-ரத்னா
  அலையே! ஞாயிறு அன்று ஒளியிழந்தது. அழகு தந்த அலை அன்று அவலம் தந்தது முத்து தந்த கடல் மூக்கைச் சிந்த வைத்தது.
  கடலே! உன்னை நம்பி வாழ்ந்த மக்கள் உயிர்பறித்ததேனோ? உணவு தந்தாய் உயர்வு தந்தாய் உணர்வும் தந்தாய் ஏன் இப்போது உயிர் பறித்தாய்.
  மூன்று மடங்கில் நீ ஒரு மடங்கில் தானே நாம்? அதிலும் தமிழனுக்கு ஒருகிடங்குதானே! அதிலும் உனக்கென்ன விருப்போ?
  ஆடும் அலையே இதென்ன கோரத்தாண்டவம்? ஈவிரக்கம் இல்லாமல் உனை ரசித்த மக்கள் உலை களைந்தேனோ?
  வாழ்ந்தவர் மட்டுமா மாண்டனர்? நேற்று வந்த மழலையும் இன்று போனதே! உனது இரைச்சலையும் இசையாய்க்கேட்ட மக்கள் கூக்குரல் கூட உன் செவியில் கேக்கலையோ?
  போரிலும் எமை இழந்தோம் இன்று நீரிலும் எமை இழந்தோம். பாரினில் எமைப்போன்று பாவம் செய்தவர் யார் உளர்? சாவதற்கென்று பிறந்த உயிருள்ள பிணம்தான் நாமோ?
  ஒன்றா இரண்டா எண்ணிச்சொல்ல அள்ளிச்சென்று நீ அணைத்தெல்லா தந்துவிட்டாய் எங்கள் தீபங்களை! தாயில்லாப்பிள்ளைää கணவன் இல்லா மனைவி மகன் இல்லாத அன்னை உன்னைச் சொல்லி பயனில்லை தாயாய் உனை பாடிப்பாடி பேயாய் போனான் தமிழன் போ! அதிகமாய் உனைப்புகழ்ந்து அவலப்பட்டுப்போனான் காண்!
  ஊழிக்கூத்து நீயாட உயிர்துறந்தான் தமிழன். ஏ அலையே! கவலையின்றி எங்கனம் உன்னால் இங்கனம் செய்ய நேர்ந்தது. கங்கனம் என்பது இதுதானோ?
  வீதி செய்ய வந்த வாகனம் நீ காவுகொண்ட உடல் புதைக்குது. பாடையிலும் பகட்டாய்ப்போனவன்ää பத்தோடு பதினொன்றாய்ää செத்த நாய்போல் அங்கங்கே புதைகிறான். யாருக்காக யார் அழ?
  ஏய் கடலே உனக்காக இன்னும் காத்திருக்கிறோம்! உன் அழகைக்காண அல்ல! நாம் அழ அழ நீ எடுத்துச் சென்ற உறவுகளின் உடலைகாண! தருவாயா திரும்ப.
  அலையே வா! ஆனால் எல்லை தாண்டாதே! வாசலில் நில். எங்கள் பாசங்களைப்பறிக்காதே! பாசாங்கு செய்யாதே! பாவிக்கவிஞர்களே! பாடுவதை நிறுத்துங்கள் இந்த பாழாய்ப்போன அலையை! ஆடும் அலையே இன்று நீ எமை ஆடவைத்துவிட்டாயே. யேசுபாலன் பாலன் பிறப்பில் மகிழ்ச்சிக் களிப்பில் இருந்த மக்கள் உயிர் பறித்துச் சென்றாயே! உன் நத்தார் பரிசு நம் உயிர்தானோ?
    -சுவிசிலிருந்து சுபாஸ்
  ஆழ்கடலே ஆர்த்தெழுந்து மீள்குடியை ஏன்- அழித்தாய் ஊர் விடியும் வேளையிலே உறவுகளில் உயிர் குடித்தாய் பாருலகில் பைந்தமிழர் படுதுயர்க்கோர் எல்லையில்லை பேரழிவை ஏன் தொடுத்தாய் பெண்கடலே நீ உரைப்பாய்
  பெயரளவில் பெண்கடல் நீ பெரும் சீற்றம் கொண்டது - ஏன் பால்வடியும் பாலரையும் பசியாறிக் கொண்டது- ஏன் உன்னை எம் அன்னையென்றே உலாவருவோம் உன்மடியில் அலைமடியால் ஓங்கி அனர்த்தம் ஏன் விளைவித்தாய் அன்னை நீ ஆழித்தாய் ஜயகோ கொடுமை - என்றேன் பின்னர் உணர்ந்து கொண்டேன் பிரளயத்தின் காரணத்தை.
  தன்னவரை இழந்து மக்கள் தனித்திங்கு துடிக்கையிலே தென்னகத்தார் தெருவெல்லாம் திருவிழாக் கோலம் கண்டேன் அண்ணல் துடித்தெழுந்தான் அணைத்தெடுத்தான் தன்னவரை மன்னன் இவனென்று- இம் மண்டலமே கண்டதம்மா
  என்னை நானுணர்ந்தேன் என் நாமம் நானறிந்தேன் கண்ணை இமைகாக்குமென்று கண்ணெதிரே கண்டு கொண்டேன்
  தன்னை உணர்ந்த தமிழினத்தின் தற்குறியே உன்னை நீ உணர்ந்து - ஊன்றி உன் காலில் மன்னவன் பணிதொடரும் மக்கள் தம் மறு வாழ்வில் அன்னவன் பின்னே அனைவரும் அப்பணி தொடர்வோம்
  அண்ணல் வழிநின்று ஆண்டபரம்பரை - நாம் மண் மீட்க புறப்படுவோம் மாகடலே சூளுரைப் பேன் அன்னை நீ ஆடிவிட்ட அகோர தாண்டவத்தால் மரணித்த மக்களெல்லாம் மாவீரர் ஆவாரம்மா    -தி.குன்றன்
  எத்தனை ஷெல்கள் எல்லாம் தாக்கியே நின்ற போதும் எத்தனை தோட்டா ரவைகள் துளைத்திட வந்த போதும் எத்தனை விமானக் குண்டு பாய்ந்துமே வீழ்ந்த போதும் எத்தனை இரவு தன்னைப் பயத்துடன் கழித்த போதும் எத்தனை துன்பம் வந்து பசித்திட இருந்த போதும் நித்தமும் வறுமைக் கோட்டில் வாழ்ந்துமே வந்த போதும் இத்தனை அரக்கர் நின்றும் தப்பிய மக்கள் கூட்டம் செத்துமே மடியத் தானோ? சிதைந்துமே அழியத் தானோ? உறவினர் எங்கே? எங்கே? உற்றத்தார் சுற்றம் எங்கே? இருந்திட்ட மனைகள் எங்கே? இதமான மரங்கள் எங்கே? தரணியின் உயிரை மாய்க்க(ப்) பிறந்திட்ட அலையே! நீயும் சிறந்தவை இவைகள் என்று சீண்டியே பார்த் தனையோ! தாயில்லைப் பிள்ளை யுண்டு தந்தைக்கு மகனு மில்லை சேயில்லைத் தாயு முண்டு சேர்ந்திட்ட துணையு மில்லை காயில்லைக் கனியு மில்லை பிஞ்சுடன் பூவு மில்லை மாய்த்திடப் பிறந்த அலையே! மன்னிப்பே உனக்கு இல்லை.    - நோர்வேயிலிருந்து தமிழன்ஒளிவிழா வந்து ஒளிவீசும் எனக் காத்திருந்தோம் இருள் பூசிய மேகங்கள் எழுந்து இடியாய் விழு;ந்தது இதயத்தில்
  ஓ... சுனாமியே! நீ- யார் அனுப்பிவைத்த பினாமியோ? எங்கள் பிணம் திண்ட சாமியோ!
  ரணங்களால் பிழிந்த இதயத்தை பிணங்களால் பிழிந்த இயற்கையுனை ரசிக்க இனி... ருசிக்க இனி எப்படி முடியும்?
  காலையிலே கதிரவன் கண்கள் பார்த்து காலாற நடந்தோம் மணல்வீடு கட்டிய மழலையின் சங்கீதமும் கேட்டு நடந்தோம்! மாலையிலே நிலா நீந்த கடல்அலை பார்த்து கும்மாளம் போட்டுக் குதுகலித்தோம்! - இன்று எங்கள் தேசம் எங்கும் ஒரே அவலக்குரலே கேட்கிறது!
  மழலை தவழ்ந்த தடம் அழித்து அலை மகிழ்ந்து போனது போனது!
  மலையென அலையெழுந்து மணிப் பிஞ்சுகளை மண் போட்டு மூடிப்போனது! ஆண்டாண்டாடு காலமாய் அழுது அழுது முடித்தோம்! கண்ணீர் வரவில்லை- எம் கண்களில் கடல்நீரே வழிகிறது!
  அமைதிப் பூங்காவின் வாசலை வாஞ்சையோடு பார்த்திருந்த வேளையில் இயற்கைத் தாயவள் கோரத் தாண்டவம் ஆடி முடித்தாளே!
  அலை வந்து உயிர் பருக உணர்வுருகி - எங்கள் உதிரம் உறைந்தது!
  ஒற்றுமையில் நனைந்த - எங்கள் ஊடகங்களைப் பார்த்தோம் பார்க்க முடியவில்லை- ஐயோ பார்க்காமலும் இருக்க முடியவில்லை! கேட்க முடியவில்லை கேட்காமலும் இருக்க முடியவில்லை!
  வேதனைக் கண்ணீரில் முளைவிடும் வரிகள் விரக்தியின் உச்சத்தில் இயற்கையை வேட்டையாடும்!
  ஆழிப்பேரலையே - உன் கோரப் பற்களுக்கு - எங்கள் தேசத்தின் தேகங்களும் இரை போனதே!
  அலைகளே நீங்கள் கீறிப்போட்ட வளவுகள் - எங்கள் உறவுகளின் பிணம் தின்னுதே!
  என்ன செய்வது? நோர்வேயை இலங்கையாகவும் இலங்கையை நோர்வேயாகவும் மாற்றிப் பார்க்க நினைத்த - எங்கள் எரிக் சூல்கைமின் ஆசையில் கூட அலை விழுந்ததே!! அலைகளால் அன்னைபூமி அழிந்தபோதாவது உலகம் வந்து கண்ணீர் மழையோடு காசு மழையும் பொழிகிறதே!
  இனிமேலாவது எங்கள் தேசம் நிமிரட்டும்!!      |    - Tamilarasan.RTo see the beaches which were with waves inspiring life, now carrying bodies dont know dead or alive.
  Decline to understand the difference between life and death, awed at the chaos in me, loosing the belongingness, with the creation of god, guilt to feel that I am alive.    எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு |   யாதுமானவள், குவைத்
  தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் வந்துடிச்சி
  ஆரத்தி ஏத்தி வச்சி ஆண்டவனை கும்பிட எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு
  பொல்லாத கடலும் பொங்கி வந்து அழிச்சதாலே திருநாளு கொண்டாட்டம் துண்டிச்சு போயாச்சி
  என்வூட்டு மக்களெல்லாம் மண்ணுக்கு போனபின்னே இனி பொங்கி வச்சாலும் திங்க யாரிருக்கா?
 
  போகி பண்டிகைக்கு பழசெல்லாம் போக்கணும்தான்
  பழசுன்னு நெனச்சு ஒரு பாகத்தையே அழிச்சிட்டியே பாற்கடலே உன் வேகம் தீராத பெரும் பாவம்
  வெள்ள அடிச்ச சொவரு வீதியில மாக்கோலம் பழசெல்லாம் எரியவச்சி விடியகால கூடும் கூட்டம்
  ஒண்ணயும் காணோமே இது என்ன திருநாளு?
  வெளஞ்ச பயிர்களின் வௌரம் கூட்டி வச்சி புதுப்பானை மேலேத்தி பொங்கி வரும் நாள்தானே பொங்கல் திருநாளு?
  வெளஞ்ச பயிரெல்லாம் வெள்ளதுல போயிடுச்சேன்னு புலம்பி நான் நிக்கயிலெ
  ஆளுக்கு அரக்கிலோ அரசாங்கம் அரிசிதர புரட்டாசி கொண்டாட்டமா பிச்சை எடுத்து பொங்கி திங்க?
  எம்மனசு ஒப்பல எதயும் நான் ஏக்கலே எழவு வூட்டுல எதுக்கு புதுப்பானை?
  மாட்டுப் பொங்கலுக்கு மாடாச்சும் மிஞ்சுதான்னு தேடிப் பாத்தா ஒரு தடயமும் கெடைக்கலே
  மாவீரன் சுனாமின்னு மார்தட்டி பேர்வாங்க மயானமாக்கிப்புட்டு மறைஞ்சே போயிட்டான்
  பாலு பொங்கலான்னா பசுமாட்ட இங்க காணோம் வீட்டுல கட்டிபோட ஒத்த மாடும் பொழைக்க காணோம்
  எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு
  கலர் கலரா துணிபோட்டு மொகம் பூரா சிரிப்போட ஊரு கொழந்தைங்க வீடு வீடா ஓடிவந்து
  கால்தொட்டு கும்பிட்டு ஆசி வாங்கயில
  அவுத்து கொடுக்கணும்னு சீலயில முடிஞ்சு வச்ச சில்லற கனக்குதே சிறுசுங்க காணலியே
  காணும் பொங்கலிலும் காண முடியலியே கலங்கும் எம்மனச கட்ட முடியலையே
  இனி என்ன கொண்டாட்டம்?
  எம்மனசு ஏக்கலே எனக்கில்ல திருநாளு.   யார் மேல் குற்றம்? |  
  - கருணாநிதி,  தி.மு.க. தலைவர்
  கடற்கரையோரம் நின்று கவிதைப் பயிர் விளைக்க கற்பனைக் கலப்பை பிடித்து கடல் அலையில் கவின் நிலவொளியில் ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே! சீராட்டும் தமிழில் என்னை கொள்ளையழகு காட்டுகின்ற கோலப்பெண்ணால் என்றும்... அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர் அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும் கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின் கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும் தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்! கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம் ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம் திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல் தீய்ந்து போனதேனோ? "சுனாமி" என எனக்கோர் புதுப்பெயர் வைத்தீர்! "பினாமி" என்றீர்! பிணந்தின்னி என்றீர்! சுனாமியும் சுந்தரி போல் சுகந்தி போல் சுகன்யா போல் சுகந்தரு மெல்லிய பெண்ணின் பெயர் தான் என எண்ணாமல் சுடுகாட்டுக் காட்டேரி என்றும் மூதேவியென்றும் மூளி அலங்காரி என்றும் முணுமுணுத்து மூன்று நாளாய் முன்னூறு நானூறு கவிதை எழுதி விட்டீர் கோலத் தமிழ் விடுத்து கோபத் தமிழால் எனைச் சுடுகின்றீர்; குற்றம் நான் என்னதான் செய்துவிட்டேன் கொற்றவன் பாண்டியன் முன் நீதி கேட்ட கண்ணகி போல் குலவிளக்கு நான்;கவிஞர் காள்! உம்மிடம் கேட்கின்றேன். உயிர்கள் லட்சத்தை நான் உண்டு மகிழ்ந்தேன் என்கின்றீர்- உண்மையா? உண்மையா? அது உண்மையா? உரைத்திடுக! ஊமையாய் வீழ்ந்து உயிர் துறந்த பாண்டிய மன்னன் ஆகாதீர்! கடற்கோள் என்று பெயர் இட்டதாலே;அது கடலாம் என் குற்றம் ஆகி விடுமா? நீவிர் அறிந்திடுக; "கடற்கோள்" அல்ல இது; "நிலக்கோள்!" நில மடந்தையின் சீற்றத்தால்தான் "சுனாமி"யெனும் கொந்தளிப்பு சுமத்ராவில் தோன்றியது. ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு ஆவேசங் கொண்டு பூமி தேவி ஏன் வெடித்தாள்? அந்த வெடிப்புக்குள்ளே வீழ்ந்த நானும் தலையில், தோளில், கையில் தாங்கியிருந்த சுமையை நிலை கொள்ளாமல் கீழே போட நேர்ந்தது- அலைகடல் நான்;பொறுமைக்கு எல்லையுண்டே பூமிதேவி செயல் தவிர்க்கத் தற்காப்புப் போர்க் கவசம் பூண்டு நான் கிளம்பியது "காரணக்கோள்;"- "கடற்கோள்" அல்ல! கவிஞர்காள்! கவனமாகக் கேளுங்கள்- காதலியை அணைத்துக் கொண்டு நீவீர் கடற்கரை மதிற்சுவரில் அமர்ந்திருக்கும் போது மதிற்சுவர் இடிந்து காதலி, உமது கை விட்டுக் கடலில் வீழ்ந்திறந்தால்-அது மதிலின் குற்றமா? இந்தக் கடலாள் குற்றமா? மதிற்சுவர் வெடித்தது போல் மண் மாதா ஆயிரம் கிலோ தொலைவு அழிவு வேலை செய்திட அந்தோ நான் பழிகாரி ஆகி விட்டேன் சதிகாரி எனும் சாபத்திற் காளாகி விட்டேன்- கோபத்திற்காளான குவலயத்தார் என் மீது கொட்டுகின்ற பழிச் சொற்கள் உம்மால் பரிமாறப்படுவதை பார்க்கச் சகிக்கவில்லை;கேட்கப் பொறுமையில்லை- பழைய நாள் ஞாபகம் மறவாதீர்-கவிஞர்காள்! நானும் உமது கவிதைக்குக் கருப்பொருளாய் உதவியதை கணத்தில் மறந்து விட்டு சுடுகணை தொடுக்காதீர்! அடுக்காது இயற்கையின் தாண்டவம் எனினும்; பூமி தான் இதற்குப் பொறுப்பாளி; மறவாதீர்!    - Karthikeya Rajanசுனாமி என்றும் சீரழிவின் பினாமி என்றும் என்மேல் முத்திரை குத்தினீர்!
  உயிர்களைக் குடித்தவன் என்றும் பிணங்களைத் தின்றவன் என்றும் என்மேல் காறி உமிழ்ந்தீர்!
  கடல் என்றாலே "கருணை" என்று கூறியவர்கள் - இன்று "கொலை" என்று கூசாமல் கூறுகிறீர்!
  அது- நிலமகள் கொஞ்சம் நிலைகுலைந்து போனதால் கடல் அன்னை செய்த தவிர்க்க முடியாத கொலையென்று எப்போது புரிந்து கொள்வீர்? நடந்தவை முடிந்து நாட்கள் நகர்ந்த பின்னும் என்னை நெருங்க அஞ்சுகிறீர்!
  "... எங்களுக்குத் தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பதுபோல ..." இயேசு போதித்ததையும் சிலுவையில் அறைந்துவிட்டீர்!
  "நடந்தவை நடந்தவையாயிருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" கீதை தெரிந்தவரும் பாதை மாற மறுக்கிறீர்!
  "........" நபிகள் கூறியதை என்னவென்றே மறந்துவிட்டீர்!
  மனமுடைந்த மனிதர்கள் தற்கொலைக்கு முனைந்தால் எனக்குள் வந்து குதிக்கலாம் மனமுடைந்த நான் எங்கே சென்று குதிப்பது?
  என்னில் வலைவீசி வாழ்பவரும் என்னையே பிழைப்பாகக் கொண்டவரும் இன்று பாராமுகம் காட்டுகிறீர்!
  இயற்கைச் சீரழிவுகள் ஒவ்வொன்றும் மனிதம் வலுப்பெறச் செய்யும் முயற்சிகளேயன்றி அறவே அழிப்பதற்கில்லை
  அன்று- கடலும் கடல் சார்ந்த இடமும் என வகைப் படுத்தியவர்கள் இன்று- கடலும் கடல் அழித்த இடமும் என வசை பாடுகிறீர்கள்!
  நேற்று வரை "நெய்தலாய்" இருந்த நான்- இன்று மனிதர் வர மறுத்ததால் "பாலையாய்" மாறிவிட்டேன்
  கடல் நீர் உவர்ப்பிற்கு அறிவியல் காரணங்கள் வேறாய் இருக்கலாம் உண்மையான காரணம்- நான் அழுத கண்ணீர்தான்!
  அன்று கடலைக் கருணைக்கும் பரந்த மனப்பான்மைக்கும் ஒப்பிட்டுப் புகழ்ந்தவர்கள் என் கொந்தளிப்பின் பிரதிபலிப்பாய் ... ஓராயிரம் கவிதை எழுதி இகழ்ந்தீர்கள்!
  பின்னொரு நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் வந்து கடலாடினால் ... என் அலைகளில் வந்து கால் நனைத்தால் ... என் கண்ணீர் மறையும் என்னைத் தூற்றி எழுதிய கவிதைகள் மறையுமா?
 
  தூற்றி எழுதிய கவிதைகளை-
  என்னைப் போல் உங்கள் உள்ளமும் கொந்தளித்ததாக ...
  சில கணங்கள் தன்னிலை மறந்ததாக ... நினைத்துக் கொள்கிறேன்
  கருணையும் பரந்த மனப்பான்மையும் கடலுக்கு உவமை மட்டுமல்ல ... இயல்பும்தான்!
  மறுபடி எப்போது கடலாட வருவீர்? உங்கள் அன்னையின் கண்ணீரை எப்போது துடைப்பீர்?  |