலையே

இனி என்ன கொண்டாட்டம்?

எம்மனசு ஏக்கலே
எனக்கில்ல திருநாளு.
 
யார் மேல் குற்றம்?

 - கருணாநிதி,  தி.மு.க. தலைவர்

கடற்கரையோரம் நின்று
கவிதைப் பயிர் விளைக்க
கற்பனைக் கலப்பை பிடித்து
கடல் அலையில் கவின் நிலவொளியில்
ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே!
சீராட்டும் தமிழில் என்னை
கொள்ளையழகு காட்டுகின்ற கோலப்பெண்ணால் என்றும்...
அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர்
அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும்
கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின்
கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும்
தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்!
கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம்
ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம்
திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல்
தீய்ந்து போனதேனோ?
"சுனாமி" என எனக்கோர் புதுப்பெயர் வைத்தீர்!
"பினாமி" என்றீர்! பிணந்தின்னி என்றீர்!
சுனாமியும் சுந்தரி போல் சுகந்தி போல் சுகன்யா போல்
சுகந்தரு மெல்லிய பெண்ணின் பெயர் தான் என எண்ணாமல்
சுடுகாட்டுக் காட்டேரி என்றும் மூதேவியென்றும்
மூளி அலங்காரி என்றும் முணுமுணுத்து
மூன்று நாளாய் முன்னூறு நானூறு கவிதை எழுதி விட்டீர்
கோலத் தமிழ் விடுத்து கோபத் தமிழால் எனைச் சுடுகின்றீர்;
குற்றம் நான் என்னதான் செய்துவிட்டேன்
கொற்றவன் பாண்டியன் முன் நீதி கேட்ட கண்ணகி போல்
குலவிளக்கு நான்;கவிஞர் காள்! உம்மிடம் கேட்கின்றேன்.
உயிர்கள் லட்சத்தை நான் உண்டு மகிழ்ந்தேன் என்கின்றீர்-
உண்மையா? உண்மையா? அது உண்மையா? உரைத்திடுக!
ஊமையாய் வீழ்ந்து உயிர் துறந்த பாண்டிய மன்னன் ஆகாதீர்!
கடற்கோள் என்று பெயர் இட்டதாலே;அது
கடலாம் என் குற்றம் ஆகி விடுமா?
நீவிர் அறிந்திடுக; "கடற்கோள்" அல்ல இது;
"நிலக்கோள்!"
நில மடந்தையின் சீற்றத்தால்தான்
"சுனாமி"யெனும் கொந்தளிப்பு சுமத்ராவில் தோன்றியது.
ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு
ஆவேசங் கொண்டு பூமி தேவி ஏன் வெடித்தாள்?
அந்த வெடிப்புக்குள்ளே வீழ்ந்த நானும்
தலையில், தோளில், கையில் தாங்கியிருந்த சுமையை
நிலை கொள்ளாமல் கீழே போட நேர்ந்தது-
அலைகடல் நான்;பொறுமைக்கு எல்லையுண்டே
பூமிதேவி செயல் தவிர்க்கத் தற்காப்புப் போர்க் கவசம்
பூண்டு நான் கிளம்பியது "காரணக்கோள்;"-
"கடற்கோள்" அல்ல!
கவிஞர்காள்! கவனமாகக் கேளுங்கள்-
காதலியை அணைத்துக் கொண்டு நீவீர்
கடற்கரை மதிற்சுவரில் அமர்ந்திருக்கும் போது
மதிற்சுவர் இடிந்து காதலி, உமது கை விட்டுக்
கடலில் வீழ்ந்திறந்தால்-அது
மதிலின் குற்றமா? இந்தக் கடலாள் குற்றமா?
மதிற்சுவர் வெடித்தது போல் மண் மாதா
ஆயிரம் கிலோ தொலைவு அழிவு வேலை செய்திட
அந்தோ நான் பழிகாரி ஆகி விட்டேன்
சதிகாரி எனும் சாபத்திற் காளாகி விட்டேன்-
கோபத்திற்காளான குவலயத்தார் என் மீது
கொட்டுகின்ற பழிச் சொற்கள் உம்மால் பரிமாறப்படுவதை
பார்க்கச் சகிக்கவில்லை;கேட்கப் பொறுமையில்லை-
பழைய நாள் ஞாபகம் மறவாதீர்-கவிஞர்காள்!
நானும் உமது கவிதைக்குக் கருப்பொருளாய் உதவியதை
கணத்தில் மறந்து விட்டு சுடுகணை தொடுக்காதீர்!
அடுக்காது இயற்கையின் தாண்டவம் எனினும்;
பூமி தான் இதற்குப் பொறுப்பாளி; மறவாதீர்!
 


கடல் தன் நிலை உரைத்தல்
- Karthikeya Rajan

சுனாமி என்றும்
சீரழிவின்
பினாமி என்றும்
என்மேல் முத்திரை குத்தினீர்!

உயிர்களைக்
குடித்தவன் என்றும்
பிணங்களைத்
தின்றவன் என்றும்
என்மேல் காறி உமிழ்ந்தீர்!

கடல் என்றாலே
"கருணை" என்று
கூறியவர்கள் - இன்று
"கொலை" என்று
கூசாமல் கூறுகிறீர்!

அது-
நிலமகள் கொஞ்சம்
நிலைகுலைந்து போனதால்
கடல் அன்னை செய்த
தவிர்க்க முடியாத கொலையென்று
எப்போது புரிந்து கொள்வீர்?

நடந்தவை முடிந்து
நாட்கள் நகர்ந்த பின்னும்
என்னை நெருங்க அஞ்சுகிறீர்!

"... எங்களுக்குத்
தீமை செய்பவர்களை
நாங்கள் பொறுப்பதுபோல ..."
இயேசு போதித்ததையும்
சிலுவையில் அறைந்துவிட்டீர்!

"நடந்தவை நடந்தவையாயிருக்கட்டும்
இனி நடப்பவை
நல்லவையாக இருக்கட்டும்"
கீதை தெரிந்தவரும்
பாதை மாற மறுக்கிறீர்!

"........"
நபிகள் கூறியதை
என்னவென்றே மறந்துவிட்டீர்!

மனமுடைந்த மனிதர்கள்
தற்கொலைக்கு முனைந்தால்
எனக்குள் வந்து குதிக்கலாம்
மனமுடைந்த நான்
எங்கே சென்று குதிப்பது?

என்னில்
வலைவீசி வாழ்பவரும்
என்னையே
பிழைப்பாகக் கொண்டவரும்
இன்று பாராமுகம் காட்டுகிறீர்!

இயற்கைச் சீரழிவுகள்
ஒவ்வொன்றும்
மனிதம் வலுப்பெறச் செய்யும்
முயற்சிகளேயன்றி
அறவே அழிப்பதற்கில்லை

அன்று-
கடலும்
கடல் சார்ந்த இடமும்
என வகைப் படுத்தியவர்கள்
இன்று-
கடலும்
கடல் அழித்த இடமும்
என வசை பாடுகிறீர்கள்!

நேற்று வரை
"நெய்தலாய்" இருந்த
நான்-
இன்று மனிதர்
வர மறுத்ததால்
"பாலையாய்" மாறிவிட்டேன்

கடல் நீர் உவர்ப்பிற்கு
அறிவியல் காரணங்கள்
வேறாய் இருக்கலாம்
உண்மையான காரணம்-
நான் அழுத கண்ணீர்தான்!

அன்று
கடலைக் கருணைக்கும்
பரந்த மனப்பான்மைக்கும்
ஒப்பிட்டுப் புகழ்ந்தவர்கள்
என் கொந்தளிப்பின்
பிரதிபலிப்பாய் ...
ஓராயிரம் கவிதை
எழுதி இகழ்ந்தீர்கள்!

பின்னொரு நாளில்
நீங்கள் ஒவ்வொருவரும்
வந்து கடலாடினால் ...
என் அலைகளில் வந்து
கால் நனைத்தால் ...
என் கண்ணீர் மறையும்
என்னைத் தூற்றி
எழுதிய கவிதைகள் மறையுமா?


தூற்றி எழுதிய
கவிதைகளை-

என்னைப் போல்
உங்கள் உள்ளமும்
கொந்தளித்ததாக ...

சில கணங்கள்
தன்னிலை மறந்ததாக ...
நினைத்துக் கொள்கிறேன்

கருணையும்
பரந்த மனப்பான்மையும்
கடலுக்கு உவமை மட்டுமல்ல ...
இயல்பும்தான்!

மறுபடி எப்போது
கடலாட வருவீர்?
உங்கள்
அன்னையின் கண்ணீரை
எப்போது துடைப்பீர்?

Mail Usup- truth is a pathless land -Home