தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Festivals of the Tamil People > நவராத்திரி

CONTENTS
OF THIS SECTION
Last updated
27/06/07

நவராத்தி - சரஸ்வதி பூஜை - Dr. S. Jayabarathi "நாமகளை மனமுருகிப் பிரார்த்தனை செய்தால் போதும். பணத்தைக் கொட்டிப் படாடோபமாக நீட்டி முழக்கிச்செய்யும் பூஜைகளினால்தான் அம்பிகை மனமகிழ்வாள் என்ற எண்ணம் எப்படியோ ஆழமாக வேரூன்றிவிட்டது. தனக்கே சரியாகத் தெரியாமல் வாய்க்கு வந்ததைச் சொல்லிக்கொண்டு, ஆயிரக்கணக்கில் செலவழித்து, பட்டுப்புடவைகளை நெய்யில் முக்கியெடுத்து நெருப்பில் போட்டு எரிப்பதால் அம்பாள் ஏமாந்துவிடுவாளா, என்ன? அவளுக்கு வேண்டியது ஆழமான, எளிமையான பக்தி. அவ்வளவே!"

நவராத்திரி

Singai Krishnan 14 October 2004


அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும்,அவற்றுள் தலைசிறந்து முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடும் விழா மிக சிறப்பு வாய்ந்த நவராத்திரிதான்.

முக்கியமாகப் பார்க்கப்போனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு அவற்றில் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர்.

இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியைச் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைக் கூடுதலாகச் சேர்த்துதசராகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.இந்த பண்டிகை மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்குச் சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.

சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.

நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன்,இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்குப் புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஜய தசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள்.பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாகக் கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துக்கொண்டான்.

சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. நவராத்திரி என்பது விரதமிருந்து கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி வழிபடத் தகுந்த ஒரு இராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது இராத்திரி நவராத்திரி.

நவம் என்பது ஒன்பது.

வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.

சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களை யமனது கோரப் பற்கள் என்று சொல்வார்கள். பிணிகள் உடலை துன்புறுத்தி,பிணித்து நலியும்படி செய்யும். சாதாரமாக, உயிரும் உடலும் தாங்கவே முடியாத பல துன்பங்களை இறைவன் அருள்வதில்லை. துன்பங்கள் உடலுக்கு ஏற்படும்போது, அவற்றிலிருந்து போக்குவாய் சக்தி வழிபாடு.

சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும்.

புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். இஇவை இரண்டில் சாரதா நவராத்திரி என்பது புகழ் பெற்றது; எல்லோரும் கொண்டாடுவது; தனிச் சிறப்புப் பெற்றது.

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை.வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை '' , ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.

அவனை வதைத்த பத்தாம் நாள் ' விஜயதசமி'[ விஜயம் மேலான வெற்றி] [ மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவில் நாம் கண்டுள்ளோம்] வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.

நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, ஆசூரி துர்க்கை லவண துர்க்கை . இஇவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.

அஷ்டஇலட்சுமி : ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி,  வீரஇலட்சுமி, விஜயலட்சுமி , கஜ இலட்சுமி .இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சகதி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, 'ஆற்றங்கரைச் சொற்கிழத்தி ' என்று குறிப்பிடுகிறது. இஇவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர். கம்பருக்காக கொட்டிக் கிழங்கு விற்றவள்.

சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக  இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி. சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இஇரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம்.புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடபுடையது.

எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இஇவை மேலான நாட்களாகும்.

விஜய தசமி:

ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.

அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.

துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.

இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும்ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும். 


நவராத்தி - சரஸ்வதி பூசை Dr.S.Jayabarathi (JayBee), Malaysia
28 September 2006

 "நாமகளை மனமுருகிப் பிரார்த்தனை செய்தால் போதும். பணத்தைக் கொட்டிப் படாடோபமாக நீட்டி முழக்கிச்செய்யும் பூஜைகளினால்தான் அம்பிகை மனமகிழ்வாள் என்ற எண்ணம் எப்படியோ ஆழமாக வேரூன்றிவிட்டது. தனக்கே சரியாகத் தெரியாமல் வாய்க்கு வந்ததைச் சொல்லிக்கொண்டு, ஆயிரக்கணக்கில் செலவழித்து, பட்டுப்புடவைகளை நெய்யில் முக்கியெடுத்து நெருப்பில் போட்டு எரிப்பதால் அம்பாள் ஏமாந்துவிடுவாளா, என்ன? அவளுக்கு வேண்டியது ஆழமான, எளிமையான பக்தி. அவ்வளவே!"


 தமிழர்கள் பன்னெடுங்காலமாக வணங்கிவரும் தெய்வங்களில் நாமகள், கலைமகளாகிய சரஸ்வதியும் விளங்குகின்றாள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை மன்னர்களைவிட புலவர்களின் செல்வாக்கே ஓங்கியிருந்த்தது. சென்றநூற்றாண்டுவரையிலும்கூட அவர்களுக்கு செல்வாக்கு இல்லாவிடினும் கெளரவமாவது இருந்தது. தற்காலத்தில்தான் கற்றவர்களுக்குத் தமிழர்களிடையே மதிப்பு சா¢ந்துவிட்டது.

புலவர்களின் செல்வாக்காலும், கல்வியின் முக்கியத்துவத்தாலுமே நாமகளின் வழிபாடு சிறந்து விளங்கி பரவியது. வேறு தெய்வங்களை முழுமுதற்பொருளாக வணங்கி வந்த பெரும்புலவர்களும் கூட நாமகளைத்துதிக்கத் தவறவில்லை.

பெரும் விஷ்ணு பக்தராகிய கம்பரும், தீவிர சிவபக்தராகிய ஒட்டக்கூத்தரும் நாமகளை முழுமையாகப் பெற்றவர்கள். அடிக்கடி கலைமகளை நேரடியாகப் பார்க்கும் பேறு அவர்களுக்குக் கிட்டியது. ஆதி சங்கரா¢ன் பேராற்றலை மூன்றுமுறை கலைமகளே நோ¢ல் வந்து பா¢சோதித்திருக்கிறாள். அவரும் சர்வக்ஞபீடம் ஏறமுடிந்தது.

 கலைமகளின் துதிகள் ஏராளமாகத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. சமண காப்பியமாகிய சீவகசிந்தாமணியில்கூட "நாமகள் இலம்பகம்" என்றொரு அத்தியாயம்  உள்ளது.

கம்பனின் "சரஸ்வதி அந்தாதி"யும், ஒட்டக்கூத்தரின் "ஈட்டி எழுபது"ம் குமரகுருபரின் "சகல கலாவல்லி மாலை"யும் மிகவும் ஆற்றல் வாய்ந்த துதிமாலைகள்.

நாமகளின் பேரருளுக்குப் பெரிதும் பாத்திரமானவர் குமரகுருபரர்.

பிறந்ததிலிருந்து பேசாமலேயே இருந்தவர் அவர். சிறு வயதில் அவருடைய பெற்றோர் அவரைத் திருச்செந்தூர் முருகனின் சன்னிதானத்தில் விட்டுவிட்டுச் சென்றனர்.

முருகனின் திருவருளால் அவர் கவிமாரியாகப் பொழிந்தார். முதற்பாட்டு முருகனின்
போ¢ல் பாடிய "கந்தர் கலிவெண்பா".

அன்றிலிருந்துதான் அவருக்குக் "குமரகுருபரன்" என்னும் பெயர் நன்கு விளங்கலாயிற்று.

திருச்செந்தூரிலிருந்து மதுரைக்கு வந்தார். அங்கு அவர் மீனாட்சியின் சன்னிதியில் "மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்" பாடினார்.

அதை மன்னர் திருமலை நாயக்கா¢ன் மடிமீது சிறு குழந்தை வடிவிலிருந்து அங்கயற்கண்ணி கேட்டுக்கொண்டிருந்தாள்.

அதில் "தொடுக்கும் பழம்பாடல் தொடையின் பயனே" என்னும் பாடலின்போது திருமலை நாயக்கரின் கழுத்தில் கிடந்த முத்துமாலையைக் கழற்றி, மீனாட்சி, குருபரனின் கழுத்தில் சூட்டினாள்.

பிறமதவாதிகளுடன் வாதிட்டு வெல்வதற்காக குருபரர் தமிழ்நாட்டிலும் அதன்பிறகு பாரதநாட்டின் இதரபகுதிகளிலும் திக்குவிஜயம் செய்தார்.

அப்போது காசிக்கும் சென்றார். சைவர்களின் முக்கிய தலமாகிய காசியில் தமிழர்களுக்கு என்று ஒன்றுமேஇல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது.
ஆகவே காசியில் ஒரு மடத்தைத் தோற்றுவிக்க நிச்சயித்தார்.

அவ்வமயம் இந்துஸ்தானத்தின் பேரரசராக ஷா ஜஹான் இருந்தார். அவருடைய பிரதிநிதியாக அவருடைய மூத்தமகனாகிய தாரா ஷிக்கோ நவாப் பதவியில் அவுத் என்னும் ஊரில் இருந்து வந்தார். அவரைக் காணச் சென்றார் குருபரர்.

சித்தராகிய குருபரர் போகும்போதே சிங்கமொன்றின் மீது சவாரி செய்து சென்றார்.
நவாபு இந்துஸ்தானி மொழியில் பேசினார். ஆனால் அம்மொழி குருபரருக்குத் தெரியாது.

ஆகவே சரஸ்வதியைத் தியானித்து "சகல கலாவல்லி மாலை" எனும் பாடலைப்
பாடினார். நாமகளுடைய அருளால் குருபரருக்கு இந்துஸ்தானியில் பேசும் ஆற்றல்
ஏற்பட்டது.

இவ்வகை சித்தியை "Gift of Tongues" என்று கூறுவார்கள். இக்காலத்தில் கூட சில கிருஸ்தவ சமயபோதனையாளர்களுக்கு இறையருளால் வேற்றுமொழியறிவு ஏற்படும். மற்ற சமயங்களில் சாதாரணமாகத்தானிருப்பார்கள். நவாபிடம் இந்துஸ்தானியில் சரளமாகஉரையாடித் தம் வேண்டுகோளைச்  சமர்ப்பித்தார்.

மனமகிழ்வுற்ற நவாபு காசியில் மடம் கட்டிக்கொள்ள இனாமாக நிலம் ழங்கினார். அன்றிலிருந்து குமரகுருபரா¢ன் மடத்தைக் "காசிமடம்" என்றும், அவருடைய வழியில் வந்த மடாதிபதிகளைக் "காசிவாசி" என்றும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
எளிமையாகக் கலைமகளை வழிபடுவது எப்படி?

சில புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் சிக்கலான பூஜை முறைகளும் சமஸ்கிருதமந்திரங்களும் தோத்திரங்களும்தான் இருக்கின்றன.
ஆள்வைத்துச் செய்வது என்பது சிரமம் அல்லவா?

ஆகவே,

சரஸ்வதி படத்தை வைத்துக்கொண்டு அதன் அருகே விளக்கேற்றிவைத்து, முன்னால் ஒரு வெண்ணிறத் துணியை விரித்து, அதன்மீது புத்தகங்கள், எழுதுகருவிகள், மற்றபடிக்கு ஸ்டெதாஸ்கோப்பு போன்ற தொழிலுக்குரிய சாதனங்கள், ஆகியவற்றை வைக்கவேண்டும். ஏதாவது பலகாரங்கள், சுண்டல் போன்றவை யதேஷ்டம். ஊதுபத்தி. சாம்பிராணி. மலர்கள். கற்பூற தீபம். வெற்றிலைபாக்கு, மஞ்சள், குங்குமம், விபூதி என்று கிடைப்பதை வைக்கலாம். கிடைத்தால் சா¢. ஓஸ்லோ போன்ற இடங்களில் இதற்கெல்லாம் எங்கு போவதாம்?

கணினி, பெரிய கருவிகள், வாகனங்கள் போன்றவற்றை ஆங்காங்கு விட்டுவைக்கலாம்.

முக்கியமாக "சகல கலா வல்லி மாலை"யைப் படித்துப் பூஜை செய்யலாம்.

அதற்குமுன் புத்தகபீடத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்யவேண்டும்.

என்னமோ, ஏதோ என்று பயந்துவிடக்கூடாது. ஒன்றுமில்லை. முழுமனத்துடன் கலைமகளை நினைத்து அந்த பீடத்தில் இருப்பதாக வேண்டிக்கொள்ளவதுதான் அது. தமிழிலோ தெலுங்கிலோ எம்மொழியிலும் நினைக்கலாம். சரஸ்வதிக்கு இந்த மொழிகளெல்லாம் நிச்சயம் தொ¢யும்.

சகலகலாவல்லிமாலையைச் சொல்லமுடியாவிட்டலும் கவலையுறவேண்டாம்.

நாமகளை மனமுருகிப் பிரார்த்தனை செய்தால் போதும். பணத்தைக் கொட்டிப் படாடோபமாக நீட்டி முழக்கிச்செய்யும் பூஜைகளினால்தான் அம்பிகை மனமகிழ்வாள் என்ற எண்ணம் எப்படியோ ஆழமாக வேரூன்றிவிட்டது. தனக்கே சரியாகத் தெரியாமல் வாய்க்கு வந்ததைச் சொல்லிக்கொண்டு, ஆயிரக்கணக்கில் செலவழித்து, பட்டுப்புடவைகளை நெய்யில் முக்கியெடுத்து நெருப்பில் போட்டு எரிப்பதால் அம்பாள் ஏமாந்துவிடுவாளா, என்ன? அவளுக்கு வேண்டியது ஆழமான, எளிமையான பக்தி. அவ்வளவே!

அடுத்து "சகல கலாவல்லி மாலை".....

அன்புடன்
ஜெயபாரதி


சரஸ்வதி பூஜை
சகலகலாவல்லிமாலை
குமரகுருபரர்
[see also
Works of Kumarakuruparar at Project Madurai]

1.

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்
தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

2.

நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

3.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

4.

தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

5.

பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!

6.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

7.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!

8.

சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

9.

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!

10.

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

பொருள்:

1. உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றை
அழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும் கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கே அல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதி இல்லையோ?

2. தாமரை மலரால் ஆன ஆசனத்தில் அமர்ந்திருக்கின்ற பசுமையான பொற்கொடியாளே! குன்று போன்ற தனங்களையும், ஐந்து வகையாகப் புனையப்பெற்ற கூந்தல் வனத்தைச் சுமந்துள்ள கரும்பனைய சகலகலாவல்லியே! சொற்சுவை பொருட்சுவை தோய்ந்த நால்வகை கவிகளாகிய ஆசு, மதுரம்,சித்திரம், வித்தாரம் ஆகியவற்றைப்பாடும் பணியை எனக்கு அருள் புரிவாய்! சகலகலாவல்லியே!

3. உள்ளம் கனிந்து, தெளிவாகப் பனுவல்களைத் தெளிக்கும் புலவர்களின் கவிமழை
பொழியக்கண்டு களிப்படையும் தோகைமயிலாளே! சகலகலாவல்லியே! நீ அருளிய
செழிப்பான செழுந்தமிழ் அமுதத்தை அருந்தி, உன்னுடைய அருள் நிறைந்த கடலில்
குளிப்பதற்கு என்னால் இயலுமோ?

4. இனிமையான செந்தமிழ்ச் செல்வத்தையும் சமஸ்கிருதக் கடலையும் அடியார்களின்
சிறப்பான நாவினில் வீற்றிருந்து காக்கும் கருணைக்கடலான சகலகலாவல்லியே!
சீர்தூக்கிப்பெறுகின்ற பலநூல் துறைகளிலும் சார்ந்த கல்வியையும், சொற்சுவைநிறைந்த வாக்கையும் எனக்குப் பெருகும்படி அருள்புரிவாயாக!

5. நெடும் தண்டு உடைய தாமரையைக் கொடியாகக் கொண்ட பிரம்மனின் செம்மையான நாவிலும், அவன் மனத்திலும், உன்னுடையவெண்தாமரை மலர் ஆசனத்தைப்போன்று கருதி வீற்றிருக்கும் சகலகலாவல்லியே! நன்மையளிக்கின்ற செம்பஞ்சு போன்ற சிவந்த அழகுமிக்க உன் பொற்பாதங்களாகியதாமரை மலர்கள் என் நெஞ்சமாகிய தடாகத்தில் மலராதது ஏனோ?

6. விண்ணிலும்,மண்ணிலும்,நீரிலும் நெருப்பிலும், காற்றிலும், வேதத்திலும், அன்பர்
கண்ணிலும், கருத்திலும் நிறைந்திருக்கும்சகலகலாவல்லியே!முத்தமிழான பண்ணும்
பரதமும் கல்வியும் இனிமையான கவிதையும் நான் நினைக்கும்போது எளிதில் எய்துமாறு எனக்கு அருள் புரிவாயாக!

7.கலைத்தமிழாகிய சுவையான பால் அமுதத்தை, மனம் உவந்து தொண்டர்கள்
படைக்கின்றனர்; அதனைத் தெளிவுறசெய்யவல்ல வெண்ணிறப் பெண் அன்னம் போன்ற சகலகலாவல்லியே! பாடலையும் அதன் பொருளையும், பொருளால் ஏற்படக்கூடிய பயனையும் என்னிடத்தில் சேருமாறு உன் கடைக்கண் பார்வையை அருள்வாயாக!

8. தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமிக்கு அரிது என்பதால் நீ, எக்காலத்திலும்
அழியாத தன்மையை நல்கும் கல்வியாகிய பெருஞ்செல்வத்தின் பயனான சகலகலாவல்லியே! சிறப்பு மிகு சொல் திறமையும், அவதானம் புரியும் ஆற்றலும், கல்வி போதிக்கத்தக்க புலமையும் எனக்கு அளித்து ஆட்கொள்வாயாக!

9.பூமியைத்தொடக்கூடிய துதிக்கையையுடைய பெண்யானையோடு ராஜ அன்னமும்கூட நாணும் வண்ணம் நடைபயிலுகின்றாய்!தாமரையைபோன்ற திருத்தாள்களையுடைய சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராகியமெய்ஞானத்தின் காட்சியாகத் திகழக்கூடிய உன்னை நினைக்கக்கூடிய திறமைசாலி யார்?

10. பிரம்மா முதலான தெய்வங்கள் பலகோடி இருந்தாலும்கூட உன்னைபோன்ற
கண்கண்ட தெய்வம் வேறு உளதோ? சகலகலாவல்லியே! குடைநிழலில் வீற்றிருந்து, நிலவுலகைஆட்சி செய்யும் மன்னர்களும் என்னுடைய பாடல்களைக் கேட்ட உடனே அவர்கள் என்னைப் பணியுமாறு செய்து அருள்வாய்!

 

 

Mail Usup- truth is a pathless land -Home