தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil Diaspora - a Trans State Nation > உலகத் தமிழர் கற்க வேண்டிய பாடங்கள்

Tamils - a Trans State Nation

உலகத் தமிழர் கற்க வேண்டிய பாடங்கள்

தினமணி- Thinamani, 28 August 2006
[courtesy: Sooriyan]

"அரசியல் அடிமைத்தனங்களிலிருந்தும், அதிகார அடிமைத்தனங்களிலிருந்தும் தமிழர்கள் இன்னும் முழு விடுதலை பெறவில்லை. குடிபெயர்ந்த நாடுகளில், `கூலி' என்ற பெயர் மாறி, குடிமக்கள் என்ற நிலையைத் தமிழர் அடைந்துவிட்ட போதிலும், அந்தந்த நாடுகளில் தமிழர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருந்து வருகின்றனர். தமிழருடைய இந்நிலைக்குக் காரணம், அயலார் என்று கருதுவதும், பழிப்பதும் தவறு. தமிழருடைய அன்றைய வீழ்ச்சிக்கும், இன்றைய வீழ்ச்சிக்கும் காரணர் தமிழரே."


க.ப.அறவாணன்கன் தமிழர் தொல்பழம் பெருமைகள் பலவற்றைப் பெற்றவர். ஆனால் ஓர் இனத்தை, அந்த இனத்தின் பழம்பெருமை மட்டுமே எடுத்து நிறுத்திவிட முடியாது. 'தம் பழம்பெருமையை இழந்துவிடக் கூடாது. தம் குடிப்பெருமையை நாம் மேலெடுத்துச் செல்ல வேண்டும்' என்ற அளவில் மட்டுமே பழைய பெருமைகள் பயன்படும்; பயன்படுதல் வேண்டும்.

காகேசிய இனத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்க்கு இத்தகு வஞ்சினம் உண்டு.ஓர் நிகழ்வு : நிக்காலோ மானுச்சி (கி.பி. 1653 - 1708) என்பவர் ஓர் இத்தாலியர். ஔரங்கசீப் ஆண்ட காலத்தில் இந்தியாவிற்குத் தன் நண்பருடன் வந்தார். வழியிலேயே நண்பர் இறந்து போனார். ஒரு வழியாக அவரை அடக்கம் செய்த நிலையில், அரச தூதர் அங்கு வந்து சேர்ந்தார்.

அக்கால நடைமுறைப்படி அயல்நாட்டு வெள்ளைக்காரர் இறந்துவிட்டதால், இறந்தவருடைய உடைமைகளை எல்லாம் அரச தூதரும், அவருடன் வந்த காவலர்களும் முத்திரை இட்டு கைப்பற்றிக் கொண்டனர்.

அதனுடன் மானுச்சியின் உடைகளும், உடைமைகளும் கைப்பற்றப்பட்டன. இதனால் மானுச்சி மிகவும் பாதிக்கப்பட்டார்.

முடிவில், தம் பொருட்களைத் திருப்பித் தருமாறு விண்ணப்பித்தார். செயலாளரிடம் பெற்றுக் கொள்ளுமாறு மேலிடத்திலிருந்து மடல் வந்தது. ஆனால், அவற்றைச் செயலாளர் திருப்பித் தரவில்லை.

அவருடன் ஒத்துப்போக முடியாத நிலையில் மானுச்சி எழுதிய குறிப்பு வருமாறு; செயலாளர் என் பேச்சை நிறுத்தும்படி கத்தினார். "நீ அரசருடைய அடிமை என்பதை இன்னும் உணரவில்லை" என்று சீறினார்.

இந்தச் சொற்களைக் கேட்டதும் நான் எழுந்து நின்று கொண்டேன். "ஐரோப்பியர்கள் என்றும், எப்போதும், எவருக்கும் அடிமைகளாக இருந்ததில்லை, இருக்கவும் மாட்டார்கள்" என்று விடையளித்தேன்.

இத்தாலிய மானுச்சி தன் குறிப்பில் எழுதியதுபோல ஓர் அறைகூவலைத் தமிழராகிய நாம் சொல்ல முடியுமா? தமிழர், பிற இன மக்களிடம் அடிமைப்பட்டுத் தாழ்ந்து கிடந்ததை 1948 க்கு முற்பட்ட இந்திய, இலங்கை ஆகிய தாய் பூமிகளும், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ் முதலான குடியேற்ற நாடுகளும் மெய்ப்பிக்கின்றன.

உலக வரலாற்றில் அன்றுதொட்டு இன்றுவரை, தம் பழம்பெருமையை இழக்காமல் என்றும் வைத்திருக்கும் இனமாக கிரேக்க, உரோமானிய இனத்தையும், அந்த இனத்தின் வழி வந்த ஐரோப்பிய இனத்தையும், இடையீடுபட்டாலும், தன் தலைமை அடையாளத்தை இழக்காத சீன இனத்தையும் இடையூறுகள் இருந்தாலும், ஃபீனிக்ஸ் பறவைபோல எரிதழலில் எரிக்கப்பட்டும் எரிந்து போகாமல் நிமிர்ந்து நிற்கும் யூத இனத்தையும், நாம் சுட்டிக்காட்ட முடியும்.

இதுபோலத் தமிழினத்தைச் சுட்டிக்காட்ட முடியாது. அடிமை நிலை, கூலிநிலை, அகதிநிலை என்ற மூன்று நிலையிலிருந்தும் உலகத் தமிழர்கள் முற்றுமாக மீண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது.

உலகத் தமிழர் 1947 - 48 க்குப் பிறகு, அரசியல் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது போலத் தோன்றினும், அது முழுமையான விடுதலை அன்று என்பதையே இலங்கை உள்ளிட்ட பகுதிகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

அரசியல் அடிமைத்தனங்களிலிருந்தும், அதிகார அடிமைத்தனங்களிலிருந்தும் தமிழர்கள் இன்னும் முழு விடுதலை பெறவில்லை. குடிபெயர்ந்த நாடுகளில், `கூலி' என்ற பெயர் மாறி, குடிமக்கள் என்ற நிலையைத் தமிழர் அடைந்துவிட்ட போதிலும், அந்தந்த நாடுகளில் தமிழர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருந்து வருகின்றனர்.

 தமிழருடைய இந்நிலைக்குக் காரணம், அயலார் என்று கருதுவதும், பழிப்பதும் தவறு. தமிழருடைய அன்றைய வீழ்ச்சிக்கும், இன்றைய வீழ்ச்சிக்கும் காரணர் தமிழரே.

தொலைநோக்கு இன்மையும், தமிழ் எனும் மொழியை மையப்படுத்தி சமூகக் கட்டொருமைப்பாட்டை வளர்க்காததும், தம் சமூகத்தைக் கண்டதுண்டமாக வெட்டிப்போடும் மதங்களையும், சாதிப் பிரிவுகளையும், கட்சிப் பிளவுகளையும் அனுமதித்து வளர்த்தெடுத்ததும், உட்பகையும், பொருளாதார நோக்கில் போதிய அளவு சிந்திக்காததும், பின் நாளில் வரும் அரசியல் ஆதிக்கங்களை ஊகித்துத் தற்காத்துக் கொள்ளாததும் குறிக்கத் தக்கனவாகும்.

சோதனைகள் வந்தபோதும், வரும்போதும் வெற்றி பெற்ற இனமக்கள் எவ்வாறு அவற்றை எதிர்கொண்டார்கள், வீழ்ந்தாலும் நிரந்தரமாக வீழாமல் எவ்வாறு நிமிர்ந்து நின்றார்கள் என்பதைக் கூர்ந்து பார்த்தாவது நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சில பாடங்கள் வருமாறு;

1. ஐரோப்பிய இன வரலாற்றைக் கற்கும் போது அவர்கள் தமக்குள் பேதம் கொண்டு, அடித்துக் கொண்டார்கள். ஒருவர்மேல் ஒருவர் படையெடுத்துக் கொண்டார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் ஆசிய, ஆபிரிக்க, அவுஸ்திரேலியக் கண்ட மக்கள் தம்மேல் ஆதிக்கம் செய்வதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

மங்கோலிய இனத் தலைவன் செங்கிஸ்கான் (கி.பி. 1162 - 1227) மகன் ஒகடாய் 1241 இல் ஐரோப்பாவின் ஒரு பகுதியைக் (ரஷ்யா, போலந்து, ஹங்கேரி, ஜேர்மனி) கைப்பற்றினான் என்பது வரலாறு. ஆனால் அந்நிலை சிலகாலம் கூட நீடிக்கவில்லை. நீடிக்க விடவில்லை. அன்றுதொட்டு ஐரோப்பியரும் அவருக்கு மூலவரான கிரேக்கரும், உரோமரும் தம் நாடுகளைக் கடந்து தாம் வாழும் ஐரோப்பா கண்டத்தைக் கடந்தும், கடல் கடந்தும் வேறு நாடுகளை வெற்றி கண்டபொழுது, வென்ற நாடுகளை நம்மைப் போல அப்படியே விட்டுவிட்டு வந்துவிடவில்லை.

அவற்றைத் தம் பூமிகள் ஆக்கிக் கொண்டார்கள். தம் மொழி, பண்பாடு, நாகரிகம், ஆட்சி ஆகியவற்றை அங்கே நிலைகொள்ளச் செய்தார்கள். அலெக்சாண்டர் (கி.மு. 356 - 323) எகிப்தின் மேல் படையெடுத்ததின் நினைவாக எகிப்தில் அலெக்சாண்டிரியா என்ற நகரம் உருவாக்கப் பெற்றது. டாலமி எனும் கலப்பினமே அந்நாட்டை நெடுங்காலம் ஆண்டது. புகழ்பெற்ற எகிப்திய அரசி, கிளியோபாட்றா, டாலமி இனத்தில் பிறந்தவள். உலகம் முழுவதும், கிரேக்கக் கலையும், கிரேக்க இரத்தமும், உரோமானியர்களின் இரத்தமும் கலந்தன.

தமிழ்நாட்டுச் சங்ககால அரசிகளின் அந்தப்புரங்களில் கிரேக்க மகளிர் வேலை பார்த்ததும், தமிழ் அரசர்க்கு மதுவை ஊற்றிக் கொடுத்ததும் இலக்கியப் பதிவுகள். தமிழகம் முழுவதும் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள உரோமானியக் காசுகளும், மதுச் சாடிகளும் தமிழர் பெருமையை அறிவிப்பன அல்ல. உரோமானியக் காசுகளுக்கும், மதுவுக்கும் கி.மு. விலேயே தமிழர் அடிமையானமைக்கு அவை சான்றுகள்.

2. கவனிக்க வேண்டிய இன்னோர் இனம் சீன இனம். இன வரலாற்றின்படி சீனர் மங்கோலிய இனத்தைச் சார்ந்த மஞ்சள் நிற மக்கள். கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் அனைத்துக் கண்டங்களிலும் பரவிய ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்துச் சாதித்துக் காட்டியவர்கள் ஆபிரிக்காவிலும் இல்லை. தென் - வட அமெரிக்காவிலும் இல்லை, அவுஸ்திரேலியாவிலும் இல்லை, ஆசியாவில் உள்ள பிற இன மக்களிலும் இல்லை, ஜப்பானும், தாய்லாந்தும் முற்றுமாக ஐரோப்பிய ஆதிக்கம் உள்ளே நுழைய விடாமல் கடைசிவரை தடுத்துக் கொண்டன.

பெரும்பகுதி சீனர்களும் அதில் வெற்றி கொண்டனர். சீனர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது. அவர்தம் தலைமை உணர்வு உலக இன மக்களிலேயே சீன இனம்தான் உயர்ந்தது என்று ஒவ்வொரு சீனக் குழந்தைக்கும் கற்பிக்கப் பெறுகிறது. சீனர்களில் ஏழைகள் இருப்பதில்லை. அவர்கள் பல நாடுகளுக்குக் குடியேறிய போதும் எந்த இடத்திலும் அவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லை. இருப்பதில்லை. வணிகத்திலும், செல்வம் சேர்ப்பதிலும் மிகக் குறியாக இருப்பார்கள். இருக்கும் இடத்தில் மட்டுமல்லாமல் குடியேறிய நாடுகளில் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகம், பெயர் சூட்டிக் கொள்ளும் முறை முதலானவற்றில் பிடிவாதமாக இருப்பார்கள்.

இந்த நிலைமையை அவர்கள் அடைந்ததற்குக் காரணம், தங்கள் இனத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்த கன்ஃபூசியஸ் (கி.மு. 551 - 479) போதனைகளையும், இலாவோஸ் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) போதனைகளையும் கடந்த முப்பது நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருவதுதான். சீனாவிலும், அயல் நாடுகளிலும் வாழும் சீனர்கள், தாம் வாழும் இடங்களில் வணிகத்தையும், பொருளாதாரத்தையும் தம் கைவசம் வைத்திருப்பதைக் காணுகிறோம். பொருளாதார முதன்மை சீனர்களுக்குக் குடியேறிய நாடுகளிலும் தலைமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

3. உலக ஆதிகுடிமக்களாக யூதர்கள் தம்மைக் கருதுகின்றனர். பைபிள் பழைய ஏற்பாட்டைத் தங்கள் புனித நூலாகப் போற்றுகின்றனர். அதனை ஒட்டி, மோசஸ் அமைத்துக் கொடுத்த யூத சமயத்தைத் தங்கள் உயிரினும் மேலானதாகப் பின்பற்றுகின்றனர்.

உலக இன மக்களில் சொல்லில் வடித்தெடுக்க முடியாத துன்பங்களை யூத மக்கள் சந்தித்துள்ளனர். முதல், இரண்டாம் உலகப் போர்களின் போது இலட்சக்கணக்கில் யூதர்கள் துடிதுடிக்க கொல்லப்பட்டனர். ஜேர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் மட்டும், அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான். இப்படி சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த யூதர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று பழக்கங்கள் உள்ளன. அவையாவன: ஒன்று, எந்தச் சூழ்நிலையிலும் கல்வி கற்பது.

 இரண்டு, தம் யூத இன மக்களில் ஒருவர் சிறிய ஒன்றைச் சாதித்தாலும் அவரை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவது. மூன்று சீனர்களைப் போன்றே, சீனர்களைவிடவும் பொருளாதாரத்தில் யூதர்கள் மிகக் குறியாக இருப்பார்கள்.

அன்று மட்டுமன்றி இன்றும் உலகப் பெரும் பணக்காரர்களாக யூதர்களே விளங்குகின்றனர். ஐரோப்பிய, சீன, யூத, வரலாற்றை உற்றுப் பார்க்கும் போது அவர்தம் பெரும் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம், அவர்கள் பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதே என்பதை அறிந்து கொள்ளலாம்.

தமிழர்கள், தம் பொழுதுபோக்கு, கலை, இலக்கிய நாட்டங்களிலிருந்து பொருளாதார நாட்டத்தை நோக்கி ஒருமித்து முயல வேண்டும். உலகத் தமிழர் தம் நிகழ்கால, வருங்கால வெற்றியை அவர்களுடைய பொருளாதார வெற்றியே நிர்ணயிக்கும்.
 

Mail Usup- truth is a pathless land -Home